Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரிவினையின் அனைத்துலகப் பரிமாணங்கள்:லோகன்

சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை பிரிந்துபோவதற்கு மட்டுமேயான கோரிக்கையல்ல. இன்றைய உலக நியதியின்படி,  சுயநிர்ணய உரிமை இரு வகைப்படும். ஒன்று, சுதந்திரத் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான உரிமை;  இவ்வுரிமை புறவய சுயநிர்ணய உரிமை எனப்படுகிறது. மற்றையது, ஒரே நாட்டினுள், மத்தியில் கூட்டரசும் மாநிலத்தில் தனியரசுமாக இணைந்து வாழ்வதற்கான உரிமை. இது அகவய சுயநிரணய உரிமை எனப்படுகிறது.  இதன்படி  கூட்டரசின் அமைப்பு வடிவமும், கூட்டரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வும் யாராலும் யார்மேலும் திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது.  அவை சம்பந்தப்பட்ட மக்களின் சுய விருப்ப முடிவுகளாகவும், சம்பந்தப்பட்டவர்கள், தமது நலனையும், தேசிய ஒருமைப்பாட்டின் நலனையும், தத்தமது தேசிய ஜனநாயகத்தின் நலனையும் மனதில் கொண்டு தமக்குத்தாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளாகவும் இருக்கவேண்டும். இதுதான் அகவய சுயநிர்ணய உரிமையாகும்.

உலக மக்களில் 40 விழுக்காட்டினர்  அகவய சுயநிரணய உரிமை கொண்ட அரசியல் அமைப்பின் கீழ் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு தமக்குள் எழும் பிரச்சனைகளை அப்பப்போ தமக்குள் தாமே தீர்த்துக்கொண்டு, அவசியமானால் புதிய ஒழுங்குமுறைகளை ஆக்கிக்கொண்டு சுமுகமாகவே வாழப்பழகி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் மிகவேகமாக வளர்ந்துவரும் அனைத்து நாடுகளும் இதில் அடங்கும். பிறேசிலில் பிரிவினை தடைசெய்யப்பட்டுள்ளது. மக்கள் சீனத்தில் பிரிவினை மரணதண்டனைக்குரிய் குற்றமாகும்.ருஸ்யாவிலும், இந்தியாவிலும் கூட இதே நிலைதான்.

அகவய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு ஆட்சிமுறை பெயரளவிற்குக் கூட சிறீலங்காவில் இல்லை. ஆனால் 1963ஆம் ஆண்டு சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 6வது சட்டத் திருத்தத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரிவினைக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டுமென்ற நிலை தோன்றியுள்ளது.  இதனால் ஏற்படவுள்ள எந்த அதிகாரப் பரவலாக்கமும் இந்தச் சட்டச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

ருஸ்யாவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையே சமீபத்தில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, இரு பகுதியினரும் தாம் ” பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஒருமுனைவாதம் ஆகிய மூன்று தீயசக்திகளுக்கு எதிராகவும் போராடுவோம்” என உறுதி எடுத்துக் கொண்டார்கள். அத்துடன், “பிராந்திய மற்றும் சர்வதேசியப் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்” ஒத்துழைக்கவும் பரஸ்பர ஆலோசனை பெறவும் ஒத்துக்கொண்டார்கள்.கஜகஸ்தான், ரஜிகிஸ்தான், உஷ்பாக்கிஸ்தான், கிற்கிஸ்தான்,  (Kazakhstan, Tajikistan, Uzbekistan, Kyrgyzstan) சீனா மற்றும் ருஷ்யா ஆகியநாடுகளின் இணைவே ஷங்காய் கூட்டமைப்பாகும்(SCO). இது 2001ஆம் ஆண்டு ஷங்காயில் அமைக்கப்பட்டது. இது, சீனாவின் பாதுகாப்புப் பதட்டத்தைத் தணிக்கவும், தனது உறுப்பினர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கவும்- குறிப்பாக சீனா, ருஷ்யா இடையேயான நம்பிக்கை – அனைத்து நாடுகளுக்கும் தலையிடியாகவுள்ள முன்சொன்ன மூன்று தீயசக்திகளைக் கையாளவும் என அமைக்கப்பட்ட ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பாகும். இது கிழக்கின் நேட்டோ எனவும் அழைக்கப்படுகிறது.

