Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பின்னர் புதிய புலம் பெயர் கட்சிகள் : சபா நாவலன்

globalquestionஇலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலங்கைக்கான அமரிக்கத் தூதரும் மிகச் சிறந்த இராஜதந்திரியுமான, பற்றீசியா பட்டனிஸ்  சந்தித்ததான தகவல்கள் இலங்கைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. சரத் பொன்சேகா அமரிக்கா செல்கிறார். அவர் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன. ரொனால்ட் ரீகன், ரிச்சார்ட் நிக்சன், ஜோர்ஜ்  புஷ் ஆகியோரின் சட்ட ஆலோசகரும் வெள்ளை மாளிகையின் முன்நாள் சட்ட ஆலோசகருமான பிரெட் பீல்டிங் பொன்சேகாவிற்குச் சட்ட ஆலோசனை வழங்க அமரிக்க அரசால் நியமிக்கப்படுகிறார். இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகரும், இலங்கை அரசு நிகழ்த்திய வன்னிப் போரையும் இனப்படுகொலையையும் இந்திய அரசு சார்பில்  நெறியாள்கை செய்தவருமான எம்.கே.நாராயணன் அமரிக்காவில்  சரத் பொன் சேகாவைச் சந்திக்கிறார். சரத் பொன்சேகா அமரிக்க விசாரணைகளுக்குச் சமூகமளிக்காமல் நாடுதிரும்புகிறார்.

சோகம் படர்ந்த இந்தியத் நிலப்பரப்பின் தென் மூலையின் கண்ணீர்த் துளிபோல அமைந்திருக்கும் இலங்கைத் தீவினை மையப் புள்ளியாய் முன்வைத்து  இத்தனை அரசியல் நகர்வுகள்! இலங்கை என்றால் தேயிலையைப் பற்றியும் தேனீர் பற்றியும் பேசிக்கொள்ளும் காலம் கடந்து இத் தீவினைச் சுற்றி இத்தனை இரஜதந்திரிகளும் அரசியலும்!! 

கேட்பாரற்றுக்கிடந்த குட்டித் தீவினைச் சுற்றி நிகழும் அரசியல் சதுரங்கம்,  நிச்சயமற்ற தன்மை எல்லாம் புதிய உலக மாற்றத்தின், புதிய உலக ஒழுங்கு விதியின் குறியீடுகளே! உலக அரசியலின் மையப் புள்ளி அமரிக்கா மட்டுமே என்றிருந்த நிலை இப்போதில்லை. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற துருவ வல்லரசுகளின் ஆதிக்கம் உலக விதிகளை முன்னெப்போதும் இல்லாதவாறு மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இவை அனைதிற்கும் மத்தியில் கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் வடிகால்களாய் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றன.

இலங்கை அரசின் சதி வலைக்குள், அதன் நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக, சுய இலாப நோக்கில் வெறும் தன்னார்வ நிறுவனங்களாக மாறிப்போனவர்களும், அரச முகவர்களாக இயங்குகின்ற மூன்றாம் தர வியாபாரிகளுக்கும் மத்தியில் புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கிக் கொள்ள முனைகின்றவர்களின் சமூகப்பற்று மதிப்பிற்குரியதே.புலிகளின் தோற்றுப்போன சிந்தனைத் தொடர்ச்சியை ஒரு ஈகோவாக  இறுகப்பற்றிக்கொண்டு பிரபாகரனை உயிர்ப்பிக்க முயலும் பலருக்கு மத்தியில் இவர்கள் ஆயிரம் தடவை உயர்வாக மதிப்பிடப்பட வேண்டியவர்களே.

பிரச்சனை அதுவல்ல. இது வெறுமனே ஒப்பீடுகளுக்கான காலகட்டமும் அல்ல. இன்றைய தேவை குறித்த கரிசனை எங்கிருந்து உருவாகிறது என்பதே முதன்மையான கேள்வி. தமிழ்ப் புலம் பெயரிகளின் புதிய கட்சிகள் பொதுவாக 3 அரசியல் தன்மைகளை முன்வைக்கின்றன.

