அமரிக்கா குறித்துச் சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுதான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி. அதிலும் மிகக் குறிப்பாக ஈராக்கில் அமரிக்கா தொடர்பான சாதகமான நிலையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த நேர்மறையான சிந்தனையைத் தோற்றுவிப்பது தான் அவர்கள் முன்னெடுக்க வேண்டிய வேலை முறையாக அமைந்திருந்தது.
அமரிக்க சார்புப் பிரச்சாரங்களையும், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ” என்ற சுலோகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களையும் ஈராக்கிய ஊடகங்களில் மேற்கொள்வதென்பது அவர்களுக்கு மிகக் குறிப்பாக வழங்கப்பட்ட பணியாக அமைந்தது.
ஈராக்கிய செய்திப்பத்திரிகைகளில் அமரிக்க சார்புக் கட்டுரைகளை எழுதுவோருக்கும், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அமரிக்க சார்புப் பிரசாரங்களை மேற்கொள்வோருக்கும், சன்மானம் அல்லது லஞ்சம் வழங்குவதனூடாக தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அறிவுறுத்தப்பட்டது.
2005 நடுப்பகுதியில் ஈராக்கில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த லிங்கோல்ன் நிறுவனம் அமரிக்காவிற்கு எதிரான அமைப்புக்கள் குறித்து அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும், பொய்ச் செய்திகளைத் தயாரித்து வெளியிடுவோருக்குப் பண வசதி வழங்குவதிலும், செய்திகளை இருட்டடிப்புச் செய்வதற்கு உள்ளூர் ஊடகங்களை விலைக்கு வாங்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியது.
மார்ச் மாதம் 2006ம் ஆண்டு O’Dwyer’s PR Daily என்ற செய்திப் ஊடகம் வெளியிட்ட செய்தியில் லிங்கோல்ன் நிறுவனம் பாகிஸ்தானை அபிவிருத்தியடையச் செய்வதற்காக அந்த நாட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. அதுவும் அமரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான கரோல் பிலேமிங் உடன் இணைந்து பாகிஸ்தானில் ஆடை உற்பத்தி, எரிபொருள், தொழிநுட்பன், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்குச் செயலாற்றுவதாக மேலும் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிறுவனம் அமரிக்க சார்புப் பிரசாரங்களைப் பாகிஸ்தானில் ஊக்குவிப்பதற்காகவும் பல ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் பின்னதாகப் பல தகவல்கள் வெளியாகின.
லிங்கோல்ன் நிறுவனத்துடனான அமரிக்க இராணுவத் தலைமையகத்தின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் மேலும் இரு நிறுவனங்களுடனும் இதே வகையான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. சர்வதேச ரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் கைச்சாத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிச் சேவைகள் ஆகிய ஊடகங்களுக்குப் பண வசதி செய்து கொடுப்பதன் ஊடாக அமரிக்க சார்புப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
ஏ
னைய இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 100 மில்லியன் டொலர்கள் வீதம் முழுவதுமாக 300 மில்லியன் டொலர்கள் இந்தக் குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பிரயோகிக்கப்பட்டது.
பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், ஏனைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பகுதிகளிலும் இது போன்ற நிறுவனங்கள் ஒரு பொதுவான பிரசாரத் தந்திரோபாயத்தை முன்வைத்தன.
(a)அபிவிருத்தி, மனிதாபிமானம் என்பவற்றை உரிமை குரலுக்கு எதிராக முன்வைத்தல் என்பது முதன்மையான தந்திரோபயமாகப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது. உரிமை குறித்துப் பேசுவோர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்ற சிந்தனை முறை வளர்த்தெடுக்கப்பட்டது.
(b)தவிர உரிமைக் குரலெழுப்பும் குழுக்களையும் தனி நபர்களையும் குறித்த அடையாளததிற்கு உட்படுத்தி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி அழித்தல் என்பது மற்றொரு தந்திரோபாயமாகப் மேற்கொள்ளப்பட்டது.
அமரிக்க அரசும் அது சார்ந்த அணிகளும் நடத்திய உளவியல் யுத்ததின் அனைத்துத் தந்திரோபாயங்களையும் இலங்கை-இந்திய அரசுகள் அவற்றின் எதிரிகள் மீது பயன்படுத்துகின்றன. அதிகார சக்திகள் பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒரே வகையான தந்திரோபய முறைமகள் காணலாம்.
இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது என்பதை குறித்த நிறுவனமும் இலங்கை அரசும் முற்றாக மறுத்திருந்தன.
