Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பின்னரான அரசியல் – வரலாற்றிருந்து கற்றுக்கொள்வோம்! : விஜய்

புலிகளின் பின்னரான அரசியல் பற்றி பேசப்படுகிறது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தினை அல்லது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் தலைமையிலான போராட்டத்தினை விமர்சிக்க வேண்டும் என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
புதிய ஜனநாயகம் இதழுக்கு பேராசிரியர் சிவவேகரம் வழங்கிய நேர்காணலில், புலிகளின் அழிவுக்கான காரணங்கள் குறித்து முக்கியமான விடயங்கள் சிலவற்றைத் துணிந்து கூறியிருக்கிறார். புலிகளின் ஆயுத வழிபாடு, கருணாவின் மற்றும் கிழக்குப் புலிகளின் பிரிவு பற்றிச் சரியாகவே கூறியிருக்கிறார்;. புலிகளின் இராணுவவாதக் கண்ணோட்டமும் உட்கட்சி சனநாயக மறுப்பும் அழிவுக்கான முக்கிய காரணிகள் என்ற அவரின் வாதம் சரியானதே.
முக்கிமான விடயம் இந்திய அரசின் நிலைப்பாடுதான். இந்திய சமாதானப் படை விவகாரத்தின் பின்பும் ஏன் ராஜீவ் கொலையின் பின்பும் இலங்கை இனப் பிரச்சினையில் ‘தலையிடாக் கொள்கை’ யைக் கடைப்பிடித்து வந்த இந்தியா, அதிலிருந்து மாறுபட்டு முக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இது ராஜீவ் படுகொலைக்கான பழிவாங்கலாக மட்டும் இருக்க முடியாது. புலிகள் விமானம் மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்ட வலிமைiயான படைக்கட்டமைப்புடன் வளர்ந்து வருவதாக நம்பப்பட்ட நிலையில் இந்திய அரசு இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். புலிகள் விமானங்களையும் கடற்படையையும் ஆயுதப்படையையும் கொண்டிருந்தமை அவர்களை இந்திய அழித்துவிட நினைத்தற்கான காரணங்களாக இருக்கலாம்.
இந்திய அரசு ஆயுதங்களை வழங்கி – நவீன போர்த்தொழில் நுட்பங்களை வழங்கி – தொழில் நுட்பவியலாளர்களை வழங்கியது மட்டுமன்றி, தமிழ் நாட்டின் ஆதரவத் தளத்தை மழுங்கடிக்கச் செய்து, சர்வதேச ரீதியான எதிர்ப்புக் குரல்களையும் மழுங்கடிக்கச் செய்து புலிகளை அழிக்க துணை நின்றுள்ளனர்.
சீனா மற்றும் ஏனைய நாடுகளின் ஆயுத உதவிகளும்; ராஜதந்திர உதவிகளும்; இலங்கை அரசுக்கு கிடைத்திருக்கிறது.
இன்னுமொரு விடயம் புலிகள் சர்வதேச ஆதரவுத் தளத்தினை இழந்தமை. புலிகள் பயங்கரவாத இயக்கமாக பார்க்கப்பட்ட நிலை இலங்கை அரசுக்கும் அதன் கூட்டாளிகளும் சாதகமாகிவிட்டது. இறுதிக்காலத்தில் சிறுவர்களை பலவந்தமாக படையில் சேர்த்துக் கொள்ளல், மக்களை மனிதக் கேடயங்களாக பாவிக்க முனைதல் என்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவேனும் புலிகள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலை, வன்னிப்போரை பயங்கராவாத இயக்கத்திற்கெதிரான ஒரு சனநாயக அரசின் படைநடவடிக்கையாக சர்வதேச உலகிற்கு காட்ட பலருக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. போரியல் குற்றம் நிகழ்த்தப்பட வாய்ப்பான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.

