1997 ஆம் ஆண்டிலிருந்து வாங்கிய மொத்த கடனே இத் தொகையாகும்.
இக்கால இடைவெளியில் சீனாவிடமிருந்து வாங்கிய 2.96 பில்லியன் டொலருக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையோடு ,மொத்தமாக 4.9 பில்லியன்களை கொடுக்க வேண்டியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 4.64 பில்லியன் டொலர்கள் கடன்.
வாங்கிய கடனை சீனாவிற்கு மீளச்செலுத்தும் காலம் 12 வருடங்கள்.
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு (ADB) 21 வருடங்கள்.
இவை தவிர அமெரிக்கா, இந்தியா அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பானிய வங்கி (JBIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் இலங்கை கடன் பெற்றுள்ளது.
கடன் பெற்ற நெஞ்சம் கலங்கினாலும், வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த ஆரம்பித்துவிட்டதா? என்கிற கேள்வி எழுகிறது.
மொத்த உள்ளூர் உற்பத்தி 59 பில்லியன் டொலர்களாகவிருக்கும், குறைந்த வருவாய் உள்ள நாடாக உலக வங்கியால் கணிப்பிடப்படும் இலங்கையானது, 2009 மே மாதத்திலிருந்து நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்கான முதலீடாக, சீனாவிடமிருந்து 6 பில்லியன் டொலர்களை கடனடிப் படையில் பெற்றுள்ளது.
இத்தகவல்களை அமைச்சர் சரத் அமுனுகம வெளியிட்டுள்ளார். இவை தவிர சர்வதேச சந்தையில் அரச முறிகளை விற்று 4 பில்லியன்களை இலங்கை பெற்றுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மக்களுக்குக் காட்டி அதிகாரத்தை நீடிக்க முயலும் ஆட்சியாளர்கள், தாம்பட்ட பெருங்கடன்களை மக்களுக்குச் சொல்வதில்லை.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மதவுரிமை மற்றும் நிலவுரிமையை அச்சுறுத்தல் என்பதன் ஊடாக, அடிப்படைப் பிரச்சினைகளில் மக்கள் தமது கவனத்தைக் குவிக்காதவாறு திசை திருப்புதல் போன்ற நகர்வுகளில் அரசு ஈடுபடுகிறது.
இருப்பினும் பெருந்தேசிய இனவாதத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ் பேசும் மக்கள், தமது வாழ்வுரிமையைத் தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நில அபகரிப்பிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நிகழ்த்திய மக்களை, திணிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் திசை திருப்பிவிட்டது.
பொறுப்புடைமைமிக்க பிரதிநிதித்துவமில்லாத மாகாண சபைக் கட்டமைப்பினூடாக, அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பதனை இலங்கை அரசியலமைப்பே தெளிவுபடுத்துகின்றது.
இந்நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக திணிக்கப்பட்ட அதிகாரமற்ற மாகாண சபை முறைமை, தேசிய இன முரண்பாட்டிற்கு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்க முடியாது.
தேர்தல் நடத்தக்கூடாதென மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றினாலும், ஜனாதிபதியால் வழி நடத்தப்படும் மாகாண ஆளுனரால் அச்சபை கலைக்கப்படும் என்பதிலிருந்து மாகாண சபைகளின் அதிகார வரம்பினைப் புரிந்து கொள்ளலாம்.
சிற்றூழியர் ஒருவரை நியமிக்க முடியாத மாகாண சபையில், யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதற்கான போட்டி நடைபெறு
கிறது.
கிழக்கில் பூர்வீகமாக வாழும், இறைமையுள்ள தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் களம் என்பதைத் தவிர இத் தேர்தலில் வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
தேசிய இனங்கள் மீது பெருந்தேசிய இனவாதத்தின் ஒடுக்குமுறை அதிகரிக்கும் இவ்வேளையில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகங்களும் அம் மக்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் இணைந்து பொதுவான வேலைத் திட்டமொன்றினை உருவாக்கிச் செயற்பட வேண்டிய காலமிது.
அதேவேளை, அரசோடு இணையாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.
இதில் அரசோடு இணையக்கூடாது என்கிற மக்களின் எதிர்ப்பு, அதனைச் சரியாக உள்வாங்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அவர்களின் நிலைப்பாடு, என்பன கவனிக்கத்தக்கது.
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்க வேண்டுமா? அல்லது மத்தியில் உள்ளது போன்று மாகாணத்திலும் அரசோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமா? என்பதற்கப்பால் அரசியல் கோட்பாட்டு ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே சரியானதொரு இணக்கம் ஏற்பட வேண்டும்.
இருதரப்பிலும் ஏற்பட்ட கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்து பேசித் தீர்த்து, பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான புதிய நல்லிணக்கத்தளமொன்றை உருவாக்க முன்வர வேண்டும்.
இதற்கு ஹசன் அலி போன்றவர்களின் வகிபாகம் முக்கியமானது என்பது எனது கருத்து.
வட கிழக்கு என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் இறைமையுள்ள தாயகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மாறிவரும் சர்வதேச அரசியல், சிறுபான்மைத் தேசிய இனங்களின் நலன்களை கவனத்தில் எடுக்காது.
அம் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டாலும் தமது முதலீடுகளையும் பிராந்திய ஆதிக்கத்தையுமே அவை முன்னிலைப்படுத்தும்.
மத்திய கிழக்கில் தமது எண்ணெய் வள ஆதிக்கத்திற்காக ஈரானைத் தனிமைப்படுத்த எடுக்கும் நகர்வுகளை கூர்ந்து அவதானித்தால் இந்த உண்மை புலப்படும்.
பலஸ்தீன மக்களின் பூர்வீக மண் அபகரிக்கப்படுவது குறித்து அக்கறை கொள்ளாமல், ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக சித்தரிப்பதிலேயே அர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.
ஆகவே வடக்கில் தேர்தலை நடாத்த வேண்டுமா? இல்லையேல் கிழக்கில் நடாத்த வேண்டுமா என அவர்கள் பட்டிமன்றம் நடத்துவõர்கள்.
ஆனால் அடிப்படைப் பிரச்சினை அதுவல்ல.
மத்திய அரசு வழங்கும் சலுகைகள், அடித்தட்டு மக்களுக்கு விடிவினை ஏற்படுத்தாது.
தொடர்ந்தும் பெருந்தேசிய இனவாதத்தின் பிரித்தாளும் பொறிக்குள் வீழ்ந்தால் மீதமுள்ள உரிமைகளும் பறிபோகும்.