அவ்ரோ விமானத் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்ற அளவிற்கு எமக்கு மத்தியில் நம்பிக்கையும் உறுதியும் வேர்விட்டிருந்தது. ஏதோ பெரிய தாக்குதலை நடத்தி முடிக்கப் போகிறோம் என்ற பய உணவெல்லாம் எம்மிடம் இருக்கவில்லை. கடந்து சென்ற ஒரு வருடத்தினுள் எமது இராணுவத் தாக்குதல்களின் வெற்றியும், இயக்கதினுள் ஏற்பட்டிருந்த ஒழுங்கமைப்பும் நாம் குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக்கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாங்கள் போதுமானதாக எண்ணியிருந்தோம்.
பெருந்திரளான மக்களைக் அமைப்பு மயப்படுத்தி, கட்சியையும் ஏன் இராணுவ அமைப்பையும் கூட அந்த மக்களின் பலத்திலிருந்து உருவாக்கும் போராட்டங்கள் மட்டுமே உலகத்தில் வெற்றியடைந்திருக்கின்றன என அப்போதெல்லாம் நாம் அறிந்திருக்கவில்லை.
இந்த வகையில் கடந்த கால இராணுவத் தாக்குதல்களின் வெற்றியையும், அரச படைகளின் இழப்புக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நாம் கணிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவிட்டதாகவே எண்ணிப் பெருமிதமடைகிறோம்.
ஈரோஸ் அமைப்பினருக்கு இங்கிலாந்திலிருந்த அவர்களின் உறுப்பினர்கள் வழியாகப் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பிருந்தது மட்டுமன்றி அவ்வியக்கத்திடம் பயிற்சி பெறும் வசதிகளையும் கொண்டிருந்தனர். கொலைசெய்யப்பட்ட பற்குணத்தினூடாக ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்புகள் வலுவடைந்திருந்தமை குறித்து முன்னமே பதிந்துள்ளேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் மீது மதிப்புவைத்திருந்த ஈரோஸ் அமைப்பினர், எமது இரு உறுப்பினர்களுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கின்றனர்.
உமாமகேஸ்வரனும் விச்சுவும் பயிற்சி பெறுவதற்காகப்
உமாமகேஸ்வரனும் இங்கிலாந்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்ட விச்சு என்ற விச்வேஸ்வரனும் எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்கள் தவிர, கொழும்பிலிருந்து வந்து எம்மோடு இணைந்திருந்த சாந்தன் என்பவரும் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். இவரூடாகவே பிரபாகரன் ஆயுதங்கள் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதுண்டு.
உமா மகேஸ்வரன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிக்குச் சென்ற வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஊடாக கியூபாவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வேளையில் சாந்தன் கியூபாவிற்குச் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இவரைத் தவிர வேறு ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் இல்லாத நிலையில், சாந்தனுடன் எமது ஆதரவு மட்டத்தில் செயற்பட்ட வேறொருவரும் அங்கு அனுப்பப்படுகிறார்.
இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இருவருமாக நான்குபேரும் கியூபா செல்கின்றனர்.
இவர்கள் கியூபா சென்றதும், பாலஸ்தீனத்தில் எமது உறுப்பினர்களோடு பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினருடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக விச்சு பயிற்சியை முடிக்காமலே திரும்பிவிடுகிறார். உமா மகேஸ்வரன் தனது கால எல்லைக்குள் வழங்கப்பட்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு பின்னதாக நாடு திரும்புகிறார்.
இவர்கள் திரும்பிய சில காலங்களினுள்ளேயே எமது மத்திய
ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், எம்மை விட அதிகமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான உமா மகேஸ்வரனை தமிழீழ விடுத்லைப் புலிகளின் தலைவராக நியமிக்கலாம் என பிரபாகரன் தனது கருத்தை முன் வைக்கிறார்.