கருணாவின் பிரிவுடன் புலிகள் அவ்விடயம் குறித்து பேசுவதற்கு முற்றாக மறுத்து விட்டிருந்தனர். கருணாவுடன் மட்டுமல்ல கிழக்கிலிருந்து சென்ற பிரதி நிதிகளுடன் கூட அப்பிரச்சினையை சரியான வழியில் கையாளுவதற்கான முடீவுகளை புலிகள் எடுத்திருக்கவில்லை. உட்கட்சிப் பிரச்சினையை சனநாயக வழியில் கையாளும் திறனின்னைமைதான் இதற்கான காரணம். கருணா கூறியது போல் வரட்டுத்தனம்தான் காரணம். நிலைமைகளின் கனதியை உணராது அல்லது உணர முற்படாது கருணாவை அழிப்பதற்காக தமது படைகளை கிழக்கிற்கு அனுப்பிய புலிகள், கிழக்கில் கருணாவுடன் முன்னணிப் போராளிகள் குழவாக அணிதிரண்டு இருந்ததை அறிந்து, கிழக்கில் புலிகள் அமைப்பிலிருந்து விரும்பியவர்கள் வெளியேறலாம் என்ற முடிவை அறிவித்தது. கருணாவும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தார். இந்த முடிவின் பின் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் குறுகிய நேரத்தினுள் விலகிச் சென்றனர்.
பின்னர் தமது சக உறுப்பினர்களுக்கெதிராக வாகரையில் படைநடவடிக்கையை மேற்கொண்ட புலிகள் அங்கு நிகழ்த்திய கொடூரமான சம்பவங்கள் கிழக்கில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
பின்னால் கிழக்கிற்குச் சென்ற புலிகளால் வெளியேறிய உறுப்பினர்களை மீள இணைத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் மத்தியிலான ஆதரவுத் தளத்தினையும் கட்டமைத்தக் கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து தமது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட புலிகள் பலரைக் கொன்றொழித்தது. ‘அண்ணனுடன் நிற்போம்’ என இயக்கத்தில் சேர்ந்து கொள்ளச் சென்ற முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டார்கள். இந்த நிலைமைகள் புலிகளின் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட அரசியல் மயப்படத்தப்படாத உறுப்பினர்களை கருணா – பிள்ளையான் அணியுடன் இணைந்து கொள்ள நிர்ப்பந்தித்தது.
புலிகளின் அரசியல் மயப்படுத்தலை மறுத்த ஆயுத வழிபாட்டின் விளைவாக, புலிகளின் தலைவர்களாக இருந்தவர்கள் அரச முக்கியதஸ்தர்களாக மாற முடிந்தது. முதல் நாள் படுவான்கரைக் காட்டில்;; புலிகளாக நின்றவர்கள் மறுநாள் கருணா – பிள்ளையான் அணியில் முக்கியதஸதர்களாக மாறமுடிந்தது.
புலிகள் சர்வதேச ரீதியில் தமது ஆதவாளாகளைத் திரட்டி எதிர்ப்பியக்கத்தை ஏற்படுத்த முனைந்த போது புலிகளை காப்பதற்கான ஒரு போராட்டமாகவே அதனை முதன்மைப்படுத்தினர். தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாட்டை வலியுறுத்தும் போராட்டமாகவோ அல்லது போர் அழிவுகளிற்கெதிரான ஒரு இயக்கமாக அதனை முதன்மைப்படுத்த வில்லை. மக்கள் காப்பற்றப்படுவதும் போர் நிறுத்தப்படுவதும் தமது இருப்பை தக்கவைக்க அவசியமானது என்ற புரிந்து கொள்ளல் கூட இல்லாது புலி ஆதரவாளர்கள் செயற்பட்டனர். பயங்கரவாத இயக்கம் என அடையாளம் காணப்பட்ட இயக்கத்தினை ஒரு மக்கள் இயக்கம் எனக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் அப்போதிருக்கவில்லை. அதற்கு ஒரு மக்கள் போராட்டம் மட்டும் போதாது. இதனால் சர்வதேச ரீதியல் போரிற்கெதிராக முன்னெழ வேண்டிய பரந்த எதிப்புப் போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டது.
