Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே)

atlantean_degeneratesமனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன்னும் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும்.

இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும், கலை கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கவும், வளர்ச்சிநிலையை உயர்த்திக்கொள்ளவும் குழுமுறையான வாழ்வு முக்கியமாகிறது. ஆனால் இன்றைய புலம்பெயர் சூழலில் குழுக்கலாச்சாரத்தால் தமிழர்கள் சந்திக்கும் பிரிவினைகளும், வீழ்ச்சியும் கணக்கில் அடங்காதவை.

புலம்பெயர்ந்து, புதிய மொழி, மத, கலாச்சார, பண்பாட்டுச்சூழலில் தமது இனத்தவரோடான குழுமுறையான வாழ்வு என்பது தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும் முக்கியமானதொன்றாகிறது. ஓவ்வொரு மனிதனும் தனக்குரிய குழுவொன்றில் உறுப்பினராக தனது இருப்பைத் தக்கவைத்திருக்கின்றான். குழுக்கள், உபகுழுக்கள், எதிரணிக்குழுக்கள், பிளவுபட்டகுழுக்கள், அரசியற்குழுக்கள் என குழுக்களுக்கு இங்கு பஞ்சமில்லை. குழுமுறை கலாச்சாரம் சமூகத்தில் சாதகமான விடயங்களை தன்னத்தே கொண்டிருந்தாலும் பாதகமான பல விடயங்களையும் ஏராளமாகத் தருகின்றன.

இக்குழுக்கள் எமது சமூகத்தில் எப்படிப்பட்ட பாதகமான நடைமுறையைக் கொண்டிருக்கின்றன என்பதையே நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் பதிவு ஒரு தனிப்பட்ட குழுவிற்கான விமர்சனம் அல்ல. எமது தமிழ்ச் சமூகத்தில் நாம் அறிந்த குழுக்கள் பலவும் இவைக்கு விதிவிலக்கானவை என்பதே நிதர்சனம்.

குழுமுறைக் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் கூறும், செய்படுத்தும் கருத்துக்களுக்கிணங்கவே அனைத்து குழு உறுப்பினர்களும் சிந்தனையற்ற இயந்திரத்தனமான செயற்பாட்டளாராகி விடுகின்றனர். இக்குழுக்களில் விரல்விட்டு எண்ணுக்கூடிய அளவில் உள்ள சிலரே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எப்போதும் அதிககாரத்தில் இருக்கின்றனர். அல்லது அதிகாரத்தை மற்றவர்களினூடாக இயக்குகின்றனர் இந்தக் குழுக்கள் உண்மையில் ஜனநாயகம் என்ற பெயரில் மறைமுக சர்வாதிகாரத் தன்மையையேகொண்டிருக்கிறன. எழுத்துவடிவில் அல்லாத வாய்மொழி விதிகள் பலவும் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஏற்படுத்ப்படுகின்றன.

அது மட்டுமல்லவே, செக்குமாட்டினைப்போன்று தம்மை ஒரு வட்டத்துள் மாய்த்துக்கொள்வதையே குழு உறுப்பினர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காரணம் குழுவின் செயற்பாடுகளை , கொள்கைகளை தீர்மானிப்பதற்காக தமது பங்களிக்கை கொடுப்பதற்கான மனபலம் இல்லாதமையும், அதற்குரிய அறிவை வளர்த்துக்கொள்ளாமையும் ஆகும். மேலும் ஆதிக்க நபர்களின் கருத்துக்களுக்கு எதிராக பேசுவதற்கு பயப்படும் மனப்பாங்கும் பல சாதாரண குழு உறுப்பினர்களிடையே இருக்கின்றது.

பெரும்பாலான குழுஉறுப்பினர்கள் தமது சுயதேவைகள் நிறைவேற்றுப்படும் பட்சத்தில், அதற்கப்பால் உள்ள முரண்படுகளிலோ, சமூக மேம்பாட்டிலோ, ஒற்றுமையிலோ அல்லது குழுவிற்கு தேவையான மாற்றங்களிலோ தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளாமல் தப்பித்தலுக்கான விடைகளைத் தேடிக்கொள்கின்றார்கள். இவர்கள்தான் இக் குழுக்களின் பெரும்பான்மை உறுப்பினர்கள். இவர்களை நம்பியே இக்குழுக்களின் அதிகார வர்க்கம் குழுவினை இயக்குகின்றது. இந்த இடத்தில் குழுவின் முக்கிய அங்கத்தவராக அல்லது அதிகாரத்தில் உள்ளவராக, அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் நண்பர்களாக இருப்பவர் செய்யும் பெரிய தவறுகள்கூட சமாளித்துப்போக வேண்டிய விடயமாக மாறிவிடுகின்றது.

ஆனால் குழுக்களில் உள்ள பலமற்றவர்கள், அல்லது குழுத் தலைமைக்கு வேண்டப்படாதவர்கள் செய்யும் சிறுதவறுகள் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களை வெளியேற்றம் செய்வதற்கான முறையில் காரியங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.

