Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் பல தமிழ் மாணவர்களின் விசா அனுமதி பறிமுதல் செய்யப்படலாம்

uk_visaதேசிய இன ஒடுக்குமுறை இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள அச்சமும் பாதுகாப்பின்மையும் வறுமையும் அங்கிருந்து இளைய சமுதாயத்தை வெளியேற்றிக்கொண்டிருக்கின்றது. நாளாந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் மேற்கு ஏகபோக நாடுகள் தமது பொருளாதாரக் கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்திவருகின்றன. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மாணவர்களாகவும் அகதிகளாகவும் பலர் வெளியேறி மேற்கு நாடுகளில் தஞ்சமடைகின்றனர். மேற்கு நாடுகளில் கூட மூன்றாம்தர மனிதர்களாக அவமானத்திற்கு உள்ளாக்கப்படும் இடம்பெயர்வோர் வாழ்விழந்த தெரு மனிதர்களாக தமது நாட்களைக் கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் சட்டரீதியாக வேலை செய்யும் அனுமதி மறுக்கப்படுகின்றது. தமிழ் மாணவர்கள் பலர் சட்டவிரோதமாக தமிழ் மற்றும் இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வழங்கும் ஊதியம் பிரயாணச் செலவிற்கே போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் பிரித்தானியாவிற்கு வந்துள்ள மாணவர்களில் பலர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிளின்வர், மேற்கு லண்டன், பெர்போர்ட்செயர் ஆகிய பல்கலைக் கழகங்கள் உட்பட 57 வெளிநாட்டவர்கள் பயிலும் கல்லூரிகளின் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் இரத்துச்செய்துள்ளது.

பிரித்தானியாவில் கல்விபயிலும் அனுமதியைப் பெறுவதற்கு குறித்த ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவது அவசியம். பயண முகவர்கள் அப்பாவி மாணவர்களுக்கு போலி ஆங்கிலப் பரீட்சைக்கான சான்றிதழ்களை வழங்கி பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொடுப்பது வழமை. 48 ஆயிரம் மாணவர்களில் 29 ஆயிரம் போலிச் சான்றிதழ்கள் எனவும் 18 ஆயிரம் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதால் இந்தப் பல்கலைக் கழகங்களுக்குரிய அனுமதி இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அனுமதிபெற்று வந்தவர்கள் இந்த வருட இறுதிக்குப் பின்னர் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமுள்ள வேறு பல்கலைக்கழகங்களில் இவ்வருட இறுதிக்குள் அனுமதிபெறாவிட்டால் தமது நாடுகளை நோக்கி இவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானிய உட்பட மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்பவர்களின் அவல நிலை வெளியே பேசப்படாமல் மறைக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் பிச்சை கேட்கும் நிலைக்கு இலங்கை அரச பாசிசமும் அதன் பின்புலத்தில் செயற்படும் மேற்கு ஏகாதிபத்தியமும், இந்திய அரசும் துரத்தி வந்திருக்கின்றது.

இது பேசப்பட வேண்டும். இலங்கையிலிருந்து வரும் அப்பாவித் தமிழர்களுக்குப் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அவல வாழ்க்கை குறித்த விழிப்ப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

Exit mobile version