Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பின்னான அரசியல் சக்திகள் : சபா நாவலன்

80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை Thangathuraiஇயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல!

அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவமாக உருவானது தான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பும் அதற்குரிய சிந்தனை முறையும்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை. . ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.

1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.

2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்து சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.

3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.

4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.

5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.

7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.

பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை.

ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.

இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகளில் வியாபித்தது.

சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் தூய இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்தியா, தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.

1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.

2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் முற்போக்கு சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.

3. இலங்கையில் ஒழுங்கற்ற எழுமாறான யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம்.
ஆரம்பத்தில் 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் கட்சி என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன, எதை எப்படி எங்கு திட்டமிடவேண்டும் என்ற அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கு முன்பாகவே இந்திய அரசு திட்டமிட்டு இவர்களை இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்து வேடிக்கை பார்த்தது. இலங்கையின் இடதுசாரிப் பாரம்பரியம் இவைகளை எல்லாம் மீறி அங்கும் இங்குமாகப் போராட்ட உணர்வையும் சமூக உணர்வையும் இன்றுவரை சமூக முற்போக்கு சக்திகள் மத்தியில் விதைத்து வைத்திருக்கிறது.

பிரச்சனைகளை விஞ்ஞான பூர்வமாக ஆராயவும், தர்க்கவியல் பார்வையை அவற்றுள் செலுத்தவும், இன்றுவரை இவைதான் சமூகத்தின் முன்னணிச் சக்திகளிற்கு வழிசெய்கிறது.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக ஐந்து வகைக்குள் அடக்கிவிட முடியும்.

1. புலிகளின் புலம்பெயர் தலைமைகள்

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

3. இந்திய அரசு.

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

 

புலிகளின் புலம்பெயர் தலைமைகள்

மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.இது தவிர புலம் பெயர் நாடுகளிலிருந்து புரட்சியையும் போராட்டங்களையும் ஏற்றுமதி செய்ய முயலும் புறக்கணிக்கத் தக்க சிலரும் கூட முதல் வகைக்குள்ளேயே அடக்கப்படலாம். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு போன்ற அனைத்துமே இதன் வேறுபட்ட தன்மை கொண்ட அமைப்புகளாகின்றன. இலங்கையில் அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வளர்ச்சியடையும் நிலையில் அவற்றின் நிரப்பு சக்திகளாகவும்(Complementary forces), செயற்பாட்டுக் கூறுகளாகவும் மட்டுமே இவ்வாறான புலம்பெயர் சக்திகள் அமைய முடியுமே தவிர, ஐரோப்பிய வாழ் நிலையிலிருந்து புரட்சியை ஏற்றுமதி செய்கின்ற “ரெடிமேட்” போராளிகள் என்பது வெறும் கற்பனை வாதம் மட்டுமே.
இன்றைய நிலையில் ஐரோப்பிய சூழலில் ஏனைய முற்போக்கு இயக்கங்களிடையேயன தொடர்புகளை வலுப்படுத்தவும், இலங்கையிலோ அன்றி இந்தியா போன்ற ஏனைய நாடுகளிலோ சொல்லப்பட முடியாதற்றை வெளிக்கொணரவோ அவற்றிற்கான தொழில் வளர்ச்சி விளைவுகளை பயன்படுத்திக்கொள்ளவோ புலம்பெயர் முற்போகு ஜனநாயக சக்திகள் உபயோகப்படலாம்.
வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் பிரான்சில் ஏகதிபத்திய எதிர்ப்பு சக்திகளான சமூகப்பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து அசோக் யோகன், ரமணன் ஆகியோர் நிகழ்த்திய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மட்டும் தான் ஐரோப்பிய முற்போக்கு சக்திகளோடு இணைந்து நிகழத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டமாகும். இதுவும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் புலி எதிர்ப்பாளர்கள்தும், “புரட்சி ஏஜண்டுகளதும்” வசைபாடலுக்கும் உள்ளானது.

இனியொரு இணையதின் ஆங்கிலப் பகுதியான www.fromnowona.com இல் தோழர் செந்தில்வேலின் நேர்காணலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானதின் பின்னணியில் இலங்கைப் பிரச்சனையில் வர்க்க நலன்கள் குறித்த புரிதலும் தொடர்புகளும் ஐரோப்பிய முற்போக்கு ஜனநாயக சக்திகள் மத்தியில் உருவாகி வளர்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்தவைகயில் இனியொரு போன்ற இணையத்தளங்கள் தமிழ் பேசும் முற்போகு உலகத்தில் தீர்மானகரமான பங்கு வகிக்கமுடியும். தவிரவும், முதிர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளின் தந்திரோபாயங்களையும் அவை தத்துவார்த்த சிந்தனை மட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் இந்தச் சூழலில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்கள் தெளிவான ஆய்வுகளையும் முடிபுகளையும் முன்வைக்க முடியும்.
இவ்வகையான பங்களிப்புகள் புலம்பெயர் நாடுகள் சார்ந்த தமிழ் பேசும் மக்களின் சமூகப்பற்றுள்ள பகுதியினரை எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ள புரட்சிகர இயக்கங்களின் நிரப்பு சக்திகளாக உருவாக்கும்.
புலி ஆதரவு சக்திகளுக்கும், புரட்சியை ஏற்றுமதி செய்ய முனைபவர்களுக்கும், புலி எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் என்பது அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல.

புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் சிந்தனை முறையின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகள் போன்ற அமைப்புக்களின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.

இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.
2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.
3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.
4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.
5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

புலியெதிப்பின் அடிப்படையிலிருந்தே “புரட்சியின் ஏற்றுமதியாளர்களும்” தமது முற்போக்கு பிம்பத்தைக் கட்டமைக்க முனைகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை புலிகள் சமூகத்தில் தேசியவாதக் சுலோகங்களுடன் செலுத்திய மேலாதிக்கத்தில் தமது மத்தியதர வர்க்கத்திற்கான பங்கை நிலைநாட்டவே புலியெதிர்ப்பை முன்வைத்தவர்கள். இவர்கள் இலங்கையில் உருவாகக் கூடிய முற்போக்குப் போராட்டங்களிற்கும் எதிர்ப்பியக்கங்களிற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக இல்லாதிருப்பினும் இடையூறுகளை ஏற்படுத்துபவர்களாகவே இன்றுவரை தமது அரசியல் வாழ்வை உருவமைத்திருக்கிறார்கள்.

பிரான்சில் நிகழ்ந்த சமூகப்பாதுகாபு இயக்கத்துடன் இணைந் போராட்டத்தில் இவர்கள் ஏற்படுத்திய இடையூறும் அதன் இன்றுவரையான தொடர்ச்சியும் இதன் முன்னுதாரணங்கள்.

தமக்கு எதிரான மாற்றுக் கருத்துடையோரை புலிகள் எவ்வாறு இராணுவ பலம் கொண்டு கொன்றொழித்தார்களோ, தமக்கு எதிரானவர்களை எல்லாம் புலி ஆதரவாளர்கள் அல்லது ஜனநாயகத்தின் எதிரிகள் என முத்திரையிட்டு புலி எதிர்ப்பாளர்கள் சிந்தனைத் தளத்தில் கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர். நியாயமான ஒரு போராட்டத்தில் மாற்று போராட்ட அமைப்புக்கள் உருவாக புலிகள் எவ்வளவு தடையாக அமைந்தார்களோ அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி புலி எதிர்ப்பு தமிழர்களும் பங்களித்துள்ளனர். 80 களின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பித்துவிட்ட இந்தப் புலியெதிர்ப்புக் கைக்கூலிகளின் அரசியல் வியாபாரம் வரலாற்றின் முனியக்கத்தை நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளியுள்ளது. இன்றைய அழிவுகளின் நேரடிப் பொறுப்பு புலிகளையும் அரசையும் சாரும் போது இவற்றின் மறுதலையான பொறுப்பு புலியெதிர்ப்பாளர்களையே சாரும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள்.

இந்திய அரசு

மூன்றாவதாக இந்திய அரசு. உலக அரசியல் சூழலும் பின் உலகமயமாக்கலின் நெருக்கடிகளும் உலகைச் சூறையாடுவதற்கான பிரதான மையங்களை உருவாக்கியுள்ளது. இவற்றுள் தெற்காசிய மையமாகத் தொழிற்படுவதுதான் இந்தியா. இதையே அமரிக்க ராஜாங்க அமைச்சின் தெற்காசிய அறிக்கை இந்தியாவைத் “தென்னாசியாவின் பலம் பொருந்திய துருவ வல்லரசு” என்று குறிப்பிடுகிறது. ஆக, இந்தத் துருவ வல்லரசைக் கட்டுப்படுத்த முயலும் மேற்கு வல்லரசுகளுக்கும் சீனாவிற்கும் இடையேயான போட்டிகளின் பகைப்புலத்தில் இருந்தே வன்னிப் படுகொலைகளும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பங்கும் நோக்கப்படலாம்.
இலங்கையில் உருவாகும் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது இந்த வல்லரசுகளின் நகர்வுகளுக்கு எதிரான தெற்காசிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாகவும் அந்த சக்திகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்

