23.07.2011 கொழும்பு
1. இலங்கை ஒரு நவ கொலனித்துவ நாடாகும். அதற்குரிய பொருளாதார அரசியல் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பாதுகாக்கும் வகையில் நிலவுடைமை முதலாளித்துவக் கருத்தியல், சிந்தனை, நடைமுறைகளைக் கொண்ட ஆளும் வர்க்கம் பலமுடையதாகக் காணப்படுகிறது. அதுவே இலங்கையின் தரகு- பெரு முதலாளித்துவமாக ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக வர்க்கம், இனம், சாதி, பெண்கள் ஆகிய நான்கு தளங்களில் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்தும் வருகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடு அடிப்படையானதாகவும் இன முரண்பாடு பிரதானமானதாகவும் இருந்து வருகின்றன. அடிப்படை முரண்பாடு காரணமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள், பெண்கள், அரசாங்க- தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 90 சதவீதத்தினரான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போர் சுரண்டப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை தரகு- பெரு முதலாளித்துவ சக்திகள், சொத்து சுகம் உடையோர், அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள், இவர்களுடன் கைகோர்த்து நிற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் சுரண்டுவோராக இருந்து வருகின்றனர். அவர்களது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாம். இவ் ஆளும் வர்க்க சக்திகளை அரவணைத்து, ஊட்டமளித்து, பாதுகாத்து வருவதில் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும், ஏகாதிபத்திய பங்காளியான இந்திய பிராந்திய மேலாதிக்கமும், சீன வர்த்தக முதலீட்டுக் கம்பனிகளும் கைகொடுத்து வருகின்றனர். அதனால் ஏகப் பெரும்பான்மையான இலங்கை மக்களின் பொது எதிரி தரகு- பெரு முதலாளித்துவமும் அதனோடு கைகோர்த்து நிற்கும் அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் என்பது தெளிவானதாகும். இவர்களின் அதிகார ஆதிக்கப் பிடிகள் இலங்கையின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் வலிமையுடன் இருந்தும் வருகின்றன. இத்தகைய நிலையை ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலானது தன்வசப்படுத்தி நவதாராள பொருளாதார அரசியல் கொள்கைகளை நெறிப்படுத்தியும் நிலைப்படுத்தியும் வருகின்றது.
எனவே நாட்டினதும் அனைத்து மக்களினதும் பொது எதிரிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி அடையாளம் காண வைத்தல் வேண்டும். அதன் மூலம் அனைத்து மக்களையும் அவர்களுக்கான பிரச்சினைத் தளங்களில் அணி திரட்டி ஐக்கியப்பட்ட வலிமை மிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் வழியாகத் தேசிய ஜனநாயகத்தை நிலைநிறுத்திப் புதிய ஜனநாயகத்திற்கான உயர்ந்த கட்டப் போராட்டங்கள் ஊடாக சோஷலிசத்தை நோக்கிப் பயணிப்பதே நமது குறிக்கோளாகும்.
2. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையானது ஒடுக்கும் பேரினவாத தரகு- பெரு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குமிடையிலான முரண்பாடாக வளர்ந்து இலங்கையின் பிரதான முரண்பாடாகவும் இருந்து வருகிறது. ராணுவ ஒடுக்குமுறை மூலம் தேசிய இனப் பிரச்சினை நிராகரிக்கப்பட்டும் அரசியல் தீர்வு மறுக்கப்பட்டும் வருகிறது. இப் பேரினவாத ஃபாசிச நடைமுறை உறுதியாக எதிர்க்கப்படுவதுடன் இலங்கைப் பல்லினத் தேசியங்களைக் கொண்ட நாடு என்னும் அடிப்படையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். நாம் வற்புறுத்தி நிற்கும் அரசியல் தீர்வானது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் பூரண அதிகாரம் கொண்ட சுயாட்சி அமைப்பை நிறுவுவதாகும். அச் சுயாட்சியில் முஸ்லீம் மக்களுக்கும் நீண்டகாலம் வடக்குக் கிழக்கில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் சுயாட்சி உள்ளமைப்புக்களையும் உப உள்ளமைப்புகளையும் உருவாக்க வேண்டும். அதே போன்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே மலையகப் பகுதிகளில் சுமார் இருநூறு வருடங்களை அண்மித்ததாக வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்விட உரிமைகளையும், தேசிய இன உரிமைகளையும் வென்றெடுத்துப் பாதுகாக்கும் வகையிலான சுயாட்சி அமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
அவை மலையக மக்களின் புவியியல் வாழ்விடச் செறிவிற்கும் பரவலுக்கும் ஏற்றவகையில் அமைக்கப்படல் வேண்டும். இவ்வாறு தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் தேவையையும் அவசியத்தையும் பேரினவாதத்தால் திசை திருப்பப்பட்டுள்ள சாதாரண உழைக்கும் சிங்கள மக்களுக்குச் செயற்பாட்டு ரீதியில் விளங்கச் செய்தல் வேண்டும். அதேபோன்று பழைமைவாதத் தமிழ்க் குறுந்தேசியவாத மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் கொள்கைகளாலும் பரப்புரைகளாலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு இறுதியில் அவலங்களையும் அழிவுகளையும் தோல்விகளையும் கண்டுள்ள நிலை பெரும் வரலாற்றுப் பட்டறிவாகும். தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள உழைக்கும் மக்களை நேச சக்திகளாக்கிக் கொள்ளும் சூழலைத் தோற்றுவித்துக் கொள்வதன் வாயிலாகத் தமிழ் மக்கள் தமது சுயாட்சிக்கான புதிய போராட்டப் பயணத்தில் வெற்றிகரமாகப் பயணிக்க முடியும். அவ்வாறே மலையகத் தமிழ் மக்களும் குறுந்தேசியவாத, பிரதேசவாத எல்லை கடந்த நிலையில் தமது மறுக்கப்படும் இன, வர்க்க உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கச் சிங்கள உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டு வர்க்கப் போராட்ட அரசியலை முன்னெடுப்பது அவசியமானதாகும். இதனை இலங்கையின் பேரினவாத குறுந்தேசியவாத அரசியல் சூழலில் மக்களுக்கான மாற்று அரசியலாக முன்னெடுப்பது தேவையாகிறது. அதனை இப் பொது வேலைத்திட்டம் முன்னிறுத்துகிறது.
3. நாட்டின் பொருளாதாரம் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழான நவதாராளப் பொருளாதாரக் கொள்கைப் பின்பற்றலால் நாசமடைந்து வரும் நிலையிலேயே தொடர்கிறது. தேசிய பொருளாதாரத்திற்கான உற்பத்திகள் கைவிடப்பட்டு வரும் நிலையில் ஏற்றுமதிப் பொருளாதாரமும் நலிவடைந்து வருகின்றது. அதே வேளை நுகர்வுப் பண்பாடு ஊக்குவிக்கப்பட்டு இறக்குமதிகள் தாராளமாக்கப்பட்டு இலங்கை கட்டுப்பாடுகள் அற்ற திறந்த சந்தையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏகாதிபத்திய நிறுவனங்களாகிய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் வழி நடாத்தப்படுகிறது. அவற்றின் விளைவானதே பொருட்களுக்கான நாளாந்த விலை உயர்வுகளும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளுமாகும். இதனால் அரசாங்க தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊழியர்கள் மட்டுமன்றி அனைத்து உழைக்கும் மக்களும் கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்நோக்கி நிற்கின்றனர். இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கான உள்ளார்ந்த காரண காரியங்களை மக்களுக்கு எடுத்து விளக்கி அவற்றுக்கு எதிரான விளக்கங்கள் ஊடாக ஏகாதிபத்திய உலகமயமாதல் எதிர்ப்பு இயக்கம் பரந்தளவில் கட்டியெழுப்பப்படுவதையும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும் இப் பொது வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
4. இலங்கை இன்றும் விவசாயத்தையும், விவசாயக் கிராமங்களையும், ஏற்றுமதிக்கான தேயிலை ரப்பர் உற்பத்திக்கான பெரும் தோட்டங்களையும் கொண்ட நாடாகவே இருந்து வருகிறது. நிலமற்ற கூலி விவசாயிகள், குத்தகை விவசாயிகள், குடியேற்ற விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் எனப் பெரும்பாலோர் இருந்து வருகின்றனர். பல்வேறுபட்ட நிலைகளில் இவ் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றனர். நிலம், நீர், விதை, பசளை, கிருமிநாசினி, கடன், உற்பத்தி, சந்தைப்படுத்தல், தரகுமுறை, விலை நிர்ணயம், பருவநிலை மாற்றம், கடும் காற்று, பெருமழை, வெள்ளப்பெருக்குப் போன்றவற்றால் விவசாயிகள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திறந்த சந்தைக் கொள்கையால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விவசாய உற்பத்திகளால் நமது விவசாயிகள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய விவசாயிகளின் பிரச்சினைகள் நாடு தழுவியனவாக இருந்தபோதிலும் அவர்களது பிரச்சினைகளும் கோரிக்கைகளும் போராட்டங்களும் பரந்த தளத்தில் முன்னெடுக்கப்படவில்லை. இந் நிலையில் மாற்றம் ஏற்படும் வகையிலான விவசாயிகளது கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதையும் தேசியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக உறுதியான விவசாயக் கொள்கை முன்வைக்கப்படுவதையும் இப் பொது வேலைத்திட்டம் வற்புறுத்துகிறது.
5. இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. மீன்வளம் நிறைந்த இந் நாட்டில் மீனவத் தொழிலாளர்கள் கரையோரப் பிரதேசங்களில் சுற்றிவர வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மீனவர்கள் தமது தொழில்களைச் செய்து வருகிறார்கள். ஆனால் நாட்டின் உணவுத் தேவைக்கும் அதற்கு அப்பால் ஏற்றுமதிக்கும் மீன்வளம் இருந்த போதிலும் மீன்பிடி அபிவிருத்தி மட்டுப்படுத்தப்பட்டனவாகவே இருந்து வருகிறது. அதே வேளை உழைக்கும் மீனவர்கள் கஷ;டமான வாழ்வையே வாழ்ந்து வருகிறார்கள். சுனாமியால் உயிரிழப்புகட்கும் தொழில் கட்கும் உடைமை இழப்புக்கட்கும் உள்ளாகிய மீனவர்கள் அந்த இழப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. அதோ போன்று, முப்பது வருட யுத்தத்தால் உயிர், உடைமைகள், இருப்பிடம், தொழில் இழந்து அகதி வாழ்வுக்கும் தொழில் அழிவுகளுக்கும் உள்ளான மீனவ மக்கள் மறுவாழ்வைப் பெற முடியாத நிலையிலேயே இன்றும் இருந்து வருகின்றனர். இன ரீதியில் மட்டுமன்றி வர்க்க ரீதியிலும் உழைக்கும் மக்களான மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் முழுமையான கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுவதை இப் பொது வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
6. பெருந்தோட்ட தேயிலை ரப்பர் உற்பத்தித் துறையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம் ஆகும். கூட்டு ஒப்பந்தம் மூலம் மிகக் குறைந்த நாட் சம்பளத்தில் (தற்போது ரூ. 380103010105) அதி உச்ச சுரண்டலுக்கு உட்படும் தொழிலாளர்களாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். அதே வேளை நிலம், வீடு சொந்தமில்லாது நிரந்தர முகவரி அற்ற நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, சுகாதார, சமூகப் பண்பாட்டு தளங்களில் பின்தங்கிய சமூகமாகவும் மலையகத் தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். பெருந் தோட்ட உழைக்கும் மக்களின் வாழ்வு இன்றும் துன்ப துயரங்கள் மத்தியிலேயே தொடருகின்றன. வர்க்க இன அடிப்படைகளில் சுரண்டி ஒடுக்கப்படும் மக்களாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அணிதிரட்டப்படுவதை இப் பொது வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
7. இலங்கையில் தனியார் துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் ஊழியர்கள் சுமார் அறுபத்தைந்து லட்சத்தினராவர். அவர்களுடன் அரசாங்க. கூட்டுத்தாபன, கூட்டுறவு ஊழியர்கள் அனைவரையும் சேர்த்தால் சுமார் எண்பது லட்சம் பேர் உழைப்போராக உள்ளனர். இவர்களில் பல்தேசியக் கம்பனிகளில், குறிப்பாகக் கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் மட்டும், பணிபுரியும் பெண்களும் ஆண்களும் மட்டும் 50 ஆயிரம் பேராவர். அவர்களுக்கு நாட்டில் ஏற்கனவே உள்ள தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் பல்தேசியக் கம்பனிகளின் அகோரச் சுரண்டலுக்குப் பலியாகி வருகின்றனர். தரகு- பெரு முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகளும் பல்தேசியக் கம்பனிகளும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் வர்க்கச் சுரண்டலை மறைக்க அடக்குமுறையைப் பயன்படுத்தியும் பேரினவாதத்தின் மூலம் வர்க்க ஐக்கியத்தைக் குலைத்தும் வருகின்றன. இத்தகைய நிலையில் தொழிற்சங்க இயக்கத்தின் மூலமான வர்க்கப் போராட்ட அரசியல் முன்னெடுக்கப்படுவதை இப் பொது வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
8. இலங்கையில் பொதுவாகவும் வடக்கு கிழக்கு மலையகத்தில் குறிப்பாகவும் சாதியம் வௌ;வேறு அளவுகளில் இருந்து வருகிறது. சாதிய முரண்பாடும் ஒடுக்குமுறையும் நீடித்து வருகின்றன. அறுபதுகளில் இடம்பெற்ற கடுமையான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களால் வடபுலத்தில் தீண்டாமை கணிசமான அளவிற்கு குறைந்திருந்தாலும் சாதியம் தனது தனித்துவப் போக்கைத் தொடரவே செய்கிறது. அதனைத் தமிழ்த் தேசியவாதப் போராட்டத்தாலோ அன்றிப் புலம்பெயர்ந்த சூழலாலோ ஒழிக்க முடியவில்லை. சாதியக் கருத்தியல், சிந்தனை, நடைமுறை என்பனவற்றைப் போரிடுவது தலித்தியம் என்னும் குறுகிய சாதிவாத நிலைக்கு அப்பால் ஏனைய முரண்பாடுகட்கும் ஒடுக்குமுறைகட்கும் எதிரான போராட்டங்களுடன் இணைத்தும் தனித்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும். சாதிய தீண்டாமையால் பின்தங்கிய சமூகமாக இருந்து வந்த கிராமங்கள் சிறுநகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம், நிலம், கல்வி, சுகாதாரம், சமூக பண்பாட்டுத் தேவைகள் முழுமையாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்கள் மத்தியிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதையும் வெகுஜன அடிப்படையில் தொடர்ந்து அணிதிரட்டப்படுவதையும், அவர்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதியை வென்றெடுக்கப் போராடுவதையும் இப் பொது வேலைத்திட்டம் வற்புறுத்தி நிற்கிறது.