1. நிர்வாக அமைப்புக்களை சீர் செய்யப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கொண்ட, மறு சீரமைக்கப்பட்ட புலிகள்.
2. 80 களின் ஆரம்பத்தில் இடது சாரி தேசிய வாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பிரதிகளான அமைப்புக்கள்.
3. புலிகளின் மாற்றங்களற்ற  தொடர்ச்சி. 

இவை அனைத்துமே தூய தமிழ்த் தேசியம் என்ற ஒருங்கு புள்ளியில் இணைகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனமைக்கான காரணமும், புலிகள் கோலோச்சிய 30 வருடங்கள் குறித்த மீள்பார்வையும்  இவர்களைப் பொறுத்தவரை ஒரு சிறு குறி வட்டமாகவே காட்சிதருகிறது.

1. புலிகளின் தோல்விக்கு வெறும் ஆயுதங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே காரணம்.

2. புலிகள் பாசிசக் கருத்துக்களைக் கொண்டிருந்தமையே அடிப்படையான தோல்வி.

என்ற அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கும் முதல் இரு பிரிவினரும் இவற்றைச் சீர் செய்யும் அமைப்பு முறையானது புதிய போராட்ட இயக்கத்திற்கான முன்நிபந்தனையாகக் கருதுகின்றனர். இதன் ஒரு முன் நோக்கிய பார்வையாக இரண்டாம் வகையினர் தம்மை அறிவித்துக்கொண்டு 80 களில் முன்வைக்கப்பட்ட இடதுசாரிக் கருத்துகளை மறுபடி அரங்கிற்குக் கொண்டுவருகின்றனர்.

மார்க்சியக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் இடதுசாரிகள்  புதிய அரசியல் சூழல் குறித்த குறைந்த பட்ச மீளாய்விற்கும், மதிப்பீடுகளுக்கும்  அது தொடர்பான உரையாடல்களுக்கும்  கூட முன்வர மறுக்கின்றனர். குறித்த சமூகச் சூழல் பற்றிய பொருள்முதல் வாத ஆய்வையே முதலில் மார்க்சியம் கோருகிறது. இது சமூகம் குறித்த அறிதலுக்கான ஆய்வு முறையாகும் என்கிறது. ஆனால் இடது சாரிகள் என்போர் இன்றைய சமூகம் குறித்த ஆய்வை நிராகரித்து பத்தொன்பதம், இருபதாம் நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட்ட காலாவதியாகிப்போன முடிபுகளையே இன்றைய சமூகச் சூழலாக ஏற்றுக்கொள்வதனூடாக,  பொருள்முதல் வாதத்தை நிராகரிக்கின்றனர். இதனால் தான் இவர்கள் கருத்து முதல்வாதிகளாக மட்டுமே தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆக, இவர்கள் இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அர்த்தமிழந்து போன சொற்பதங்கள் மட்டுமே.

80 களில் இடது சாரி தேசிய வாத இயக்கங்கள் முன்வைத்த கருத்துக்கள்:

1. தேசம் தேசியம் சுயநிர்ணய உரிமை தொடர்பானவை.*
2. சமூக கட்டமைப்புக் குறித்த மாவோயிசத்திலிருந்து பிரதியாக்கப்பட்ட கருத்துக்கள்.**
3. கட்சி அமைப்புத் தொடர்பான கருத்துக்கள்.
4. ஐக்கிய முன்னணி குறித்த கருத்துக்கள்.
5. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை குறித்த கருத்துக்கள்.
6. அன்றைய உலக ஒழுங்கு குறித்த பார்வையும் அதன் இயக்கம் பற்றிய அறிதலும். **

இவை அனைத்திலும் உள்ளீடாக அமைந்திருந்த தவறுகள் தான் தமிழ் பேசும் மக்களின்  ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்களின் 80 களில் இருந்து ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களாக அமைந்திருந்தனவே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சாத்தானின் சாபங்களல்ல.

