மக்கள் சார்ந்த அரசியல் என்பது மனித உரிமை, மனிதாபிமானம் போன்ற ஒற்றைப் பரிமாண தலையங்கங்களுக்குள் மட்டும் குறுக்கப்படுவதில்லை.
ராஜினி திரணகம மனித உரிமைவாதி என்ற அடையாளத்திற்கும் அப்பால் செல்ல முற்பட்ட ஒருவர். தென்னிந்திய ஆங்கிலிகன் திருச்சபையுடன் தொடர்புடைய மேல்தட்டு யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியிலிருந்து மனித உரிமைக்கு அப்பால் சமூகத்தைப் பார்க்கும் தகமை படைதவராகவிருந்தார். இந்திய பார்ப்பன சமூகத்திற்கு ஈடான வேளாள கிறீஸ்தவர்கள் இலங்கை அரசியலில் ஆளுமை மிக்கவர்கள். சிங்கள கொய்கம ஆங்கிலிக்கன் தலைவர்களான டீ.எஸ்.சேனாநயக்க, டட்லி சேனநாயக்க, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, ஜூலியட் ரிச்சார் ஜெயவர்தன போன்றோர் இலங்கையின் ஜனாதிபதிகளாகவும் பிரதமர்களாகவுமிருந்தனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழ் அரசியலில் அதிகாரம் செலுத்த முயன்ற பலர் ஆங்கிலிக்க திருச்சபையின் கிறீஸ்தவ வேளாளர்களாகவிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பை வசிப்பிடமாகவும், பொருபாலான வேளைகளில் கொழும்பில் சிங்கள அதிகாரவர்கத்தின் நெருங்கிய நண்பர்களாகவும் செயற்பட்டவர்கள்.
இவ்வாறான பின்னணியிலிருந்து வந்த ராஜனி திரணகம அதிகாரவர்க்கப் பெறுமானங்களுக்கு அப்பால், மனித உரிமை வாதி என்பதற்கு அப்பால் சமூகத்தை நேசித்தவராவிருந்தார். அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் செய்துகொள்ளவில்லை.
இங்கிலாந்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்ற போது 80 களின் ஆரம்பத்தில் புலிகளின் லண்டன் கிளையுடன் இணைந்து செயற்பட்டார். லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்பட்ட ராஜினி, யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் அனரொமி பிரிவின் தலைவராக தனது 35 வது வயதில் பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் புலிகளின் மறைவிடமாகவே கருதியது, முறைதவறாமல் நாளாந்தம் பல்கலைக் கழக மாணவர்களைக் கைது செய்தது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய இராணுவத்துடன் இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட அஞ்ச்சிய நிலையில் ராஜினி திரணகம மற்றும் சில விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் சார்பாகச் செயற்பட்டார். கைதுசெய்யப்டும் மாணவர்களை விடுவிப்பதற்காகப் போராட்டங்களை நடத்துவதிலிருந்து பல்கலைக் கழககம் சார்பாக இந்திய இராணுவத்துடன் வாதம் செய்து விடுவிப்பது வரை உயிராபத்தான வேலைகளில் ஈடுபட்டார்.. புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக அறியப்பட்ட பல மாணவர்களை, அவர்களின் அரசியல் தொடர்பாகத் தெரிந்துகொண்டும் விடுவிப்பதற்காகப் போராடி வெற்றிபெற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத்தின் அடியாள் படை ஒன்றை உருவாக்க முனைந்த இக்கட்டான காலகட்டத்தில் ராஜினி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் தமது கண்ணில் படும் மீசை அரும்பத்தொடங்கிய அத்தனை இளைஞர்களையும் கைது செய்து கட்டாயப் பயிற்சி வழங்கி விருப்பத்திற்கு மாறாக இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது. இது தொடர்பாகப் பேசுவதற்கு முழு சமூகமும் அஞ்சிய வேளையில். ஆள்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் ஊடாகத் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட முன்னின்று செயற்பட்டார்.
உலகைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட நிலைகொண்டிருப்பதாக எண்ணியிருந்தது. இந்தியா முழுவதும் இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்டச் சென்ற இராணுவத்திற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்றே மக்கள் எண்ணினர். இந்தக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் கொடூரத்தைப் பட்டியலிடும் நீண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதில் முக்கிய பங்குவகித்தார். முறிந்த பனை என்ற தலைப்பில் வெளியான அந்த ஆவணத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களும் பட்டியலிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை விமர்சன நோக்கிலேயே வெளியாகியிருந்தன.
புலிகளின் தலைமை கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டதில்லை. நூறுகருத்துக்கள் மோதினால் நூறு பூக்கள் மலரும் என்பார்கள். புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகள் மோதினால் ஒரு துப்பாக்கி ரவை போதுமானது என்பதே கோட்ப்பாடாக முன்வைக்கப்பட்டது.
அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
29.08.1989 அன்று மாலையை அண்மித்த பொழுதில் மருத்துவக் கல்லூரிக்கு முன்புற வீதியில் ராஜனி திரணகம என்ற இரு குழந்தைகளின் தாய் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி வீதியில் விழுந்துகிடந்தார்.
எமது சமூகத்திலிருந்து பெண்போராளி ஒருவர் பிடுங்கியெறியப்ப்பட்ட அந்த நாள் துயர்மிக்கது.
ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைகாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பின் செயற்பாடுகள் அருகிப் போயின. இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான ‘முறிந்த அரசமரத்திற்கான’ வேலைகள் முற்றாக நடைபெறவில்லை.
மக்களுக்காகப் போராடிய புலிகளின் போராளிகள் எவ்வாறு பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறார்களோ அவ்வாறே ராஜினி திரணகமவின் மரணமும் பிழைப்பு வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
ரஜனி திரணகமவின் 20 ஆண்டு நினைவஞ்சலி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொலையாளிகளில் ஒருவரான ராஜபக்சவின் முற்றத்தில் நடைபெற்றது. இலங்கையில் ஈ காக்காய் கூட ராஜபக்சவின் அனுமதியின்றி நுளைய முடியாது என்ற நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ராஜனியின் 20 ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. அதுவும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இரத்தவாடை இலங்கையில் எல்லைகளையும் கடந்து வீசிக்கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தினுள் ரஜனி திரணகமவின் ஆவி கூட நுளைவதற்குக் கூச்சப்பட்டிருக்கும் என்பதே உண்மை.
அதே நினைவஞ்சலியை இந்த முறை யாழ்ப்பாணப் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் நடத்தவிடமாட்டோம் என்ற அரசியலைக் கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாகத் தெரிய வருகிறது.
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலிகன் வேளாள சமூகம் தனது அதிகாரத்தை மீளுறுதி செய்வதற்கு ராஜினி திரணகமவின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையே. எது எவ்வாறாயினும் இன்று ராஜினியின் மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு உலக உலா வரும் பிழைப்புவாதிகளை வைத்து ராஜினியை மதிப்பிடும் தவறிழைப்பது தவறு!