வளர்ச்சி பெற்ற நாடுகள் என அழைக்கப்படும் (அவுஸ்ரேலியா உள்ளடங்கி) மேற்குலகம் தவிர்ந்த பிறநாடுகள் அனைத்துமே பிரிவினையை எதிர்ப்பதில் ஒருமுனைவாதிகளாக உள்ளன. பிரிவினையை எதிர்ப்பவர்கள் எல்லோரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தமது நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். அது மஹிந்தவா அல்லது நீவினா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதற்கான காரணங்களும் உண்டு.

1)ஒரு சிறிய தேசிய சந்தைகூட மேற்குலகிற்குப் போகக்கூடாதென்பது.

2) இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நேட்டோ நேரடியாகவோ சுற்றி வளைத்தோ இப் பிராந்தியத்தில் நுழைந்துவிடக் கூடாதென்பது. அது ஆப்கானிஸ்தானுடனேயே முடிந்துவிடவேண்டும்.

3)சரவதேச அரங்கில் தமது நாடுகளின் எண்ணிக்கை குறையக்கூடாதென்பது.

இந்திய சீன முரண்பாடு, ஆசியநாடுகளில் அதுவும் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் புதுப்புது நாடுகளின் உருவாக்கத்திற்கு சாதகமாக அமையுமென நம்பிக்கை வைத்தால் அது மிகப்பெருந்தவறாகும்.  இலங்கைவிடயத்திலும், பர்மாவிடயத்திலும் இந்த முரண்பாட்டால் அந்நாடுகளின் மக்களுக்கு எந்த ந்ன்மையும் கிடைக்கவில்லை. திபெத் விடயத்தில் இந்தியாவின் ந்டவடிக்கைக்கு சீனாவின் பதில் செயலும், அருணாச்சல்ப் பிரதேச விடயத்தில் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதில் செயலும் எதைக்காட்டுகின்றன இவ்விரு நாடுகளும் யுத்தம் தம்மேல் திணிக்கப்படுவதை விரும்பவில்லை.முடிந்தவரை யுத்ததைத் த்விர்த்துச் செல்லவே விரும்புகிறார்கள். ஆகவே இம்முரண்பாடு உலகின் இன்றைய போக்கைப் பெரிதாக மாற்றிவிடாது.
மேற்குலகம் தனது சந்தைகளைப் பாதுகாப்பதிலும், விஸ்தரிப்பதிலும் இரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றிவருகிறது.

ஒன்று, தமது சொந்தச் சந்தைகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல். அரசியல் ரீதியாக அவற்றை ஒரு நிறுவன ஒழுங்கிற்குக்கீழ் கொண்டுவரல். தனித்துப் போகும் போக்கை எந்த இராணுவ நிர்ப்பந்தமும் இன்றிப் படிபடியாக தணித்து இணைந்து போகும் போக்கை தன்னார்வமுறையில் படிப்படியாக வளர்த்தல். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. இது வரவேற்கக்கூடிய ஒரு முற்போக்கு அம்சம். ஆனால் இதை நிறைவேற்றுவதற்காக சோவியத் குடியரசும்(USSR), பிற சோஸலிசக் குடியரசுகளும் துண்டுதுண்டுகளாக உடைக்கப்பட்டதுவும், உடைந்த நாடுகளின் சமுக உருவாக்கம் சிதைக்கப்பட்டதுவும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்விதம் உடைக்கப்பட்ட நாடுகளையும் சிதைக்கப்பட்ட சமுக உருவாக்கங்களையும் நிதி மூலதனத்தின் துணைகொண்டு, பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து “சமாதானமாகத்” தமது சந்தைகளாக்கிக் கொண்டார்கள்.

இரண்டாவது, தமது ஆதிக்கத்தை நிறைவேற்றுவதற்கு உற்ற நண்பன் பிரிவினைவாதந்தான் என்பதை தமது ஐரோப்பிய  அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்ட இவர்கள், அதே நண்பனின்  துணைகொண்டு தமது எதிரிகளின்(ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்) சந்தைகளை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒன்றுடன் ஒன்று பகை முரண் கொண்ட சிறுசிறு தேசிய அரசுகளையும் சிறுசிறு பொருளாதாரங்களையும் அமைப்பதே அவர்களின் நோக்கமாகும். அப்போதுதான் அத்தேசிய அரசுகளின் தேசியத் தன்மையை அவர்களால நீத்துப்போகச் செய்யமுடியும்; அப்போதுதான் அச் சிறுபொருளாதாரத்தை கபளிகரம் செய்வது நிதிமூலதனத்திற்கு சுலபமானதாக இருக்கும். தாம் தம்மை ஒரு பெரிய பொருளாதாரமாக வளர்த்துவரும் அதேவேளை தமது எதிரிகளை சிறிய பொருளாதாரங்களாக்கி வருகிறார்கள்.  இதுதான் அவர்களின் இரட்டைத்தன்மையாகும்.