9. நமது சமூக அமைப்பிலும் சமூக வாழ்விலும் பெண்கள் மீதான அடிமைத்தன நடைமுறைகளும் சமத்துவமற்ற செயற்பாடுகளும் வாழ்நிலை முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் இருந்து வருகின்றன. நமது நாட்டின் சனத்தொகையில் சரி பாதியினர் பெண்களாவர். அப்படி இருந்தும் பெண்கள் என்ற காரணத்தினால் இரண்டாம் தரமாகவும் பாகுபாடாகவும் நடாத்தப்படுகின்றனர். பெண்களது உரிமைகளும் உணர்வுகளும் பழைமைவாதத்தாலும் அதன் ஆணாதிக்கச் சிந்தனை நடைமுறைகளாலும் மறுக்கப்படுகின்றன. அதனை மதம், மரபு, பண்பாடு, சடங்கு, சம்பிரதாயம் போன்றவை நியாயப்படுத்துகின்றன.
பெண்களுக்கான ஜனநாயகம் சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை மறுக்கும் ஆணாதிக்கப் போக்கை அப்படியே உள்வாங்குபவர்களாகப் பெண்கள் இருந்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடாகப் பெண்ணடிமைத்தனம் என்பது சமூக வாழ்வில் இல்லை என்ற கருத்தைப் பரப்புவோரும் உள்ளனர். ஆனால் அன்றாட சமூக குடும்ப வாழ்வில் பெண்கள் பல்வேறு வகைப்பட்ட பாகுபாடுகட்கும் ஒடுக்குதல்கட்கும் உள்ளாகியே வருகிறார்கள். இதனைப் பெண்கள் மத்தியிலான கவனத்திற்கும் விழிப்புணர்வுக்கும் கொண்டு வருவது அவசியமாகும். பெண்ணியம் என்னும் பெயரிலான அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலை முறையானது பெண்களின் கவனங்களை வௌ;வேறு வழிகளில் திசை திருப்பி அடிப்படைச் சமூக மாற்றமும் அதற்கான விடுதலையும் என்னும் வர்க்க அடிப்படை நிலைப்பாட்டை மறுப்பதாகவும் உள்ளது. நமது சமூக அமைப்புச் சூழலில் பெண்கள் மத்தியில், குறிப்பாக உழைக்கும் பெண்களிடையே, சமூக மாற்றத்திற்கான பெண்கள் விடுதலை என்னும் நிலைப்பாட்டை முன்னெடுத்துப் பரந்த நிலைகளில் பெண்களை அணி சேர்த்து முன்செல்வதை இப் பொது வேலைத் திட்டம் வலியுறுத்துகிறது.
10. கொலனியக் கல்வி முறையானது சில முக்கிய நடவடிக்கைளால் தேசியத் தன்மை கொண்ட கல்வி முறையாகச் சில முனைகளில் மாற்றம் பெற்றது. ஆனால் இப்போது மீண்டும் நவகொலனிய அமைப்புக்கு ஏற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவான கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையான கல்விக் கொள்கையை உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தீர்மானிக்கும் நிலை தொடரப்படுகிறது. தனியார் கல்வி ஊக்குவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு விரிவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இலவசக் கல்வியைப் படிப்படியாக இல்லாமற் செய்யும் அபாயம் தோன்றியுள்ளது. இதனால் கடும் பாதிப்புக்களை உழைக்கும் மக்களே எதிர்நோக்குகின்றனர். கல்வி, உயர்கல்வித் துறையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் மையப்படுத்திய திட்டமிட்ட தேசியக் கல்விக் கொள்கை ஒன்று தோற்றுவிக்கப்படல் வேண்டும் என்பதை இப் பொது வேலைத் திட்டம் வலியுறுத்துகிறது.
11. நமது நாட்டின் இளைஞர் யுவதிகள் மாணவர்கள் மிக முக்கிய சக்திகளாவர். அவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை வேலை இன்மையாகும். அத்துடன் கல்வித் தளத்தில் இருந்து வரும் பிரச்சினைகள் அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. பாடசாலைக் கல்வி முடித்தவர்கள் தொட்டு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வரை, வேலை இன்மையை எதிர்நோக்கி நிற்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது ஒரு தேசியப் பொருளாதாரக் கொள்கைக்கான கல்வித் திட்டம் பின்பற்றப்படாமையேயாகும். அதனாலேயே இளைஞர்களும் யுவதிகளும் அடிக்கடி அதிருப்தி வெளிப்பாடுகளிலும் எதிர்ப்புக்களிலும் இறங்குகின்றனர். தெற்கிலும், வடக்கிலும் எழுந்த போராட்டங்களில் பல இலட்சம் இளைஞர் யுவதிகள் அரசு யந்திரத்தின் ஆயுதப் படைகளால் அவ்வப்போது கொல்லப்பட்ட சமகால வரலாறு உண்டு. அத்தகைய போராட்டங்களில் இளைஞர்கள் தம் முன்னே எழுந்த தலைமைகளின் தவறான கொள்கை வழிகாட்டல்களுக்கு பலியாகிப் போனார்கள். அவை ஏகாதிபத்தியத்தினதும் உள்நாட்டு ஆளும் வர்க்கப் பிற்போக்கு சக்திகளினதும் திட்டமிட்ட அழிப்புகளாகும். அவற்றின் மூலம் அவர்கள் அரசியல் லாபங்களை அடைந்தனர். உழைக்கும் மக்கள் தமது பிள்ளைகளை இழந்தனர். இதன் மூலம் தனியே இளைஞர்கள் யுவதிகள் என்ற நிலையில் நின்று போராடி எதிலும் வெற்றி பெற முடியாது என்பதும் பட்டறிவாகியது.
அவர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களது கோரிக்கைகளுடன் இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே வெற்றி பெற முடியும். அதற்கான செயற்பாடுகளை இளைஞர் யுவதிகள் மத்தியில் அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுவதை இப் பொது வேலைத்திட்டம் முன்னிறுத்துகிறது.
12. நாட்டு மக்களின் நோயற்ற வாழ்வோடும் நீண்ட ஆயுளோடும் சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறையானது ஏனைய துறைகள் போன்று தனியார் மயத்தாலும் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலாலும் சீரழிந்து காணப்படுகிறது. நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அரசாங்க மருத்துவமனைகளையும் இலவசச் சிகிச்சையையும் மட்டுமே நம்பி உள்ளனர். அம் மக்களுக்குரிய சிறந்த மருத்துவ வசதிகள் குறைந்து கொண்டு செல்லும் அதே வேளை தனியார் மருத்துவமனைகளும் அவற்றின் வர்த்தகச் செயற்பாடுகளும் வளர்க்கப்படுகின்றன. மனித நேய அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய சுகாதார மருத்துவ வேவைகள் இன்று பணம் பறிக்கும் தனியார் மருத்துவத்தால் சீரழிக்கப்பட்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்க மருத்துவத் துறையில் ஊழல், அதிகாரத் துஷ;பிரயோகம் போன்றவற்றால் மட்டுமன்றிச் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன கொடுக்கும் ஆலோசனைகளுக்கு ஏற்பவும் இலவச மருத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
அதன் வழியில் மருந்து உற்பத்தி செய்யும் பல்தேசியக் கம்பனிகளின் தரம் குறைந்த மருந்துகளின் சிறந்த சந்தையாகவும் நமது நாடு மாற்றப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து நாட்டின் சுகாதார மருத்துவத் துறையைப் பாதுகாத்து மக்களுக்குரியதாக விரிவுபடுத்துவதற்குச் சகல நிலைகளிலும் வற்புறுத்தல்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டியதை இப் பொது வேலைத் திட்டம் சுட்டிக் காட்டுகிறது.
13. ஏகாதிபத்திய இராட்சத பல்தேசியக் கம்பனிகள் லாபவெறியுடன் உற்பத்திகளைச் செய்து வருவதும் வளங்களைச் சூறையாடிக் கொள்வதும் சுற்றுச் சூழல் மாசடைந்து வருவதற்கான அடிப்படைகளாகும். அவற்றால் கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை அனர்த்தங்கள் என்னும் பெயரில் எல்லா நாடுகளிலும் அழிவுகள் இடம்பெற்று வருகின்றன. பெருலாப வெறியுடன் செயற்பட்டுவரும் பல்தேசியக் கம்பனிகளின் மக்கள் விரோத, தேச விரோத ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலானது, சுற்றுச் சூழலை மாசடையச் செய்து மனித வாழ்வையே நாசப்படுத்தி வருகின்றது. நமது நாட்டில் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கக் கூடிய மக்கள் இயக்கங்கள் கட்டி வளர்க்கப்படுவதை இப் பொது வேலைத்திட்டம் வற்புறுத்துகிறது.
14. அரசாங்க ஊழியர்களாக உள்ளோரின் தொகை சுமார் 13 லட்சமாகும். அரசு யந்திரத்தினதும் அரசாங்க நிர்வாகத்திலும் இவ் அரசாங்க ஊழியர்களின் உழைப்பும் சேவையும் அத்தியாவசியமானதாகும். ஆசிரியர்கள் மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோராய் உள்ளனர். சுகாதாரத் துறையில் ஒரு லட்சம் பேர் வரை சேவையாற்றுகிறார்கள். ஏனைய அரசாங்கத் திணைக்களங்களில் லட்சக் கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தே வருகிறது. அதே வேளை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கல் நிபந்தனைகளின் கீழ் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைச் சில லட்சங்களாற் குறைக்க அரசாங்கம் முயன்று வருகிறது. எனவே இன்றைய பொருளாதார அரசியல் சூழலில் அரசாங்கத் தொழில் துறைத் தொழிலாளர்களும் ஊழியர்களும் தமது தொழிற் பாதுகாப்பிற்கும் ஏனைய கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டியவர்களாகவே உள்ளனர் என்பதை இப் பொது வேலைத்திட்டம் வற்புறுத்துகிறது.
15. முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது சொத்து சுகம்பெற்ற ஆளும் வர்க்கத்தினருக்கு உரியதாகவே இருந்து வருகிறது. கடந்த அறுபத்திமூன்று வருடப் பாராளுமன்ற ஆட்சி முறையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையும் ஜனநாயக உரிமைகளையும் மறுத்தே வந்துள்ளன. அதேபோன்று மனித உரிமைகளையும் தொழிற்சங்க உரிமைகளையும் அவை துச்சமென மதித்து நசுக்கி வந்துள்ளன. எழுத்து, பேச்சு, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பன அடக்கப்பட்டு வந்துள்ளன. எனவே ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளுக்காகவும் ஊடகச் சுதந்திரத்திற்காகவும் உறுதி மிக்க குரல் கொடுத்துப் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது. இதனை இப் பொது வேலைத்திட்டம் கவனத்தில் கொண்டு அவற்றுக்கான போராட்டத்தில் முன் நிற்கிறது.
16. இன்றறைய ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலானது உலக நாடுகள் அனைத்தையும் ஊடுருவி நிற்கின்றது. வளங்களைக் கொள்ளையிடுவதற்கான பாதையில் ராட்சத பல்தேசியக் கம்பனிகள் கொள்ளை லாப வெறியோடு தமது முதலீடுகளை உட்செலுத்தி வருகின்றன. இதனை எதிர்க்கும் நாடுகள் மீது யுத்தங்கள் நடாத்தப்படுகின்றன. அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் மிகவும் கேடுகெட்ட விதமாகத் தமது பொருளாதார அரசியல் ராணுவ ஆதிக்கத்தை உலக நாடுகள் மீது திணித்து வருகின்றன. இதனால் அடக்கி ஒடுக்கப்படும் உலக நாடுகளின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் நச்சுத்தனங்களும் அழிவுகரமான போக்குகளுமே நிலவி வருகின்றன. இவற்றால் உலக வறுமை உயர்ந்து செல்கிறது. மக்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவது வருடா வருடம் வீழ்ச்சியடைந்து வருகிறது. வறுமை, பசி, பட்டினி, வேலை இன்மை, கல்வி, சுகாதாரம் பேணப்படாமை, அடக்கப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அதிகரித்த வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றன. நிலம், நீர், காற்று, காடுகள் எனச் சுற்றுச் சூழல் மாசமடைவதும் கால நிலைமாற்றமும் உலகமயமதாலின் நிகழ்ச்சி நிரலோடு இணைந்தவையாகி நிற்கின்றன. இவை அனைத்தையும் எதிர்த்து வரும் உலக நாhடுகளின் மக்களோடு நாமும் இணைந்து நின்று ஏகாதிபத்திய உலகமயமாதலையும் அதன் உலக மேலாதிக்கத்திற்கான முயற்சிகளையும் முறியடிப்பதில் முன் நிற்பதை இப் பொது வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
17. நவீன தகவல் தொழில் நுட்பமானது மனித ஆற்றலின் அதி உயர் வெளிப்பாடாகும். ஆதனைக் கேடான விடயம் என முற்று முழுதாக ஒதுக்கி விடமுடியாது. அதே வேளை, இன்று இந் நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாளித்துவச் சுரண்டலும் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் விரிவாக்கமும் உலக ஆதிக்கத்திற்கான முனைப்புமே முன்னெடுக்கப்படுகின்றன. அதே வேளை மக்கள் பெருந்திரளினரின் அடிப்படைத் தேவைகளை இத் தகவல் தொழில் நுட்பத்தால் நிறைவு செய்ய இயலாது உள்ளது. அத்துடன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் உழைப்பு கடுமையான முறையில் சுரண்டப்படுகிறது. பல்தேசியக் கம்பனிகளும் தனியார் நிறுவனங்களும் இவ் ஊழியர்களின் உழைப்பை நவீன வழிகளில் சுரண்டிக் கொள்வதுடன் அவர்கள் சமூக வாழ்வில் உயர் அந்தஸ்தில் இருப்பதான ஒரு வகைப் போலித்தனத்தையும் உருவாக்கியுள்ளார்கள். நுகர்வுப் பண்பாட்டை வளர்ப்பதற்கும் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கிச் செல்லவும் இத் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறதேயொழிய மக்களின் வாழ்வுக்கு உதவுவதாக இல்லை. காரணம், நவீன தகவல் தொழில்நுட்பத்தை ஏகாதிபத்திய ராட்சத பல்தேசியக் கம்பனிகளே தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. இத் தகவல் தொழில்நுட்பமானது மக்களின், குறிப்பாக இளந்தலைமுறையினரின், சமூகச் சிந்தனைகளை மழுங்கடித்துத் திசை திருப்புவதிலும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குள் தள்ளி விடுவதிலும் நன்கு பயன்படுகிறது. ஆதலால் இவற்றின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கும் உரிய வழிவகைகளை சமூக விழிப்புணர்வு அடிப்படையில் முன்னெடுத்து இளம் தலைமுறையினரை சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக் கூடிய சூழலைத் தோற்றுவித்து வளர்த்தெடுக்க இப் பொது வேலைத்திட்டம் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது.
