புதிய-ஜனநாயக கட்சியின்
தேர்தல் கொள்கை விளக்கம்.
அறிமுகம்
இலங்கை மக்கள் அனைவரும் இரண்டு நிலைகளில் மோசமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் அனுபவித்த வண்ணமே உள்ளனர். ஒன்று பேரினவாத முதலாளித்துவ ஒடுக்குமுறை காரணமான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை. இரண்டாவது வர்க்க ஒடுக்குமுறையினால் உருவாகி வளர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இவற்றுடன் கூடவே பல்வேறுபட்ட அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு அவற்றுடன் மல்லாட வேண்டியவர்களாக இருந்து வருகின்றனர். இவை யாவற்றிலும் ஆளும் வர்க்க சக்திகளாக உள்ள அரசாங்க – எதிர்த் தரப்பினர் அனைவரும் ஒரு புறமாகவும் ஏகப்பெரும்பான்மை யான அனைத்து உழைக்கும் வர்க்க மக்கள் மறுபுறமாகவும் இருந்து வருகின்றனர். இதில் காணவேண்டிய மற்றொரு உண்மை யாதெனில் பிரதான முரண்பாட்டுப் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையிலும், அடிப்படை வர்க்க முரண்பாடு தோற்றுவிக்கும் பொருளாதாரப் பிரச்சினையிலும் உலக மேலாதிக்க ஏகாதிபத்திய சக்திகளும் பிராந்திய மேலாதிக்க வாதிகளும் தலையீடுகளையும் குறுக்கீடுகளையும் மேற் கொண்ட வந்தமையாகும். மேற் கூறியவற்றின் பாரிய தாக்கங்களையும் எதிர் விளைவுகளையும் நாட்டின் அரசியல் பொருளதார சமூக பண்பாட்டம் சங்களின் அனைத்துத் தளங்களிலும் மக்கள் துன்பதுயரங்களாக அனுபவத்து வருகிறார்கள். எனவே இவை பற்றிய புதிய- ஜனநாயக கட்சியின் அடிப்படைக் கொள்கை நிலைப்பாட்டினையும் அவற்றுக்கான கோரிக்கைக ளையும் சுருக்க வடிவில் பொதுத் தேர்தல் கொள்கை விளக்கமாக முன் வைக்கின்றோம்.
தேசிய இனப்பிரச்சினையும் தமிழரும்
இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையே என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. போரின் முடிவு தேசிய இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. பேரினவாதம் அரச இயந்திரத்துடன் மேலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதனால், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தேசிய இனங்கள் மீதுமான தேசிய இன ஒடுக்கல் தீவிரமடைந்துள்ளது. மூன்று தேசிய இனங்களும் தங்களது இருப்பின் தன்மைக்கமைய வெவ்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
பொதுப்பட எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனத்தவரும் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய தாய்மொழிக் கல்வியுரிமை, தங்கள் மொழியில் கருமங்களைச் செய்விக்கும் உரிமை என்பன சட்டவிரோதமான முறையில் அவர்கட்கு மறுக்கப்படுகின்றது. அதை விட, உயர் கல்வி, தொழிற் பயிற்சி, மற்றும் உத்தியோகத்துறை இட ஒதுக்கீடுகள் அவர்கட்குப் பாதகமாகவே உள்ளன. அதற்கும் மேலாகப் பாரம்பரிய பிரதேசங்களில் தமிழ்த் தேசிய இன த்தின் மீதான பேரினவாத இன ஒடுக்கல் போராக முன்னெடுக்கப்பட்டதன் பய னாகத் தமிழ் மக்கள் பெருமளவிலான உயிரிழப்பிற்கும் உடற் தேசத் திற்கும் பாரிய பொருள் நட்டத்திற்கும் ஆளாகியுள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாடு கட்கும் இடம்பெயருமாறு பல லட்சக்கணக்கானோர் கட்டாயப்படுத் தப்பட்டுள்ளனர். இதன் நடுவே, உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் தமிழரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள நிலத்திற்கும் மேலாகத் திட்டமிட்ட சிங்களக் குடியே ற்றங்களும் தமிழரைத் தமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்கும் நோக்குடன் தீவிரப்படுத்தப்படுகின்றன.