சுய நிர்ணய உரிமைபற்றிய அனைத்துலகக் கோட்பாடும் அனைத்துலகச் சட்டமும் இவர்களின் தேவைக்கொப்பவே ஆக்கப்பட்டுள்ளன. இதனால், மூன்றாம் உலகநாடுகளின் பிரிவினைவாதங்களையிட்டு மேற்குலகம் அஞ்சவில்லை, அவற்றைத் தமது நண்பர்களாக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள். இவை பயங்கரவாதங்களாக இருந்தால் அதையிட்டும் அவர்கள் அஞ்சவில்லை. பல சந்தப்பங்களில் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் வேலையையும் செய்கிறார்கள். அப் பயங்கரவாதத்தை தமது சதிகளின் எடுபிடியாக ஆக்கமுடியாது போகும்போதோ அல்லது தொடர்ந்தும் தமது வளர்ப்புப் பிள்ளையாக வைத்திருக்க முடியாதபோதோ அவர்கள் சினங்கொள்கிறார்கள். அதன் பலனாக சாம-தான-பேத-தண்டத்தில் இறுதி ஆயுதமான தண்டத்தைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தாராளவாதப் பொருளாதாரக் கோட்பாடுகளில் எவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவ்விதமே சுய நிர்ணய உரிமைக் கோட்பாடுகளிலும் நடந்து கொள்கிறார்கள். தமது தேசிய நலனுக்கொப்ப தமது தேசியப் பொருளாதாரத்தின் பல சாளரங்களில் சிலவற்றை அப்பப்போ திறந்தும், மூடியும் வருவார்கள். ஆனால் பிறநாடுகளின் தேசியப் பொருளாதாரதிற்கு இவர்கள் வளங்கும் இடித்துரைப்புகளோ அனைத்துச் சாளரங்களை மட்டுமல்ல கதவுகளையும் பரக்கத்திற என்பதேயாகும். கொஞ்சம் கண் அயர்ந்தால் சுவர்களையே இடித்துவிடுவார்கள். தமக்கோர் நியாயம் பிறர்கோர் நியாயம் இதுதான் வாய்க்கால்களை வகுக்கும் இந்த வல்லவர்களின் இரட்டைத்தன்மையாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பிருந்து இன்றுவரை வளர்ச்சிபெற்ற நாடுகள், “வந்தேறுகுடிகளை” உள்வாங்கியவண்ணமே வளர்ந்து வருகின்றன. இவ்விதம் உள்வாங்குவதைச் சுலபமாக்குவதற்காக தமது நாடுகளில் பன்முகத்தன்மையைப் பேணிவருகின்றன. பல வருடங்கள் ஆகியும் இன்னமும் குடியுரிமை பெறாமல் வாழ்ந்துவரும் மக்கள்கூட இந்த பல்முகத்தன்மையின் அரவணைப்பைப் பெற்றவர்களாகவே உள்ளனர். இருந்தும் பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும்  நிறபேத அடிப்படை இனவாதம்-racism- அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறைகளாக தலைதூக்கவே செய்கின்றது. இவ் இனவாததை  அரசியல் சிந்தனையாகக் கொண்ட அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இந் நாடுகளில் இன்னமும் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்றன. இவற்றிற்கு ஓர் பாரம்பரிய வரலாறும் உண்டு. இருந்தும் இன்றைய நிலையில் இவை பிரதான ஓட்டமாக இல்லை. அரசும் சமுகக்கட்டமைப்பும் இவற்றைத் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளன.