18. நமது சமூகச் சூழலில் மதம், சினிமா, தொலைக்காட்சி என்பனவற்றுள் மக்கள் மூழ்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடவுள் நம்பிக்கை ஒருவரது விருப்பிற்கு உரியது என்பதற்கு அப்பால் அந்த நம்பிக்கையின் பெயரால் மதம் மூடநம்பிக்கையாகவும் வர்த்தகமாகவும் பணம் திரட்டும் வழியாகவும் மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சினிமா, தொலைக்காட்சி என்பனவும் முற்றிலும் வர்த்தகமாக முன்னெடுக்கப்படுவதுடன் பழைமை பேணல், பாலியல் வக்கிரம், ஆடம்பரம், போலித்தனம், வஞ்சகம், வன்முறை, தனிமனித மேம்பாடு போன்ற சமூகச் சீரழிவுகளுக்கு வழிகாட்டும் மையங்களாகவும் இருந்து வருகின்றன. மக்களுக்கான கலை இலக்கியம் என்பதனையும் சமூக மாற்றத்திற்கான கலை இலக்கியம் என்பதனையும் மறுக்கும் வகையிலான போக்குகளே இன்றைய சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும், பிற ஊடகங்களிலும் மேலோங்கி நிற்கின்றன. இவற்றுக்கும் பல்தேசியக் கம்பனிகளின் ராட்சதப் பிடிகளுக்கும் இறுகிய பிணைப்பு இருந்து வருகிறது. எனவே தகவல் தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான மாற்றுச் சினிமா, மாற்றுத் தொலைக்காட்சி, மாற்று ஊடகம் என்பனவற்றுக்கான முழுமுயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை நாம் ஊக்கப்படுத்தி கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் மக்களுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதை இப் பொது வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
19. இன்றைய நிலையில் அமெரிக்காவும் மேற்குல நாடுகளும் தமது ஏகாதிபத்திய உலக ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி விரிவாக்கி வருவதில் முன்னிற்கின்றன. அவை பாரிய நிதி நெருக்கடிகளையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தங்களுக்குள் போட்டி முரண்பாடுகளையுடையனவாய் இருந்த போதிலும், ஏகாதிபத்திய உலக ஆதிக்கப் பேராசையைக் கைவிடுவதற்குத் தயாராக இல்லை. உலகின் பொருளாதார அரசியல் ராணுவ மேலாதிக்கத்திற்காக அவை நாளாந்தம் பலநூறு வழிகளில் செயலாற்றி வருகின்றன. ஐ.நா. மன்றமும் அதன் முகவர் அமைப்புகளும் அமெரிக்க மேற்குலக நலன் சார்ந்தே செயற்பட்டு வருகின்றன. அவ்வாறே உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தித் தமது ஆணைக்குள் வைத்தும் வருகின்றன. தமது ஆதிக்கப் பிடிகளை வலுப்படுத்தி உலக மேலாதிக்கப் பரப்பை விரிவாக்குவதில் அமெரிக்கத் தலைமையில் நேட்டோப் படைகளும் அமெரிக்கப் படைகளும் உலக நாடுகளில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்தி வருகின்றன. இன்றைய சர்வதேசச் சூழலில் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகச் சக்திகளே உலக நாடுகளினதும் மக்களினதும் பொது எதிரியாக நிற்கின்றன. எனவே அவற்றைத் தயவு தாட்சண்யம் இன்றி எதிர்த்து நிற்பது நமது பொது வேலைத் திட்டத்தின் பிரதான அம்சம் ஒன்றாகும்.
20. தென்னாசியப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் முழு ஆசியக் கண்டத்திலும் தனது முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டிருப்பதை மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளிலும் மூலதன விரிவாக்கத்தை செயற்படுத்துவது இந்திய ஆளும் வர்க்கக் கொள்கை வகுப்பாளர்களின் மூலோபாயமாக இருந்து வருகிறது. அதே வேளை அமெரிக்காவுடன் கைகோத்து நிற்கும் இந்திய ஆளும் வர்க்கம் அதன் மூலோபாயப் பங்காளியாகச் செயற்பட்டும் வருகின்றது. அதன் வழியிலே இந்தியா தென்னாசியப் பிராந்திய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி இறுக்கி வருகிறது. தமது பொருளாதார அரசியல் ராணுவ நலன்களை முன்னிறுத்தி வருகிறது. அதற்கான உதாரணத்தையும் அனுபவத்தையும் இலங்கை மீதான இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நோக்கங்கள் வெளிப்படுத்தி வந்துள்ளன. இவை நமது நாட்டிற்கும் மக்களுக்கும் தகுந்த பட்டறிவாகும். எனவே பிராந்திய மேலாதிக்கத்தினை நாம் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் அதே வேளை இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தினை எவ்வித தயக்கமும் இன்றி எதிர்த்து நிற்பது நமது கடமையென இப் பொது வேலைத் திட்டம் வலியுறுத்துகிறது.
21. சீன மக்கள் குடியரசு என்ற பெயரில் செயல்படுகின்ற போதிலும் சீனா சோஷலிசப் பயணத்தைப் படிப்படியாகக் கைவிட்டு முதலாளித்துவப் பாதையில் செல்லும் நாடாகி நிற்கிறது. சந்தைப் பொருளாதாரக் கொள்கையின் மூலமாகவும் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை உள்வாங்கியதாலும் சீனா ஒரு வகையான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் வர்த்தக விரிவாக்கம் தவிர்க்க முடியாததாகி இயல்பான முதலாளித்துவப் போட்டிக்குள் அது இறங்கி நிற்பதையே காணமுடிகிறது. சீனா தனது பொருளாதார வல்லரசு நலன் காக்கும் வகையில் ஆசிய, ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுகளில் உதவி, கடன் உதவி, வர்த்தகம், முதலீடு என்பனவற்றைச் செய்து வருகின்றது. ஆயுத உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அவை உதவியாகவும் வர்த்தகமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே இலங்கை மீதான சீன ஆதிக்கம் என்ற மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை அமெரிக்க, மேற்குலக, இந்திய சார்பு தமிழ் தேசியவாத நிலைப்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மிகைத்தன்மை இருப்பினும், சீனாவின் சந்தைப் பொருளாதாரப் போட்டியானது எதிர்காலத்தில் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவப் போட்டி ஊடான ராணுவ அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களையே கொண்டுள்ளது. அத்தகைய மாற்றங்கள் சீனாவைப் பொருளாதார வல்லரசு என்ற நிலைக்கு ஊடாகத் தமது பொருளாதார முதலீட்டு வர்த்தக விரிவாக்க நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் ராணுவத் தலையீடுகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய அபாயங்களைக் காண வேண்டிய நிலை ஏற்படலாம். அது ஏகாதிபத்திய அம்சங்களைக் கொண்டதாகவும் அமைய இடம் உண்டு. இவற்றை எதிர்காலத்திற்கு உரியனவாகப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதை இப் பொது வேலைத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
22. ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகளில் நமது நாட்டின் மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், ஷபுலம்பெயர்ந்தவர்களாக| வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வும் இருப்பும் எதிர்காலமும் பல்வேறு கேள்விகளையும் பிரச்சினைகளையும் எழுப்பி நிற்கின்றன. அதே வேளை, மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பிற்காகச் சென்று குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்து வருவோர் கணிசமான தொகையினராவர். அவர்களில் வீட்டுப் பணிப் பெண்களாகச் சென்று அல்லல்கட்கு ஆட்பட்டு நிற்போரது வாழ்வு அவலங்கள் நிறைந்ததாகும். குறைந்த சம்பளத்தில் நமது நாட்டு ஆண் பெண் இருபாலரதும் உழைப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுரண்டி உறுஞ்சப்படும் போக்குத் தொடர்கிறது. நமது நாட்டில் ஒரு உறுதியான தேசியப் பொருளாதாரத்திற்கான அடித்தளமும் அதன் மீதான பன்முக வளர்ச்சிகளும் இல்லாத காரணத்தாலேயே இந் நிலை தொடர்கிறது. இது நிறுத்தப்பட்டு அவ் உழைப்பு நமது நாடடிற்குப் பயன்படும் வகையில் மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியதை இப் பொது வேலைத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
23. மாக்சிசம், புரட்சி, சோஷலிசம் என்பன சர்வதேச ரீதியாகப் பின்னடைவைக் கொண்டவையாகக் காணப்படுவது பாதகமான ஒன்றேயாகும். இது தற்காலிக நிலை என்பது வரலாற்று வாயிலாக அறியக் கூடியதாகும். எனினும், இன்றைய உலக நிலைமைகளையும் தத்தம் நாடுகளிலான சூழல்களையும் அவதானித்து வரும் மாக்சிச லெனினிசக் கட்சிகள் தம்மை மீளமைத்தும் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றன. பாதகமான சூழலைச் சாதகமானவையாக மாற்றுவதற்கு முயன்று வருகின்றன. தத்தம் நாடுகளில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி நிற்கும் மாக்சிச லெனினிச இயக்கங்கள் அவற்றை முறியடித்து முன்செல்லத் தயாராகி வருகின்றன. ஏகாதிபத்தியத்திற்கும் உலக மக்களுக்குமிடையிலான முரண்பாடு விரைவாகவே கூர்மையடைந்து வருகின்றது. அதன் விளைவு மக்கள் போராட்ட எழுச்சிகளாகவும் புரட்சிகளாகவும் மாறும் காலம் அதிக தூரத்தில் இல்லை. அண்மைய மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சிகள் சரியான திசை நோக்கி இல்லாவிடினும் அடுத்தகட்ட நகர்விற்கு உரிய அதற்கான கட்டியம் கூறலேயாகும். இன்றைய சூழலில் சோஷலிச நாடுகள் என்று வரையறுத்துக் கூறக் கூடிய நாடுகள் இல்லை. ஆனால் சோஷலிசக் கட்டமைப்புக்களைப் பல்வேறு ஏகாதிபத்திய நெருக்கடிகளதும் அழுத்தங்களதும் மிரட்டல்களதும் மத்தியில் கியூபா, வட கொரியா ஆகிய நாடுகளில் பேணி வருகின்றமை சாதகமான ஒன்றேயாகும். அதே வேளை, ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையை முன்னெடுத்துச் செல்வதில் தென் அமெரிக்க நாடுகள் முன் நிற்பதும் ஏனைய நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் காணக் கூடியவையாகும். அத்தகைய போராட்டங்களுடன் நாமும் இணைந்து செல்வதை இப் பொது வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
மத்திய குழு
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி
கொழும்பு
நெற னநஅழஉசயவiஉ pயசவல ளூ hழவஅயடை.உழஅ
உமளநவொiஎநட ளூ பஅயடை.உழஅ
றுநடி: nனிளட.ழசப
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின்
5வது அனைத்து இலங்கை மாநாட்டின்
முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
உடனடி வேலைத்திட்டம்
23.07.2011 கொழும்பு
1. நவகொலனித்துவ அமைப்பையும், தரகு- பெரு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், மனித உழைப்புச் சுரண்டலையும், நாட்டு வளங்களைக் கொள்ளையிட்டு வரும் பல்தேசியக் கம்பனிகளையும், அவற்றுக்கு வழி காட்டி நிற்கும் ஏகாதிபத்திய சக்திகளையும் பாதுகாத்து வரும் அரசியல் அமைப்பே இன்று இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது. அதனை இலங்கையின் சுரண்டும் சொத்து சுக வசதி படைத்த ஆளும் வர்க்கத்தினரும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் இணைந்து உருவாக்கி நிலைநிறுத்தினர். அதனைப் பலப்படுத்திப் பாதுகாத்து முன்னெடுப்பதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது தனது அதிகாரப் பிடியைச் சகல நிலைகளிலும் வலுப்படுத்தி வந்துள்ளது. இத்தகைய தனிநபர் தனிக் கட்சி சர்வாதிகாரமானது இன்று மகிந்த சிந்தனையின் கீழ் குடும்ப சர்வாதிகாரமாக விரிவு பெற்று ஃபாசிசமாக முன்னெடுக்கப்படுகிறது. அதன் கீழ்த் தொழிலாளர்கள், விவசாயிகள், தனியார்துறை- அரசாங்கத்துறை ஊழியர்கள், தேசிய இனங்கள், பெண்கள், இளைஞர்-யுவதிகள்-மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளையும் துன்பங்களையும் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். இவை பற்றிக் கேள்விகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படும் போது அப்பட்டமான அடக்குமுறைகள் மக்கள் மீது ஏவி விடப்படுகின்றன. இவற்றிலிருந்து மக்களை விடுவித்து விமோசனம் காண முதலாளித்துவப் பாராளுமன்ற அரசியலால் முடியாது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலான பாராளுமன்ற ஆட்சி முறையும் அதன் மூலம் அதிகார பீடத்திற்கு வந்த ஆளும் வர்க்க கட்சிகளும் நாட்டின் 90 சதவீPதத்தினரான தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களதும் தேசிய இனங்களதும் பிரச்சினைகள் எதையுமே தீர்த்து வைத்தது கிடையாது. பதிலுக்குப் பிரச்சினைகளை வளர்த்துப் பூதாகரமாக்கி அவற்றின் ஊடாக ஆளும் வர்க்க அதிகாரத்தையும் சொத்து சுகபோகங்களையும் அனுபவித்து வந்துள்ளனர். இந் நிலையில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் உள்ள ஒரே வழி உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியல் மார்க்கமும் அதற்கான உறுதி மிக்க வெகுஜனப் போராட்டங்களுமேயாகும். அதற்குரிய உழைக்கும் மக்களின் வர்க்க அரசியல் கொள்கையும் நடைமுறைகளும் கட்டி வளர்க்கப்படுவதை எமது கட்சியின் இவ் உடனடி வேலைத்திட்டம் வற்புறுத்துகிறது. அதற்குரிய சூழலை உருவாக்கி முன்னெடுப்பதற்கு ஏற்றவகையில் நேர்மையான இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் வற்புறுத்துகின்றோம்.
