Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன்

இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன.

இலங்கையில் துவம்சம் செய்யப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை புதிய திசைவழி நோக்கித் திட்டமிடுவதற்கான ஆரம்பம் புலிகளின் சிந்தனை முறையையும், அதன் தொடர்ச்சியும் நிராகரிக்கப்படுவதிலிருந்தே உருவாக முடியும்.

பொதுவாக இலங்கையிலும் அதற்கு வெளியிலும் நான் கு வகையான சக்திகளை இனம்காண முடியும்.

1. புலிகளின் சிந்தனை முறையின் தொடர்ச்சியை ஏற்றுக்கொள்வோர்.
2. இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் உளவியல் யுத்ததின் அடிமைகள்.
3. புதிய போராட்ட வழிமுறை குறித்துச் சிந்திப்போர்.
4. சீரழிவு வாதிகளும் லும்பன்களும்.

சீரழிவு வாதிகளும் லும்பன்களும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைப்பதில் அரசிற்கு மறைமுகமாகச் சேவையாற்றும் போக்கைக் கொண்டிருந்தாலும் அரசியலில் இவர்கள் தீர்மானகரமான சக்திகளாக இல்லை. தாமாகவே அழிந்துபோகும் நிலையிலுள்ல இவர்களிடம் குறிப்பான சிந்தனை எதுவும் இல்லை. போராட முயலும் ஒவ்வொருவரையும் அனைத்து வழிகளிலிலு அழிக்க முயல்வதற்கு தம்மை சமூகத்தின் புனிதமான அடியாட்களாகக் கட்டமைக்க் முனையும் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களைப் புறக்கணிபது என்பதே இன்றைய சூழலில் இவர்களை எதிர்கொள்ளும் தந்திரோபாயமாக அமைய முடியும்.

தவிர முதல் இரு பகுதியினரும் அழிவை மறுபடி முன்னிறுத்தும் சக்திகளாக உருவாகும் வாய்ப்புக்களைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர். அதிகார வர்கத்தின் பொருளாதார நலன்கள் வரலாறு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில், ஆசியாவில் என்று எங்கெல்லாம் தமது அதிகார நலன்களுக்காக அப்பாவிகளைக் கொன்று போட வேண்டுமோ அங்லாம் மனிதக் கொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. இது தான் மக்களை அழிக்கும் பாசிசமாக வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாசிசம் என்பது தான் தமிழ் பேசும் மக்களின் சிறீ லங்கா அரசிற்கு எதிரான நியாயமான போராட்டத்தையும் சீர் குலைத்துச் சிதைத்து விட்டிருக்கிறது.

அதிகாரம் சார்ந்த இந்தச் சிந்தனை முறை தகர்த்தெறியப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களே பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தின் சிந்தாந்தங்களால் சிதைக்கப்படுகின்றது. இவ்வாறான சித்தாந்தங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களின் பெரும்பான்மையைச் சிதைத்து அதன் ஒருபகுதியை அதிகாரத்திற்குச் சார்பானதாக மாற்றிவிடுகிறது.

ஆசியாவின் ஒரு மூலையில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர், இனச் சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச அதிகாரவர்க்கம் தம்மை நிர்வாணமாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறது.

இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.

அதிகாரவர்க்கத்தை நம்பியிருந்த புலிகளை அவ்வர்க்கம் கைகழுவி விட்டு, மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பின்னரும் அதே ஆதிக்க வர்க்கத்தோடு மட்டும் தான் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் தம்மை அடையாள்ப்படுத்துவதென்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் மட்டுமல்ல இன்னொரு தோல்வியின் ஆரம்பத்திற்கான அத்திவாரம்.

காரணமின்றி வலிந்து சிறைவைக்கப்பட்டிருந்த கால் மில்லியன் மக்களை விடுவிக்க வேண்டுமென்று எந்தச் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களெல்லாம் சிறை முகாம்களில் மனித உரிமை குறித்தும், அவற்றின் வசதிகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டபடி அவ்வப்போது தமது இருப்பைப் பறைசாற்றிக்கொண்டன.

ஐ.நா தனது விசாரணக் குழு நாடகத்தை இன்னும் நிறுத்தவில்லை. இன்று, மண்ணோடு வாழ்ந்த வன்னி மக்கள் இன்று தெருவிலே அனாதைகளாகத் தூக்கிவீசப்பட்டுள்ளனர்.
இவர்களெல்லாம் இலங்கை அரசிற்கு மறைமுக அங்கீகாரம் மட்டும்தான் வழங்குகின்றனர். நீங்கள் மக்களைக் காரணமின்றிச் சிறை வைத்திருக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்களின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். அறுபது வருட காலமாக திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை “மனித உரிமைக்கு” மதிப்பளித்துத் தொடரச்சொல்கின்றனர்.

இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் களின் அதிகாரம் சார்ந்த சிந்தனை முறையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகத் தான் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்றும் இதற்கு மாறாக இந்திய அரசிற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அதிகார வர்க்கச் சிந்தனை முறைகுட்பட்ட இன்னொரு பகுதியினர் கோருகின்றனர்.
காஷ்மீரிலும், மேற்கு வங்கத்திலும், இன்னும் இந்தியா முழுவதும் எந்த மனிதப்பெறுமானக்களுக்கும் மதிப்பளிகாது மனிதப்படுகொலை நிகழ்த்தும் இந்திய அதிகாரம் உலக முதலாளித்துவத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்காக இலங்கையில் மட்டுமல்ல தனது சொந்த எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவிக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள் இவர்கள்.

உலகம் முழுவதையும் தனது பொருளாதார ஆகிரமிப்பிற்குள் உட்படுத்துக் நோக்கோடு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இன்றுவரை எழுதிவைத்திருக்கும் பிரித்தானிய வாக்குக் கட்சிகளோடு இலங்கைப் பிரச்சனை பற்றி மணிக்கணக்கில் விலையுயர்ந்த உணவு விடுதிகளுள் பேச்சு நடத்தும் பிரித்தானிய தமிழ் fபோரம் போன்ற புலி சார் அமைப்புக்கள், பிரித்தானியாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக, பிரித்தானியாவிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் இலட்சக்கணக்கான இடது சாரிகளை இனம் கண்டுகொள்வதில்லை.

பாலிஸ்தீனய மக்களின் விடுதலைக்காகவும், ஈராக்கிய, ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்புக்களுகெதிராகவும் நடத்திய வீரம்மிக்க எதிர்ப்பியக்கங்கள் பல தடவைகள் பிரித்தானிய அதிகாரத்தை அதிரவைத்திருக்கின்றன. ஐரோப்ப்பியப் போராடும் மக்கள் தமக்காக மட்டுமல்ல உலகம் முழுவதும் மனிதப்படுகொலைகள் நடைபெறும் போதெல்லாம் போராடி தமது அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்த வரலாறுகளை எம் கண்முன்னே காணலாம்.

இலங்கை இனப்படுகொலை குறித்து பிரச்சார அடிப்படையில் கூட இவர்கள் அணுகப்படவில்லை. மாறாக, மக்களின் எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் புலிகளின் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்படுகின்ற, இனப்படுகொலைக்கும், இனச்சுத்திகரிப்பிற்கும் முகம்கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரத்தின் பக்கமல்ல, மாறாக ஒடுக்கப்படுகின்ற ஏனைய மக்களின் பக்கத்தில் தான் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக இணைத்துக்கொள்வதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்க்குப் புதிய உயிர்ப்பை வழங்க முடியும்.

Exit mobile version