அதேபோல் அடுத்தபுறத்தில் தமது நாட்டின் வர்க்கக் கட்டமைப்புக்கும் தமது தேசிய மூலதனத்தின் உலகளாவிய ஏகபோகத்திற்கும் குந்தகம் விளையாத முறையில் இந்த “வந்தேறுகுடிகளின்” மீது தமது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் செலுத்துவதற்கான ஒரு கட்டுமானத்தைக் கொண்டனவகையாக்வும் உள்ளன. இக் கட்டுமானம் மெல்லிய நூலிழைகளினால் கண்ணுக்குத் தெரியாத முறையில் பின்னப்பட்டதாக இருந்தாலும், இவ் “வந்தேறு குடிகளில்” எவரேனும் தாம் குடிபுகுந்த நாட்டின் சமுக சமநிலையைக் குலைக்க முயலுவார்களானால் அவர்களை கூண்டோடு நாடுகடத்தக்கூடியளவிற்கு இது பலமிக்கதாகவுள்ளது. எவ்விதமானாலும் இந் நாடுகளில் உயிரோட்டமுள்ள ஒரு பன்முகத்தன்மை வளர்ந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மூலதனத்தின் தேசியத் தன்மையின் வளர்ச்சிக்கு பன்முகத்தன்மை அத்தியாவசியம் என்பதை ஏகபோக முதலீட்டாளர்கள் தவறின்றிப் புரிந்துகொண்டுள்ளதே இதற்கான காரணமாகும். அதேபோல் தேசியத் தன்மையை சிதைக்க பிரிவினைவாதம் அவசியம் என்பதையும் புரிந்துகொண்டுள்ளார்கள். இதனால்தான் தமது நாடுகளில் பன்முகத்தன்மையையும், மூன்றாம் உலகநாடுகளில் பல்முனைத்தன்மையையும் வளர்த்து வருகிறார்கள். இது இவர்களின் மற்றோர் இரட்டைத்தன்மையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன.

இன்றைய, அதாவது BRICஇன் உருவாக்கத்திற்குப் பின்னைய, அனைத்துலக இராணுவ சமநிலையையும் பொருளாதாரச் சமநிலையையும் வைத்து நோக்கும்போது;

(அ) மூன்றாம் உலக நாடுகளில் இருந்து எழும் பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கைகள் மேற்குலகின் ஏகாதிபத்திய நலனுக்கு துணைபோவதாகவே அமைகின்றன. விரும்பியோ-விரும்பாமலோ, தெரிந்தோ-தெரியாமலோ இவ் இயக்கங்கள் மேற்குலகின் துணைப்படைகளாகவே மாறுகின்றன. இதனால் எந்த ஒரு மூன்றாம் உலகநாட்டு அரசும், மூன்றாம் உலக நாடுகளுள் இருந்து எழும் பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கையையும் ஜீரணித்துக்கொள்ளமாட்டாது. எல்லோரும் ஒன்றுகூடி அதை அடக்கவே முயல்வார்கள். உள் நாட்டரங்கில் அக் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதையிட்டுக் கவலைப் படமாட்டார்கள். ஒரு முனை உலக ஆதிக்கத்தை எதிர்ப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

ஏதோ ஒரு காரணத்தால் மேற்குலகுக்கும்கூட எதிராக இருக்கும் அல்லது எதிராக மாறக்கூடும் என எதிர்பாக்கப்படும் இயக்கங்க்கள் இதற்கு விதிவிலக்கு.

ருஷ்ய எல்லைக்குள் செச்சென்யா நடத்தும் உரிமைப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு. ருஷ்யா எவ்வளவோ முயன்றும் SCO செச்சென்யாவைக் கண்டிக்கவில்லை. அதாவது மூன்றாவது உலக நாடுகள் ருஷ்யாவுக்கு ஆதரவாக ஒத்த குரல் கொடுக்கவில்லை. ருஷ்யாவின் ப்டுகொலைகளை எதிர்க்கவும் இல்லை. செச்சென்யா மேற்குலகுக்கு எதிரான வீச்சையும் கொண்டிருந்ததால் இந் நாடுகள் “நடுநிலை”வகித்தன.