இவை அனைத்துமே ஒன்றோடொன்று  பின்னிப் பிணைந்த ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து நோக்க முடியாத கருத்தியல்களாகும்,

80 களின் ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களுமே இந்திய மேலாதிக்க வாத நோக்கங்களிற்காகப் பயன் படுத்தப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாகச் சீரழித்துச் சிதைக்கப்பட்டன என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் இந்தியாவின் பயன்பாட்டிற்கு உட்படக் கூடிய தத்துவார்த்தப் பலவீனத்தையும் கொண்டிருந்தன என்பது தான இங்கு குறித்துக்காட்டத் தக்கது.

புலம் பெயர் தமிழர்கள் உருவாக்க எத்தனிக்கும் கட்சிகள் பல இத்தத்துவார்த்த அடிப்படைகள் குறித்து மறுவிசாரணைக்கே மறுப்புத் தெரிவிக்கின்றன. புலிகள் ஏற்படுத்திய வெற்றிடத்தைப் பிரதியீடு செய்யும் வகையில் மற்றொரு அமைப்புத் தேவையென வாதாடுகின்றனர். அவைதான் இலங்கையில் புதிய போராட்ட சக்திகளிற்கு உந்து விசையாக அமையும் என்கின்றனர்.  80 களில் முன்வைக்கப்பட்ட அதே வகையான வாதம் தான் மறுபடி முன்வைக்கப்படுகிறது.

ஸ்டாலின் தேசிய இனங்கள் குறித்து முன்வைத்த தர்க்கவியல் ஆய்வு முறையூடாகவே இன்று வட கிழக்குத் தமிழர்கள் தேசிய இனமாக வளரும் நிலையிலுள்ள இனக்குழுக்களாக மட்டுமே வரைமுறை செய்யப்படலாம். இன்றைய இலங்கைச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளான தரகு முதலாளித்துவத்தின் தற்காலிக உள்முரண்பாடாகவே தேசிய விடுதலைப் போராட்டம் அமையும் என தத்துவார்த்த விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவே தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரிய அடிப்படையைச் சாத்தியமற்றதாக்குகிறது என்ற வாதம் குறித்து உரையாடலை ஏற்படுத்த யாரும் தயாரய் இல்லை.

இது ஒன்றல்ல. இடதுசாரி கருத்தியலோடான தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளிடமும் இந்திய மேலாதிக்கத்திடமும் தோற்றுப் போனதென்பதும், புலிகளும் மக்களும் சாட்சியின்றி அழிக்கப்படதென்பதும் வெறுமனே தனிமனிதத் தவறுகளோ அல்லது தந்திரோபாயத் தவறுகளோ அல்ல. இவற்றிற்கும் மேலான அடிப்படைத் தவறுகள் குறித்து மறு விசாரணை செய்யப்படவேண்டும்.

இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்று மாவோ வரையறுத்தவாறே பொருத்திக் கொண்டார்கள் இந்திய மாவோயிஸ்டுக்கள். உலக மயம் பெரு நிலப்பிரபுக்களை வியாபர மையங்களை நோக்கி நகர்த்தி இல்லாதொழித்த போது, ஆந்திராவில் தமது நிலைகளை இழந்து பழங்குடி மக்களை ஆதரவுத் தளமாகக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உலக மயம் , நவ-தாராளவாதம், அவை ஏற்படுத்துகின்ற புதிய உலக ஒழுங்கு விதிகள், சிந்தனை முறை, சமூக மாற்றம்  குறித்த குறைந்த பட்சப் புரிதலும் இன்றி பழங்குடி மக்களின் இயக்கமாக மாறிப்போன மாவோயிஸ்டுக்களின் தோல்வியிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறையவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் கடந்த நூறாண்டுகளில் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவிக்கொண்ட துயர படர்ந்த வரலாற்றையே பார்த்திருக்கிறோம். இந்தத் தோல்விகளின் பின்புலம்  குறுகிய குழுநிலை போக்கினைக் கடந்து மீள் மதிப்பீடு  செய்யப்பட வேண்டும். தோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தின் சமகாலப் புறச் சூழல், மக்கள் திரள அமைப்புக்கள், கட்சி, புதிய உலக ஒழுங்குவிதி என்ற அனைத்துமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நவ தாராளவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம் வேலையற்றோரையும், வறுமை எல்லைக் கோட்டிற்குக் கீழிருக்கும் ஏழைகளையும், உலகத்தின் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சார்ந்து எமக்கு மலையைப் புரட்டும் மகத்துவம் இருக்கிறது நாங்களோ எலி வேட்டைக்காக மட்டும் இணைவுகளைக் கோருகிறோம்.

80 களின் ஆரம்பங்களில் சில துப்பாக்கிகளும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் வசதியும் இருந்தால் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற நிலை இருந்ததை ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 25 நீண்ட வருடங்களின் பின்னால் அதே மாதிரியை முன்வத்தா கட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.

எதிர்ப்பியக்கங்களின் தேவை அவசரமாக உணரப்படுகின்ற இலங்கைக்கோ இந்தியாவிற்கோ வெளியிலிருக்கின்ற அனைவருக்கும் ஒரு கடமை உண்டு. அது முன்னைப் போல் கவர்ச்சியான தலையங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு கட்சியைக் கட்டமைப்பதாக நான் கருதவில்லை. ஒரு தேசத்தின் உற்பத்தியோடும், உணர்வுகளோடும் முற்றாகத் தொடர்பறுந்து போயிருக்கும் இன்றைய சூழலில் இரண்டு பிரதான விடயங்களை சமூக உணர்வோடும் நாம் முன்னெடுத்துச் செல்லலாம். முதலாவதாக இலங்கை அரசிற்கு எதிராகவும், அதிகார மையங்களுக்கு எதிராகவும், அவற்றின் உப அமைப்புகளுக்கு எதிராகவும்   எமது எல்லைக்குள் அழுத்தங்களை வழங்க முடியும்; இரண்டாவதாக பிரதான தத்துவார்த்தக் கூறுகளை மீள் மதிப்பீடு செய்ய எம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் வழங்க முடியும்.இவை இரண்டுமே சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதில் எந்தக் கருத்து மாறுதலும் இல்லை.

எங்கள் குழுக்களைப் பிரச்சாரப்படுத்த நபர்களையும், துண்டுப் பிரசுரங்களையும், அச்சுக் கருவிகளையும், இணையங்களையும், ஆயுதங்களையும் தேடிக்கொள்ளும் தகமை படைத்தவர்களாக இருந்திருக்கிறோம். எம்மைச் சுற்றி நடப்பவை குறித்து மீளாய்வுக்கு உட்படுத்துவதை நிராகரித்தே வந்திருக்கிறோம். தேவையானால் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில புரட்சிக்காரர்கள் விட்டு வைத்திருக்கும் சமூகம் குறித்த மதிப்பீடுகளை எந்த மாற்றமும் இன்றி மறு பிரதிசெய்து பிரயோகிக்க முற்பட்டிருக்கிறோம். தோல்விகள் இதிலிருந்து இந்தக் குறைபாட்டின் பகைப்புலத்திலிருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆக, கட்சிகளையும் இயக்கங்களையும் உருவாக்குவதற்கான தத்துவம் எதுவென்ற தேடலை உருவாக்குவதற்காக இணைவை ஏற்படுத்தலே காலத்தின் தேவை.

ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்?

**புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.. , இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் , இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம் ,

Exit mobile version