அகதி முகாங்கள் எனப்படும் திறந்தவெளிச் சிறைக்கூடங்கள் ஒரு புறமிருக்க, பல ஆயிரக் கணக்கானோர் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கோ விசாரணையோ இல்லாது சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுகின்றனர். தமிழ் மக்களும் மலையகத் தமிழரும் மட்டுமன்றி முஸ்லிம்களும் சிங்களவரும் இவ்வாறு அரசியற் காரணங்கட்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைக்கான மூல காரணம் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ஒடுக்கலே. எனினும், தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தமிழரே தீர்த்துக் கொள்வர் என்று கூறப்பட்டு, முதற் கட்டமாகப் பாராளுமன்ற அரசியற் பேரங்களாகவும், இரண்டாங் கட்டமாகச் சாத்வீகப் போராட்டங்களாகவும் முன்னெடுத்த முயற்சி, மூன்றாங்கட்டமாக ஆயுதப் போராட்ட வடிவை எடுத்துத் தோற்றது. தோல்விக்கான காரணங்களில் இரண்டு அடிப்படையானவை. ஒன்று, எந்த நிலையிலும் தேசிய இன விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப் படவில்லை என்பது. அதுவே ஆயுதங்களை முதன்மைப்படுத்தவும் ஜனநாயக நடைமுறைகளை நிராகரிக்கவும் காரணமானது. மற்றது, போராட்டத்தைக் குறுந்தேசியவாத நோக்கில் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தியமை. அதன் விளைவாக, மேலாதிக்க வல்லரசுகளை நம்பியும் அவற்றுக்குச் சார்பாக நின்று உலகின் ஏகாதிபத்திய, மேலாதிக்க விரோதப் போராட்டங்கட்கு ஆதரவுதராது பாதகமாகவே செயற்பட நேர்ந்தது. அதனால் தமிழர் விடுதலைப் போராட்டம் இலங்கையினுள்ளும் உலக மட்டத்திலும் தனிமைப்பட்டுப் போக நேர்ந்தது. இம் மூன்று கட்டப் போராட்டங்களும் ஒரே தவறான குறுந்தேசியவாத உயர் வர்க்க மேட்டுக்குடிச் சிந்தனையால் வழிகாட்டப்பட்டதனாலேயே தமிழ் மக்களைப் பேரழிவினுள் தள்ளிவிட்டன. எனவே, இத் தவறுகளினின்று மீண்டு, உழைக்கும் வர்க்கங்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கும் நாட்டின் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையில் போராட்ட ஐக்கியத்தை உருவாக்கி நாலாங் கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டம் வீழ்ச்சியை நோக்கிச் செல்ல முன்பிருந்தே இவ் விடயம் பற்றிப் புதிய-ஜனநாயகக் கட்சி தெளிவாகக் கூறி வந்துள்ளது.
முஸ்லீம் மக்கள்
முஸ்லிம்கள் நாடு முழுவதும் பரவி வாழுகிறதால் அவர்கள் வாழுகிற ஒவ் வொரு சூழலிலும் வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைகட்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய தொழில்களும் சிறு வணிகமும் பேரினவாத வெறிக் கும்பல்களது தாக்குதல்கட்கு உள்ளாவதுடன், காலத்துக் காலம் வெவ்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் சமூகங்கள் பயங்கரமான பேரினவாத வன்முறைக்கு முகங்கொடுத்துமுள்ளன. அதை விடக், குறுகிய தமிழ்த் தேசி யவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்துப் படுகொலைகளையும் நடத்தியுள் ளது. 1990ம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை அவர்கட் கெதிரான ஒரு பெரிய கொடுமையாகும். அரசாங்கம் ஒரு புறம் தமிழரையும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், முஸ்லிம்களின் நிலங்களையும் உடைமைகளையும் உரிமைகளையும் பறிப்பதில் பேரினவாதக் கும்பல்கட்கு உடந்தையாகவே செயற்பட்டு வந்துள்ளது.
