முகத்தை மூடாத பெண்களின் தலைகளை அறுத்துக் கொல்கிறார்கள்.. வேலைக்குப் போகும் பெண்களை விபச்சாரிகள் என்று தெருக்களின் சுட்டுப் போடுகிறார்கள். அமெரிக்க எதிர்ப்பு, மேற்குக் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு,கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்றெல்லாம் கிளம்பியிருக்கும் ஐ.எஸ்.ஐ.ஸ் பயங்கரவாதிகளின் வேலைகள் இவை.
அடிக்கொரு தடவை அல்ஹு அக்பர் எனக் கூறிகொள்ளும் இவர்கள் கொலைவெறிபிடித்த மனிதகுலத்தின் விரோதிகள். இவர்களால் நச்சூட்டப்பட்ட இளையவர்கள் விட்டில் பூச்சிகள் போலச் செத்துப் போகிறார்கள். இந்த அமைப்பின் பின்புலத்தில் செயற்படுவது அமெரிக்க அரசும் அதன் உளவுத்துறையான சீ.ஐ.ஏ உம் தான் என்பது நிறுவப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாக்குக் கணிப்பின் அடிப்படையில் மத்திய கிழக்கில் 85 வீதமானவர்கள் அமெரிக்காவையும் அதன் தலையிட்டையும் எதிர்க்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நாஓம் சொம்ஸ்கி என்ற கல்வியியளார் மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலையீடு தான் அடிப்படை வாதத்தை உருவாக்குகிறது என்றார்.
அதனை அமெரிக்காவும் அதன் அழிப்பு இயந்திரங்களும் உள்வாங்கிக்கொண்டன. அடிப்படை வாத்தை அமெரிக்க அரசே வளர்க்க ஆரம்பித்தது. சிரியாவில் சர்வாதிகாரி ஆசாத்திற்கு எதிரான மக்களின் உணர்வைப் பயன்படுத்திக்கொண்டு அடிப்படை வாதிகளை வெறிகொண்ட கொலைகாரர்களாகப் பயிற்றுவித்தது. லிபியாவில் கடாபிக்கு எதிராக இஸ்லாமியப் பயங்கரவாதிகளைத் தானே உருவாக்கிற்று.
அமெரிக்காவிற்கு எதிராகப் போரிடுவதாகக் கூறும் பயங்கரவாதிகளை அமெரிக்காவே தீனி போட்டு வளர்த்தது. இதனால் ஜனநாயக முற்போக்கு அணியின் வளர்ச்சியை மத்திய கிழக்குல் தடுத்து நிறுத்தியது. நியாயமான போராட்டத்தை தனது ஆளுமைக்கு உட்படுத்தி அழித்துச் சிதைத்து அதனைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டது.
எமது கொள்ளுப்பாட்டன் காலத்திலேயே இதெல்லாம் அறியப்பட்ட பொறிமுறைதான். அனகாரிக தர்மபால என்ற கிறீஸ்தவர் பௌத்தராக மாறி சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தைத் தோற்றுவித்தார். இலங்கையில் தேசிய இன முரண்பாட்டைத் தோற்றுவித்து சிங்கள பௌத்த பாசிசத்தை வளர்ப்பதற்கு அனகாரிக்க தர்மபால, கேணல் ஒல்கோட், மடம் பிளவாட்ஸ்கி போன்றவர்கள் செயற்பட்டனர்.
இந்தக் கும்பலின் பின்னால் பிரித்தானிய அரசே செயற்பட்டது. அநகாரிக தர்மபாலவை பிரித்தானிய அரசே மதம் மாற்றி தமிழ் நாட்டிலுள்ள அடையாறு என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று பயிற்றுவித்த்து பௌத்தராக மாற்றியது. இங்கு விசேடமானது என்னவென்றால், அநகாரிக தர்மபால பேசிய அளவிற்கு பிரித்தானிய அரசிற்கு எதிராக இதுவரை யாரும் பேசியதில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை தெற்காசியாவில் எல்லையிலிருந்தே துரத்தியடிக்க வேண்டும் என்றார்.
தனது எதிரிகளைத் தானே தோற்றுவித்து அழிக்கும் முறைமை உலகத்திற்குப் புதிதல்ல.
