இரண்டாவது தடவையாக இந்த மாணர்வர் அமைப்பு மகிந்த ராஜபக்சவை அழைத்திருக்கின்றது. இவரின் வருகைக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களின் முதலாவது பகுதி ஹீத்ரோ விமான வாயிலில் மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் தமது எதிர்ப்புணர்வைத் தெரிவிக்கும் வகையில் முன்னரே திட்டமிட்ட அறிவிப்புக்கள் எதுவுமின்றி ஒன்று திரண்டிருந்தனர்.
வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு லட்சம் தமிழ்ப் பேசும் மக்கள் வரை ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டங்களின் எதிர்விளைவுகள் இலங்கை அரசையோ அதன் பின்னணியில் செயற்படும் இந்திய அரசையோ எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாக்க்கவில்லை. அனைத்தையும் கடந்து இறுதி நாள் அழிப்பின் போது மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்டனர். போர் விதிமுறைகள் எதற்கும் உட்படாத வகையில் இலங்கை அரசு அனைத்தையும் நிறைவேற்றி முடித்திருந்தது.
ஆக, புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள், மக்களின் உணர்வுகள் அனைத்தும் “விளலுக்கிறைத்த நீர்” போலாகிவிட்டது. இதனால் போராட்டங்கள் தேவையற்றவை என்ற கருத்து உருவாகிவிடலாகாது. தவிர, மக்களின் தார்மீக உணவைக் கொச்சைப்படுத்தலும் நியாயமற்றது.
ஏனைய நாடுகளைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட இனங்கள் தமது தேசங்களின் ஒடுக்கு முறையாளர்களுக்க்கு எதிரான போராட்டங்களை புலம் பெயர் தேசங்களில் நடத்தி குறித்தளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகள், பலஸ்தீனம் என்று பல வெற்றிகண்ட உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் போராட்டங்களின் பொதுத் தன்மை என்ன?
1. புலம்பெயர் நாடுகளில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தமது நாட்டு ஒடுக்குமுறை குறித்த பொது அபிபிராயத்தை உருவாக்குதல்.
2. உருவாக்கப்பட்ட அபிபிராயத்திலிருந்து போராடும் பகுதியினரை தமது போராட்டங்களோடு இணைத்துக்கொள்ளல்.
3. பெரும்பான்மை மக்களோடு இணைந்து புலம்பெயர் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்குதல்.
ஆக, பொது அபிபிராயத்தை உருவாக்குதலும், போராடும் சக்திகளோடு இணைதலும், அழுத்தங்களை வழங்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனினும் இவை அனைத்துமே அர்ப்பணம் மிக்க போராட்டங்களே.
வெற்றிபெற்ற வழிமுறைகளைக் கூடக் கற்றுக்கொள்ள மறுக்கும் நாம் தோல்வியின் தொடர்ச்சியை இன்னமும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
இவ்வாறான சமூகப் பொதுப்புத்தியை புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்தியிருந்தால்,
1. உலகம் முழுவது உரிமைக்காகப் போராடும் மக்கள் பகுதி எம்மையும் இணைத்துக் கொண்டிருக்கும்.
2. ராஜபக்ச போன்ற சர்வாதிகாரிகளும் இனக் கொலையாளிகளும் மக்கள் அபிபிராயத்தை மீறி நாடுகளுக்குள் உள் நுளைதல் இலகுவானதல்ல.
3. இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை புலம் பெயர் அரசுகளூடாக வழங்கியிருக்க முடியும்.
4.இந்தியா போன்ற நாடுகள் ராஜபக்ச போன்றோரை ஜனநாயகத்தின் காவலர்களாகச் சித்தரிப்பது இலகுவானதல்ல.
இவையெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஆரம்பம் என்பதே போராடும் தமிழர்கள் என்பது புலிகள் என்ற சிறு பகுதியினரே என்ற இலங்கை அரச பிரச்சாரம் முறியடிக்கப்படுவதிலிருந்தே உருவாகும். ஆனால் புலிகள் சார்ந்த பலர் மத அடிப்படை வாதிகள் போல அனைத்துப் போராட்டங்களையும் புலிகளின் போராட்டங்கள் என்ற விம்பத்தை வழங்க முற்படுகிறார்கள்.
ராஜபக்சவின் வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடைபெற்ற போராட்டத்தில் புலிக் கொடிகளோடு சென்ற தமிழ் அப்பாவிகள் ஒருபுறமும் அதே புலிக்கொடியைத் தமது தேசியக் கொடி என பிரச்சாரம் செய்ய்யும் புலி சார் ஊடகங்கள் மறுபுறமுமாக மக்களின் உணர்வுகளைச் செல்லாக்காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் மிக நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஆரம்பமே ஆயிரம் தடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.