மலையகத் தமிழ் மக்கள்
மலையகத் தமிழ் மக்கள், 1948ம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்ட போதிலிருந்து தங்களது இருப்பிற்காகப் போராடி வந்துள்ளனர். 1963ம் ஆண்டின் சிரிமா- சாஸ்திரி உடன்படிக்கை அவர்கட்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் அநீதி. அதன் நடைமுறைப்படுத்தலுக்கு ஏதுவாக அவர்கள் மீதான கொடிய உழைப்புச் சுரண்டலும் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்பு அவர்க ளிற் பலர் தோட்டங்களிலிருந்து விரட்டப்பட்டமையும் அமைந்தன. நீண்ட போராட்டத்தின் பயனாக அவர்கள் வென்றெடுத்த வாக்குரிமை மூலம் அரசி யலில் அவர்கட்குக் கிடைக்கக் கூடிய குரலை அடக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தோட்டங்களை அழிக்கும் மேல் கொத்மலைத் திட்டம் போன்றன ஒரு புறமும் அவர்கள் மீதான பேரின வாத வன்முறை இன்னொரு புறமும்; தொடர்கின்றன. மலைய கத் தமிழர் ஒரு தேசிய இனமாகத் தம்மை அடையாளப்படுத்துவதை மறுக்கும் செயல்களில் பேரினவாதிகட்கு உடந்தையாக மலையகத் தலைவர்கள் எனப்படுவோரும் செயற்படுகின்றனர். இத்தகைய மலையகதம் தலைமைகளை மக்கள் அடை யாளம் காணவேண்டியும் உள்ளது.
எனவே, நாட்டின் தேசிய இனப் பிரச்சினை மேலும் தீவிரமாகிச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிற இச் சூழலில், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்றி இந்த நாட்டின் பிற பிரச்சினைகளைத் தீர்ப்பது இய லாது என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது. அந்த நோக்கில், நீண்டகாலத் தீர்வாகப் பின்வரும் கருத்தைப் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளது.
இலங்கையின் சகல தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மை யினரையும் சமமாகக் கருதும் ஐக்கிய இலங்கையினுள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சிப் பிரதேசங்களையும், தொடர்ச்சியான பிரதேசங்களைக் கொண்டிராத சமூகத்தினருடைய தனித்துவத்தைப் பேணும் வகையிலான சுயாட்சி அமைப்புக்களை யும் கொண்ட பல்லின பல் தேசிய நாடாக இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான நிலைக்கக் கூடிய தீர்வைக்கான முடியும்.
அதே வேளை, போரின் விளைவுகளையும் பேரினவாதத் தாக்குதல்களின் நேரடிப் பாதிப்புக்களையும் கருத்திற் கொண்டு, பின்வரும் உடனடியான நடவடிக்கைகளைப் புதிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.
போராற் பாதிக்கப்பட்டு இடப்பெயர்வுக்குள்ளான அனைவரும்
தாமதமின்றித் தமது சொந்த வதிவிடங்களில் மீளக் குடியமர்த்தப்பட
வேண்டும்.
போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு புனர்வாழ்வு மூலமான இயல்பு வாழ்வு மீட்கப்பட வேண்டும்.
போரிலான சகல இழப்புக்கட்கும் உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டு, சுயசார்பின் அடிப்படையில் சமூகங்கள் தம் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும். மக்கள் பெருந்தொகையாக வாழும் பகுதிகளிலிருந்து படை முகாங்கள் நீக்கப்பட வேண்டும்.
வழக்கு விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவ ரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவர்கட்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுச், சமூகங்களின் பாரம்பரியப் பிரதேச உரிமை பேணப்பட வேண்டும்.
தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பாரபட்சமும் இனத்துவேஷ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு இனப் பகையைத் தூண்டுவோருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நாட்டின் எப் பகுதியிலும் தமது தாய்மொழியில் கற்கவும் அரச கருமங்கள் உட்பட்ட சகல காரியங்களையும் தமிழில் செய்வதற்குமான சட்ட ரீதியான உரிமை பேணப்பட வேண்டும்.
முஸ்லிம்கட்கெதிரான துவேஷத்தைத் தூண்டி அவர்களது சமூகங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்கட்குரிய நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.
மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பகுதிகளில் அவர்க ளது இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மலையகத் தமிழருக்கு, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளருக்குத், போதிய சம்பள உயர்வு வழங்கப்பட்டு தமக் கான வீடுகளையும் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்புத் தொழில்களை விருத்தி செய்து சுயாதீனமான ஒரு பொருளாதார இருப்பைப் பேணுவதற்காக நிலத்தையும் கொண்டிருப்பதற்கான சட்டப்படியான உரிமையும் வாய்ப்பு வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.
