முப்பது வருடகாலங்களுக்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் உடமைகளின் அழிவுகளுக்கும் மத்தியில் தமிழீழ விடுதலை வேட்கை கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளை பாடுபட்டு ஒன்று திரட்டி பல கட்டுப்பாடுகள் கொண்ட தரைப்படை கடற்படை வான்படைகள் அமைத்து சிறீலங்கா இந்தியா என இரு நாட்டு அரச இராணுவங்களின் தாக்குதல்களை உறுதியாக நின்று சமாளித்து, சில சமர்களில்; வெற்றியும் பெற்றிருந்தும், இரண்டாயிரத்து ஒன்பது மே மாத காலப்பகுதிகளில் திடீர் என முள்ளி வாய்க்காலில் புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் காரணம் என்ன? என்பனவே தமிழர்களை இன்று ஆட்டிப் படைக்கும் கேள்விகளாகும்.
புலிகளின் பூச்சிய அரசியல் ஞானமும் போதிய சூழ்ச்சி தந்திரோபாயங்கள் இல்லாமையும் கண்மூடித்தனமான கொலைவெறி வீரமும்தான் காரணங்கள் என்கின்றனர் சிலர், ஆலோசகராக இருந்த காலம்சென்ற அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களது தவறான பரிந்துறைகள்தான் காரணம் என்கின்றனர் சிலர், முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா, மாத்தயா, கிட்டு, பொட்டம்மான், போன்றவர்களின் தான்தோன்றி தனமான, தலைமைக்கு அடங்காத நம்பிக்கைத்துரோக செயற்பாடுகள்தான் காரணம் என்கின்றனர் இன்னும் சிலர், தலைவர் பிரபாகரனின் பாசிசவாத, அதாவது சர்வாதிகார, மற்றவர் கருத்துக்களை மதிக்காத, தீவிரவாத, தேசியவாத அரசியல் சித்தாந்தங்கள் தான் காரணங்கள் என்கின்றனர் பலர். இவ்வாறாக போராட்ட தோல்விக்கு பலரும் பல காரணங்களை சொல்வதால் நிச்சயமாக அவ்வியக்கத்தினுள் இருந்த மேற்சொன்ன அத்தனை குறைபாடுகளும்தான் தமிழர் அழிவுகளுக்கு காரணங்களாக இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை சரியான இடங்களில், அதாவது விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஆரம்ப காலம் முதல் இறுதிவரையில் நெருங்கிய தொடர்புடன் இருந்தவர்கள் யாரிடமாவது இருந்து அறிந்து கொள்வதுதான் சரியான வழி. அவற்றை தருபவர்களும் சுயநலமற்றவர்களாக, நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருப்பதும் மிக அவசியம். அப்படிப்பட்டவர்கள் யாரும் இருக்கின்றனரா? என அங்கலாய்த்து தாவித்திரியும் பரம் ஜியின் குரங்கு மனத்தின் இம்சைகளை ஓரளவிற்கு அடக்க உதவும் வகையில் வெளிவந்திருந்தது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினனாக பிரபாகரனுடன் இருந்து ஒன்றாக செயற்பட்ட ஜயர் என அழைக்கபடும் கணேசன் எழுதியிருந்த “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”; எனும் புத்தகம். அப்புத்தகம் கையில் கிடைத்த நாள் முதல் தனது முயற்சிகளில் என்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல பரம் ஜியும் ஆயுத விடுதலைப்போராட்ட ஆரம்பம் மற்றும் தோல்விகளுக்கான உண்மை காரணங்கள் தேடி அதனுள் மூழ்கினான்.
பதிவுகளில் முதல் சில பகுதிகளை கடந்து செல்லு முன்னமேயே, டொரோண்டோவில் நடைபெற்ற அப்புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய பலர் புலிகள் உட்பட்ட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தும் அப்புத்தகத்தின் ஆசிரியரான ஜயரைப்பற்றி உயர்வாக பேசி, பரம் ஜியின் மனதில் அப்போதிருந்த ஜயர் பற்றிய சந்தேகங்களை, அவர் நேர்மையானவர்தான என்பன போன்ற, தீர்த்திருந்தமையை உறுதி செய்யும் வகையில் அவரது எளிமையான எழுத்து நடையும், நடந்தவற்றை பற்றி அவர் எடுத்து சொன்ன பாணியும் காணப்பட்டன.
முக்கியமாக அன்று இளவயதில் அறியாப்பருவத்தில் விடுதலை வேட்கையின் உந்துதல்களால் தான் உட்பட இயக்கம் சார்ந்த பலரும் செய்த தவறுகள் குற்றங்கள் காரணமாக தமிழ் மக்கள் அனுபவித்த தீராத துயரங்களுக்காக இன்று இதய சுத்தியுடன் மன்னிப்பு கேட்பது போன்று, சுயவிமர்சனமாகவே பதிவுகள் அமைந்திருந்தன.