2. நாட்டின் இன்றைய சூழலில் ஜனநாயக- தொழிற்சங்க- மனித உரிமை மறுப்புக்கள் தாராளமாக இடம்பெற்று வருவதையே காண முடிகிறது. அச்ச உணர்வுகளும் பயப் பீதிகளுமே பொதுவாகக் காணப்படுகின்றன. சுதந்திரமான கருத்து வெளியீட்டைக் கொண்டிருந்தமைக்காக ஊடகங்கள் தாக்கப்பட்டும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுமுள்ளமை இலங்கையின் ஜனநாயக சுதந்திரங்களை மதிப்பிடுவதற்குரிய அளவுகோலாகும். யுத்தத்தின் பெயரால் கட்டி வளர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட அரசு யந்திரமான ஆயுதப் படைகள் விரிவுபடுத்தப்பட்டு நவீன வழிகளில் கட்டியெழுப்பப்பட்டு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிராகவே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இதுவரை தொழிலாளி வர்க்கத்தாலும் உழைக்கும் மக்களாலும் போராடிப் பெறப்பட்ட ஜனநாயக- தொழிற்சங்க- மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அதே வேளை புதிய அடக்குமுறைகள் செயற்படுத்தப்படுகின்றன. எனவே பறிக்கப்படும் ஜனநாயகம் தொழிற்சங்க மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் பரந்துபட்ட தளங்களில் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை இவ் வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
3. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சுயநிர்ணயம்- சமத்துவம்- சுயாட்சி என்ற அடிப்படையில் அமைவதே சரியான தீர்வாகும். இது நீண்ட காலத்தில் வென்றெடுக்க வேண்டிதொன்றாகும். ஆனால் இன முரண்பாட்டையும் இன ஒடுக்குமுறையையும் தாழ் நிலைக்குக் கொண்டு வரும் வகையில் குறைந்தபட்ச நியாயமான தீர்வு எதையும் நாம் தட்டிக் கழிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ இல்லை. ஏனெனில் அத்தகைய தீர்வு அனைத்து உழைக்கும் மக்களையும் ஐக்கியப்படுத்துமானால் அது வரவேற்க வேண்டியதேயாகும். ஆனாலும் அது இலகுவானதாக இருக்கமாட்டாது. ஏனெனில் ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகள் சிங்கள மக்களிடையேயும் பழைமைவாத குறுந்தேசியவாத ஆதிக்க அரசியல் சக்திகள் தமிழ் மக்களிடையேயும் நச்சுத்தனமான பிற்போக்குக் கருத்துக்களை விதைத்து அறுவடை செய்து அதனால் அதிகாரம் பதவிகள் அனுபவிப்பவர்களாக இருந்து வந்துள்ளனர். இன்றும் அவர்கள் தமது நிலையில் இருந்து விடுபடவில்லை. இந் நிலை முஸ்லீம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. இதன் மூலம் உழைக்கும் வர்க்க சக்திகள் பிளவுபடுத்தப்பட்டு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் என்ற சேற்றுக்குள் இறக்கி விடப்பட்டுள்ளனர். அதிலிருந்து மக்கள் மீளாத வகையில் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியல் சக்திகள் ஏமாற்றுகளைக் கையாண்டும் வருகின்றனர். இத்தகைய சூழலில் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான மாற்று அரசியல் கொள்கையும் தீர்வுத் திட்ட யோசனைகளும் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வெகுஜனப் போராட்ங்களாக விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான அரசியல் வேலைகள் பரந்தளவில் கொண்டு செல்லப்படுவதை இவ் உடனடி வேலைத்திட்டம் வலியுறுத்துகின்றது. (தேசிய இனப் பிச்சினைக்கான தீர்வுத்திட்டம் தனியே உள்ளது).
4. நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் நாளாந்தம் வாட்டி வதைக்கும் பிரச்சினையாக மேலெழுந்து நிற்பது பொருட்களின் விலை உயர்வுகளும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புமாகும். இவற்றுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்றப் பழைய இடதுசாரிகளும் மலையகத் தொழிற்சங்கத் தலைமைகளும் ஜனநாயக வேடம் தாங்கியோரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் அங்கம் பெற்ற போதிலும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அதே வேளை, தனியார்- அரசாங்கத்துறைகளில் முன்வைக்கப்படும் சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்டு பல நிலைப்பட்ட அடக்குமுறைகளால் நிராகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான பொருளாதாரக் காரணங்களையும் அரசியல் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதையும் மக்கள் மத்தியில் விளங்கச் செய்வதும் மக்களுக்கான மாற்று அரசியலாக வர்க்க அரசியலை முன்னெடுத்துப் போராட்ட நிலைக்கு அணி திரட்டுவதும் அவசியமானதாகும். பாராளுமன்ற வாக்குகள் பெறும் வாக்குச் சீட்டு அரசியலுக்கு அப்பால் வெகுஜன அரசியல் மார்க்கத்தில் மக்களை அணிதிரளச் செய்யும் வகையிலான வேலைமுறைகளைப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களிடையே முன்னெடுத்துச் செல்வது இன்றைய சூழலில் அவசியமாகும். அதே வேளை , மக்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் அவர்களோடு இணைந்து நிற்பதும் தேவையானதாகும். இதனை நமது வேலைத் திட்டம் கவனத்தில் கொள்கிறது.
5. நாட்டின் தேசியப் பொருளாதாரம் ஏகாதிபத்திய நவ தாராள பொருளாதாரத்தால் அடித்து வீழ்த்தப்பட்டு விட்டது. நாட்டின் விவசாயமும் சிறு உற்பத்தித் தொழில்களும் நலிவடைந்து அழிவுகளையே சந்தித்து வந்துள்ளன. தாராள இறக்குமதியும் திறந்த சந்தையும் நடைமுறைக்கு வந்து மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன. அதன் எதிர் விளைவுகளையும் பாரிய தாக்கங்களையும் உழைக்கும் மக்களே இன்று அனுபவித்து வருகிறார்கள். இதுபற்றி ஆளும் வர்க்கக் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கட்சிகளுக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது தமிழர் உயர் வர்க்கக் கட்சிகளுக்கோ அக்கறை கிடையாது. அவர்கள் அனைவரும் முதலாளித்துவ ஏகாதிபத்திய வழிபாட்டாளர்கள். அவர்களுக்கு நமது நாட்டினது வளங்களுக்கும் மனித உழைப்புக்கும் ஏற்றவாறான ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து முன்னெடுக்கும் முறையான திட்டம் எதுவும் கிடையாது. ஏனெனில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என்பது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்து உழைக்கும் மக்களின் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மாசற்ற சூழல், என்பனவற்றின் தேவைகளை நிறைவு செய்வதற்கேயாகும். சுயசார்பு, சுய உற்பத்தி, சொந்தக் கால்களில் நிற்பது போன்றன தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையானவையாகும். இத்தகைய தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நிலைக்கான கோரிக்கையை மக்கள் மயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதனை வற்புறுத்தும் அரசியல் வேலையை முன்னெடுத்தல் வேண்டும். அப்போது தான் உலகமயமாதல் பொருளாதாரத்தின் தீமைகளை மக்களுக்கு எடுத்து விளக்கி நச்சுத்தனமான ஏகாதிபத்திய நவதாராள பொருளாதாரக் கொள்கையை நிராகரிக்க முடியும்.
6. ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள் கடந்த மூன்று தசாப்தங்களில் நாட்டினுள் ஊடுருவிக் கொண்டன. அவற்றுக்குத் தாராளமாக நிலம் நீர் உள்ளிட்ட சகல வளங்களும் வழங்கப்பட்டுச் சுரண்டல் தங்கு தடையின்றி இடம்பெறுவதற்கு வாய்ப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள்ளும் அவற்றுக்கு அப்பாலும் நமது நாட்டின் மனித உழைப்பு தாரை வார்க்கப்பட்டது. மிகக் குறைந்த சம்பளம், தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு போன்றவற்றுடன் நம் நாட்டுத் தொழிலாளர்களும் ஊழியர்களும் ―ஆண் பெண் இருபாலரும்― சுரண்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறான பல்தேசியக் கம்பனிகளின் இரும்புப் பிடிச் சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை மீட்பதற்கான போராட்டம் அவசியமானதாகும். எனவே ராட்சத பல்தேசியக் கம்பனிகளின் சுரண்டல்களையும் வளங்கள் உறுஞ்சப்படுவதையும் மக்களுக்கு எடுத்து விளக்கி அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஊழியர்கள் மக்கள் அணிதிரட்டப்படல் வேண்டும்.
7. இன்று வடக்கு கிழக்கு மக்கள் யுத்தக் கொடுமைகளை அனுபவித்து மீண்ட மக்களாக உள்ளனர். உயிரிழப்புகள், அங்கவீனம், சொத்துக்கள் அழிப்பு, வீடுவாசல்கள்- தொழில்கள் இழப்பு எனப் பல்வேறு வழிகளாலும் துன்பம் அனுபவிக்கும் மக்களாக அவர்கள் உள்ளனர். மீள் குடியேற்றம் பெயரளவிலேயே இருந்து வருகிறது. மீள் குடியேறிய மக்களின் புனர்வாழ்வு புனரமைப்புக்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் முப்பது வருட யுத்தம் போராட்டத்தால் இழந்த உயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அழிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலபுலங்கள் மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குரிய அனைத்தையும் அரசாங்கம் துரிதமாகச் செய்தல் வேண்டும். அம் மக்களின் வாழ்வைப் பாழ்படுத்தி அழித்தவர்களே அதற்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்பது வற்புறுத்தப்பட வேண்டியதாகும். எனவே மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதாரம், தொழில், கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக விடயங்களும் ஏனையவைகளும் விரைந்து நிறைவேற்றப்படுவதை இவ் வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
8. வர்க்கச் சுரண்டலாலும் இன ஒடுக்குமுறை யுத்தத்தாலும் சமூக பண்பாட்டு நடைமுறைகளாலும் கடும் பாதிப்புக்களைப் பெற்றுள்ளவர்கள் பெண்களாவர். வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் மூலம் தமது கணவன்மாரை இழந்து பிள்ளைகளுடன் நிர்க்கதியாகி நிற்கும் பெண்களில் ஷவிதவைகள்| தொகை 86,000 என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதில் உண்மை இல்லை என மறுக்கவியலாது. அதே வேளை பாலியல் துன்புறுத்தல்கள்- வன்புணர்ச்சிகள், சிறுமிகள் வேலைகளுக்கு அமர்த்தப்படுதல் உட்படப் பல்வேறு துஷ;பிரயோகங்களுக்குப் பெண்கள் நாளாந்தம் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதிலும் பலநிலைப் பிரச்சினைகளைத் தொழில் செய்யுமிடங்களிலும் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் எதிர்நோக்கி நிற்கும் பெண்கள், பொருளாதார அரசியல் தளங்களிலும் சமூக பண்பாட்டு, மத நடைமுறைகளின் மூடத்தனங்களாலும் பாதிக்கப்பட்டு வருபவர்களாகவே உள்ளனர். குறிப்பாக, மலையகத்தில் உழைக்கும் பெண்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்படும் அதே வேளை, குடும்பச் சுமைதாங்கிகளாகவும் உள்ளனர். வறுமை, போசாக்கின்மை, சுகாதாரமின்மை, குறைப் பிரவசங்கள் போன்றவற்றால் மலையக உழைக்கும் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். எனவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் சமூகக் கூறுகளைக் கவனத்தில் எடுத்து அவர்கள் மத்தியிலான அரசியல் சமூக பண்பாட்டு வேலை முறைகளின் ஊடே உரிய அணிதிரட்டல்கள் செய்யப்படுவது அவசியமானதாகும். இவை அரசியல் நீக்கம் என்னும் உள்நோக்குடன் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் என்பனவற்றுக்கு அப்பால் சமூக நோக்கிலும் மாற்று அரசியல் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
9. யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்த காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர காலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் இன்றும் வலுவானவையாகவே இருந்து வருகின்றன. அவற்றின் கீழ் அரசியற் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை. அவ்வாறே யுத்த இறுதி நாட்களில் கைது செய்யப்பட்டோரின் விவரம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அதே போன்று இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்து காணாமற் போனோர்களின் தகவலோ விவரமோ இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அவசரகாலச் சட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்துடன் சிறைகளில் ஏனைய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற பல்வேறு மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்.
10. மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்னும் அடிப்படையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற வகையிலும் அவர்களது பொருளாதார அரசியல் சமூகப் பிரச்சினைகள் பாரதூரமானவையாகும். அவை பெரிய அளவில் பேசப்படாது மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. தொழிற்சங்க, வாக்குச் சீட்டு அரசியலுக்கு அப்பால், வர்க்க இன அடிப்படையில் அவர்களது பிரச்சினைகள் காத்திரமான வழிகளில் பேசப்பட்டுக், கோரிக்கைகளாக்கப்பட்டு அவற்றுக்கான வெகுஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றுவரை மிகக் குறைந்த நாட் சம்பளம் பெற்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்த முடியாத நிலையில் வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் இருநூறு வருடங்களை அண்மித்த வாழ்வைக் கொண்ட மலையக மக்களுக்கு நிலம், வீடு சொந்தமாக்கப்படவில்லை. சிங்கள மக்களுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் தோட்ட நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதே வேளை மலையக மக்களுக்கு நிலம் பகிர்ந்து வழங்கப்படுவதில்லை. திட்டமிட்ட பேரினவாதப் புறக்கணிப்புகள் தொடருகின்றன. எனவே சம்பள உயர்வுக் கோரிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதே வேளை, நிலம் வீடு சொந்தமாக்கப்படுவதுடன் பயன்படுத்தப்படாத தோட்ட நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும். அவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், போக்குவரத்து, தமிழ் மொழிப் பிரயோகம் என்பன மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாரிய அன்றாடப் பிரச்சினைகளாகும். மேலும் வறுமை, கல்வியின்மை, போஷhக்கின்மை போன்றவற்றால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது மலையகத்தில் அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. அத்துடன் முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் துன்பங்கள் நிறைந்தவைகளாகும். அதே வேளை மலையகத்திலிருந்து சிறுவர் சிறுமியரும் இளைஞர் யுவதிகளும் வெளிமாவட்டங்களில் வீடுகள், கடைகள், தொழிலகங்கள் என்பனவற்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டுக் குறைந்த சம்பளத்துடன் மிகக் கொடுமையாக நடாத்தப்பட்டு வருகின்றனர். இதன்போது சிறுவர் சிறுமியர் கொல்லப்படுவது சாதாரணமாகி வருகிறது. அவற்றைக் குறிப்பான பிரச்சினைகளாக முன்னெடுத்து பரப்புரைகளாலும் கோரிக்கைகளாலும் அணிதிரளச் செய்து குறிப்பாக இளந் தலைமுறையினரை அணிதிரட்டி வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் முன்செல்லல் வேண்டும். அதனை இவ் உடனடி வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
11. சாதியப் படிநிலைப் பாகுபாடுகளும் தீண்டாமைப் புறக்கணிப்புகளும் வௌ;வேறு அளவுகளில் நீடித்து வருகின்றன. குறிப்பாக வடபுலச் சூழலில் யுத்த முடிவிற்குப் பின் சாதியமும் தீண்டாமையும் தம்மளவில் மீள்முனைப்புப் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. பொது இடங்களில் தீண்டாமை ஏற்கனவே வெகுஜனப் போராட்ட வழிமுறையால் வீழ்த்தப்பட்ட போதிலும், கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பிலும் ஏனைய நியமனங்கள், மாற்றம், பதவி உயர்வு போன்ற விடயங்களிலும் சாதியச் சிந்தனை வழியான நடைமுறைகள் தொடரப்படுகின்றன. புலப்பெயர்வு மூலமான பொருளாதார வளம் ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் அவை தனிநபர்களின் ஈடேற்றமாகவும் மேல் நிலையாக்கமாகவும் மட்டுமே இருந்து வருகின்றன. பின்தங்கிய சமூகமாக இருந்து வரும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்களும் கிராமங்களும் சாதியத் தீண்டாமையின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு தொடர்ந்தும் கடுமையாகவே போராட வேண்டியே உள்ளது. அதே வேளை, அவர்களது பொருளாதாரம், நிலம், கல்வி, சுகாதாரம், சமூகப் பண்பாட்டு விழிப்புணர்வு போன்றவற்றுக்கான திட்டமிட்ட வேலைமுறைகள் அவசியமாகி நிற்கின்றன. வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் மலையகத்திலும் சாதியப் படிநிலை வௌ;வேறு வழிகளில் பேணப்படுகின்றது. அங்கு தீண்டாமை பெருமளவிற்கு குறைந்துள்ள போதிலும் சமூகத் தளத்தில் சாதியச் சிந்தனையும் நடைமுறைகளும் தொடர்கின்றன. எனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலான நமது அரசியல் சமூகப் பண்பாட்டுத்தளங்களிலான வேலைகளை முன்னெடுப்பதற்கு முக்கிய கவனம் செலுத்துவதை இவ் உடனடி வேலைத் திட்டம் வற்புறுத்துகிறது.
12. நாட்டின் ஆளும் வர்க்கத் தரப்பினர் முன்வைத்து வரும் கல்விக் கொள்கை முற்றிலும் உலகமயமாதலின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறே முன்னெடுக்கப்படுகிறது. எவ்வளவிற்கு பௌத்த தர்மம் பற்றி வாய் கிழியப் பேசினாலும் மனிதநேயம், மக்கள் சார்பு, சமூக நோக்கு, நாட்டின் சுபீட்சம் போன்றவற்றுக்குரிய கல்வி முன்னெடுக்கப்படவில்லை. உலகமயமாதலின் பொருளாதார சமூக பண்பாட்டுச் சீரழிவுக்கு ஏற்றவிதமான கல்வியே வழங்கப்படுகிறது. கல்வி வர்த்தகமாக்கப்பட்டு, இலவசக் கல்வி அடித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. நாட்டில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தனியார் கல்வி விரிவாக்கப்படுகிறது. பணம் ஈட்டும் வகையில் கல்வி வர்த்தகமாக்கப்பட்டு வசதி படைத்தோருக்கான கல்வியாக மாற்றப்பட்டு வருகிறது. சர்வதேசப் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனுமதி போன்றன கல்வித்துறைச் சீரழிவுக்கு உதாரணங்களாகும். இதனாற் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்போர் இன்றைய கல்விக் கொள்கையால் பாதிப்பும் விரக்தியும் எதிர்ப்பும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் அடிக்கடி மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்குவதையும் காணமுடிகிறது. மாணவர்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் மழுங்கடிக்கவே அரசாங்கம் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி என்னும் பெயரில் மூன்று வார ராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே கல்வித்துறை உலகமயமாதலின் நிகழ்ச்சி நிரலாலும் ஆளும் வர்க்க ஆட்சித்தரப்பாலும் சீரழிக்கப்படுவதற்கு எதிராக வலுவான இயக்கம் கட்டப்பட வேண்டும். இதற்குப் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மக்கள் மத்தியில் பரப்புரைகளும் அமைப்பு வாயிலான வேலைமுறைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
13. இன்றைய வடக்கு கிழக்கின் அரசியற் சூழல் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது. யுத்த அழிவுகளிலும் அவலங்களிலும் இழப்புக்களிலும் இருந்து மக்கள் மீளவில்லை. மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களும் எதுவுமற்ற மக்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றின் மத்தியில் அங்கு ராணுவ நிர்வாகமே சகலவற்றையும் தீர்மானிப்பதாக உள்ளது. எங்கும் எதிலும் ராணுவத் தலையீடு இருந்து வருகிறது. கைதுகள். காணாமற் போதல், ஆயுத அச்சுறுத்தல், கொள்ளைகள் என்பன தொடர்கின்றன. அங்கு ஜனநாயக சுதந்திர சூழலோ இயல்பு வாழ்வோ திரும்பவில்லை. அரசாங்கமும் அரசாங்க சார்புக் கட்சியுமே வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரம் புரிகிறது. அங்கு சலுகை அரசியல், அபிவிருத்தி அரசியல், வாக்குறுதி அரசியல், அடிமைத்தன அரசியல் போன்றனவே முன்னெடுக்கப்படுகிறது. அவற்றின் ஊடே வழங்கப்பட வேண்டிய தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மறுக்கப்படுகிறது. இந் நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நேர்மையான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து புதிய மாற்று அரசியல் கொள்கை அடிப்படையில் பொது வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கி முன்செல்வதே சரியானதாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் மூலமான பாராளுமன்ற ஆசனங்களுக்கான வாக்குச்சீட்டு அரசியலானது அரைத்த மாவை அரைக்கும் வழியிலேயே செல்கின்றது. இந் நிலையில் தமிழ் மக்களிடையே உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகள் முன்வரல் வேண்டும். இறுகிப் போய் நிற்கும் பழைமைவாதக் குறுந் தமிழ்த் தேசியத்திற்குப் பதிலாக முற்போக்கான தமிழ்த் தேசியம் மேலெழுந்து வரவேண்டும். அத்தகைய சக்திகள், ஒரு பொது வேலைத்திட்ட அடிப்படையில் நாட்டின் நேர்மையான இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சியை வென்றெடுக்கும் வெகுஜனப் போராட்டப் பாதையில் பயணிக்க முன்வரல் வேண்டும். இதனை கவனத்தில் கொள்ளாது வெறுமனே இந்தியாவையும் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் நம்பி எதிர்பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை. சிங்கள உழைக்கும் மக்களுக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் வேறுபாட்டுக் கோட்டைக் கீறிச் சாதாரண சிங்கள உழைக்கும் மக்களுடனான ஐக்கியத்தை வலுப்படுத்தித் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க கடும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
14. தகவல் தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சங்களை நாம் பயன்படுத்தும் அதே வேளை அதன் நச்சுத்தனமான மக்களைச் சீரழிவுகளுக்கு உள்ளாக்கி பணம் குவிக்கும் நவீன சுரண்டலையும் அம்பலப்படுத்தல் வேண்டும். இளந் தலைமுறையினர் திசை திருப்பப்பட்டு சமூக அரசியல் அக்கறை அற்றவர்களாக்கப்படுவதற்கும் இத் தகவல் தொழில் நுட்பம் வழி வகுக்கிறது. மக்கள் மத்தியில் இத் தகவல் தொழில்நுட்பத்தின் தீய பக்கங்களை விளங்கச் செய்வதும் நல்ல பக்கத்தைச் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதும் அவசியமானதாகும்.
15. இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ்த் திட்டமிட்ட பண்பாட்டுச் சீரழிவுகள் முன் தள்ளப்படுகின்றன. இவற்றுக்குச் சினிமா, சின்னத்திரைத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள், கணனி, கைத்தொலைபேசிகள், கலை இலக்கிய வெளியீடுகள், அச்சு- இலத்திரனியல் ஊடகங்கள் என்பன நன்கு பயன்படுத்தப்படுகின்றன. தனிநபர் ஈடேற்றம், பணம் சேர்த்தல், சுயநலம் போன்றன முதன்மைப்படுத்தப் படுகின்றன. இதனால் மக்கள் சார்பு, மனிதநேயம், பொதுநலம், சமூக அக்கறை போன்றன புறந்தள்ளப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் துன்ப துயரங்கள், அரசியல் சமூகப் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன மறைக்கப்பட்டு கடவுளையும் விதியையும் நம்பும் படி மக்கள் நிரப்பந்திக்கப்படுகின்றனர். இதனைக் கவனத்திற் கொண்டு அறியாமையை அகற்றி அவற்றின் நச்சுத்தனங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்களுக்கான மாற்று கலை இலக்கியத்தையும் பண்பாட்டுத் தளத்திலான ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் வேண்டும்.
16. உலக மேலாதிக்கத்திற்காக முயன்று வரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் உலக மக்களின் பொது எதிரிகளாவர். எங்களது நாட்டைப் போன்ற அடக்கி ஒடுக்கப்படும் ஆசிய ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுகளும் மக்களும் முன்னெடுத்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுடன் நாமும் எம்மை இணைத்துக் கொள்ளல் வேண்டும். அதற்கான வழி பலநிலைச் செயற்பாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஊடாக பொருளாதார அரசியல் ராணுவ பண்பாட்டுத் தளங்கள் அனைத்தின் ஊடாகவும் அமெரிக்க, மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் நாடுகளிலும் மக்களிடையேயும் ஊடுருவி நிற்கின்றன. இவற்றை மக்கள் மத்தியில் எடுத்து விளக்கி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்தல் வேண்டும் என்பதை இவ் உடனடி வேலைத்திடடம் வற்புறுத்துகிறது.
17. இந்தியப் பிராந்திய மேலாதிக்கம் மேன்மேலும் நம் நாட்டின் மீது பொருளாதார அரசியல் ராணுவ பண்பாட்டு ஆதிக்கத்தை விரிவுபடுத்தி நிலைநிறுத்தி வருகிறது. தேசிய இனப் பிரச்சினையைப் பயன்படுத்தி முழு இலங்கையையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் இந்தியக் கொள்கை வகுப்போர் முனைப்பாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவே பொருளாதார நன்மை பெற்று வருகின்றது. அதே போன்று, பொருளாதாரப் பங்குடைமை ஒப்பந்தத்தில் (சீபா) இலங்கையைக் கையெழுத்திட வற்புறுத்தி வருகிறது. மேலும் இந்திய- இலங்கை மீனவர்களை மோத வைத்து அதன் மூலமும் லாபமடையவே இந்தியா முயல்கிறது. தென்னாசியா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் முழு ஆசியாவையும் கட்டுப்படுத்தும் மூலோபாயத்துடன் இணைந்ததாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்திய மேலாதிக்கத்திற்கும் அதன் விரிவாக்கத்திற்கும் எமது நாடு பலியாக்கப்படுவதை நாம் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் இலங்கை மக்களிடம், குறிப்பாகத் தமிழ் மக்களிடம், மேட்டுக்குடி உயர் வர்க்க அரசியல் ஆதிக்க சக்திகளால் இந்தியா பற்றி கட்டியெழுப்பப்பட்ட பொய்மைகளையும் அதன் மேலாதிக்க சுயரூபத்தினையும் அம்பலப்படுத்துதல் வேண்டும். அதே போன்று சீனாவின் கடன் உதவி, வர்த்தகம், முதலீடு, ஆயுத விற்பனை போன்றன கவனத்துடன் நோக்க்படுவது அவசியமாகும்.
18. இலங்கையின் கடந்த முப்பது வருடகாலப் பொருளாதார அரசியல் சமூகச் சூழலில் நாட்டை விட்டுச் சென்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் பதினைந்து லட்சம் ஆகும். இவர்கள் கொடிய யுத்தச் சூழலாலும் பொருள் ஈட்டும் நோக்கினாலும் புலம்பெயர்ந்தவர்களாவர். அவர்களதும் அடுத்தடுத்த தலைமுறையினரதும் இருப்பும் எதிர்காலமும் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுந்து நிற்கும் போதிலும் அவர்களுக்கு இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அக்கறைகள் இருந்து வந்துள்ளன. இவர்களில் பெரும் பகுதியினர் ஷதமிழீழம்| கிடைக்கும் என்னும் மாயைக்குள் இருந்து வந்தனர். இவர்கள் இப்போது விரக்தியுடன் இருந்து வருகின்ற அதே வேளை, ஷநாடு கடந்த தமிழீழ அரசு| என்னும் தமிழர் மேட்டுக்குடிச் சிந்தனையை வளர்த்து ஏகாதிபத்திய விசுவாசத்துடன் குறிப்பிட்ட சிலர் செயலாற்றி வருகிறார்கள். இத்தகைய தமிழ்ப் பழைமைவாதப் பிற்போக்குக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளைப் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே நிராகரித்து முற்போக்கு ஜனநாயக இடதுசாரிச் சிந்தனைகளுக்கு வலுவூட்டும் சக்திகள் மேற்கிளம்ப வேண்டும். அத்தகைய நடைமுறை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களிடையேயும் மாற்று அரசியலுக்கான சூழலை வளர்த்தெடுக்க உதவியாக அமையும் என்பதை இவ் உடனடி வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
19. இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. அங்கு நமது மக்களின் உழைப்பு மிகக் குறைந்த சம்பளத்தில் சுரண்டப்படுகிறது. மோசமான வெப்பம் குளிரில் மட்டுமன்றி கடுமையான வேலைகளினாலும் நம்மவர்கள் கஷ;டங்கள் அனுபவித்து வருகின்றனர். அதே வேளை, வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று கடும் உழைப்பு, சம்பளக் குறைவு, பாலியல் இம்சைகள் போன்றவற்றை நமது நாட்டுப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்களது மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என்பதன் ஊடாக அவர்கள் அங்கு துன்பம் அனுபவிப்பதுடன், இங்கு சமூகச் சீரழிவுகள் பல பக்கங்களாலும் அப் பெண்களின் குடும்பங்களில் இடம்பெற்று மோசமடைந்தும் வருகின்றன. இவை நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சீர்குலைவாலும் வேலை இன்மையாலும் ஏற்பட்ட ஒன்றாகும். இந் நிலையை நமது உடனடி வேலைத்திட்டம் கவனத்திற் கொள்கிறது. அதற்கான அரசியல் பொருளாதார சமூக விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புக்களைப் பலவழிகளிலும் முன்னெடுப்பதை இவ் உடனடி வேலைத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
20. உலகமயமாதலின் கீழ் சுற்றுச் சூழல் மாசடைந்து வரும் வேகமான போக்கு நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. பல்தேசியக் கம்பனிகளின் ஊடுருவல்கள் பல்வகைகளிற் சுற்றுச் சூழலை மாசடைய வைத்து வருகின்றன. நுரைச்சோலை, மேல் கொத்மலை, சம்பூர், சேது சமுத்திரத் திட்டம் போன்றன மட்டுமன்றி, அவை போன்ற அதிகம் பேசப்படாத திட்டங்களும் அபிவிருத்தி என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டுச் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருகின்றன. கதிர்வீச்சு மோசமாகப் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. முப்பது வருடத்தில் வடக்குக் கிழக்கில் வெடிக்க வைக்கப்பட்ட வெடிபொருட்களில் இருந்து வெளிவந்த நச்சுப்புகைகள் தொடர்ந்து தீராத நோய்களையும் புதிய வியாதிகளையும் மட்டுமன்றிப் பிறக்கும் குழந்தைகட்கும் கடும்பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி போன்ற பெயர்களில் நாட்டின் நிலம், நீர், காற்று, காடுகள், கடல் போன்றவை மாசடைய வைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழல் மாசடைவதற்கு எதிரான மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதை இவ் உடனடி வேலைத்திட்டம் வற்புறுத்துகின்றது.
21. அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் என்பனவற்றின் செயற்பாடுகளின் பின்னால் ஏகாதிபத்திய நோக்கங்களே நிறைந்திருக்கின்றன என்பது அம்பலமாகி நிற்கும் ஒன்றாகும். அவற்றின் பிரதான நோக்கம் மக்கள் மத்தியில் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் போராட்ட அரசியலை மறுத்து மிக நாசுக்கான வழிகளில் செயற்படுவதாகும். அதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் இவ் அரச சார்பற்ற நிறுவனங்கள் செலவு செய்து கொள்கின்றன. தமது சொந்த முயற்சிகள் மூலமான சொந்த வர்க்க அரசியலை முன்னெடுக்க முன்வரும் அடக்கி ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களைத் திசை திருப்பி, அவர்களைக் கையேந்தியும் எதற்கும் பிறரை எதிர்பார்த்து நிற்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் செயல்களை இவ் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. உடனடியாக, ஷஉதவி|, ஷசுயமுயற்சிக்குக் கைகொடுத்தல்|, ஷபொது நலத்திற்குப் பங்களிப்பு| போன்ற தோற்றங் காட்டினாலும் அடிப்படையில் அவை மக்கள் மத்தியில் உழைக்கும் வர்க்க அரசியலை நீக்குவதில் முன்னின்று பிற்போக்குச் சக்திகளுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டியங்குகின்றன. இவ் அரசசார்பற்ற நிறுவனங்களின் நோக்கையும் போக்கையும் அவர்களது பணவாரி இறைப்பின் பின்புலங்களையும் பற்றி மக்கள் மத்தியில் எடுத்து விளக்குவதும் அவற்றின் அழிவுகரமான செயற்பாடுகளை அம்பலப்படுத்தி மக்களுக்கான மாற்று அரசியலை வர்க்கப் போராட்ட அரசியலாக முன்னெடுப்பதை இவ் உடனடி வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
மத்திய குழு
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி
கொழும்பு
நெற னநஅழஉசயவiஉ pயசவல ளூ hழவஅயடை.உழஅ
உமளநவொiஎநட ளூ பஅயடை.உழஅ
றுநடி: nனிளட.ழசப
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின்
5வது அனைத்து இலங்கை மாநாட்டின்
முதலாவது நிறை பேரவைக் கூட்டத்தில்
இலங்கையின் தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமையும் பற்றி நிறைவேற்றப்பட்ட
அறிக்கையும், தீர்வுத் திட்டமும்
23.07.2011 கொழும்பு
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது சமகால சூழ்நிலையில் ஒரே நாட்டிற்குள் சுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கருத்தைக் கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் நிலைநிறுத்துவதில் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். இது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பேரினவாதத்திற்கு எதிரான பெருந்தேசியவாதம், குறுந்தேசியவாதம் என்பவற்றுக்கும் மாறான பாட்டாளி வர்க்க நிலைப்பாடென எமது கட்சி நம்புகிறது.
சிங்கள பௌத்த தேசியவாதிகளும் பேரின அடக்குமுறையாளர்களும் சுயநிர்ணய உரிமை, சமத்துவம், சுயாட்சி என்ற சொற்களைக் கேட்கவே விரும்பாதவர்களாக (அச்சமடைபவர்களாக, ஆத்திரமடைபவர்களாக) சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தை விடாப்பிடியாகக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறார்களோ இல்லையோ பேரினவாத ஆதிக்கத்தின் விடாப்பிடித்தனத்தை ஏற்றுக்கொண்டு அதனிடமிருந்து அபிவிருத்தி என்ற பேரிலான சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தமது இருப்பை பாதுகாப்பதில் சீரழிந்து போயுள்ள சில முன்னாள் தமிழ்த் தேசியவாதிகள் (முன்னர் தனித் தமிழீழத்திற்காக ஆயுதமேந்தியிருந்தவர்கள்) அக்கறையாக இருந்து வருவதுடன் அதனை ஒரு கருத்தியலாகத் தமிழ் மக்களிடம் நிலைநாட்டப் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
சுயநிர்ணய உரிமை, சமத்துவம், சுயாட்சி என்பவை நாட்டுப் பிரிவினையைத் தவிர, வேறெதுவுமில்லை என்றும் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு தனித் தமிழீழம் தான் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழ் தேசியவாதிகள் இருக்கின்றனர். இதில் எஞ்சியிருக்கும் புலிகள் இயக்கத்தினரும், அந் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட புலம்பெயர்ந்தவர்களும் அடங்குவர். இவர்களே ஷஷநாடு கடந்த தழிழீழ அரசு|| என்பதை வற்புறுத்தி வருகின்றனர்.
தமது கருத்தை வெளிப்படையாக காட்ட முடியாத சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை கைவிடோம் என்று கூறிக் கொண்டு, வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்துடன் பேசி வருகின்றனர். இந்திய மேலாதிக்கவாதிகள் சொல்லும்போது பேசுவார்கள். அவர்கள் பேச்சுவார்த்தையை முறிக்கச் சொல்லும்போது முறிப்பார்கள்.
இதைவிடப், பிரிவினையை நிராகரித்து இன மேலாதிக்கமற்ற அதிகாரப் பகிர்வைக் கோருகின்ற சக்திகளும் தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்றன. சமத்துவம் மட்டுமே போதும் என்கின்ற சக்திகளும் இருக்கின்றன.
இந்தப் பொதுவான போக்குகளுக்கு அப்பாலேயே புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் நிலைப்பாடு அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சியை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளை, ஏகாதிபத்தியத்திற்கும், இலங்கையின் ஆளும் வர்க்கங்களுக்குத் துணைபோகும் பேரினவாதத்தினைப் போசித்துத் தொழிலாளர் வர்க்க ஐக்கியத்தைக் குலைக்கும் விதத்தில் அமையும் ஷபிரிவினைவாதத்தினைக்| கட்சி நிராகரிக்கிறது. இது சுயநிர்ணய உரிமை என்பது ஷபிரிவினைவாதமல்ல| என்ற அடிப்படையிலும், இலங்கையின் சமகாலச் சூழ்நிலையின் அடிப்படையிலும் கட்சி வகுத்திருக்கும் நிலைப்பாடாகும்.
எமது கட்சி தேசிய இனங்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரப் பரவல், அதிகாரப் பங்கீடு, சமத்துவம் போன்றவை சட்டரீதியாக உறுதி செய்யப்படுவதை நிராகரிக்கவில்லை. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைப், பெருந்தேசியவாதிகளும், பேரினவாதிகளும், அடிப்படைவாதிகளும் ஷபிரிவினைவாதிகளும்| எதிர்த்தபோதும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் அவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் கட்சி ஈடுபட்டதும் இல்லை. ஈடுபடப் போவதுமில்லை. கட்சி அவற்றை வன்மையாகக் கண்டித்தே வந்துள்ளது. ஆனால் சுயநிர்ணய உரிமை- சமத்துவம்- சுயாட்சி போன்றவற்றை மறுக்கும் இலக்குடனான பெயரளவிலான அதிகாரப்பரவல் அதிகாரப் பங்கீடு போன்றவற்றை தொடர்ந்து நாம் அம்பலப்படுத்துவோம். அதிகாரப் பங்கீடு குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவும் நீண்டகாலத்தில் சுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சியை வென்றெடுத்து நிலைநாட்டுவதற்கு வழி செய்வதாகவும் இருக்கும் பட்சத்தில் அவற்றை நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் அவசியம் நமக்கு இல்லை. ஆனால் அவற்றை இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப் போவதில்லை.
தமிழ் மக்கள் மீதான தேசிய இன ஒடுக்குமுறை யுத்தமாக வளர்த்தெடுக்கப்பட்டு ஏறக்குறையத் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களும் முறியடிக்கப்பட்டுத் தமிழ் மக்களும் வடக்கு கிழக்குப் பிரதேசமும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இராணுவ ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் இன்னும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற முடியாதிருக்கின்றனர். இடம்பெயர்ந்த நிலையிலேயே அதிகமானோர் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் வாழிடங்களும் சூழலும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்வதால் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று குடியேற முடியாதவர்களாக இருக்கின்றனர். யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெயர், விபரங்கள் போன்றன இன்னுமே சரியாக வெளியிடப்படவில்லை. யுத்தத்தைக் காரணமாகக் கொண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே போன்று பெற்றோரை இழந்திருக்கும் பிள்ளைகள் பற்றிய சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இவை பல பத்தாயிரங்களாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இவ்வாறு யுத்தத்தினால் பலவகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வும் புனரமைப்பும் வழங்கப்படவில்லை.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தனிப்பட்டவர்களின் நிலங்கள் இராணுவத்தினாலும், பல்தேசியக் கம்பனிகளாலும், பேரினவாதிகளாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. தனியார், அரச காணிகளில் இராணுவ முகாம்களும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்படுவதுடன், இராணுவக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வடக்குக் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதனை இல்லாமலாக்கி அப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் தூர நோக்கில் முன்னெடுக்கப்படும் பேரினவாத மேலாதிக்க நடவடிக்கைகளாகும்.
வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்வோ, ஜனநாயகச் சூழ்நிலையோ இல்லை. ஆயுத அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும், மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களும் கூடிய பிரதேசமாக இருப்பதுடன், வடக்கு கிழக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. பொலிஸ், இராணுவ சோதனைகள், கண்காணிப்புகள், கைதுகள், காணாமற் போதல்கள் அடக்குமுறை நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.
யுத்த அழிவுகளிலும் பாதிப்புகளிலும் இருந்து தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு பிரதேசமும் மீட்கப்பட்டு மக்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அப் பிரதேசங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். திட்டமிட்ட, இராணுவரீதியான குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இன்று அங்கு இடம்பெற்று வருபவை ஒருவகைக் கண்துடைப்பு நடவடிக்கைகளும் நியாயமான அரசியல் தீர்வை மறுக்கும் வெறும் சலுகை வழங்கல்களாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இவை தீர்க்கப்பட வேண்டும் என்பது, இவ்வளவு அழிவுகளுக்கும் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உடனடி பிரதான கோரிக்கைக்குச் சமமானதல்ல.
மாகாணங்களுக்குச் சிறிதளவு அதிகாரப் பரவலை உறுதி செய்துள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழான மாகாண சபைகள் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்த விரும்பாத அல்லது அதனை இல்லாமலாக்கத் துடிக்கும் பேரினவாதத்திடமோ சிங்கள, தேசியவாதத்திடமோ தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வை இலகுவாக வென்றெடுத்துவிட முடியாது. தமிழ் மக்களின் தேசிய அபிலாட்சைகளுக்கான கோரிக்கையை பேரினவாதம் அல்லது சிங்களத் தேசியவாதம் தொடர்ந்து நிராகரித்துத் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கலை விரிவுபடுத்தி யுத்தமாக முன்னெடுத்தது. சிங்களத் தேசியவாதிகளும், பேரினவாதிகளும் அடிப்படைவாதிகளுமே தமிழ் மக்களின் சமகால அழிவுகளுக்கான பாரிய பொறுப்பை ஏற்கவேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் தேசிய அபிலாட்சைகளுக்கான கோரிக்கையை முடிந்த முடிவான ஷபிரிவினைவாதப் போராட்டமாக| முன்னெடுத்த பழைமைவாதத் தமிழ் தேசியவாதிகளும் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
புதிய- ஜனநாயகப் புரட்சியின் நிகழ்ச்சி நிரலுக்குள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை எமது கட்சி உணர்ந்து செயற்படுகின்றது. ஆனால் தந்திரோபாய ரீதியாக தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை ஏனைய சக்திகளின் பொது இணக்கத்துடன் அல்லது ஐக்கிய முன்னணி வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து கட்சி தவறிவிட இயலாது.
ஏனெனில் இன முரண்பாட்டைத் தணிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், போர் அழிவுகளுக்கும் உட்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டுள்ளனர்.
சிங்கள மக்களின் தலைமைகள் எனப்படும் ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைகளால் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ முடியாது என்ற நிலைமை தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சிங்கள மக்கள் புரிந்து கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதில் தமிழ் மக்களுடன் ஒத்துழைக்காவிட்டால் ஏகாதிபத்தியத் தலையீட்டினால் முழுநாட்டின் இறைமையும் முற்றாகப் பறிபோய், நிரந்தரப் பகையுடன் தேசிய இனங்கள் வாழ வேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திலிருந்து சிங்கள மக்கள் தம்மை விடுவித்துக் கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சிக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டியது வரலாற்றுத் தேவையாகிறது. அதே போன்று தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு சார்பானதல்ல என்று நடைமுறையில் நிரூபிக்கும் வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டியது தமிழ் மக்களினது பொறுப்பாகும்.