கல்வி, தொழில் வாய்ப்புக்களில் இன்னமும் பின்தங்கியே உள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தினருடைய கல்வி, தொழில் வாய்ப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் எந்தத் தேசிய இனத்தின் இருப்பும் நிலைப்பும் சுதந்திரமும் சுபீட்சமும் பிற தேசிய இனங்களது நலன்களிலிருந்து பிரிக்க இயலாதவை. எனவே தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுடைய விடுதலையினின்று முழு நாட்டினது நலன்களையும் பிரித்து நோக்க இயலாது. அதே போல, தேசிய மட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் இருக்கிற வர்க்கம், சாதி, பால் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை நாம் புறக்கணிக்க இயலாது. தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம், இன ஒற்றுமை என்கிற பேர்களில் சமூக ஒடுக்குமுறைகளைக் கண்டுங்காணாமல் இருந்து வந்த போக்கு தமிழ் மக்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் உதவவில்லை என்ப தை வரலாற்றின் பட்டறிவாக இங்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற பல தொழிற்சங்க உரிமைகளையும் சட்ட ரீதியான பிற தொழிலாளர் உரிமைகளையும் முதலாளிய உலகமயமாக்க லின் ஒரு பகுதியான தாராள தனியார் பொருளாதாரத்தின் கீழ் இழந்துள்ளனர்.
சாதியத்திற்கு எதிராக நமது மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமையின் கீழ் பெறப்பட்ட வெற்றிகள் முழுமையான சாதிய ஆதிக்க ஒழிப்பைச் சென்ற டையாமல் இன்னமும் பல தடைகள் சமூகத்தினுள் இருந்து வருகின்றன. குறுகிய தமிழ்த் தேசியவாதம் அத்தீய சக்திகளுக்கு உடந்தையாகவும் இருந்து வந்துள்ளது.
பெண்களின் கல்வி, வெளி வேலை வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ள போதும், அவர்களுடைய வேலைச் சுமை கூடியுள்ளது. அது ஒரு புறமிருக்க, தொழில் பார்க்குமிடங்களிலும் வெளியிலும் அவர்கள் பாலியற் துன்புறுத்தல்கட்கு உட்படுவது அதிகமாகியுள்ளது. எனவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் சாதி, இனம், வர்க்கம், என்ற அடிப்படைகளில் மட்டுமன்றிப் பால் அடிப்படையில் குடும்பத்தினுள் ஒருபுறமும் வெளியில் இன்னொரு புறமும் ஒடுக்கப்படுகி ன்றனர். ஆயுதப் போராட்டமோ நகர்சார்ந்த வேலை வாய்ப்புக்களே உழைக் கும் வர்க்கப் பெண்களுக்கு விடுதலையை வென்றுதர உதவவில்லை. பெண் ணியம் பற்றிப் பேசுவோருடைய அக்கறைகள் வசதி படைத்த, நடுத்தர வர்க்க எல்லைக்குள் நின்று விடுகின்றன.
எனவே, சமூக ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசினால் இன ஒற்றுமை, சமூக ஒற்றுமை என்பன குலையும் என்ற வாதத்தை நாம் என்றுமே ஏற்றதில்லை. புதிய ஜனநாயகக் கட்சி எந்தச் சமூக அநீதிக்கும் விலக்களித்ததில்லை. பேரினவாத ஒடுக்கு முறை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளது. எனவே பின்வரும் கோரிக்கைகள் கட்சியின் தேர்தல் பிரகடனத்தில் உள்ளடங்குகின்றன.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் வரவையடுத்துத் தொழிலாளி
வர்க்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட சகல தொழிற்சங்க உரிமைகளும்
மீள வழங்கப்பட வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை விலக்கில்லாமல் அனைத்துத் தொழில் துறைகட்கும் வழங்கப்பட வேண்டும்.
பொருட்களின் விலைஉயர்வு தடுக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு
கட்டுப்படுத்தப்படவேண்டும் சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும்.
தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களது உரிமைகள் உறுதி செய்யப் படவேண்டும்.
ஒழியாமல் எஞ்சியுள்ள சாதியக் கருத்தியல் சிந்தனையின் விளைவாக இன்னமும் கடைப்பிடிக்கப் பட்டுவரும் சாதியத் தீண்டாமை, சாதியடிப்படையிலான பாரபட்சம், புற்க்கணிப்பு ஒடுக்கல் ஆகியன அறவே அகற்றப்பட வேண்டும்.