பிரித்தானியாவின் உள்ளே
வன்னியில் தமது மண்ணை நம்பி வாழ்ந்த மக்களை இரசாயனக் குண்டுகள் போட்டு அழித்தூவிட்டு எஞ்சியிருந்த மக்களை தெருவிலே அனாதைகளாக அலைய விட்டிருக்கும் இலங்கை அரசு அன்னிய நிறுவனங்களுக்கு மில்லியன்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறது.
அமரிக்காவில் ஆங்கில மொழியில் எழுதப்படுகின்ற செய்திகளும் கட்டுரைகளும் ஈராக்கியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்கிறது சவுத் வாச் என்ற அமைப்பு.
இலங்கை அரசிற்கு அந்த வகையான தேவைகூட இருக்காது. அவர்கள் பிரசாரம் செய்ய வேண்டியதும், அதன் வழியேயான உளவியல் யுத்ததைக் நிகழ்த்துவதும் தமிழ் மொழியூடாகத் தான். அதிலும் தமிழர்கள் ஊடாகத் தான்.
புலம் பெயர் நாடுகளில் புலிகளின் கட்டமைப்பு முற்றாக அழிக்கப்படவில்லை என்பதையும் அது குறித்த கவனம் தேவையென்றும் அறிவுறுத்தியிருந்தார்.
இதையொட்டிய காலப்பகுதிகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல புலியெதிர்ப்பு நபர்கள் இலங்கையை நோக்கிப் படையெடுத்தனர். இவர்கள் இலங்கை அரசு தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுகிறது என்ற கருத்துக்களை புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று முன்வைத்தனர்.
ஈழத் தமிழர்கள் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்துகொள்ளும் புலம்பெயர் தேசிய உணர்வார்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இக்கருத்துக்கள் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதன் பின்னதாக தமிழ் நாட்டில் இலங்கை அரசு சார்பான பிரச்சார நடவடிக்கைகளில் வெற்றிகண்ட ஹம்சா என்ற இந்தியத் துணைத் தூதர் பிரித்தானியாவிற்கு மாற்றல் செய்யப்படுகிறார். இலங்கை அரச உளவாளி எனச் சந்தேகிக்கப்பட்ட கே.பி தன்னை வெளிப்படையாக அரசுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். எம்.கே.நாராயணன் முன்மொழிந்த உளவியல் யுத்தம் புதிய யுக்திகளுடன் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
மக்கள் தலைமகளும் வெகுஜன அமைப்புக்களும் யுத்ததின் முன்பிருந்தே அழிக்கப்பட்ட நிலையில் இலங்கை மக்கள் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சிறிய அளவிலேனும் நடத்த முடியாத சூழலிலிருந்தனர். அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நேரடியான யுத்ததிற்கு அவர்கள் மிரண்டு போயிருந்தனர். அவர்க உளவியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு இனச் சுத்திகரிப்புக்கும், தொடர்ச்சியான பேரினவாத அரசின் இன அழிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டனர்.
உலகளாவிய முற்போக்கு மற்றும் போராடும் முகாமிலிருந்து புலிகளின் தவறான வழிமுறைகளால் தமிழ்ப் பேசும் மக்கள் அன்னியப்படுத்தப்படிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் எழக்கூடிய எதிர்ப்புப் போராட்டங்களும் புலம் பெயர் நாடுகளில் உருவாகவல்ல உரிமைப் போராட்டங்களுமே இலங்கை இந்திய அரசுகளின் குறியாக அமைந்தது.
புலம் பெயர் ஊடகங்களின் வழியாக இவற்றிற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒரு குறித்த படிமுறையில் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
1. தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் எழும் உரிமைக் குரல் என்பது முன்னர் அழிவுகளையே ஏற்படுத்தியிருந்தது, இன்னும் அழிவுகளுக்கே வழி வகுக்கும்.
2. தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை இந்திய அரசுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.
3. தமிழ்ப் பிரதேசங்கள் போரிலிருந்து மீண்டு அபிவிருத்தியடைகின்றன. மீண்டும் உரிமை குறித்துப் பேசுவது அழிவிற்கே வழிவகுக்கும்.
4. மக்கள் மிகப்பெரும் மனித அவலத்துள் வாழ்கின்றனர். இவர்களின் மறுவாழ்வும், மனிதாபிமான உதவியுமே இன்றைய தேவை. இது தவிர அரசிற்கு எதிரான கருத்தை முன்வைப்போர் சந்தர்ப்பவாதிகளும் அழிக்கப்பட வேண்டியோருமே.