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கக் கூடிய, அதற்குத் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் நிலையில் இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் தற்போது தயார் நிலையில் இல்லாதபடியால், தேசிய ஜனநாயகப் புரட்சியை ஏனைய சக்திகளின் பொது உடன்பாட்டின் அடிப்படையில் அல்லது ஐக்கிய முன்னணியாக முன்னெடுப்பதில் தொழிலாளி வர்க்கம் பிரதான சக்தியாக இருந்து செயற்படுவது அவசியம். அதனூடாகவே புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்கும் நிலைக்கு தொழிலாளர் வர்க்கம் வளர்வதுடன், அப் புரட்சிக்கான சூழ்நிலையையும் ஏற்படுத்த முடியும்.
தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தில் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை உள்ளடக்கி அதனை வென்றெடுக்க வெகுஜனப் போராட்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும். இது பொது உடன்பாட்டுடனான ஐக்கிய முன்னணி வேலைத்திட்டம் என்பதால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படைகளை அப்படியே இணைத்துவிட முடியும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் அதற்குரிய வரையறைகளுடன் குறைந்தபட்ச அரசியல் தீர்விற்கான வேலைத்திட்டங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவ் வேலைத் திட்டத்திற்கு வெளியில், அடக்கப்படும் தேசிய இனங்களுக்கு உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுவதற்காக ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமிடத்து அவற்றை விமர்சனத்துடன் ஊக்குவிப்பதில் கட்சி பின்னிற்காது. (இது பேரினவாதத்திற்கு எதிரான நிலைப்பாடன்றிச் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் நிலைப்பாடல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.)
தேசிய ஜனநாயகப் புரட்சியில் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளும், இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் முற்போக்கான அம்சங்களைக் கொண்ட தேசிய சக்திகளும், சாதிய, பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சக்திகளும், சினேக பூர்வமான அணிகளாகும். தேசிய இன விடுதலைப் போராட்ட சக்திகள் முற்போக்கு நிலைப்பாட்டை எடுக்கும் போது, அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் உள்நாட்டு அடக்குமுறை சக்திகளை எதிர்க்கும் போது, எம்மால் அவற்றுடன் ஐக்கியப்பட முடியும். அத்துடன் ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் சக்திகளுடனும் ஏனைய தேசிய இனங்களுடனான ஐக்கியம் சமத்துவம் போன்ற புரிந்துணர்வுடன் செயற்படும், செயற்பட விருப்பம் கொண்டுள்ள சக்திகளுடனும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள்நாட்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிர்ப்பு, ஜனநாயக- தொழிற்சங்க- மனித உரிமைகள் ஆதரவு போன்றவை தேசிய சக்திகளிடம் முன் நிபந்தனைகளாகக் கொள்ள வேண்டிய முற்போக்குக் கூறுகளாகும். அவ்வாறான முற்போக்கு கூறுகளைக் கொண்ட சக்திகளுடன் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கிய முன்னணியாகிச் செயற்படுவது மாக்சிய லெனினியவாதிகளின் ஐக்கியமும் போராட்டமும் என்ற நிலைப்பாட்டிற்கு உட்பட்டதாகும்.
இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் என்போரது தேசிய அபிலாட்சைகளுக்கான கோரிக்கைகளே தேசிய இனப் பிரச்சினையாகும். இலங்கையின் நான்கு தேசிய இனங்களும் அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டு விடயங்களில் பேரினவாத மேலாதிக்கம் இல்லாது தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு உறுதி செய்வதன் அடிப்படையிலேயே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும். அதே போன்று பறங்கியர்களினதும் மலாய் சமூகத்தவரதும் ஆதிவாசிகளினதும் பிற தேசிய சிறுபான்மையினரதும் உரிமைகளும் உறுதி செய்யப்படவேண்டும்.
நான்கு தேசிய இனங்களும், பல சமூகங்களும் வாழ்கின்றன என்ற அடிப்படையில் இலங்கை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்வது தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிகவும் அடிப்படையான முன்நிபந்தனை ஆகும்.
மேற்கூறிய அடிப்படைகளைக் கொண்டு தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை வென்றெடுக்க உடனடி வேலைத்திட்டமொன்றையும், நீண்டகால வேலைத்திட்டமொன்றையும் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி முன்மொழிகிறது.
தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான உடனடி வேலைத்திட்டம்.
1. இவ்வளவு அழிவிற்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அதிகாரப் பங்கீட்டை உறுதி செய்யும் வகையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இடம்பெயர்ந்துள்ள வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு புனர்வாழ்வு- புனரமைப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே இயங்கிய பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் பொது இடங்கள் அனைத்தும் மீண்டும் இயங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். சிவில் நிர்வாகம் முழுமையாக இயங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் தடைகளும், நடமாடுவதற்கான தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
3. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றால் ஷபாதுகாப்புக் காரணங்களின்| பேரில் அபகரிக்கப்பட்ட காணிகள், கட்டிடங்கள் அதன் சொந்தக்காரர்களுக்கு அல்லது அவர்களின் வழித்தோன்றல்களுக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டும்.
4. யுத்தம் காரணமாக உயிரிழப்புகள், சொத்தழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய நிவாரணமும், நட்டஈடும் அளிக்கப்பட வேண்டும்.
5. காணாமற் போனவர்களதும் கைது செய்யப்பட்டவர்களதும் விவரங்கள் உறவினர்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்படல் வேண்டும். இல்லாவிட்டாற் காணாமல் போனமைக்குக் காரணமானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
7. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
8. யுத்தத்தின் பேராற், குறிப்பாக வடக்குக் கிழக்கில், தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்ற ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு, உயிர் வாழ்வதற்கான, நடமாடுவதற்கான, கருத்துத் தெரிவிப்பதற்கான உரிமைகள் மீள நிலை நிறுத்தப்பட வேண்டும்.
9. வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ள திட்டமிட்ட பேரினவாத, இராணுவக் குடியேற்றங்களும் அபிவிருத்தியின் பெயரிலான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவை இடம்பெறாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் மீதான இனப் பாகுபாடு, புறக்கணிப்பு நீக்கப்பட்டு அவர்களின் இருப்பும் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
11. தமிழ் மொழியும் ஆட்சிமொழி என்பது நடைமுறையில் நாடெங்கும் செயற்படுத்தப்பட வேண்டும்.
12. 2009 ஆண்டு மே 19 வரை யுத்தக் குற்றம் புரியப்பட்டுள்ளதா என்பது பற்றிய சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட, நேர்மையான விசாரணை நடாத்தப்பட்டுக் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நீண்டகாலத் தீர்வுக்கான வேலைத்திட்டம்
ஒரு தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு சுயாதீனத்தைக் கொண்டுள்ளது. இது அடக்குகின்ற ஏகாதிபத்தியத்திடமிருந்து, தேசத்திடமிருந்து, தேசிய இனத்திடமிருந்து பிரிந்து செல்லும் உரிமையையும் கொண்டது என்பதை எமது கட்சி நிராகரிக்கவில்லை. அதே வேளை, இந்தச் சுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள்நாட்டு அடக்குமுறை அரசின் மீதான எதிர்ப்பு, தொழிலாளி வர்க்க நிலைப்பாடு போன்றவற்றுக்கு அப்பால் நிபந்தனையற்றதாக இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எமது கட்சி உறுதியாகக் கொண்டுள்ளது.
தோழர் லெனினுடைய காலத்திலும் சோவியத் யூனியனின் காலத்திலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடவேண்டி இருந்தது போன்று, இன்றும் ஏகாதிபத்திய காலகட்டமே தொடர்கிறது. என்றாலும் ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழ்நிலையில் புதிய நிலைமைகள் காணப்படுகின்றன. சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்குத் தடையாக ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. ஏறக்குறைய எல்லாச் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களிலும் ஏகாதிபத்தியம் ஊடுருவி விடுகிறது. பால்கன் நாடுகளின் பிரிவினை தொடக்கம் தென் சூடான் பிரிவினை வரை ஏகாதிபத்திய தலையீடுகளாலேயே நாட்டுப் பிரிவினைகள் நடந்தேறியுள்ளன. அந் நாடுகளில், உள்நாட்டு அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுதலையாவது என்ற பெயரில், தேசிய இனங்கள் ஏகாதிபத்தியப் பிடிக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. இதனை உண்மையான தேசிய இன விடுதலை என்றோ சுயநிர்ணய உரிமையென்றோ அர்த்தப்படுத்த முடியாது. அதே வேளை தமக்குச் சார்பில்லாத அல்லது தமது அக்கறைகளுக்கு உதவாத தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஏகாதிபத்தியம் அடக்குகிறது. அரசுகளுடன் இணைந்து முறியடித்தும் வருகிறது.
இந்த அடிப்படையில் ஷபிரிவினைவாத கோரிக்கையுடன்| முன்னெடுக்கப்படும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் அல்லது தேசிய இனவிடுதலை போராட்டம் என்ற பேரில் முன்னெடுக்கப்படும் ஷபிரிவினைவாதப் போராட்டங்களில் பொதுவாக இரண்டு போக்குகளை அவதானிக்க முடியும். ஒன்று, சமகாலத்தில் ஏகாதிபத்திய ஆதரவு அல்லது தலையீடின்றி பிரிவினை சாத்தியமில்லை. இரண்டாவது, ஒரு தேசிய இனத்தை ஒடுக்குகின்ற அரசு அதன் தளமாகக் கொண்டுள்ள பெருந் தேசிய இனத்தைத் தொடர்ந்து இலகுவாக தனது பிடிக்குள் இனவாத அடிப்படையில் வைத்திருக்கவும், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கைகளை இலகுவாக நசுக்கிவிடவும் ஷபிரிவினைவாத எதிர்ப்பு| என்ற அடிப்படை முன்பை விடச் சமகாலத்தில் அதிகம் உதவுகிறது. அதாவது ஷபிரிவினைவாதம்| ஏகாதிபத்தியத்திற்கு சார்பானதெனக் காட்டிப், போராடுகின்ற தேசிய இனத்தின் மீது மேற்கொள்ளும் இனமேலாதிக்கத்தை நியாயப்படுத்த அடக்குகின்ற அரசுகளுக்கு அது வசதியாகிவிடுகிறது. இதனால் அடக்குகின்ற தேசத்தினது அல்லது தேசிய இனத்தினது தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக சக்திகளதும் ஆதரவை அடக்கப்படுகின்ற தேசிய இனங்கள் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தே வருகின்றன. எனவே சமகாலத்தில் ஷபிரிவினைவாதம்| பெரும்பாலும் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாகவும், அடக்குகின்ற அரசுகளுக்கு எதிர்மறையாகவும் உதவுகிறது. இவ்வகையான சூழ்நிலையில் ஷபிரிவினைவாதத்தை| அடிப்படையாகக் கொண்டுள்ள போராட்டங்களை மாக்சிச லெனினிசவாதிகள் மிகவும் அவதானத்துடனேயே அணுக வேண்டியவர்களாகிறார்கள். ஏகாதிபத்தியத்திற்கும் மேலாதிக்கத்திற்கும் எதிரான ஷசுயநிர்ணய உரிமையை| ஏற்படுத்த அவற்றின் உதவியுடன் எப்படி வென்றெடுப்பது என்ற கேள்வி எழுகிறது. அடக்குமுறை அரசிற்கும், ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாண்டு சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது வேறு. தேசிய இனங்கள் ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது என்பது வேறு. ஏகாதிபத்தியத்தைப் பயன்படுத்துவது என்பது சரணடைவாகவே இருக்க முடியும்.
பிரிந்து போகும் உரிமை என்பதை நாடுகளைப் பிரித்துச் சிறிய சிறிய அரசுகளை அமைக்கும் முயற்சியாக அர்த்தப்படுத்தக் கூடாது என்று தோழர் லெனின் கூறியதை இன்றைய சூழ்நிலையுடன் பொருத்திப் பார்க்கும் கடப்பாட்டை எமது கட்சி கொண்டுள்ளதுடன் பிரிவினைப் போராட்டங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு உதவக் கூடியவாறு நாடுகளைத் துண்டாடுவதையும் எமது கட்சி ஏற்கவில்லை. பிரிந்து செல்லும் உரிமை என்பது சமகாலத்தில் (பால்கன் பிரிவினை போன்று) ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவதாக அமைந்து விடுகிறது.
சுயநிர்ணய உரிமை என்பது முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்;கையாகும். முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாக ஏகாதிபத்தியத்திற்கும் அடக்குமுறை அரசிற்கும் எதிராக முன்னெடுக்கும் போது மாக்சிச லெனினிசவாதிகள் அதனை ஆதரிப்பது அவர்களின் கடமையாக இருந்தது. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாக முன்னெடுக்கப்பட முடியாத சூழலில் அல்லது மாக்சிச லெனினிசவாதிகள் தங்களின் கையில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை எடுக்கும்போது அதனை பிரிவினைவாதஃதேசியவாதஃமுதலாளித்துவ கோரிக்கையாகவன்றிப் புதிய-ஜனநாயகஃ சோஷலிஸக் கோரிக்கையாகவே முன்னெடுக்க வேண்டியவர்களாகின்றனர். சோவியத் புரட்சிக்கு முன்னரான காலத்தில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை மிகவும் வலுவான முதலாளித்துவ கோரிக்கையாக இருந்தது. அதே சூழ்நிலை சீனப் புரட்சியின் காலகட்டத்தில் இருக்கவில்லை. தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் பகுதியாகவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை உள்ளீர்க்கப்பட்டது. அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டமாக சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்படாதஃபடமுடியாத சூழ்நிலையில், அது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தின் பகுதியாகிறது அல்லது சோஷலிஸப் புரட்சியின் பகுதியாகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கப்பட்ட காலத்திற் கொண்டிருந்த தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஷ;டி ஆட்சிமுறை என்ற சோவியத் நிலைப்பாட்டை ஒட்டியது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளில் ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு இடங்கொடுக்க முடியாது என்ற அடிப்படையில் அதை 1930களில் மாற்றிக் கொண்ட, தோழர் மாஓவின் தலைமையிலான அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கியப்பட்ட சீனாவுக்குள் தேசிய இனங்களுக்கு சுயாட்சி முறைமையை முன்வைத்தது. அதனையே புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் உருவாக்கிய அரசியல் யாப்பில் வளர்த்தெடுத்தது. சோவியத் யூனியன் சமஷ;டியாக இருந்தது. சீனம் பல்தேசிய இனங்களின் சுயாட்சிகளைக் கொண்ட ஒற்றையாட்சியாக அமைந்தது.