இலங்கையில் சிறுபான்மைக்கெதிரான கடும்போக்குடைய சிங்கள பேரினவாதத்தினைப்போல், பலம் பெற்ற தமிழ்க்குழுக்கள் தனிமனிதர்களாக்கப்பட்ட தமிழ்ச் சிறுபான்மை சமூகத்தினரை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் கேலிக்குரியவர்களாக சித்தரிப்பது ஒன்றுக்குப்பின்ஒன்று முரணாகவே எனக்குத் தெரிகிறது. நிராகரிப்புக்குள்ளூன தனிமனிதர்களும் அவர்களுடைய குடும்பங்களும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்தும் கொச்சைப்படுத்தப்படுகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் உள்ள பல குழுக்கள் தமக்கேயான விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் நடைமுறைப்படுத்திவருக்கின்றன. இத்தகைய விதிமுறைகள் அனைத்துத் தரப்பு மனிதர்களையும்ச் சேர்த்து செயல்படவேண்டிய முறையைவிடுத்து அதற்கெதிரான ஒரு மூடுகலாச்சார முறையையே தோற்றுவித்திருக்கின்றது. தமிழர்களுக்குள்ளாகவே குறுகிய வட்டத்துள் இயங்;கிவரும் மூடுகலாச்சாரக் குழுக்கள் சிலவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல விதிமுறைகள் புலம்பெயர் நாட்டின் சட்டங்களுக்கு புறம்பானவையாகவும் இருக்கின்றன.

குழுக்களில் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவராகவோ, சுயமான தனது கருத்தைக்கொண்டவராகவோ இருப்பது குழுகலாச்சார இயல்புக்கு விரோதமாகதாகவே காணப்படுகிறது. ஒருமித்தகருத்தோடு நாம் இருக்கவேண்டும் என்றும், அதிகார வர்க்கத்தின் முடிவுகள் ஏகமனதான முடிவுளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற மனப்பாங்கும் பொதுவிதியைப்போல கடைபிடிக்கப்படுகிறது.

சுயமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், தங்கள் கருத்தை துணிந்து முன்வைப்பவர்கள் அனைவரும் சந்தப்பங்கள் ஏற்படும்போது குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு கேலிக்குரியவர்களாகவும், தள்ளிவைக்கப்பட வேண்டியவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இதனால் மாற்றுங்களைக் கொண்டுவர முனைவோரும், தாம் கேலிக்கும், நிராகரிப்பிற்கும் ஆளாகக்கூடும் என்ற நிலை ஏற்படும் என ஒதுங்கியே செல்கின்றனர். அதுவே. ஒரு பெண்ணாக இருந்தால் தன்னுடைய பெண்மை பற்றிய கேள்விகளையும், கேலிகளையும் சுமந்த வண்ணமே வெளியேறவேண்டி வந்திருக்கிறது. ஆணாதிக்க மனப்பான்மையையும் இக்குழுக்கள் தாராளமாகவே தம் தேவைக்கேற்ப வெளிப்படுத்துகின்றன.

அதிகாரத்தினை கையில் வைத்திருக்கும் நபர்கள் தமது சுயவளர்ச்சிக்காகவும், சுயதேவைகளுக்காகவும் தம்மைவிட திறமைவாய்ந்த நபர்களை தேவைக்கேற்ப சிலபல பழிகளுடன் அவர்களை வெளியேற்றுவதும் நடைமுறையில் சாதாரணமானவையாகவே இருக்கின்றன. அப்படி வெளியேற்றுப்படுபவர்கள் அக்குழுவின் ஒட்டுமொத்த எதிரியாக சித்தரிக்கப்படுகின்றனர். இதனால் வெளியேற்றப்பட்டவர்கள் உளவியல்தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.

”குழு கலாச்சாரஅமைபின் கட்டுப்பாட்டில் இருக்கும் நபர்கள் எல்லாரும் ஓரளவு சித்தபிரமை பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்;” என்று ஒரு கட்டுரையில் படித்ததாக நினைவு இருக்கிறது. ஆனால் சிலர் சித்தத்தெளிவுடன் தமது சுயதேவைகளுக்காக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

குழுக்களின் கொள்கைகள் பாதுகாக்கப்படுவதும், அதற்காக நாம் செயற்படுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதுவே யாதார்த்தங்களையும், புதிய சிந்தனைகளையும், மாற்றங்களையும், மனிதநேயத்தையும் கொச்சைப்படுத்துமானால், குழுவின் கொள்களையே மறுசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதாகவே தோன்றுகிறது.