பெண்களுக்கெதிரான அனைத்துச் சமூக வன்முறைகட்கும் எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் மேலாக, ஆண்-பெண் சமத்துவச் சிந்தனை பாடசாலைகள் தொட்டு அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் வலியுறுத்தப்பட வேண்டும்.
வர்க்கம், சாதி, பால், பிரதேசம் ஆகிய அடிப்படைகளில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பிரிவினர்கட்குக், கல்வி, உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை வென்றெடுக்க மக்களின் பரந்துபட்ட ஐக்கியத்தின் அடிப்படையில் சகல தேசிய இனங்களையும் சிறுபான்மைச் சமூகங்களையும் ஒன்றிணைத்த மாற்று அரசியலின் ஊடான ஒரு புதிய வெகு சனப் போராட்ட அணியைக் கட்டியெழுப்புவது முக்கியமானது. சிங்கள மக்க ளைப் பகைவர்களாகச் காட்டி வந்த குறுகிய தமிழ்த் தேசியவாத நோக்கை முற்றாக நிராகரித்துப் பரந்துபட்ட சிங்கள உழைக்கும் மக்களை ஒரு நேச சக்தியாகக் கருதிச் செயற்படுவதன் மூலமே சிங்கள மக்களைப் பீடித்திரு க்கும் பேரினவாதத்தை முறியடிக்கவும் தேசிய இனங்களின் உரிமைகளை ஏற்கச் செய்யவும் இயலும். அதன் மூலம், தமிழ் மக்களை இலங்கையின் பிற சமூகங்களிலிருந்தும் தனிமைப் படுத்துகிற போக்கிலிருந்து இன ஒடுக் குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றி முன்னோக்கிக் கொண்டு செல்லவும் இயலுமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கமும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களும் தேசிய இனப் பிரச்சினையைப் போராக்க உதவியதுடன் அதற்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுவதற்குத் தடையாகவும் இருந்து வந்துள்ளன. இலங்கை மீது ஏகாதிபத்தியத்தின் பிடி கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் இறுகிப் போயுள்ளது. இலங்கை மிகப் பெரிய கடனாளி நாடாக உள்ளது. தேசிய பொருளாதாரமற்ற இலங்கை, தன் கூலி உழைப்பை நேரடியாகவோ ஆடைத் தொழிற்சாலைகள் என்பன மூலமோ உலகச் சந்தையில் விற்று வருகிற வருமானத்தின் மீது தங்கியுள்ளது. எனவே அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய த்தினின்றும் இந்திய மேலாதிக்கத்தினின்றும் நாட்டின் இறைமையையும் பொருளாதாரத்தையும் மீட்கும் பணி முக்கியமானது. தேசிய இனப் பிரச்சி னையைத் தமது குறுக்கீட்டுக்கும் வணிக, அரசியல், ராணுவ ஆதிக்க நோக் கங்கட்கும் பயன்படுத்த முனையும் சகல அந்நியத் தலையீடுகளும் எதிர் க்கப்பட வேண்டியவையே.
நமது புதிய-ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் மூலம் எவ்வகையிலும் பயனுள்ள ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்று நம்பிய தில்லை. அத்தகைய எதிர்பார்ப்பை என்றும் மக்கள் மத்தியில் பரப்பியதும் இல்லை. இத் தேர்தலின் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் சரியான சிந்த னைகளைக் கொண்டு செல்வதற்கும் அதன் மூலம் மாற்று அரசியலின் ஊடாக மக்களை அணி திரட்டுவதற்குமான வாய்ப்புமேயாகும்.
நமது கட்சியின் நிலைப்பாட்டை ஆராய்ந்து அறிந்து ஆதரவு தருவதன் மூலம் மக்கள் தமது உரிமைகட்கான போராட்டத்தை வலிமைப்படுத்துகின்றனர். அந்த ஆதரவின் வலிமையோடு நமது புதிய-ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் தனது போராட்டப் பாதையில் தளராது மக்களோடு இருந்து செயற்படும் மக்களை அணிதிரட்டி போராட்டப் பாதையில் முன் செல்லும் என நாம் உறுதிகூறுகிறோம்.
இப் பொதுத் தேர்தலில் மக்கள் எமக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்குவார்களாயின் உழைக்கும் மக்களுக்கு நேர்மையான அரசியல் சக்தியாக இருந்து செயற்பட்டு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பி முன் செல்வோம் என்பதை உறுதியளிக்கின்றோம்.