அதேபோல் 18மாதங்களின் முன்பு ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்று தனி நாடான அப்கஹாசியா(Abkhazia) ம்ற்றோர் உதாரணமாகும். ருஷ்யாவின் உதவியுடன் பிரிந்த இச் சிறியநாடு இன்று ருஷ்யாவின் “உதவி”யுடன் வாழ்கிறது. NATO பக்கம் செல்லவிருந்த ஜோர்ஜியாவிற்குத் தொல்லை கொடுப்பதற்காக இப் பிரிவினை அரங்கேற்றப்பட்டது. இதற்காக 2008 ஆகஸ்டில் ஜோர்ஜியாவுடன் ஒரு யுத்தத்தையே ருஷ்யா நடத்தியது. மூன்றாம் உலக நாடுகள் இக் குட்டி நாட்டை இன்னமும் அங்கிகரிக்கவில்லை. இதுவரை ருஷ்யா தவிர்ந்த மூன்று நாடுகளே அங்க்கிகரித்துள்ளன. இதற்கான பிரதிபலனாக ருஷ்யா இக் குட்டிநாட்டினுள் தனது இராணுவத்தளத்தை அமைத்து வருகின்றது. இதற்காக 212,000 ஜோர்ஜியர்கள் உள்ளூர் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இத்தேதிவரை உள்ளூர் அகதிகளாகவே உள்ளார்கள். அது வன்னி முள்வேலி முகாமின் முன்னோடி.

(ஆ)இவ்வித இயக்கங்கள் அந்த அல்லது இந்த முகாமில் எந்த முகாமையும் சாராமல், எந்த முகாமினது கைப்பிள்ளையாக மாறாமல் நடுநிலை வகித்தால் உலகளாவிய எதிர்ப்புகள் குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. பெரிய பொருளாதாரங்கள் அல்லாத சில சிற்சிறிய நாடுகளின் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளூம் உண்டு. ஏனெனில் இரு முகாம்களிலும் உள்ள பெரிய பொருளாதாரங்கள் அனைத்துமே தனித்தோ கூட்டணி அமைத்தோ உலக ஆதிக்கத்திற்காக முயல்பவர்களாகவே உள்ளன. அத்துடன் மூன்றாம் உலகநாடுகளின் பெரிய பொருளாதாரங்கள் அனேத்துமே தத்தமது நாடுகளுள் காலனிகளைக் கொண்டவைளாகவும், தத்தமது நாடுகளுள் ஒர் மறுகாலனியக்க யுத்தத்தை நடத்திவருபவைகளகவும் உள்ளன. இலங்கை, பர்மா போன்ற சிறிய பொருளாதாரங்கள் கூட அவ்விதமானவைகளாவே காணப்படுகின்றன.

இச் சூழலில் இவ்வித நடுநிலை விரும்பும் இயக்கங்கள் இயல்பாகவே ஒரு தனி அணியாக உருவாகி வருகின்றன என்றோர் கருத்தும் உண்டு. இது நான்காவது அணி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, அகவய சுயநிர்ணய உரிமை கோருவோர்கள்,  பிரிந்து போகக் கோருவோர்கள், தனிநாடு கோருவோர்கள் ஆகியோரே இந்த நான்காவது அணியாகும். இவர்கள் நான்காவது உலகம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எந்த ஒரு அனைத்துலக அல்லது பிராந்திய மட்ட அணிசேரலும் தேசியப் பொருளாதாரநலனை அடித்தளமாகக் கொணடதாக அமைவதே பொதுவான நியதியாகும். இதுதான் உண்மையாக இருந்தாலும் அனைத்து அணிகளும் பொருளாதாரத்தைத்தான் முன்நிலைப்படுத்தும் என்பதில்லை. அரசியலை முன்னிலைப்படுத்தியும்( அணிசேரா இயக்கம்), இராணுவச் சம நிலைப் பேணலை முன்னிலைப்படுத்தியும்(NATO) அமைவதுண்டு. இவ்விதமல்லாமல் சித்தாந்ததை மையமாகக் கொண்ட அனைத்துலக் அணிசேரல்களும் உண்டு. மார்க்சியர்களின் அணீசேரல் இவ்விதமானதே.