புலிகள் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல் பணிகளை வெறுத்தும் தவிர்த்தும் வந்தார்கள். மாறாக அரசியல் பணிகளில் ஆர்வம் கொண்ட சிலர் சில முயற்சிகளை மேற்கொள்ள முயன்ற போதும் அவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாகவே அறிய முடிகிறது. புலிகள் அரசியல் பேசுவதை விரும்பவில்ல. இந்தப் பிண்ணணியிலேயே ‘ ஆயிரம் எழுத்துக்களை விட ஒரு வெடி குண்டு வலிமையானது’ என்ற வாதம் முன்னெழுந்தது.
அவ்வியக்கத்தின் முக்கியமான விடயங்கள் குறித்துக்கூட அவர்கள் கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஏனைய இயக்கங்கள் மீதான தாக்குதல்கள், ராஜீவ் காந்தி கொலை விவகாரம், யாழிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், முஸ்லிம் மக்கள் மீதான படு கொலை, சிங்கள மக்கள் மீதான படுகொலை எனப் பல விடயங்கள், புலிகள் இயக்கத்திடமிருந்து தமிழ் மக்கள் வேண்டியிராத – எதிர்பார்த்திராத விடயங்கள். இவை குறித்தும் அவர்கள் மக்களுக்கான விளக்கங்களை முன்வைக்க வில்லை. இந்நடவடிக்கைகளால் புலிகள் தமது ஆதரவுத் தளத்தைப் பெருக்கி பலம் பெறுவதற்கு மாறாகப் பலவீனப்பட்டமையையே அவதானிக்க முடிகிறது.
புலிகள் அரசியல் உட்பட முக்கிய விடயங்கள் குறித்துப் பேசாமையானது அவர்களால் தமிழ் மக்களின் அரசியல் வளர்ச்சியில் தமது உறுப்பினர்களின் அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த முடியாது போனது. இதனால் தான் ‘தமிழ் மக்கள் தந்தை செல்வா விட்ட இடத்திலே இன்னமும் விடப்பட்டுள்ளார்கள்’ என்ற கருத்து முன்னெழுந்தது.
புலிகள் ஒரு வல்லமையான இராணுவ அமைப்பாக இருந்தார்கள், பாரிய ஆதரவுத் தளத்தினைக் கொண்டிருந்தார்கள்.

ஆயினும் இராணுவ ரீதியில் பலமானதொரு அமைப்பு என நம்பப்பட்ட புலிகள், நிலைமைகளை சரியாக மதிப்பிட முடியாமல் போனமைக்கும், இராணுவப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டமைக்கான காரணங்கள் பற்றி தெளிவாக அறிய முடியாமலுள்ளது.
சர்வதேச சமுகத்தின் ஆதரவை நம்பி புலிகள் ஏமாந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எவையும் இல்லை.
மறுபுறம் புலிகளின் தலைவர்கள் இந்தியாவின் தேடுதல் எல்லைக்கப்பாற் பட்ட வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முடியாது நிலை அதாவது ஒரு வெளிநாட்டு ஆதரவுத் தளம் இல்லாதிருந்திருக்க வேண்டும். இறுதி நேரத்தில் அவ்வாறு வெளியேறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே இருந்துள்ளன.
அல்லது களத்தில் இருந்து இறுதிவரை சண்டையிடும் முடிவினை எடுத்திருக்க வேண்டும். ஆனால் புலிகள் இறுதி நேரத்தில் மக்களை வெளியேற விடுகிறோம், சரணடைகிறோம் எனக்கூறியதான செய்திகளும் வெளிவருகின்றன. அது உண்மையாயின் அந்த முடிவை அவர்கள் சற்று முன் கூட்டீயே எடுத்திருந்தால் பாரிய மக்களழிவு ஏற்பட்டிருக்காது எனக் கருதும்போது இராணுவ ரீதியிலும் புலிகள் தவறுகளை விட்டிருப்பதாகவே கருதமுடியம். யுத்தத்தின் போக்கை புலிகளால் முன்கூட்டீயே அறிய முடியாது போய்விட்டது என்ற வாதத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.
