இருப்பினும் தற்போது இணையவழி ஊடக வாசிப்போர் பலரிடம் எந்த எந்த இணையங்கள் எவர் நலன் சார்ந்து இயங்கு கின்றன என்பதை தெளிவாகவே உணரும் திறமை இருப்பதை அறிய முடிகிறது. இதில் இணையச் செய்திகளை வாசிக்கும் மிகச் சாமானிய மக்களே இதனை உய்த்து அறிந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் மக்கள் விரோத இணையங்கள் வெளியிடும் செய்திகளை பகுத்து ஆராயும் திறன் இலங்கையிலும் புலம் பெயர் பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் காணப் படுகின்றமையே.
புலிகள் உச்சம் பெற்ற காலங்களில் புலிகளின் ஊக்கத்திலும், தன்னியல் பாகவும் பொது நிலை செய்திகளை, புலிசார் செய்திகளை வெளியிட்ட சில இணைய ஊடகங்கள் புலிகளை நெருங்கி வந்து அவர்களிடம் பணத்தையும் பெற்று அவர்கள் சார் சேதிகளையும் வெளியிட்டனர் இவற்றில் பல புலிகளின் நேரடி கண்காணிப்பிலும் சில பினாமிகளின் கண்காணிப்பிலும் செயல் பட்டன, இருப்பினும் இந்த இணையங்கள் இந்திய, இலங்கை புலனாய்வு வலையமைப்புகளுடன் நேரடி மறைமுக தொடர்புகளை பேணிவந்தன. இன்று, புலிகள் இல்லாத சூழல் அவற்றின் பொற்காலாமா தெரியவில்லை குறிப்பாக சில பல இணையங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை புலனாய் வாளர்களினதும் இலங்கை கொள்கை வகுப்பாளர்களினதும் வழிநடத்தலில் தமிழ் இனச் சுத்தீகரிப்புக்கு சோரம் போகின்றன அல்லது படுகொலை பங்காளிகள் ஆகின்றனர்.
இதனைச் செய்யும் பலரும் வேறும் யாருமல்ல தமிழ் பேசும் தமிழர்கள் தான். இவர்கள் பலர் தமிழ் மக்கள் மீது கொண்ட கோபமோ அன்றி புலிகள் மீது கொண்ட கோபமோ எனக் கூற முடியாது. இதனை ஒரு தொழிலாக அல்லது தமது அறிவு சார் புலமையை சிங்களவர்களுக்கு வெளிபடுத்தும் முகமாக செய்கிறார்கள். அத்துடன் தாம் சார்ந்த மக்களின் நலன்கள் அவர்கள் மீது நிகழ்த்தப் படும் இனப் படுகொலை இனச் சுத்தீகரிப்பு என்பவற்றை மறை பொருளாக்கும் சிங்கள பெருந்தேசிய குறுஞ் சிந்தனையாளர்களின் கொள்கைவகுப்பாளர்களுக்கு மலிவான பண்டித் தீவனமாக பயன்படுகிறார்கள்.
இது இணைய வழியில் மாத்திரம் அல்ல அரசியலிலும் நடக்கின்றது. லச்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் என்போரை கடந்து சுமந்திரன் என பட்டியல் நீளும், பொறுத்து இருந்து பார்ப்போம்!.
ஜெனிவாவிற்கு கூட்டமைப்பு செல்லாததற்குரிய காரணமாக, சம்மந்தர் கூறிய!, இனப் பதட்டம் ஒன்று ஏற்பட்டு தமிழ் மக்கள் அழிவு ஒன்றை மேலும் சந்திக்கும் சூழல் உருவாகும் எனும் சம்மந்தரின் விளக்கம் ஓரளவு ஏற்புடையதாக ஏற்றுக்கொண்டாலும், சுமந்திரனின் பிந்திய அறிக்கையை என்ன சொல்வது?
தமிழ் மக்களின் அழிவிலும், அறியாமையிலும் அரசியல் நடத்த எச்சில் வடிக்கும் இவர்களை நம்பியே தமிழர்களின் அழிவரசியல் தொடரவும் ஆரம்பிக்கவும் போகின்றதா? இந்நிலைமையை மாற்ற EPRLF , TELO , PLOTE என்பன கூட்டிணைந்து செயல் படும் நிலை உருவாகலாம்?! ஆனால், சுமந்திரனும் சுமந்திரனை சுற்றி இயங்கும் சில சக்திகள் இலங்கை அரசின் உதவியுடன் அதனை முறியடிக்கக் கூடும். உண்மையில் இதுவல்ல எனது பேசுபொருள் காலத்தின் தேவை கருதி இதனையும் தொட்டுச் செல்ல வேண்டியவனாகிறேன்.
