Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை உடைத்து அவர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்ட பாஜக இப்போது தெலங்கானா முதல்வரும் முன்னாள் பாஜக தமிழக தலைவருமான தமிழிசையை புதுச்சேரி கவர்னராக நியமித்துள்ளது.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்து வரும் நிலையில், தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தை அடுத்து புதுச்சேரியிலும் காங்கிரஸ் பிரமுகர்களை கைப்பற்றி அங்கு பாஜக தன்னை பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற முயன்று வருகிறது.

புதுச்சேரிக்கு ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டது முதலே அங்கு முதல்வராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமிக்கு தலைவலி துவங்கியது. பாஜகவின் அதிகார பண பலம், வருமானவரித்துறை, ஐ.டி ரெய்ட் போன்ற அரசு இயந்திரங்களை தங்களின் கட்சி நிரலுக்குப் பயன்படுத்தும் வேகத்தையும் காங்கிரஸ் கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.

போன மாதம் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். நேற்று மல்லாடி கிருஷ்ணராவ் என்ற அமைச்சரும் ராஜிநாமா செய்தார். இன்று ஜாண்குமார் என்ற சட்டமன்ற உறுப்பினரும் ராஜிநாமா செய்து விட்டதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இல்லாத அரசாகி விட்டது.

இவர்கள் அனைவருமே வருமானவரித்துறையால் மிரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்கள் எனக் கூறப்படுகிறது. ஜாண் குமார் லாட்டரி வணிகர் இவரை கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில்தான் இன்று அவர் தன் பதவியை ராஜிநாமா செய்தார். நாளை புதுச்சேரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரவிருக்கும் நிலையில் புதுச்சேரி அரசை குலைக்கும் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

பெரும்பான்மையை அரசு இழந்து விட்டதால் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்கிறது. ஆனால், புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் இதுவரை பாஜகவுக்கென்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது. எப்போதும் ஒரு வார்டில் கூட பாஜக வென்றதாக சரித்திரம் இல்லை. ஆனால், கிரண் பேடி ஆளுநர் ஆன பின்னர் மூன்று நியமன உறுப்பினர்களை பாஜகவுக்கு கொடுத்தார். புதுச்சேரி வரலாற்றில் மூன்று உறுப்பினர்கள் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆனது இப்படித்தான். இப்போது கூட அவர்களுக்கு சட்டமன்றத்திற்குள் ஆதரவில்லை.

இப்போது நடந்து வரும் நிகழ்வையொட்டி முதல்வர் நாராயணசாமியும் அமைச்சர்களும் ராஜிநாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ”எங்களைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜகவும் ஆளுநர் கிரண்பேடியும் இந்த ஆட்சியை தேர்தலுக்கு முன்னால் கலைக்க விரும்புகிறார்கள்.எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன விதிமுறைகள் கொடுக்கபப்ட்டுள்ளதோ அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்” என்று அறிவித்துள்ளார்.

ஆனால், இப்போது கிரண்பேடியை வாபஸ் பெற்றுள்ள மத்திய அரசு புதுச்சேரி ஆளுநராக முன்னாள் பாஜக தலைவரும் இப்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசையை புதுச்சேரி ஆளுநராக நியமித்துள்ளது.

நாராயணசாமியும் தமிழிசையும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் நாராயணசாமி பாஜகவால் பழிவாங்கப்படுகிறார் என்ற எண்ணம் அவரது சாதி ஆட்களிடம் இருந்தது. அதை சமாளிக்கவும் தமிழிசையை ஆளுநராக மத்தியில் ஆளும் பாஜக அரசு நியமித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தமிழிசையை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் திட்டமும் பாஜகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version