சமகால இலங்கையின் சூழ்நிலை சோவியத் புரட்சிக்காலத்துடனோ, சீனப் புரட்சி காலத்துடனோ ஒத்ததாக இல்லை. எனவே இலங்கையின் குறிப்பான சூழ்நிலை, சர்வதேசச் சூழல், பிராந்தியச் சூழல் என்பவற்றுக்கு ஏற்பவே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் சுயநிர்ணய உரிமைப் பிரயோகமும் அமைய வேண்டியுள்ளது. சோவியத் புரட்சியில் தொழிலாளி வர்க்கப் புரட்சி இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கப்படாதபோதும் முதலில் தொழிலாளர்-விவசாயிகளின் கூட்டுப் புரட்சி என்றும் பின்னர் சோஷலிஸப் புரட்சியென்றும் அமைந்தது. சீனா அரைக் கொலனித்துவ, அரைப் பிரபுத்துவ நாடாகையால் அங்கு புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் சோஷலிஸப் புரட்சி என்றும் இரண்டு காலகட்டங்களாகப் பிரித்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
இலங்கை இன்று அரைக் கொலனித்துவ அரைப் பிரபுத்துவ நாடல்ல. ஆனால் நவ கொலனித்துவ நாடாகும். புதிய ஜனநாயகப் புரட்சியே இலங்கையில் வர்க்கப் புரட்சியின் முதலாவது காலகட்டம் என்று எமது கட்சி வேலைத்திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் சமகாலச் சூழலுக்கு ஏற்ப புதிய ஜனநாயகப் புரட்சியின் பிரயோகத்தை எமது கட்சி விரிவாக்கியுள்ளது எனலாம்.
அதே போன்று இலங்கையின் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமைப் பிரயோகம் தொடர்பாகவும் விரிவான பார்வையை எமது கட்சி கொண்டுள்ளது. சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை என்றவாறன்றி ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஷசுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சி| என்ற அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமெனச் சுயநிர்ணய உரிமையின் பிரயோகத்தை எமது கட்சி விரிவாகப் பார்க்கிறது. நாடுகளுக்கும், தேசங்களுக்குமாக இருந்த சுயநிர்ணய உரிமையைத் தேசிய இனங்களுக்கான உரிமையாக, நிலத் தொடர்ச்சியற்றுப் பரந்து வாழும் தேசிய இனங்களுக்குமான உரிமையாக விரிவாகிப் பார்க்கிறது. அந்த அடிப்படையிலேயே இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் ஆகிய நான்கு தேசிய இனங்கள் வாழ்வதாகவும், நிலத்தொடர்ச்சியற்று வாழும் முஸ்லிம், மலையகத் தமிழ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யப்பட வேண்டுமென்பதிலும் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் பாதுகாப்புக் குறித்தும் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாப்புக் குறித்தும் தெளிவுடன் உள்ளது. அந்த அடிப்படையிலேயே நிர்வாகப் பரவல், அதிகாரப் பரவல், அதிகாரப் பங்கீடு என்பவற்றுக்கு மேலாகச் சுயாட்சிப் பிரதேசம், சுயாட்சி உள்ளமைப்பு, சுயாட்சி உப உள்ளமைப்பு போன்ற சுயாட்சி அலகுகளை முன்வைத்துள்ளது. அதிகபட்ச சுயாட்சியின் அடிப்படையில் சமத்துவத்துடன் சுயநிர்ணய உரிமையுடன் தேசியங்கள் கூட்டிணைவாக (ஊழகெநனநசயவழைn ழக யெவழையெடவைநைள ழக ளுசi டுயமெய) இலங்கை கட்டமைக்கப்பட வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான இலங்கையின் புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக இலங்கையின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் அமைந்துள்ளதென்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். புதிய ஜனநாயக அரசக் கட்டமைப்பில் தேசிய இனங்கள் அவற்றின் சுயவிருப்பில் அடிப்படையில் உயர்ந்தபட்ச சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமையுடையன. அவ்வுரிமையை மறுக்க அங்கு முதலாளிவர்க்கம் ஆட்சியில் இராது. அதனால் ஏகாதிபத்தியம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைப் பயன்படுத்தும் பலவீனமான சூழ்நிலை இராது. தேசிய இனங்களின் கோரிக்கை முதலாளித்துவக் கோரிக்கையாகவோ, நாடுகளைத் துண்டாடும் முதலாளித்துவச் சூழ்ச்சியாகவோ இராது. அச் சூழ்நிலையிற் பிரிந்து போகும் உரிமையின் அவசியம் பற்றித் தீர்மானிப்பது இலகுவானதாக இருக்கும். பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய உயர்ந்தபட்ச சுயாட்சியுடன் கூட்டிணைவாகத் தேசிய இனங்கள் ஒரே நாட்டில் ஐக்கியமாக வாழ்வது பற்றித் தீர்மானிக்க இலகுவாக இருக்கும். சீனப் புரட்சியின் பின் பிரிந்து போவதற்கான தேவை அங்கு வாழும் தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை. சுயாட்சி முறையையே அவை ஏற்றுக் கொண்டன. சன்டினிஸ்டா தலைமையிலான புரட்சிக்குப் பின் நிக்கராகுவாவின் தேசிய இனங்கள் சுயாட்சி அதிகாரங்களுடன் ஐக்கியப்பட்டிருக்கும் சூழ்நிலையே ஏற்பட்டது.
சீனா, நிக்கராகுவா புரட்சிகட்குப் பிந்திய சூழ்நிலையே இலங்கைக்கும் பொருந்தும் என்றில்லாவிட்டாலும் புதிய சூழ்நிலையில் இலங்கையின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நீண்டகால அடிப்படையில் நோக்குவது நல்லது.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான நீண்டகால வேலைத்திட்டம் புதிய-ஜனநாயகப் புரட்சியினூடாகவே சாத்தியம் என்பதைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் சில அடிப்படைகள் இங்கு முன்வைக்கிறது.
1. இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் தேசிய இனங்களும் ஆதிவாசிகள், பறங்கியர்கள் போன்ற சமூகத்தினரும், பலமொழி பேசுபவர்களும், பல மதத்தை தழுவுபவர்களும், பல பண்பாடுகளைக் கொண்டவர்களும் வாழும் நாடு என்பதை அரசியலமைப்பில் உறுதி செய்தல் வேண்டும்.
2. அரசியலமைப்பில் தேசிய இனங்களின் உரிமைகள் சுயநிர்ணய உரிமை-சமத்துவம்-சுயாட்சி என்ற அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
3. இன, மத, சமூக, பால் பாகுபாடுகளும், அடக்குமுறைகளும் அரசியலமைப்புக் குற்றங்களாகப்பட்டும் அப் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொள்வோர் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட வேண்டும். இன, மத, சமூக, பால் ரீதியான வன்முறைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
4. அரசியலமைப்புப் பிணக்குக்களையும், தேசிய இனங்களுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயுமான பிணக்குகளைத் தீர்க்க அரசியலமைப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு நீதிமன்ற நீதியரசர்கள் எல்லாத் தேசிய இனங்களையும், சமூகங்களையும் சமமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட வேண்டும்.
5. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு ஒரே சுயாட்சிப் பிரதேசமாக்கப்பட வேண்டும். அதில் முஸ்லீம்களுக்கு சுயாட்சி உள்ளமைப்பும், அங்கு வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு உப உள்ளமைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இன ஒடுக்கல், போர் போன்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனின் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே சுயாட்சிப் பிரதேசமாக இருப்பது அவசியம். வடக்குத் தமிழ் மக்களுக்கும் கிழக்குத் தமிழ் மக்களுக்குமிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இடைவெளி வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் ஆதிக்க வர்க்கங்களினாலும் பேரினவாதிகளாலும் அன்றிச் சாதாரண மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அந்த ஆளும் வர்க்க ஆதிக்கச் சக்திகளின் அதிகாரப் போட்டிகளுக்கு மக்கள் இரையாக்கப்படாமல் இருக்க, வடக்கு கிழக்கு ஒரே சுயாட்சி பிரதேசமாக இருப்பதுடன் வடக்கின் மக்களுக்கும் கிழக்கின் மக்களுக்குமிடையே இருக்கும் இடைவெளியை நீக்கவும், சந்தேகங்களைப் போக்கவும் அதிகார, நிர்வாகப் பரவலாக்கலும் பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் அல்லது பிரதேசங்களை ஒருங்கிணைத்து வடக்கு கிழக்கு சுயாட்சி பிரதேசத்தினுள், முஸ்லிம் மக்களுக்கென சுயாட்சி, உள்ளமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் முஸ்லீம் மக்களின் சந்தேகங்களும் அச்சங்களும் போக்கப்பட்டுத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஐக்கியமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். அதே போன்று, வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் அச்சமின்றி வாழவும் தமிழ், முஸ்லீம் மக்களுடன் ஐக்கியமாக வாழவும் வடக்கு கிழக்கு சுயாட்சிப் பிரதேசத்தில் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கென சாத்தியமான சுயாட்சி உப அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேற்கண்டவாறு அமையப் பெறும் போது வடக்கு கிழக்கு சுயாட்சி அமைப்பு சுதந்திரமாக இயங்கவும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழவும் வழி செய்ய முடியும்.
6. வடக்கு கிழக்கிற்கு வெளியில் மலையகத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கென சுயாட்சி அமைப்பு, சுயாட்சி உப அமைப்பு, உப உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலத்தொடச்சியான பெரிய பகுதியுடன் நிலத்தொடர்ச்சியற்ற பகுதிகளை நிர்வாக ரீதியாக ஒருங்கிணைத்து சுயாட்சி அமைப்பை ஏற்படுத்தலாம். அல்லது மலையகத் தமிழ் மக்களின் சனச்செறிவிற்கு ஏற்பச் சுயாட்சி, சுயாட்சி உள்ளமைப்பு, உப உள்ளமைப்புகளை ஏற்படுத்தலாம்.
7. வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் அவர்களின் சனச் செறிவிற்கு ஏற்பச் சுயாட்சி உள்ளமைப்பு, உப உள்ளமைப்புகளை ஏற்படுத்தலாம். பறங்கியர், மலாயர், ஆதிவாசிகள், போன்ற சமூகங்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
8. சுயாட்சி அமைப்பொன்று ஆகக் குறைந்தது பின்வரும் அதிகாரங்களையாவது கொண்டிருக்க வேண்டும்.
i சுயாட்சிப் பிரதேசக் காணிகள், குடியேற்றங்கள், காணிப் பங்கீடு, கடல் வளம், வர்த்தகம் போன்றன அதன் பொறுப்பிலேயே இருக்க வேண்டும். மத்திய அரசாங்கம் குடியேற்றங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளும் போது பிரதேச சுயாட்சி அமைப்புக்களுடன் கலந்துரையாடி அவற்றின் பங்களிப்புடனேயே செய்ய வேண்டும்.
ii சுயாட்சிப் பிரதேச உள்ளகச் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட அவற்றுக்கெனப் பிரத்தியேகமாகப் பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
iii சுயாட்சிப் பிரதேச மக்களின் மொழி, பண்பாடு, போன்றவற்றின் காப்பாளனாக சுயாட்சி அமைப்பு இயங்க வேண்டும்.
iஎ சுயாட்சிப் பிரதேசக் கல்வி, சுகாதாரம், போக்குவரத்துப் போன்றன சுயாட்சி அமைப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
எ மத்திய அரசின் தீர்மானங்கள் சுயாட்சி அமைப்பிற்கும் உள்ளமைப்பிற்கும், உப உள்ளமைப்புகளுக்கும் பாதகமெனச் சுயாட்சிகள் கருதினால் அவை பற்றி அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் இறுதித் தீர்வு காணப்படும்வரை அம் முடிவுகளைச் சுயாட்சிகள் அவற்றின் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தாமல் விடலாம்.
எi அதேபோன்று சுயாட்சி அமைப்பின் தீர்மானங்கள் மத்திய அரசிற்கு பாதிப்பை ஏற்படுத்துமெனக் கருதினால் அதன் கீழ் இயங்கும் சுயாட்சி உள்ளமைப்பு, உப உள்ளமைப்புகள் அவற்றை அவற்றின் பிரதேசங்களில், தீர்மானங்கள் பற்றி அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் இறுதி தீர்வு காணப்படும்வரை நடைமுறைபடுத்தாமல் விடலாம்.
மேற்கூறப்பட்ட அடிப்படையில் புதிய ஜனநாயக அரச கட்டமைப்பில் இலங்கையின் தேசிய இனங்கள் அவற்றின் சுயவிருப்பின் அடிப்படையில் உயர்ந்தபட்ச சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் பிரிந்தும் போகும் உரிமையுடனான சுயாட்சியுடன் கூட்டிணைவான (ஊழகெநனநசயவழைn) ஐக்கிய இலங்கை மக்கள் குடியரசை கட்டியமைக்க வேண்டும்.
இவற்றை வென்றெடுக்கத் தேசிய இனங்களிடையே ஐக்கியம் அவசியமாவதால் நாம் தேசிய இனங்களிடையேயான அடக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், பெண்கள், சாதிரீதியாக அடக்கப்பட்டோர் ஆகியோரை இணைத்தும் அவர்களின் பொது உடன்பாட்டுடனும் வெகுஜனப் போராட்டங்களை அந்தந்தத் தளங்களிலும், கூட்டிணைந்தவையாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் கட்சியாக புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியைச் சக்தி மிக்கதாக்குவோம். தந்திரோபாய ரீதியாகத் தேசிய ஜனநாயக வேலைத்திட்டத்தினூடாக புதிய ஜனநாயகப் போராட்டத்தை மேற்கொண்டு தேசிய இனங்களின் ஆகக் கூடிய சுயநிர்ணய உரிமை- சமத்துவம்-சுயாட்சியை நிலைநாட்டித் தேசிய இனங்களின் சமத்துவக் கூட்டிணைவாக ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம். (ருnவைநன ளுழஉயைடளைவ ஊழகெநனநசயவழைn ழக யேவழையெடவைநைள ழக ளுசi டுயமெய)
மத்திய குழு
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி
கொழும்பு
new democratic party @ hotmail.com
cksenthivel @ gmail.com
Web: ndpsl.org