அது, அப்புத்தகத்தினதும் எழுதியவரினதும் நம்பகத்தன்மையை அதிகமாக்கியது. ஜயரின் பதிவுகளும் எமக்கு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் விபரங்கள் பற்றி முழுமையாக எடுத்து சொல்லாத போதிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் அடித்தளத்தை அறிந்து கொள்ளும் வகையில், அவ்வியக்கத்தின் ஆரம்பகாலமான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதி காலம் வரையில் நடைபெற்ற பல முக்கிய விடயங்கள் பற்றி எடுத்து சொல்லுகின்றன.
இயக்கத்தில் ஒருவர் இருவராக சேர ஆரம்பித்து பின் சிறுகச்சிறுக பெருகி சேர்ந்தவர்கள் மத்தியில் ஈழவிடுதலை வேட்கையினை விவசாயப்பண்ணைகளில் வைத்து வளர்த்தெடுக்க முனைகையில் சந்தித்த மனித இயல்புகள் சார் பிரச்சனைகள், அவற்றால் உருவான தொல்லைகளை சமாளிக்க பட்டபாடுகள் என்பவை பற்றி விரிவாகவும், அக்காலங்களில் நடைபெற்ற பல வராலாற்று முக்கியத்துவங்கள் வாய்ந்த நிகழ்வுகள், இயக்கத்தின் முதல் கொலை, முதல் வங்கி கொள்ளை, முதல் அரசியற்படுகொலை, முதல் இராணுவ வெற்றி என பல முக்கிய விடயங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கின்றன.
புத்தகத்தை முடித்தபோது, விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிக்க நாவல் ஒன்றினை படித்தது போன்ற உணர்வினை கொடுத்தது. அதிலும் விடுதலைப்புலிகளின் முதல் இராணுவ ரீதியான தாக்குதலாக சொல்லப்படும் மடுப்பகுதி பண்ணையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு ஏப்ரல் மாதப்பகுதியில் நடை பெற்ற, ஒரு சாரதி உட்பட்ட நான்கு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலைகள், அதாவது பஸ்தியாம்பிள்ளை படுகொலை சம்பவம் பற்றி சொல்லுகையில் அதனை நேரே பார்த்தது அல்லது ஒரு விறுவிறுப்பான மர்ம திரைப்படத்தை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது.
இயக்கக்கட்டுப்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வந்த முகுந்தன் அல்லது உமா மகேஸ்வரன் ஊர்மிளா ஜோடியினரின் காதல் கொடுக்கல் வாங்கல் தொடர்புகள் பற்றி சொல்லும் போது விரசமற்ற விதத்தில் அதனை சொல்லியிருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஜயர் வெளியேறி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாகும் வரையில் நடைபெற்றவற்றின் பதிவுகள்வரையில் மட்டும் சொல்லப்பட்டுள்ள அப்புத்தக பதிவுகள் எண்பத்து மூன்று இனக்கலவர காலப்பகுதிகள் வரையில்கூட செல்லவில்லை என்பதுதான் கவலைக்கிடம்.
ஜயரின் பதிவுகளை வாசித்தபின் பரம் ஜி தேடிய பதில்கள் கிடைத்தனவா என எண்ணிப்பார்க்கையில் ஞாபகத்தில் வருவது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த “சிறு பிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது” என்னும் பழமொழி மட்டுமே.