5. இலங்கை அரசு சரியானது அல்லது தவறானது என்ற விவாதங்களுக்கு அப்பால் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு உதவுவதானால் இலங்கை அரசினூடாகவே அணுகுதல் சாத்தியமானது. ஆக, இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரலெழுப்புவது மக்களுக்கு வழங்கப்படக் கூடிய உதவிகளுக்கு எதிரானது; எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது.
6. தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையேயான பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படல்.
7. அமரிக்காவிற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் அல்கயிடா என்ற அடையாளத்துள் உட்படுத்தியது போலவே இலங்கை அரசிற்கு எதிரான குரல்கள அனைத்தையும் புலி அல்லது புலி ஆதரவாளர்கள் என்ற அடையாளத்தை உருவாக்க முற்படுதல்.
மேற்குறித்த நோக்கங்களை அடைவதற்கான பிரசார வழிமுறை என்பது செய்திகள், கட்டுரைகள், கருத்தரங்குகள் போன்ற வெகுஜன சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. வன்னி யுத்தத காலப்பகுதியிலிருந்து மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இணையங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துபவையாக அமைந்தன. இணையங்கள் வழியாக இலங்கை இந்திய அரச ஆதரவுப் பிரச்சாரங்கள் இன்று தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.
1. ஒருதலைப்பட்சமான இலங்கை இந்திய அரசுகள் சார்பான செய்திகளை வெளியிடல்.
2. ஒவ்வொரு நோக்கங்களுக்காகவும் கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் வெளியிடுதல்.
3. அரசை எதிர்ர்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீதான திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளல்.
போன்ற வழிமுறைகள் பிரதானமானவையாக அமைகின்றன.
அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல புலிகளின் சிந்தனை முறையை எதிர்ப்பவர்களுமாகும்.
ஈராக்கிலும் ஆப்கானிலும் என்று அவதூறுப் பிரச்சரங்களூடாக அழிக்கப்பட்டவர்களில் பலரும் , அல்கையிதா என்று அடையாளப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டவர்களில் பலரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எதிர்த்தவர்களே.
ஏகபோக அரசுகளினால் பயன்படுத்தப்பட்ட அதே வகையான வழிமுறைகள் அவர்கள் கொண்டிருந்த அதே நோக்கங்களுக்காக இன்று இலங்கை இந்திய அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றன. பி.பிசி தனது செய்தியில் குறிப்பிடும் பல் தேசிய நிறுவனத்தைப் போன்ற அமைப்புக்களைத் தவிர இலங்கை அரசு நேரடியாகவே புலம் பெயர் நாடுகளில் பணத்தை வாரியிறைக்கிறது என்பதற்கான ஆதரங்கள் வெளியாகின்றன.
புலம் பெயர் தமிழர்களை எதிர்கொள்ளும் பணி 3 மில்லியன் பவுண்ஸ் சன்மானமாகப் பெறும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிடும் மேலும் சில நிறுவனங்கள் தமிழர்களாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.
யார் எங்கே எப்படி செயற்படுகிறார்கள் என்ற புலனாய்வு – அவதூறுச் சகதிக்குள் கால்வைக்க இது தருணமல்ல. எது எவ்வாறாயினும் இவர்களை அடையாளம் காண்பது கடினாமான ஒன்றுமல்ல.
அமரிக்க எதிர்ப்பாளர்களான மொகமட் ஒத்மான்(குர்தீஸ் சட்டவல்லுனர்) போன்ற பலர் தமது அதிதீவிர இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து சீரழிவு வாதிகளாக அமரிக்க ஆதரவு நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலம்பெயர் நாடுகளையும் தமிழ் நாட்டையும் இவர்களோடு ஒப்பு நோக்கும் போது, பல சீழவு வாதிகளும் லும்பன்களும் அரச உளவாளிகளோடு பல சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகிறார்கள்.
அனைத்துமே மறுபடி வேறு நிறத்தில், வேறு தளத்தில், வேறு நாட்டில் அரங்கேற்றப்படுகிறது. அதிகாரங்களின் பணபலத்தின் முன்னால் அதற்கு எதிரான போரை ஆரம்பிக்க வேண்டிய கடமை சமூகப்பற்றுள்ள, மக்கள் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவசரக் கடமை.
________________________________________________________
Psychological Warfare Techniques: Psychological Warfare, Information Warfare, Disinformation, False Flag, Strategy of Tension (Bool Llc :2010)
http://www.usatoday.com/news/washington/2005-12-13-propaganda-inside-usat_x.htm
O’Dwyer’s PR Daily