”அதிகாரத்தில் உள்ளவர்களால் சிலர் அடித்து வீழ்த்தப்படுவார்கள். அடித்தவர்கள் விமர்சகர்களாகவோ, போட்டியாளர்களாகவோ இருக்கலாம். வீழ்ந்துகிடப்பவர்கள் மேல் அடித்துவீழ்த்தி ஏறிநிற்பதால் அவர்கள் பெரும் உயரத்தை எட்டியதாக எண்ணிவிடக்கூடும். வீழ்ந்துகிடப்பவனின் முதுகில் ஏறி எத்தனை உயரத்தை ஒரு மனிதன் எட்டிவிடமுடியும்? வெற்றியை நாம் எட்ட வேண்டுமானால் ஒருவனை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடாது, அவன் நமிர்ந்து நிற்கும் போதே அவனுடைய கருத்தின் தோள்களில் ஏறி நிற்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” ”மனிதவாழ்வில் வெற்றி, தோல்வி, இழப்பு, இன்பம் என்பது அடித்துக்கொண்டிருக்கும் காற்று போன்றது. பெரும் புயலில் அடித்துச்செல்லாமல் நிமிர்ந்து நிற்பதற்குத் திடமான வேர்களை நாம் உருவாக்கிக் கொள்வதே முக்கியமானது. இதை நாம் எமது அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்பதற்கு முதலில் நாம் சிறந்த முன்னுதாரணமாக இருப்பது அவசியமாகிhகிறது.” – என்கிறார் யான் வின்சென்ட்ஸ் யுகன்னெஸ்ஸன்.

சமயக்குழுக்களோ, அரசியற்குழுக்களோ, சமூகமேம்பாட்டுக் குழுக்களோ எதுவாகினும் சுதந்திரமான சிந்தனையுடையவர்கள் மீது தொடர்ந்து அழுத்தங்களையும், அச்சுருத்தல்களையும் கொடுத்த வண்ணமே இயங்குகிறன. அவர்கள் மீது தொடர்ந்தும் அடிகளை வீசிக்கொண்டே இருக்கின்றன நாம் கூறும் கருத்துக்களில் நம்பிக்கையும், உண்மையும் உள்ளதாயின் இப்படியான போராட்டத்தில் என்றும் திடமாக நிமிர்ந்து செய்படும் தன்மையை நாம் எமது அடுத்த சந்ததிகளுக்கு வழங்குவது இன்றியமையாதது.

எதிர்காலச் சந்ததிகள் தாம் கொண்டிருக்கும் சிந்தனைகளையே உள்வாங்கி தமக்கு கீழேயே கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதற்காகவே, பல அமைப்புகள் தமது குழுவின் கிளைக்குழுக்களாக பல குழுக்களையும் உண்டாக்கி வருகின்றன. இவை எமது பழைய சிந்தனைகளையும், பழிவாங்கல்களையும், வளர்ச்சியற்ற மூடுகலாசசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திவிடும் முயற்சியேயின்றி வேறில்லை. இப்பரந்த உலகில் சுதந்திரமான சிந்தனையாளராக, சுயமான படைப்பாற்றுல் கொண்டவராக வளரவிடாமல், எமது இரண்டு கரங்களையும் உயரத்துக்கியபடி அவர்கள் முதுகின் பின்னே புலனாய்வுக் கண்களுடன்ட அலைந்துகொண்டிருக்கின்றோம். எமது பிளவுகளையும், பிளவுபட்ட சமூகத்தையும்தான், எந்த புள்ளியிலும் இணையவிடாத செயல்பாட்டையும்தான் நாம் எமது எதிர்காலச் சந்ததியிடம் கையளிக்கப்போகிறோமா? நாளைய சமூகத்தினருக்கு நாம் எதை விட்டுச்செல்லப்போகின்றோம்?

உண்மையில் நாங்கள் யார்? எமக்கு என்ன வேண்டும் என்று புரியாத மனநிலையில் நாம் இருக்கிறோமா? எமது சிந்திக்கும் உரிமையை பறித்தெடுப்பதுதான் குழு ஒற்றுமையா? நிராகரிப்புகள் சமூகத்திற்கு வெற்றியை ஈட்டித் தருமா? இத்தனை கால வரலாற்றில் இப்படியான குழுமுறையான கலாச்சாரம் எதை சாதித்திருக்கிறது? அதுசரி சாதனை என்பதுதான் எது? அந்த வரையரையின் உயரம் எது? அந்த உயரத்தை எட்டுதல் என்பது இத்தகைய நடவடிக்கைகளையா நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கப் போகிறது? இப்படி ஒரு பைத்தியக்காரியைப்போல என்னை எது சிந்திக்க வைக்கிறது?

குழுமுறைக் கலாச்சாரம் பற்றிய எனது கருத்தை நான் சுதந்திரமாக எழுதியது உங்களில் எவர்க்கேனும் பாதகமாக உள்ளதா? சமூகக்காவலர்களே இதில் உங்களுக்கு முரண்பாடுகள் இருப்பின், நான் அடித்துவீழ்த்தப் படுவேனா? அல்லது இக்கருத்தின் தோள்களின் மீதேறி நிற்கும் திடம் தங்களிடம் உள்ளதா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தமிழர்களாகிய நாம் இனியாகிலும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதற்கு மேலாக நமக்குள் இருக்கும் உடன்பாடுகளை முன்னிலைப்படுத்துவது என்பது சாத்தியமற்றதா?

Exit mobile version