எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்