இந்த வெளிச்சத்தில் பிரித்தானியாவில் அண்மையில் நடைபெறும் சம்பவங்களை ஆராய வேண்டும்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பாவில் தமிழ் மக்களின் போராட்டங்களின் மையப்பகுதியாகத் திகழ்ந்து வந்தது. சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் தமிழர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். இப் போராட்டங்களை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-TCC, பிரித்தானியத் தமிழர் பேரவை BTF, உலகத் தமிழர் பேரவை-GTF, நாடுகடந்த தமிழீழம்-TGTE போன்ற பிழைப்புவாத அமைப்புக்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன.
இக் குழுக்களின் பிழைப்புவாத நோக்கங்களைப் தமிழர்கள் ஒரு வகையில் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.
முன்பைப் போல இப்புரிதல் ஏற்படுவதற்கு பல நீண்ட ஆண்டுகள் செல்லவில்லை. ஏற்கனவே வன்னிப் படுகொலைகள் மக்களுக்கு ஓரளவு அரசியலைக் கற்பித்திருந்தது. பிரித்தானியா இந்தியா உட்பட ஏகாதிபத்திய நாடுகள் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டதை பலர் அறிந்து வைத்திருந்தனர்.
இந்த நாடுகளைப் பிடித்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாகவும் தனி நாடு வாங்கித் தருவதாகவும் தமிழ் அமைப்புக்கள் கூறியதை மக்கள் முழுமையாக நம்பவில்லை.
இறுதியில் இவர்களின் போர்க்குற்ற விசாரணை நாடகம் பிசுபிசுத்துப் போக, மக்களின் ஒரு பகுதியினர் அரசியலிலிருந்து அன்னியப்பட்டுப் போக, மறுபகுதியினர் புதிய மக்கள் சார்ந்த அரசியலைத் தேட ஆரம்பித்தனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக ஜனநாய முற்போக்கு அணிகள் தோன்றுவதற்கான தளத்தை இத் தேடல் திறந்துவிட்டது.
விழித்துக்கொண்ட பிரித்தானிய அரசு தனக்கு எதிரான ஏகாதிபத்திய அரசியலைப் புலம்பெயர் பிழைப்புவாதிகளின் ஊடாகக் கையகப்படுத்த ஆரம்பித்தது. இந்த நிலையில் இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எதிராகவும், பிரித்தனிய இந்திய அமெரிக்க அரசுகளுக்கு எதிராகவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் ஆதரவு அமைப்புக்களும் செயற்படுவது போன்ற தோற்றப்பாட்டை வழங்கின.
22.07.2014 அன்று நடைபெற்ற பில் மில்லரின் ஆவண வெளியிட்டு நிகழ்வில் நடைபெற்றவற்றை அவதானிப்போம்.
மில்லரின் ஆவண வெளியீட்டை இந்த அமைப்புக்களைச் சாராதவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். திட்டமிட்டபடி கிளாஸ்கோ நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்துள் நிகழ்வு ஆரம்பமானது. லண்டனிலிருந்து பலர் வாகனங்களில் சென்றிருந்தனர். ஆவணத்தை அச்சிட்டு லண்டனிலிருந்து எடுத்துவந்தவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த சசிசதர் என்பவர். ஏனையோர் காத்திருக்க சசிதர் மண்டபத்தினுள் முதல் ஆளாக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கமல் என்பவரும் மண்டபத்தினுள் புகுந்துகொண்டார். கூட்டம் ஆரம்பமாகிச் சிறிது நேரத்தின் பின்னர் கமல் கைத் தொலைபேசியுடன் நிகழ்வு மண்டபத்திலிருந்து வெளியே சென்ற போழுது அவரை நோக்கி இரண்டு வெள்ளையர்கள் அணுகினர். வரவேற்புப் பகுதியிலிருந்தவரிடம் அந்த இருவரும் பிரித்தானிய புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என கமல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மண்டபத்திலிருந்து வெளியே வந்த சசிதர், வரவேற்புப் பகுதியில் இருந்தவர்களிடம் அந்த இருவரும் தன்னுடன் வந்தவர்கள் என அறிமுகப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.
