எது எவ்வாறாயினும் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவிருந்ததாகத் தெரியவில்லை. வறிய தொழிலாளிகள் மாவோயிஸ்டுக்கள் மீது இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைசெய்யும் கடையொன்றின் உரிமையாளர் போதியளவு சொத்துக்கள் வைத்திருப்பதாகக் கூறினார். எது எவ்வாறாயினும் மாவோயிஸ்டுக்களுக்குத் தமது ஆதரவு என்றுமே இருப்பதாகவும், தயக்கமில்லாமல் கூறினார்.
தமங் இனக்குழுவைச் சார்ந்த அவர், நேபாளத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் என்பது அனைவருக்குமே பொதுவான பிரச்சனை என்றார். மாவோயிஸ்டுக்களின் அதிகாரத்தில் பிராமண ஆதிக்கத்தின் ஒரு பகுதியாவது செயலிழக்கும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் இது தொடருமானால் நேபாளம் வளர்ச்சிப்பாதையில் செல்லும் வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
பிரசண்டா கூட பிராமணர் என்பது அவரது இன்னொரு துயராக இருந்தது.
தினநாத் சர்மா, பிரசண்டா போன்ற உயர்மட்டத் மாவோயிஸ்டுக்கள் பிராமணர்களாயினும், பிராமண ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை காணப்பட்டது.
அரசியல் விவாதங்களையும் அதன் மீதான அனைத்து மக்கள் பிரிவுகள் மத்தியிலும் காணக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொருவரும் இனிவரும் ஆட்சிக்காலத்தில் தமது நலன்களை உறுதிபடுத்துவதற்கான திசையைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. இப்போது மாற்றத்திற்கான காலமாகவும் அமைந்திருந்தது. ஆக, மாற்றத்திற்கான காலப்பகுதி வர்க்கப்ப் பிரிவுகளிடையேயான போராட்டமாகவும் காணப்பட்டது. அதற்கான ஜனநாயகமும் நிலவியது. அதிகாரம் குறித்துச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் சமூகத்தின் கீழணிகளில் இருப்பவர்களுக்கும் கூடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது அதன் பின்பலமாக நேபாள மாவோயிஸ்டுகள் திகழ்ந்தனர். இது புதிய ஜனநாயகம் அதன் நேபாள உள்ளர்த்ததில் உருவாகும் காலக் கூறாக இருப்பதாகத் தோன்றியது.
26.08.10 அன்று காலை பத்து மணியளவில் காத்மண்டூவில் பரிஸ் டன்டாவில் தோழர் மகாரா, தோழர் பசுந்தா, தோழர் ராம் கார்க்கி ஆகியோரைச் சந்திப்பதாக ஏற்பாடகியிருந்தது. பிரசண்டாவும், பபுராம் பட்டாராயும் தயாரித்திருந்த புதிய வேலைத்திட்டம் குறித்த மத்திய குழு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. பாபு ராம்பட்டாராய் மாவோயிஸ்ட் கட்சியின் அமைப்பக உறுப்பினர். இப்போது கட்சியின் பிரதித் தலைவர் கூட. இந்தியாவில் உயர்கல்வி கற்றவர். மாணவர் காலத்திலிருந்தே பல போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தவர்.
இவர்கள் முன்மொழிந்த, அதிகாரத்தை மீட்பதற்கான வேலைத்திட்டம் குறித்த முரண்பாடுகள் மத்திய குழுவில்
அவர் ஈழப் பிரச்சை குறித்தும், இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை மீதான பாதிப்புக் குறித்தும், பிரித்தானியாவில் முற்போக்கு இயக்கங்கள் குறித்தும் பல்வேறு விடயங்களை என்னோடு உரையாடுகிறார்.
எமது சந்திப்பி வெறும் கருத்துப் பரிமாற்றமாக் அமைந்திருந்ததால், மாவோயிஸ்டுகளுடனான நாம் முரண்படும் பகுதிகள் உடன்படும் பகுதிகள் குறித்தும் பேசிக்கொள்கிறோம்.