புலிகளின் இருப்பின் அடிப்படையே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆப்கனிஸ்தானையும் ஈராக்கையும் நமது கண்முன்னேயே மனித இரத்ததின் ஆற்றுப்படுக்கையாக மாற்றியவர்கள் தான் அமரிக்காவும் மேற்கும். இவற்றையெல்லாம் வெளிப்படையாகவே ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையும், மன்னிப்புச் சபையும் இந்த ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன.
இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும் இலங்கையில் சிங்கள பௌத்த சோவனிசத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் பிரித்தானியர்கள். மகாவம்சம் என்ற இலங்கைப் பௌத்த இதிகாசக் கதைகளை பாளியிலிருந்து சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்து பௌத்த விகாரைகள் எங்கும் வினியோகித்த பிரித்தானிய அரசு பின்னதாக பௌத்த இனவாதியான அனகாரிக்க தர்மபாலவையும் உருவாக்கியது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும், கிறீஸ்தவ மதத்திற்கும் எதிராக அநகாரிக்க கடும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் உருவாகிவந்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வையும், நாட்டின் சொந்த மூலதனத்தை அபிவிருத்தி அடையச்செய்யும் தேசியவாதத்தைக் கூறுபோட்டு, நாட்டைச் சீரழிப்பதில் அநகாரிக்கவின் பங்கானது, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரத்திற்கு பெரும் சேவையாற்றியதுடன், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும், தமிழ் தேசிய வாதத்தையும் உருவாக்கி பெரும் தேசிய இன மோதல்களை ஏற்படுத்திற்று.

ஐம்பதாயிரம் மனித உயிர்களை 100 நாட்களுக்குள், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்ற தலையங்கத்தில் பலி கொண்ட பேரினவாத அரசியல், தனது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை இலங்கை வாழ் ஏனைய சிறுபான்மையினரின் மேல் புதிய உத்வேகத்துடன் திணிக்க முயல்கிறது.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் வரலாற்றில் மிக அதி உயர் விருதாகக் கருதப்படும் “விஷ்வ கீர்த்தி சிறீ திரி சிங்களாதீஸ்வர” என்ற விருதை, இப் பீடங்களின் மகா நாயக்கர்களான பௌத்த் பிக்குகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு 23.05.2009 அன்று வழங்கிக் கௌரவித்துள்ளனர்.
இலங்கை சிங்கள் பௌத்தர்களின் நாடு இங்கு சிறுபான்மையினர் தமது எல்லைகளுக்கு உட்பட்டு வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று பல தடவைகள் தனது பௌத்த சிங்கள மேலாதிக்கவாதக் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்தவர் சரத் பொன்சேகா என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி. மகிந்த சிந்தனை என்பதே பௌத்த சிங்களப் பேரின வாதத்தின் இன்னொரு குறியீடு.

சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தை மட்டுமே முன்வைத்து தமது அரசியல் வியாபாரத்தை முன்னெடுக்கும் ரஜபக்ச மற்றும் பொன்சேகா போன்றவர்களின் அடிப்படைத் தகமையே யார் அதிகமாகத் தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்கள் என்பதிலிருந்து தான் உருவாகிறது.”இலங்கை என்பது பௌத்ததைப் பாதுகாப்பதற்கான புனித தேசம், இந்த தேசத்தைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்கும் நிலையிலுள்ளவர்கள் சிங்கள பௌத்தர்கள், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இந்தத் தீவில் வாழ இடமளித்த சகிப்புத் தன்மை கொண்ட சிங்கள மக்களுக்கு நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதே பௌத்த சிங்கள தேசிய வாதமாகக் கட்டமைக்கப்படுகிறது” என்கிறார், நீல் டெவோட்டா (P:49 Economic and Political Weekly: 31.01.2009). பின்காலனியப் பகுதியில் பௌத்த சிங்கள மேலாதிக்க மனோபாவம் என்பதே இலங்கை இனப்பிரச்சனைக்கான ஊற்றுக் கண். ஆக, இன முரண்பாடும் இனப்பிரச்சனையும் மேலும் உக்கிரமடைதல் என்பது தவிர்க்க முடியாதது.
இதில் எந்த வெட்கத்திற்கும் இடமின்றி இலங்கையிருக்கும் அரசின் தமிழ்த் துணைக் குழுக்களும், சிறுபான்மைப் பாராளுமன்ற சிறுபான்மைக் கட்சிகளும் இந்த இரண்டில் ஒரு சிங்கள அடிப்படை வாதிகளையே ஆதரிக்கின்றன. இந்த மக்கள் விரோதக் குழுக்களுக்கு எதிரான பிரச்சாரம் கூட புலம் பெயர் சூழலில் மிகத் தீவிரமாக முன்வைக்கப்பட வேண்டிய அரசியல் செயற்திட்டமாகும்.

ஆக, இலங்கையில் உருவாக வல்ல புதிய எதிர்ப்பியக்கத்தின் நிரப்பு சக்திகளாகவும், உந்து சக்திகளாகவும் தொழிற்பட வல்ல புலம் பெயர் முற்போக்கு சக்திகளும், இந்திய இடதுசாரிகளும், தமிழ் நாட்டின் ஆதரவுத் தளமும் இணையும் செயற்பாட்டுத் தளத்தின் ஒருங்கு புள்ளியின் முக்கியத்துவம் என்றுமில்லாதவறு இன்று உணரப்படுகிறது.

Exit mobile version