இப்போது எனது விடயத்திற்கு வருவோம் சில தமிழ் வழி தமிழ் தேசியம் பேசும் இணையங்களின் செய்திகளில் அடிக்கடி வந்து போகும் பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்ற செய்திகளில் அவர் இருக்கின்றார் என சில இணையங்களும் அவர் இல்லை என்று கூறும் சில இணையங்களும் இருப்பதை நாம் காணுகிறோம். உண்மையில் இவ் இணையங்களை கூர்ந்து அவதானிக்கும் எவரும் அவர்களின் மேற்படி செய்திகளில் விஷமமும், விசமும் இருப்பதை அவதானிக்க முடியும்.
பிரபாகரன் இல்லை எனக் கூறும் தமிழ் தேசியம் பேசும் இணையங்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செய்ய மறுக்கின்றன அத்துடன் பிரபாகரனின் மரணத்தை மறைமுகமாக ஏளனப் படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஓர் சோர்வு நிலைமையை ஏற்படுத்துவதையும் அவரின் இழப்பின் பின்னர் தமிழ் தேசிய போராட்டம் அல்லது விடுதலை என்பது மீளவும் முன்னெடுக்கப் பட முடியாதது என்பதை தமிழ் மக்கள் மத்தியில் மறைமுகமாக திணிப்பது போன்றும் இருக்கும். அதாவது புலிகள், பிரபாகரன் என்போருக்கு பின்னர் அவர்கள் தவிர்ந்த மாற்று சக்திகள் அல்லது மாற்று சிந்தனையாளர்கள் ஒடுக்கப் படும் மக்கள் சார்பாக மேல் எழும் சூழல் இல்லை என்னும் உளவியல் கருத்து தமிழ் மக்கள் மீது எடுத்துச் செல்லப்படுகிறது. புலிகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு தமிழரிடையே வேறு மாற்று சக்திகள் இல்லை என்ற, புலிகளின் மந்திரத்தையே இன்று சிங்கள கடுங்கோட்பாட்டு கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களுக்கு எதிராக தமிழ் இணையவழி ஊடகங்கள் மூலம் பரப்புகிறார்கள். மொத்தத்தில் சிங்கள மேலாதிக்க இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்த கனமான ஒடுக்கப் படும் அமைப்புகளும் மேல் எழாமல் சிங்கள மேலாதிக்கம் பார்த்துக் கொள்ளுகின்றது.
மற்றையது அவர் இருக்கிறார் என்று சொல்லப் படும் இன்னொரு ஆபத்தான தமிழ் மக்களின் இன்றைய தேசிய, சர்வதேச சூழலை நாசப் படுத்தும் கருத்தியலும் பரப்பப் படுகிறது அதனை இப்போது பார்ப்போம்.
சில தமிழ் இணையங்கள் கூறுவது என்னவெனில் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் எனக் கூறுவது, இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள உணர்வு பூர்வமான எழுச்சியை மழுங்கடிக்கச் செய்யும் என்பதாகும். ஆக, இங்கு சொல்லப் படும் செய்தி ஆனது பிரபாகரன் இறந்துவிட்டார் ஆனால் அதனை மக்களுக்கு சொல்லக் கூடாது என்பது ஒன்று, இரண்டாவது பிரபாகரன் இறக்கவில்லை அவர் காலம் வரும் போது வருவார் என்பது.
இவ்வாறான நிலைமையை பேணுவதன் மூலம் மக்களின் போராட்ட உணர்வலைகளை பாதிக்காமல் பேணமுடியும் என்பது, ஒருவாதப் பொருளாக(?) மறை பொருள் விடயங்களுடன் உலா வருகின்றது. ஆனால் அவ் இணையங்களின் எண்ணக் கரு அல்லது மூலோபாயம் சொல்வது என்னவெனில் தமிழ் மக்களை மனநலம் குன்றியவர்களாக அல்லது தொடர்ச்சியாக மனநலம் குன்றியவர்களாக வைத்திருக்கவுமே விரும்புகின்றது என்பதாகும்.
முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது? என்பதை இந்த மூன்று வருட காலத்தில் மக்கள் பல்வேறு தகவல் மூலமாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஏதோ சனல் 4 மூலமாக தான் தமிழ் மக்கள் அறியவேண்டும் என்றில்லை. சனல் 4 ஆனது தனது பணியை சர்வதேசத்திற்கே (தேவைப் படுவோரின் நிகழ்ச்சி நிரலிற்கு) கொண்டு செல்கிறது.