பன்னிரண்டு மணியை நெருங்கியதும் மகாரா அலுவலகத்திற்கு வருகிறார். பொதுவாக சர்வதேச நிலைமைகளில் ஆசிய பொருளாதார உருவாக்கத்தின் பாதிப்புக் குறித்த எனது கருத்தைக் கூறியதும் அவர் தமது கட்சியிலும் இவ்வாறான கருத்தைக் கொண்ட அணி உள்ளது என்பதையும், தனது கருத்து அதிலிருந்து மாறுபட்டது என்பதையும் கூறுகிறார். அவ்வேளையில் தோழர் பசுந்தா அலுவலகத்துள் வருகிரார்.
புதிய திசைகள் அமைப்பிடம் ஒழுங்கமைக்கபட்ட வேலைத்திட்டம் ஒன்று இருக்கவில்லை என்றும், மிகவும் வெளிப்படையான வெகுஜன அமைப்பிற்கும் விவாதக்குழுவிற்கும் இடையேயான ஒரு ஐக்கிய முன்னணி போல் இயங்கிவதாகவும் கூறுகிறேன். இலங்கையின் சமூகப் புறச் சூழலில் அங்கிருக்கும் கட்சி ஒன்று மட்டும்தான் கட்சிக்கான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க முடியும் என்று நாம் கருதினாலும் அதற்கான பருமட்டனா கருத்துக்களை நாம் கொண்டிருப்பதாகக் கூறுகிறேன்.
அதன் அடிப்படையில் உரையாடலை ஆரம்பிக்கலாம் என்று முடிவிற்கு வருகிறோம். ஆக புலிகளின் தோல்வி குறித்து எமது கருத்தைக் கூறுவதற்கு முன்னர் அவர்களின் கருத்தை அறிவதற்காக கேள்வியெடுப்புகிறேன்.
பசுந்தா தனது கருத்தை ஆரம்பிக்கிறார். அவரது கருத்து பல தடவைகள் இனியொருவிலும் வேறு அரசியல் தளங்களிலும் ஏலவே கூறப்பட்டவை என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
புலிகளின் தோல்வியென்பது தேசிய முதலாளித்துவக் காலகட்டத்துடன் தொடர்புடையது. இரண்டாவது உலகப்போரின் பின்பு, நேரடிக் காலனி முறைமை என்பது மறைமுக ஏகாதிபத்திய முறைமைக்கு மாற்றமடைந்த வேளையில், தேசிய முதலாளித்துவமும் தேசிய ஜனநாயகமும் அற்றுப்போனது. இவ்வகையான ஏகாதிபத்திய அமைபின் கீழ் தேசிய முதளாளித்துவ வர்க்கம் என்பது தரகு முதலாளிகளாக மாறிவிடுகின்றது என்பதை மாவோ தெளிவாக வரையறுத்துள்ளார்.
தேசிய முதலாளித்துவம் என்ற ஒன்று இல்லாத நிலையில், தேசியப் புரட்சி கூடப் பாட்டாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்துள்ளது. தமிழர்களுக்கு விடுதலை வேண்டுமானால், அது சுயாட்சியாக இருக்கலாம் அல்லது பிரிவினையாக இருக்கலாம் – அது அவர்களின் விருப்புக்கு உட்பட்டது, அவர்கள் நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்க அணிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.
தலைமை தாங்க வல்ல, உறுதியான வர்க்கங்களாக ஒரு பகுதியில் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் மறு புறத்தில் பாட்டாளிகளுமே காணப்படுகின்றனர். தேசிய முதலாளிகள் இல்லாத சூழலில் பாட்டாளிவர்க்கம் தலைமை தாங்கும் போராட்டம் மட்டுமே சாத்தியமாகும் என்று நான் எனது புரிதலை வெளிப்படுத்த பசுந்தா அதனை ஆமோதிக்கிறார்.
ஆக, புலிகளின் அரசியல் என்பது இறுதியில் தரகு முதளாளித்துவத்திற்குச் சேவை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதால், அதன் நலனிலிருந்து பாசிசமாக வளர்ச்சியுற்று அழிந்து போனது என்று நான் மேலே தொடர்கிறேன்.
[flv:https://inioru.com/ava/nep1.flv 480 80]
இன்னும்வரும்..