ஆவண வெளியீட்டிற்கு மறு நாள் 23ம் ஆம் திகதி கோட்டும் சூட்டுமாகக் காணப்பட்ட இரு புலனாய்வுத் துறையினரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய போராட்டத்தில் போலிஸ் சீருடையில் காணப்பட்டனர். அவர்களை அணுகிய சிலர் முதல் நாள் கூட்டத்தைப் பற்றிக் கேட்ட போது, சசிதரின் அழைப்பிலேயே அங்கு வந்ததாகக் கூறினர்.
1979 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை வரைக்கும் பிரித்தானிய அரசு எவ்வாறு இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் உதவியது என்பதே பில் மில்லரின் ஆவணம் சொல்லும் செய்தி. ஆதாரபூர்வமான தகவல்களுடன் கொலைகளுக்கு பிரித்தானிய அரசு எவ்வாறு பின்னணியில் செயற்பட்டது என்பதை ஆவணம் கூறுகிறது.
இந்த ஆவணத்தை வெளியிடுவதில் கமல் சரிதர் ஆகிய இருவரும் பங்களித்தனர் என்பது பின்னதாக பலர் அறிந்துகொண்டனர். தனக்கு எதிரான ஆவணத்தை தன்னுடைய அடியாட்களை வைத்தே பிரித்தானிய அரசு வெளியிடுதல் என்பது மத்திய கிழக்கையும், அனகாரிக தர்மபாலவையும் நினைவூட்டுகிறது.
மக்கள் சார்ந்த மூன்றாவது அணி உருவாகிவிடக் கூடாது என்பதற்காக ஏகாதிபத்திய எதிர்ப்பைக்கூட தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிரித்தானிய அரசின் தந்திரோபாயமே இது என்பதைத் தவிர வேறு என்னவென்பது.
வெற்று முழக்கங்கள், காலாவதியாகிப்போன அடையாளங்கள், குறியீடுகள், உணர்ச்சிப் பேச்சுக்கள் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு முள்ளிவாய்க்காலைத் தயார்செய்த அதே முகங்கள் இன்னொரு அழிவை ஆரம்பிக்கின்றன என்பதில் என்ன சந்தேகம்?
ஊடகங்கள் உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கின்றன. அதற்காகப் பல காரணங்களை முன்வைக்கின்றன. மக்களை மந்தைகளாக்கிவிட்டு அவர்களின் அழுகுரலில் பணம் சேர்த்துக்கொள்கின்றனர்.
பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பிழைப்புவாதிகள் கூட்டுச் சேர்ந்து இப் பல்தேசிய பண வெறியர்களிடமும், வாக்குப் பொறுக்கிகளிடமும், இனக்கொலையாளிகளிடமும் மக்களின் போராட்டங்களை ஒப்படைக்கின்றனர்.
இவர்களை அடையாளம் காண்பதும் புதிய மக்கள் சார்ந்த வழிமுறைகளைக் கண்டறிவதும் மக்கள் பற்றுள்ளவர்களின் கடமை.
இங்கு விரக்தியடைவதற்கும் நம்பிகையீனத்துள் வீழ்வதற்கும் புதிதாக ஒன்றும் இல்லை. இவ்வாறான சிக்கல்கள் மிகுந்த காலகட்டத்தில் போராடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடையாலாம். சமூகக் கோபமும் அரசியல் விழிப்புணர்வும் கொண்ட புதிய இளைஞர் சமூகம் எமக்கு முன்னால் தோன்றும்.
தமது சொந்த இலாப நோக்கத்தை நிராகரித்து கடந்த காலத்தின் தவறுகளை விமர்சித்துக் கற்றுக்கொண்டு புதிய போராட்டத்திற்கான வழிகளைக் கண்டறிவது அவசியம். எம்மைச் சுற்றி ஒநாய்களும் நயவஞ்சகர்களும் நிறைந்திருப்பதற்கான காரணம் எம்மிடம் மக்கள் சார்ந்த அரசியலும் அதற்கான முன்னணிப்படையும் இல்லாமலிருப்பதே. அது தோன்றும் வரை வழி நெடுகிலும் நிலக்கண்ணிகளைக் கடந்து செல்லவேண்டியிருக்கும்.