இதற்கிடையில் சனல் 4 பற்றியும் எனது கண்ணோட்டத்தை இங்கு சொல்லிவிடுகிறேன் சனல் 4 என்பது தமிழர்களுக்கு தொண்டு செய்ய வந்த தன்னார்வ தொண்டுச் செய்திச் சேவை நிறுவனம் அல்ல அது மேற்குலகின் இலங்கை குறித்த நகர்வுக்கு வன்னியின் அவலங்களை அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப் படையில் வெளிப்படுத்துகிறது. இதற்குரிய பணம் அமெரிக்க, மேற்குலக சக்திகளால் ஒப்பந்த அடிப்படையில் சனல் 4 க்கு பகிரப் பட்டிருக்கும். சனல் 4 ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல தமிழர்களுக்கு படி அழக்க, அவர்கள் இலங்கையில் நடைபெற்ற முறையற்ற இன அழிப்பை காட்டி இலங்கையை அடிபணியவைக்கும் நிகழ்ச்சி நிரலை கனகச்சிதமாக செய்ய பணத்திற்கு உழைக்கும் மிகச் சிறந்த செய்தி நிறுவனம்.
இதற்கிடையில் மக்களிடம் வாரிச் சுருட்டிய பணம் எல்லாம் சனல் 4 நிகழ்ச்சிக்கு வாரி வழங்கினோம் என பணம் திரட்டியோர் கூற சனல் 4 வழி வகுத்துள்ளது. அத்துடன் வன்னியில் தமிழ் மக்களின் மரணங்கள், கூட்டுப் படுகொலைகள் என்பவை சர்வதேச அளவில் வெளிவருவது நொறுக்கப் பட்ட தமிழ் மக்களின் ஆன்மாக்களை ஓரளவு திருப்திப் படுத்தும் என்பதும் உண்மையாகும்.
இந்த இலங்கை தொடர்பான சனல் 4 நிகழ்ச்சிக்கு புலிகள் நிதிஉதவி செய்வதாக இலங்கை சர்வேதேச அளவில் பிரச்சாரம் செய்கிறது காரணம் அச்செய்தியின் நம்பகத் தன்மையை சர்வதேச அளவில் கேள்விக்குள்ளாக்க.
அதே நேரம் சில தமிழ் இணையங்கள் பிரபாகரன் மரணிக்கவில்லை அவர் மரணித்தார் என்பதே பொய் அப்படி இருக்கும் போது அவர் மரணித்தார் என சனல் 4 செய்திகளை வெளியிடுவது தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் செயல் எனக் கூறுவதன் மூலம் சர்வதேச அளவில் தமிழ் மக்களை சனல் 4 க்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகளை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தலும் சனல் 4 இன் நம்பகத்தன்மையை கேள்விகுள்ளாக்குதலும் ஆகும். உண்மையில் இன்றைய சூழலில் இவ்வாறான செய்திகளில் நன்மை அடைவோர் இலங்கை அரசினர் மட்டுமே வேறு யாருமல்லர் எனவே இச்செய்திகளின் ஊற்று மூலங்கள் கூட அவர்களே என்பதை ஊகித்து அறிவதில் எந்த கஷ்டமும் இல்லை.
ஏனெனில் சில இணைய வழி செய்தி ஊடகங்களின் மறைமுக உத்தியின் படி இலங்கை சார்பான சில தமிழ் ஆர்வலர்களே பிரபாகரன் இறந்தார் என்ற செய்தியை வெளியிடும் படி சனல் 4 ஐ தூண்டுவது போன்றும், அவர்களே சனல் 4 நிகழ்ச்சிக்கு நிதி உதவி வழங்குகின்றனர் என்றும் கூற முற்படுகின்றனர். இதன் மூலம் சனல் 4 நிகழ்ச்சிக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்து எழவைக்கும் உத்தி தென்படுகிறது.
இதன் மூலம் முள்ளி வாய்க்காலில் நடத்தப் பட்ட படுகொலைகள் பலவற்றை மறைக்கும் அல்லது மழுங்கடிக்கும் உத்தியும் தொக்கி நிற்பதை தெளிவாக உணர முடியும். சர்வதேச குற்றச் சாட்டுகள் அல்லது விசாரணைகள் என்று வரும் போது இலங்கை அரசுப் படைகளால் கொல்லப்பட்ட போராளிகள், ஏன் பொது மக்களை கூட தப்பிச் சென்று விட்டார்கள், நாட்டைவிட்டு ஓடி விட்டார்கள், மறைந்து வாழ்கிறார்கள் என்று பொய் உரைக்க வசதியாக இருக்கும். இது தமிழ் மக்களை கொண்டே சர்வதேச அளவில் பிரபாகரன் உட்பட இலங்கை அரசுப் படைகளால் நெறிப் படுத்தபட்ட படுகொலையில் கூட்டுப் படுகொலை செய்யப் பட்ட பலர் தப்பி மறைந்து வாழ்கிறார்கள் எனச் சொல்ல வைக்கும் ஒரு உத்தியாகவே நான் பார்கிறேன்.
எஸ்.ஜி .ராகவன்(கனடா)