சிறிலங்கா அரசின் இராணுவ வெற்றியின் பின்பான – விடுதலைப் புலிகளின் அழிவின் பின்பான ஓராண்டுகளைக் கடந்திருக்கிறோம்.
புலிகளை அழித்த மகிந்த ராஜபக்சவை ஆதரித்து நிற்கிறார்கள் சிங்கள மக்கள். மகிந்த ராஜபக்சவை நிராகரித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நிற்கிறார்கள் தமிழ் மக்கள். இது, சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அரசியலில் முரண்பட்டு நிற்பதனை தெளிவாக்கியிருக்கிறது.
வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது கொக்கிளாய் சரணாலயப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக எனக்கருதப்படுகிறது. மடுவைச்சுற்றிய பகுதிகளில் 250 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மகாவலி அபிவிருத்தித்திட்டம் என்ற வகையில் வவுனியா வடக்கில் சிங்களக்குடியேங்களை ஏற்படுத்தவும் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
வட கிழக்கில் சிங்கள வர்த்தகர்களின் அத்துமீறிய ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம் என்பதற்கப்பால், அரச, இராணுவ பின்னணியுடன் தங்கள் ஆதிக்கத்தினை நிலைநாட்ட மேற்கொண்டு வரும் நிகழ்வகளை அவதானிக்க முடிகிறது.
இதே போன்றதொரு நிலைமையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்துக் கொள்ளும் முயற்சிகளையும் காணமுடிகிறது.
இந்நிகழ்வுகள், தமிழ் மக்கள் மத்தியிலேயே ஒரு அச்சநிலையைத் தோற்றுவித்திருக்கிறது.
-
வன்னி யுத்தத்தில் நடந்தவை பற்றியும், காணமல் போனவர்கள் பற்றியும் இறந்தவர்கள் பற்றியும் அறிய முடியமாலே காலம் கடந்து விட்டது.
அகதிகாளக்கப்பட்ட மக்களில் பெருமளவானோர் இன்னமும் அகதிகாளவே வாழ்கின்றனர்.
-
மீள் குடியேற்றத்திற்குள்ளாக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள்.
-
மீள் குடியேற்றத்திற்கு உள்ளாக்க வேண்டியவர்களில் சிலர், தாம் வாழ்ந்து வந்த இடம் பற்றிய குளப்பமான செய்திகளால் கலங்கிப்போயிருக்கின்றார்கள்.
-
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை பற்றி தெளிவான செய்திகள் எதுவும் இல்லை.
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் என்ற கோசம் வலுவிழந்து போகிறது.
-
அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் பெருமளவு பறிக்கப்பட்டு விட்டது. அம் மாகாண சபையின் முதலமைச்சர் அதிகாரமற்ற ஒரு வெற்று நபராக்கப்பட்டுள்ளார்.
-
வடக்கு மாகாண சபை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
-
வட கிழக்கின் அபிவிருத்தியினூடாக தமிழ் மக்கள் முன்னேற்றமடையலாம் என்ற அரசின் வாதம் பொய்த்துப் போவதனை மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.
-
கிழக்கின் உதயமும், வடக்கின் வசந்தமும் மக்களுக்கானதல்ல என்பது உணரப்பட்டுள்ளது.
-
தழித் தேசியக் கூட்டமைப்பினர், கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தம்மை தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் தக்கவைத்துள்ளனர்.
-
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் ஆரோக்கியமான முன்னகர்வுகளையும், ஒன்றிணைவையும் காணமுடியவில்லை.
-
சமூகப்பிரச்சினைகளுக்கெதிரான போராட்டங்களை முற்போக்கச் சக்திகளால் முன்னெடுக்க முடியாதொரு நிலையே தொடருகிறது.
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு முன்னகர்வான தீர்வினை முன்வைப்பதற்கான ஒரு சூழலை சர்வதேச சக்திகளால் தோற்றுவிக்க முடியாத நிலையொன்றே காணப்பட்டு வருகிறது.
-
வன்னி யுத்த அழிவுகள் ஒரு பேரவலமே. இவ்வோரண்டு காலத்திலும் பாரிய பின்னடைவுகளைத் தமிழ் மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பரசியல் எங்காவது ஒரு மூலையிலிருந்து ஈனக்குரலிலாவது எழுந்துவிடாமல் இருப்ப்பதற்காக இலங்கை அரசு தனது இரும்புக் கரங்களை இறுக்கிவருகிறது. ஒவ்வொருவரின் கழுத்திலும் துப்பாக்கி வைத்து மிரட்டப்படுவதான உணர்வுதான் ஏற்படுகிறது. தமது எதிர்ப்பை மக்கள் அரசியல் இயக்கமாக வெளிப்படுத்த முடியாத நிலையில் நம்பிக்கைகளை எதிர்பார்த்து மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய நுகத்தடியின் கீழ் மக்கள் வாழ்கிறார்கள் !
விஜய்(இலங்கையிலிருந்து…)