Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின் : சபா நாவலன்

எரிக் சொல்ஹெயிம் பிரித்தானியாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு புலிகளே பிரதான காரணம் என்று தனது கருத்துக்களை முன்வைக்கிறார். சொல்ஹெயிம் என்ற உயர் தர ஏகாதிபத்திய முகவரிடம் ஈழம் பெற்றுக்கொள்ள முயன்ற ஐந்தாம் படைகள் ஏமாற்றடைந்தன. நோர்வே அரசு அமரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக உலகம் முழுவதும் மனித இரத்தத்தை உறிஞ்சிய வரலாறுப் புள்ளிவிபரங்கள் நீண்டுகிடக்கின்றன. சொல்ஹெயிமின் தமிழ் பேசும் மக்கள் மீதான தொடர்ச்சியான அக்கறை இயல்பானதல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இலங்கையின் பிரதான பேரினவாதக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவோடு சிங்கக்கொடியோடு மேடையேறியது புறக்கணிக்கப்படத்தக்க நிகழ்வல்ல.

தமிழ் இனவாதத்தின் உச்சத்தைத் தொட்டிருந்த புலம் பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானியப் பிரமுகர் சுரேன் சுரேந்தர் இனிமேல் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாத்தியமற்றது என்று பிரச்சாரம் மேற்கொள்வது அவரின் பட்டறிவிலிருந்து உருவானதல்ல.

80 களின் இறுதியில் ஆரம்பித்து யூகோஸ்லாவியா எங்கும் முளைவிட்ட தனார்வ நிறுவனங்கள் இன்று வரை தேசியவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக பால்கன் நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது இயல்பானதல்ல.

ஜே.வி.பி இலிருந்து பிரிந்து முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களுள் பிரதானமானவர் பிரேமகுமர் குணரத்தினம். அவுஸ்திரேலியாவைத் தளமகாகக் கொண்டியங்கும் இவர் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். 07.10.2012 பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டத்திலும், இந்திய அரசு சார்பு வானொலியான ரி.பி.சி இலும் அவர் வழங்கிய நேர்காணலின் போதும் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரித்து மாற்று அரசியல் திட்டம் ஒன்றை முன்வைப்பதாகக் கூறுகிறார்.

பிரேம்குமார் குணரத்னம் கூறுவது என்ன?

1. இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடக் கூடாது.

2. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்படுவதால் தேசியவாத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமிழ் இனவாத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து தேசிய இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்.

4. இதனூடான ஐகியத்தல் இலங்கைத் தொழிலாளி வர்க்கம் பலமடையும்; ஆக. வர்க்க்கப்போராட்டம் பலமடையும்.
ரோகண விஜயவீரவின் தலைமையிலான ஜே.வி.பி முன்வைத்த அதே முழக்கங்கள் இன்னமும் ரோகணவை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் முன்னிலை சோசலிசக் கட்சி இன்னும் அழகுபடுத்தி முன்வைத்திருக்கிறது.

தமிழ் தொழிலாள வர்க்கத்தின் கடமை என்ன?

அவர்கள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முழுமையான சுய நிர்ணய உரிமைக்காக, அதனை ஆதரித்து நிபந்தனையின்றிப் போராடவேண்டும். இன்றுள்ள ஏகாதிபத்திய சூழலில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவர்கள் தலமைதாங்க வேண்டும். சில இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் அதனோடு முரண்படுவதாகவும் குணரத்னம் கூறுகிறார்.

சந்தர்ப்ப வாதிகளும், தமது சொத்துக்களையும் வியாபார நலன்களையும் பாதுகாக்க முனையும் வியாபாரக் கும்பல்களும், ஏகாதிபத்திய- தன்னார்வ அரசியலுக்குள் அகப்பட்டுப்போனவர்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரிக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் அறிந்திராத ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் அதனை நிராகரிக்கவில்லை.

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு நான்காவது ஆண்டு அண்மிக்கும் நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கின்றது.

சிங்கள தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்ன?

சிங்கள பௌத்த மதகுருக்களால் வளர்க்கப்படும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான போரை நியாயப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. தொடர்ச்சியான இன ஒடுக்குமுறையாலும், திட்டமிட்ட இன அழிப்பாலும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பலவீனமடைந்துள்ள நிலையில், பெருந்தேசியவாதம் பலமடைந்துள்ள நிலையில், தமிழ்ப் பேசும் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க மறுப்பது மிகவும் அபாயகரமானது.

சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் மீள் சூத்திரங்களைக் கவனமாகக் கையாள அழைப்பதனூடாக போலி இடதுசாரிகளும், பேரினவாத அரசும் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுகளைச் சிதைக்கப் பெரும்பாலான தமது நேரத்தைச் செலவிட்டுள்ளன. சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை குறித்த பயங்கரமான விம்பத்தைக் கட்டமைபதனூடாகவும் சுதந்திரம் என்பது சிங்கள பௌத்த அதிகார வர்க்கத்தின் இணக்கத்தன்மை என அவர்களை நோக்கிக் கூறுவதாலும் சிங்காள தொழிலாளர் வர்க்கத்தின் சிந்தனை சிதைக்கப்பட்டுள்ளது.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும், இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகவும், தேசிய இனங்களின் சம உரிமைக்காகவும் (இதனைப் போலி இடதுசாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்) போராடத் தயங்கினால் அவர்கள் மார்க்சிய லெனினியத்திற்குத் துரோகமிழைத்தவர்களாவர்.

சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரித்து தமிழ் சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தக் கோரும் பிரேம்குமார் குணரத்னம் இதனை மார்க்சிய லெனினியத்தின் பெயரால் அரங்கேற்றுவதுதான் அருவருப்பானது.

இப்போது 1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்துசென்று தனியரசு அமைத்த வேளையின் நடபெற்ற விவாதம் ஒன்றில் லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

நோர்வேஜியப் தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்ன?

நோர்வே பிரிந்து சென்ற பின்னர் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் இயல்பாகவே நோர்வே குடியரசுக்காக வாக்களித்தார்கள். யாராவது சோசலிஸ்டுக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருப்பார்களானால், ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில் பிலிஸ்ரைன் சந்தர்ப்பவாதம் எவ்வளவு அடர்த்தியாகப் படர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

சுவீடிஷ் தொழிலாள வர்க்கத்தின் கடமை என்ன?

மதகுருக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நில உடமையாளர்கள் நோர்வே நாட்டிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சுவீடனின் ஆக்கிரமிப்பால் நோர்வே மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், சுவீடிஷ் பிரபுத்துவம் பலமடைந்துள்ள நிலையில், நோர்வேக்கு எதிரான போரை நியாயப்படுத்துவது அபாயகரமானதாகும்.

சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் மீள் சூத்திரங்களைக் கவனமாகக் கையாள அழைப்பதனூடாக கொகொசின்கள் சுவீடிஷ் பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுகளைச் சிதைக்கப் பெரும்பாலான தமது நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.

சுய நிர்ணய உரிமைக்காகவும், நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்காகவும், தேசங்களின் சம உரிமைக்காகவும் (இதனை கொகொசின்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்) போராடத் தயங்கினால் அவர்கள் சமூக ஜனநாயகத்திற்குத் துரோகமிழைத்தவர்களாவர்..

நோர்வே சுவீடன் குறித்த பிரச்சனையில் மட்டுமல்ல மேலும் பல சந்தர்ப்பங்கள் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை முதலாளி வர்க்கத்திற்கான உரிமை என்றாலும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவது மார்க்சிஸ்டுக்களதும் தொழிலாளர்களதும் கடமை என்று மேலும் பல விவாதங்களில் லெனின் முன்வைத்துள்ளார்.

பிரேமகுமார் குணரத்தினத்தின் முகத்தில் அறைந்து கூறுவது போன்று லெனின் முன்வைக்கும் பதில்கள் ஒரு நூற்றாண்டுகாலத்திற்கு பின்னரும் இலங்கைப் பிரச்சனையோடு பொருந்துகிறது.

பிரேமகுமார் குணரத்தினம் மார்சியத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டே தனது கருத்துக்களை முன்வைக்கிறார் என்று மட்டும் கூறமுடியாது. லெனின் இதைக் கூறவில்லை வேறு ஒன்றையே பேசுகிறார் என்று திருக்குறளுக்குப் பொழிப்பு எழுதியது போல இவர்கள் புனைவது ஏன்? இவற்றின் பின்புலம் என்ன?

-மிகுதி அடுத்த பதிவில்-

Exit mobile version