அத்துடன் மரபு ரீதியான படையமைப்பு என்ற நிலையிலிருந்து மீண்டும் கொரில்லா அமைப்பிற்கு அவர்கள் மாறாததும் அழிவுக்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஆயினும் இதற்கான சாத்தியப்பாடு 2009 இல் இல்லாமலாக்கப்பட்டு விட்டது. மற்றொரு புறம் புலிகள் கிழக்கே கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதும் அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அது எவ்வளவு தூரம் சரியானது எனத்தெரியவில்லை.
புலிகள் மக்களைப் பிரிந்திருந்த ஒரு அமைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. புலிகளின் கடந்த கால வரலாறு மக்களை அரசியல் மயப்படுத்துதல், மக்கள் போராட்டங்களை முதன்மைப் படுத்துதல் என்று அமைந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் ஆதரவுத் தளமின்றி ஒரு பெரும் ஆயுத இயக்கமாக அவர்களால் வளர்ந்து செயற்பட்டு இருக்க முடியுமா? இந்த பாரிய மக்கள் ஆதரவு வழங்கப்பட்ட நிலையிலும் அவர்கள் அழிக்கப்பட முடிந்தது ஏன்?
எழுகிற கேள்வி புலிகளின் அரசியல் என்ன? இவர்களின் இராணுவ தந்திரோபாயங்கள் என்ன? அவர்களுடைய சர்வதேசம் பற்றிய பார்வை என்ன? தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டத்தில் புலிகளின் பங்களிப்பு என்ன? தமிழ் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருந்து வந்தது? இவற்றிலிருந்து அவர்களின் தோல்விக்கான – அழிவுக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியும். வரலாற்றிலிருந்து கற்க நினைக்கிறவர்களக்கு அது ஒரு படிப்பிiயாக அமையும்.
புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அல்லது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் தலைமையிலான போராட்டத்தின் மிகப்பெரிய பலவீனமே, அவர்களுடைய அரசியல் – இராணுவ சிந்தனைகள் மற்றும் அனுபவங்கள் வெளியிடப்படாமையே. புலிகளின் முக்கியஸ்தர்களோ அல்லது புலிகளின் ஆதரவாளர்களோ பரந்த கொள்கைப் பரப்புரைகைளைச் செய்திருக்கவில்லை. பிரபாகரனின் மாவீரர் தின உரைகள்தான் புலிகளின் நேரடி கருத்துரை ஆவணமாக இருந்து வருகிறது. அவையும் ஒரு பொதுப்படையான அறிக்கைத் தன்மை கொண்டவை.
எனவே, புலிகள் தொடர்பான முக்கியமான கருத்தாவணங்கள்; இல்லாத நிலையில், புலிகளை விமர்சிப்பதற்கு பல்வேறு சம்பவங்களையே துணைக்கொள்ள வேண்டியுள்ளது
இறுதியாக எழுகிற வினா, தமிழ் மக்களின் தேச விடுதலைப் போராட்டம் மக்கள் சார்ந்த ஒரு போராட்டமாக இருந்திருந்தால் வன்னிப் போர் போர் நிகழ்ந்திருக்காதா என்பதே. சிங்கள இனவாதத்தின் வளர்ச்சி நிலையிலும், இந்தியா மற்றும் சீனா ஆசியப் பிராந்திந்தில் வல்லராசாக வளரும் நிலையில் அதாவது புதிய ஒரு சர்வதேச சூழல் தோன்றியுள்ள நிலையில் இதற்கான பதில் என்ன?

Exit mobile version