ஆனால் இந்த நாலாவது அணி “நாடுகளோ” தடைசெய்யப்பட்டவை அல்லது  உலக அரங்கில் தனியான பிரதிநிதித்துவம் கோரும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்; தமக்கென்றோர் தேசியப் பொருளாதார அலகு இல்லாதவ்ர்கள். இது இரண்டுமேயில்லாத மார்க்சியர்கள் தமக்கென்றோர் பொதுவான உலகக் கண்ணோட்டமும், அரசியல் சித்தாந்தமும் உள்ளதால் உலகளவில் அணிசேர்கிறார்கள். ஆனால் இந்த நாலாவது அணியினரோ உலகக்ண்ணோட்டத்திலும்  அரசியல் சித்தாந்தத்துறையிலும் தமக்குள் ஒரு ஒருமுகப்பாடு இல்லாதவர்கள். இவ்வணி, பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், பொருளாதாரப் பார்வையற்ற இன அபிமானிகள், மத அடிப்படைவாதிகள், சிறுமுதலாளித்துவ க்ற்பனாவதிகள், தம்மைத்தாமே “வர்க்கநீக்கம்” செய்துகொண்ட சமுகப் பைத்தியங்கள், இராணுவப் பிரபுக்கள் ஆகிய பிற்போக்கு அணியினரையும், முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், இனமானப்போராளிகள், விவசாயப் புரட்சியாளர்கள், கற்பனாவாதிகள் சமாதான விரும்பிகள், அடிப்படைமாற்ற விரும்பிகள்(Radicalists), உலகம் சிறிய பொருளாதாரங்களாக சிதறுண்டு போவதை விருபாதவர்கள், தேசபக்தர்கள் ஆகிய முற்போக்குப் பிரிவின்ரையும் கொண்ட ஒரு கதம்பக்  கூட்டமாகும்.

இவற்றாலும் மற்றும் பிற காரணங்களாலும் நாலாவது உலக அணியின் உருவாக்கம் அவ்வளவு சுலபமானதாக அமையும் என எதிபார்க்கமுடியாது. ஆனால் அதற்கான வரலாற்றுத் தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. அவ்விதமானதோர் அமைப்பு வரலாற்றின் கட்டாயமாகவும் உள்ளது. 2009மே மாத இலங்கைப்படுகொலை இவ்விதமானதோர் அணியின் தேவையை உலகின்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த ஓர் பேர் நிகழ்வு எனக்கூறினால் அது மிகையாகாது. புறநிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே இக்கட்டாயம் நிறைவேற்றப்படும் என நம்புவோமாக. ஆனால் அதற்கான அகநிலை இன்னமும் தோன்றவில்லை. அதுவரை காலத்தைக் கனிய வைப்போம் என்ற மூலோபாயத்தையும்  காலம் வரும்வரை பொறுத்திருப்போம் என்ற தந்திரோபாய்த்தையும் கடைப்பிடித்தலே இவ் இயக்கங்க்களின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் நல்லது, அவசியமானதுங்கூட.

அரசியல் அதிகாரம் தொடர்பானதோர் கோரிக்கை சரியா தப்பா எனத் தீர்மானிப்பது அது வரலாற்றின் அன்றைய காலகட்டத்திற்கு அவசியமா அவசியம் அற்றதா என்பதை மட்டும் வைத்துக் கொண்டல்ல, சாத்தியமா சாத்தியமற்றதா என்பதையும் வைத்துக்கொண்டுதான். சாத்தியமா சாத்தியமற்றதா என்பது உள்நாட்டரங்கினில் மட்டுமல்ல அனைத்துலக அரங்கிலும் வைத்து ஆராயப்படவேண்டியதொன்றாகும். அதிலும் ஒரு தேசிய அரசின் தோற்றமும் வளர்ச்சிக்குமான காரணிகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்துவது அனைத்துலக அரங்குதான். இலங்கைக்கு நடந்தது மட்டுமல்ல நேபாளத்தில் நடப்பதுவும் இதற்கோர் சிறந்த உதாரணங்களாகும். நேபாள மார்க்சியர்கள் தேசிய அரசு அமைப்பதற்கான அனைத்துத் தகமைகளும் பெற்றுள்ளார்கள் ஆனால் அனைத்துலக நிலமை அவர்களுக்குப் பாதகமானதாகவே உள்ளது. இதனால் தமது வேளைக்காக காத்திருக்கிறார்கள். வாழாவிருக்கவில்லை பல்தேசிய அரசாக ஆவதற்கான தயாரிப்புகளைச் செய்துவருகிறார்கள்.

இவற்றின் தொகுப்பாகக் கிடைப்பது, பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கையானது இன்றைய உலக இராணுவ, பொருளாதாரச் சமநிலையைப் பொறுத்தவரை பொருத்தப்பாடானதாக அமையவில்லை என்பதேயாகும்.
இலங்கையின் உள்நாட்டரங்கினில் வைத்து இது சாத்தியமா சாத்தியமற்றதா என்பது விரிவாக  ஆராயப்பட்வேண்டும்.

Exit mobile version