உமா மகேஸ்வரன் அதை மறுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இறுதியில் நமது இயக்கத்தின் முதலாவது தலைவராக உமா மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அரசியல்ரீதியான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை முன்னெடுக்க அரசால் தேடப்படாத ஒருவரின் பிரசன்னம் தேவைப்பட்டது. இந்த வகையில் உமாமகேஸ்வரன் இதுவரை அரசால் தேடப்படாத நிலையில் இருந்ததால் இவரைத் தலைவராக நியமிப்பது நியாயமானது என அனைவரும் கருதினர்.
உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.
உமாமகேஸ்வரன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் பிரபாகரனின் ஆளுமைதான் காணப்பட்டது. எமது குழுவின் அதிகாரம் மிக்கவராக பிரபாகரனே இருந்தார்.
இவ்வேளையில், கனகரத்தினம் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இரட்டை உறுப்பினர் தொகுதியான பொத்துவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 23990 வாக்குகளைப் பெற்று கனகரத்தினம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுச்ய்யப்படுகிறார். தனித் தமிழீழத்திற்கான பிரச்சாரம் மேற்கொண்டே கனகரத்தினம் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். டிசம்பர் மாதம் 19ம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது தான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவார் என்றும், தவிர, கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த போதும், தனித் தமிழ் நாட்டை விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களால் அவர் யூ.என்.பி கட்சியில் இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
மறு நாளே அமிர்தலிங்கத்தின் அறிக்கை வெளியாகிறது.
உமா மகேஸ்வரனுக்கு நன்கு பழக்கப்பட்ட கொழும்பில் வைத்தே கனகரத்தினம் கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனகரத்தினம் கொலை வெற்றியளிக்காத ஒரு சம்பவமாயினும் நாட்டின் தலைநகரில், ஜே.ஆர் அரசின் இராணுவத்தின் இரும்புக்கரங்கள் இறுகியிருந்த கொழும்பின் நடுப்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சி மூழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஜனவரி மாதம் 26 ஆம் திகதி 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் கொலை முயற்சி இலங்கையில் இதயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய முதல் தாக்குதல்.
பிரபாகரன், உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகிய மூவரும் நேரடியாக களத்தில் நின்று நிகழ்த்திய இந்தத் தாக்குதல் முழுமையான வெற்றியளிகாமல் வெறுமனே கொலை முயற்சி என்ற அடிப்படையில் முடிந்தது.
மிகக் கவனமான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனும் பிரபாகரனும், செல்லக்கிளியும் கனகரத்தினம் அவரது கொழும்பு இல்ல்லத்திலிருந்து மெய்ப் பாதுகாவலர்களோடு காரை நோக்கிச் செல்லும் போது, துப்பாகியால் சுடுகிறார்கள்.
உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி ஆகிய மூவருமே கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னால் சென்றதும் அவரை கனகரத்தினம் அடையாளம் கண்டுகொள்கிறார். கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளராகவிருந்த உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னமே அறியப்பட்டவர். உமாமகேஸ்வரனைக் கண்டதும் கனகரத்தினம் எப்படி இருக்கிறீர் தம்பி என்கிறார். உடனே உமாமகேஸ்வரன் துரோகியைச் சுட்டுத்தள்ளுங்கோடா என்று சத்தமிட்டவாறே கனகரத்தினத்தை நோக்கிச் சுடுகிறார்.
பின்னதாகப் பிரபா
ஒரு துப்பாக்கிக் குண்டு அவரை நோக்கிப் பாய்கிறது. குண்டுபட்ட காயத்தோடு அவர் மருத்துவ மனையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறார். அங்கு அவசர சிகிச்சையின் பின்னர் அவர் உயிர்தப்பிவிடுகிறார். ஆனால் துப்பாக்கிச் சூட்டின் தாக்கத்தினால் மூன்று மாதங்களின் பின்னர் கனகரத்தினம் உயிரிழந்துவிடுகிறார்.
பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொலை முயற்சி இடம் பெற்ற பின்னர் தான் உமா மகேஸ்வரன் தேடப்பட்டவராகின்றார். அவரும் இப்போது முழு நேரமாக எம்மோடு வடக்கிலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் தவிர கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான நாகராஜாவும் இக் கொலை முயற்சிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். போக்குவரத்து ஒழுங்கு, தங்குமிட வசதிகள் போன்ற பல நடவடிக்கைகளை நாகராஜாவே முன்னின்று கவனித்துக்கொண்டார்.
பிரபா, உமா மற்றும் செல்லக்கிளி மூவரும் கனகரத்தினத்தின் இருப்பிடம் நோக்கிச் செல்லும் வேளையில், பொலீஸ் மோப்ப நாய்களின் தேடுதலிலிருந்து தப்புவதற்காக காகிதம் ஒன்றில் மிளகு சுற்றிக் கொண்டு சென்றனர். மிளகு தூள் சுற்றிய காகிதம் கொழும்புப் காவல்துறையிடமும், உளவுத் துறையிடமும் அகப்பட்டுவிடுகிறது. அந்தக் காகிதம் நாகராஜாவின் தங்குமிடத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தது. இதனை அவதானித்த பொலீசார், நாகராஜாவை விசாரணைக்கு உட்படுத்தி அவருடன் கொலைமுயற்சிக்கு இருந்த தொடர்பைக் தெரிந்துகொள்கின்றனர்.
இந்த விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னமே துரையப்பா கொலை வழகில் பிரதான அதிகாரியாகச் செயற்பட்ட பஸ்தியாம்பிள்ளை. நாகராஜாவை சித்திரவதை செய்து விசாரணகளை மேற்கொண்டதில் தவிர்க்கவியலாதவாறு அவர் சில தகவல்களைச் சொல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த வேளையில், அவர் எமது பண்ணைகள் குறித்தோ, எமது ஏனைய முக்கிய நிலைகள் குறித்தோ எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை. ஏற்கனவே வேறு வழிகளில் உமா மகேஸ்வரனுக்கு கொலைமுயற்சியோடு இருந்த தொடர்பை உளவுத்துறை அறிந்திருந்ததால், நாகராஜா, உமா மகேஸ்வரன் மீதே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்.
இதன் பின்னர் நாகராஜாவையும் அழைத்துக்கொண்டு பஸ்தியாம்பிள்ளை உமா மகேஸ்வரனின் கட்டுவன் இல்லத்திற்குச் செல்கிறார். நாகராஜாவும் உமாமகேஸ்வரனைக் அடையாளம் காட்டுவதாக ஒத்துக்கொள்கிறார். மிக நீண்ட நேரப் பிரயாணத்தின் பின்னர், பஸ்த்தியாம் பிள்ளையின் பொலீஸ் வாகனத்திலேயே உமா மகேஸ்வரனின் இல்லைத்தை அடைகின்றனர். துரையப்பா கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுல் நாகராஜாவும் ஒருவர் என்பதால் பஸ்தியாம்பிள்ளையுடன் இவர் சரளமாகப் பேசக்கூடிய நிலை இருந்தது. வழி நெடுக பஸ்தியாம்பிள்ளையுடன் பேசிக்கொண்டு வந்த நாகராஜாவிற்கு உமா மகேஸ்வரன் வீட்டில் தங்கியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். அங்கே கட்டுவனை அடைந்ததும், பொலீசைக் கண்டால் உமா மகேஸ்வரன் தப்பி ஓடிவிடுவார் என்றும், பஸ்தியாம் பிள்ளையை வெளியே நிற்குமாறும், தான் உள்ளே சென்று அவரைத் தந்திரமாக அழைத்து வருவதாகவும் பஸ்தியாம்பிள்ளையிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். இந்தத் துணிகரமான நடவடிக்கையால் அங்கிருந்து தப்பிய நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர், நாகராஜாவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைந்து கொள்கிறார்கள்.
(இன்னும்வரும்…)