சிறீலங்கா அரசுக்கு எதிராக என ஆரம்பிக்கப்பட்ட ஆயுத போராட்டம் திசை மாறி அதற்கு தேவையான மக்கள் சக்தியை மழுங்கச்செய்யும் வகையில் சிறுபிள்ளைதனமான, மன முதிர்ச்சி மற்றும் உணர்ச்சிக்கட்டுப்பாடுகள் குன்றிய போக்குகளான, சுயநலங்கள், பதவியாசைகள், போட்டிகள,; பொறாமைகள,; போட்டுகொடுத்தல்கள், காட்டி கொடுத்தல்கள், வஞ்சகங்கள், வால்பிடித்தல்கள், சந்தேகப்பயங்கள், போட்டி இயக்கங்களால் பாதகங்கள் உண்டாகாது பாதுகாத்தல் கருதி ஆரம்பித்த, மண்டையில் போடும் கலாசாரத்தால் தமிழர்களே தமிழர்களை பலிஎடுத்து தமிழினம் தற்கொலைக்கு ஒப்பாக சிறீலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட காரியங்களை இலகுவாக்கி கொடுத்திருந்தனர் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத விடலைகளின் கைகளில் தமிழர்கள் தலைவிதி சிக்குப்பட்டமைதான் கவலைக்கிடம். பேரினவாத அரசியல் சக்திகளால் தூண்டிவிடப்பட்ட சிங்களவர்களின் கைகளில் காலத்திற்கு காலம் சித்திரவதைப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்ட தமது இனத்தின் அழிவுகள் கண்டு வெகுண்டெழுந்திருந்த தமிழ் இளைஞர்கள் மனங்களில் போராட்ட ஆசைகள் விதைத்து கைகளில் ஆயுதங்கள் கொடுத்து அரசியல் வஞ்சம் தீர்க்க எண்ணிய வெளிநாட்டு சக்தியின் வலையில் விழுந்ததன் பலனாக தமிழ் இனத்தின் இரத்தம் அந்த மண்ணில் முப்பது வருட காலங்களுக்கு மேலாக ஆறாகப்பெருகி ஓடியது.
ஓடிய இரத்த ஆறு இறுதியில் முள்ளிவாய்க்கால் கடலில் சங்கமித்து அமைதி கண்டது. வேண்டுமானால் அம்மண்ணில் நடைபெற்ற அனர்த்தங்கள் அனைத்திற்கும் காரணம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என எவரும் சுலபமாக பழியினை அவர்மீது போட்டுவிடலாம.; காரணம், விடுதலைப்போராட்டம் அவரது தலைமையின் தோல்வியே.
ஆனால் இன்று எல்லாம்முடிந்துவிட்ட நிலையை கடந்து இன்னும் ஒரு ஜம்பதுவருட காலங்களின்பின்பிரபாகரன் யார்? எனில், வெள்ளையரை எதிர்த்து மடிந்த தமிழ் நாட்டின் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மற்றும் வாஞ்சிநாதன் போல, சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதப்போரிட்டு தமிழீழ தனிநாடு அமைக்க புறப்பட்ட மாவீரன் பிரபாகரன் என்றுதான் சரித்திரம் சொல்லும்;. ஆனால் வீரம் என்ற பெயரில் நாம் தமிழர், வீர மறவர். தமிழ் உணர்வு கொம்புகள் என மார்தட்டி காடைத்தனங்களை பேச்சிலும் செயலிலும் காட்ட எத்தனிப்பவர்கள் பற்றி தமிழர்கள் இனி விழிப்புடன் இருத்தல் அவசியம்.
ஓவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டிய புத்தகம் ஜயரின் “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”. டொரோன்ரோ தமிழர் வகை துறை நிலையம் அல்லது தொலைபேசி இலக்கம் 416-450-6833 றுடன் தொடர்பு கொண்டு பிரதிகளை பெற்று கொள்ளலாம். ஜயரின் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள பேபி சுப்பிரமணியம்,
கணேஸ் வாத்தி, நாகராஜா, சந்ததியார், காலம் சென்ற திரு. தா. திருநாவுக்கரசு பா. உ. போன்றவர்களில் சிலர் காங்கேசன்துறையில் பரம் ஜியின் இளமைக்கால வாழ்க்கையில் மிக நெருங்கிய அறிமுகம் கொண்டிருந்தவர்கள். போராட்ட ஆரம்பகால நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்தும் ஈடுபட்ட பலரின் தொடர்பிருந்தும்;
பரம் ஜி ஏன் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை என்பது பற்றி பின்பு.
பார்க்கலாம்.
பார்வைகள் தொடரும்
உங்கள் கருத்துகளுக்கு 416-230-1107
http://www.thangatheepam.com/TamilPDFFiles/24April%2059793.pdf
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை « வரலாறு » என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”
விமர்சன ….கருத்தாடல்
இசிதோர் பெர்ணான்டோ
சஷீவன்
வாசுதேவன்
சத்தியசீலன்
அசோக் யோகன்மற்றும்
சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
) தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை (
காலம்: 29.04.2012. ஞாயிறு.
பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி
இடம்: SALLE POLONCEAU
25 , RUE POLONCEAU
75018 PARIS.
மெற்றோ: LA CHAPELLE
பாதை: place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
அசை – சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் – பிரான்ஸ்
06 19 45 02 76
asai.marx@gmail.comசென்னையில் நூலைப் பெற்றுக்கொள்ள
கீழைக்காற்று புத்தகநிலையம், 10, ஒளலியா தெரு, எல்லீஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-2, விலை 130.
பிரித்தானியாவில் பெற்றுக்கொள்ள தொடர்புகள்:
inioru@gmail.com