80 களின் பின்னர் சோவியத் யூனியனின் சரிவிற்குப் பின்னர்
உலகமயமாதலின் பொருளாதார நோக்கங்களை நிலைநாட்டும் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள இத்தன்னார்வ நிறுவனங்கள் நிதி ரீதியாயக உலகமய ஆதரங்களையே அடிப்படையாகக் கொண்டது.
சந்தை மூலதனச் சுரண்டலுக்கும் சர்வாதிகார ஆட்சி முறைமைக்கும் இடையே ஒரு மூன்றாவது பாதையைப் பிரதினிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற இத் தன்னார்வ நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் சந்தையையும் மூலதனச் சுரண்டலையும் எதிர்மறையில் வலுப்ப்படுத்தலே ஆகும். தன்னார்வ நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில் நிகழ்த்தும் சர்வதேசியக் கூட்டங்களில் எல்லாம் ஒலிக்கும் குரல் “மாற்று வளர்ச்சி” யும் அதற்கான நுண்பொருளாதாரக் கொள்கையும் ஆகும். தம்மைக் குடிமைச் சமூகத்தின்(Civil Society ) முன்னோடிகளாகப் பிரகடனப்படுத்தும் இந்த நிறுவனங்களின் அரசியல் பிரசன்னம் மூன்றாமுலக நாடுகளின் அரசியல் போக்கில் ஏராளமான எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இத் தான்னார்வ நிறுவனங்கள் இடதுசாரிகளுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் பெரும் சவாலாக அமைகிறார்கள். இவர்கள் குறித்ததும் இவர்களின் சிந்ததாந்தம் குறித்ததுமான பகுப்பாய்வு இன்றைய அரசியல் சூழலில் அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.
குடிமைச் சமூகம்(Civil Society )
தன்னார்வ நிறுவனங்களின் மிகப் பிரதான கோட்பாடுகளில் குடிமைச் சமூகம் குறித்த கருத்தாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. குடிமைச் சமூகம் என்பது ஒரு ஒற்றைப்பரிமாண சமூகம் அல்ல. பொருளாதார வர்க்க ரீதியாக எந்தத் தெளிவுமற்ற, குடிமைச்சமூகம் தொடர்பான கருத்தியல் தன்னார்வ நிறுவனங்களின் நலன்களை ஏகாதிபத்திய நலன்களோடு இணைக்கிறது.
ஒரு புறத்தில் உள்நாட்டு அல்லது தேசிய அரசுக்கள், மறுபுறத்தில் அரசின் ஆட்சிக்குட்பட்ட மக்கள். இந்த இரண்டிற்குமிடையில் கிராம சபைகள், மக்கள் சபைகள், ஆலயங்கள், திருச்சபைகள், ஜனநாயக அமைப்புக்கள் என்பன அமைந்திருந்ததன. இவைகள் அரசு-மக்கள் இணைப்பு சக்திகளாகத் திகழ்ந்தன. இந்த இடைநிலை அமைப்புக்கள் குறித்தளவு சக்தி படைத்தவையாகவும், பல சந்தர்ப்பங்களில் அரசாங்கதின் மீது ஆளுமை செலுத்த வல்லனவாகவும் அமைந்திருந்தன.
இவ்வாறான அமைப்புக்களை ஏகாதிபத்திய நாடுகளாலும், பெரும் பண முதலைகளாலும் உதவி வழங்கப்படும் NGO களால் பிரதியீடு செய்வதன் ஊடாகவும், அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவதனூடாகவும், எகாதிபத்திய நாடுகள் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தன. இதனூடாக இந்த நாடுகளின் அரசையும் அரசமைப்பையும் தமது ஆதிக்கதிற்குட்படுத்தும் செயற்திட்டமே NGO களின் பிரதான பயன்பாடாக அமைந்தது. இவ்வைகையான அமைப்புக்கள் தான் குடிமைச் சமூகம் என அழைக்கப்படலாயின.
குறித்த அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட குடிமைச்சமூகங்கள் குறித்துப் பேசுவதன் மூலம் சமகால வர்க்க முரண்பாடுகளையும் அதை நோக்கி எழக்கூடிய சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் மூடிமறைத்து ஆளும் வர்க்கத்திற்கும் அதிகார சக்திகளிற்கும் ஏகாதிபத்தியங்களிற்கும் மிகப்பெரிய சேவையை தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்தியாவில் இன்று இலங்கையிலும் தலித் இயக்கங்கள், தலித் அடையாளங்கள் எல்லாம் இந்தக் குடிமைச் சமூக வரம்புக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
குடிமைச் சமூகத்தின் தோற்றம்
குடிமைச் சமூகம் ஒன்றை உருவாக்குவதும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதும், நிர்வகிப்பதும் என்ற கோட்பாடானது NGO களால் 1980 இற்குப் பிற்பட்ட காலப் பகுதியிலேயே, அமரிக்காவும் அதன் உளவுப்படையான CIA உம்
தனது நேரடியான ஆளுமைக்குள்ளும் ஆக்கிரமிபிற்குள்ளும் ஏகாதிபத்திய நாடுகள் ஏனைய நாடுகளை உட்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடானது NGO களால் இன்று வறிய நாடுகளில் நடைமுறப்படுத்தப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் ஆபிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமரிக்க நாடுகளிலும், அமரிக்க அல்லது ஐரோப்பிய சார்பு சர்வாதிகாரிகளையும் ராணுவ ஆட்சியாளர்களையும் பலப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் சமூகக்(குடிமைச் சமூகம்) கருத்து உபயோகப்படுத்தப்பட்டது. இதற்குச் சற்றுப் பின்னதான காலப்பகுதியில் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கம்யுனிசத்திற்கு எதிரான அரசுகளுக்கு ஆதரவு என்ற தலையங்கதுள் மக்கள் சமூகங்கள் ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டன. பங்களாதேஷ், ஸாயீர், கென்யா, சிலி, எத்யொப்பியா இவ்வாறான கட்டுமானங்களூடாகச் சிதைக்கப்பட்ட நாடுகளூக்குச் சிறந்த உதாரணங்கள்.
இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் NGO என்ற பெயரில் மக்கள் சமூகங்கள் மக்களை அவற்றின் அடிமைகளாகப் படிப்படியாக மாற்றிச் செல்கின்றன. இறுதியில் அரசின் அதிகாரங்களை தமது கைகளுக்குப் படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. அரசுகளின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் தலையிட்டு, அவற்றை உருவாக்கிய ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிகழ்ச்சி நிரலுக்கு உகந்ததாக மாற்றிக் கொள்கிறது.
பார்தா சட்டர்ஜீயும் சார்ல்ஸ் ரெய்லரும் Model of civil society என்ற நூலில் மக்கள் சமூகத்திற்கான மூன்று நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.
1. அரசாங்கம் சாரா கூட்டுக்களை உருவாக்கல்.
2. இவ்வகையான அரசு சாராக் கூட்டமைப்புக்களை இறுக்கமான அமைப்பாக்கல்.
3. இவ்வ்மைப்புக்களூடாக அரச கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தல்.
(Taylor and Saterjee 1990 : 90-118) ஆக NGO களினுடாகக் கட்டமைக்கப்படும் மக்கள் சமூகத்தை அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக, அரசைத் தமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் கருவியாக, ஏன் புதிய அரசுக்களைக் கூட உருவாக்கும் ஆயுதமாகப் பலப்படுத்துவதே ஏக்கதிபத்திய அரசுகளதும், மூலதனச் சொந்தக் காரர்களதும், அதன் தத்துவார்த்த கர்த்தாக்களதும் பிரதான நோக்கமாகும்.
குடிமைச்சமூகங்களை உருவாக்கும் செயற்பாடு:
ஏற்கனவே உருவாகியிருந்த கிராம மட்ட அமைப்புக்களான சன சமூக நிலையங்கள், அவற்றின் கூட்டமைப்புக்கள், பெண்களமைப்புக்கள், திருச்சபைகள், மத அமைப்புக்கள், கோவில்கள் போன்றவற்றைப் பலப்படுத்தல் என்பதும், மறு சீரமைப்பதும், அவற்றை அமைப்பு மயப்படுத்தலும் ஒரு புறத்திலான NGO களின் வேலைத்திட்டங்களாக அமைய, மறுபுறத்தில் பல்லகலைக் கழகங்களூடாகவும், ஆய்வு அமைப்புக்களூடாகவும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளூடாக மிக உயர் வடிவிலான மக்கள் சமூக கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வகையான ஆய்வுகளுக்கென்றே பெருந்தொகைப் பணத்தை மேற்கத்தய அரசுக்களும் உதவி நிறுவனங்களும் வாரியிறைக்கின்றன.
இலங்கையில் ICES, CPA, MARGA போன்ற ஆய்வமைப்புக்கள் மிகப் பெரியளவிலான பண உதவியைப் பெறும் அமைப்புக்களாகவும், மக்கள் சமூக உருவாக்கத்திற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வு நிறுவனங்களாகவும் அமிந்திருக்கின்றன.
புதிய ஆய்வுகளூடான அமைப்புக்களாக, வேறுபட்ட சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் அமைப்புக்களாக மக்கள் சமூகங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே நீண்டகாலமாக மக்கள மத்தியிலிருந்த அமைப்புக்களை உள்வாங்கியும் அழித்தும் புதிய அமைப்புக்களை உருவாக்கியும் மக்கள் சமூகங்கள் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் அமைப்புக்களாக மாற்றம் பெற்றன. மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், தலித் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், நலன்புரிச் சங்கங்கள், ஜனநாயக அமைப்புக்கள், சமாதான ஒன்றியங்கள், தகவல் மையங்கள் போன்ற பன்முகத் தன்மை கொண்ட வேறுபட்ட அமைப்புக்கள் தன்னார்வ – அரசு சாரா NGO களாக பரிணாமமடைந்ததன. மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை முன் வைத்து இவ்வமைப்புக்கள் NGO களாக உருவெடுத்துள்ளன.
முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பாக ஆழமான தெளிவான ஆய்வு அருகிப்போன துரதிருஷ்ட வசமான சூழலில், ஏகாதிபத்தியங்களின் வால்களான NGO கள் அவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு முழு உலகையும் சீரழித்து வருகின்றன. வறிய நாடுகள் விஞ்ஞானம் தொடர்பான முடிபுகளுக்கு வருவதற்குக் கூட இந்த NGO களின் கைதான் மேலோங்கியுள்ள நிலை காணப்படுகிறது.
மார்க்சிய வேலைத்திட்டங்களின் பிரதான பகுதியான வர்க்க அடிப்படையிலான வெகுஜன அமைப்புக்களையும், மக்கள் திரள் அமைப்புக்களையும் சீர்குலைக்கும் வகையில் அவற்றின் அதே வகை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் குடிமைச் சமூக அமைப்புக்கள் தற்காலிகமாகப் புரட்சிகர வேலைத்திட்டங்களைப் பிந்தள்ளுவதில் குறித்த வெற்றியை அடைந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
‘அரசியல் சார்ந்த விஞ்ஞான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் குடிமைச் சமூகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணங்களாக சுற்றுச் சூழல் அழிவு, உயிரியற் தொழில் நுட்பம் என்பவற்றைக் குறிக்கலாம்’ (List 1994 730-760). ( Feminist critique of science and politics and the ‘civil society’)
தன்னார்வ நிறுவனங்களின் அரசியல்:
யதார்த்ததில் அரசு சாரா நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாட்டு அரசுகளின் நிதி மூலதனத்தில் இயங்குகின்ற அரசு சார்ந்த நிறுவனங்களே. உலக வங்கி, உலக நிதி நிறுவனம், பன்னாட்டுக் கூட்டிணைவுக் குழுமங்கள், தனியார் வங்கிகள், பல்தேசிய மூலதன உடமையாளர்கள், ஆசிய வங்கி போன்ற இன்னோரன்ன நிறுவனங்கள் தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது மட்டுமல்ல அவற்றை நெறிப்படுத்தவும் செய்கின்றன. உள்ளூர் பிற்போக்கு அரசுகளின் தனிப்பட்ட துணை ஒப்பந்தக் காரர்கள் போலவும் இவர்கள் செயற்படுகிறார்கள்.
அரசு அதிகாரத்திற்கு எதிராக உள்ளூர் அதிகாரத்தை முன்வைக்கும் தன்னார்வ அமைப்புக்களின் சித்தாந்தம், உள்ளூர் மக்களை அரசின் ஆளுமையைக் கடந்து உலக முதலாளித்துவத்தோடு இணைக்கும் பணியைச் செய்து முடிக்கிறது.
அரசு எதிர்ப்பு வாதம், ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதம், சமூகப் பிரச்சனைகள் என்ற இன்னோரன்ன அனைத்து சமூக முரண்பாடுகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொன்டுவரும் தன்னார்வ அமைப்புக்கள் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைத்துப் புரட்சிகர அமைப்புக்களிற்கும் உள்ளூர் மக்களிற்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டித்து சமூகக் கொந்தளிப்பைத் தற்காலிகமாகத் தணிக்கும் முயற்சியை முன்மொழிகிறார்கள்.
மனிதாபிமானிகளும், ஜனநாயக வாதிகளும், புத்தி ஜீவிகளும் NGO களின் பணியாளர்களாக அதி உயர் ஊதியத்துடன் உள்வாங்கப்படுகின்றனர். இதனூடாக, ஏகதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், மக்கள் யுத்தங்க்ளையும் தலைமை தாங்கவல்ல அல்லது ஆதரவு சக்திகளாக உருவாகும் சாத்தியமுள்ள அறிவு ஜீவிகளும் இயங்கு சக்திகளும் NGO களால் உள்வாங்கப்படுகின்றனர்.
குடிமைச் சமூகக் கோட்பாட்டுடன் கருத்தொற்றுமை கொள்ளும் பின் நவீனத்துவம் போன்ற ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான கோட்பாடுகளுடன் கைகோர்த்துக் கொள்ளும் ஏகாதிபத்தியம் மார்க்சியத்திற்கு எதிராகவும், ஒடுக்கப்படும் மக்களின் அரசியலுக்கெதிராகவும் இக்கோட்பாடுகளை முன் நிறுத்துகின்றன. NGOகள் மிகவும் தெளிவான திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே தமது வேலை முறைகளை நகர்த்திக் கொள்கின்றன.
முரண்பாடுகளைத் தூண்டும் தன்னார்வ அமைப்புக்கள்:
சமகால சமூக விஞ்ஞானிகளான Jurgen, Habermas போன்றோர் மக்கள் சமூகக் கருத்தினூடாக எவ்வாறு அரசிற்கும் மக்கள் மீதான அதன் ஆளுமைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுத்தப்படுகிறது என்றும், மக்கள் மத்தியிலான முரண்பாடு எவ்வாறு கூர்மைப்படுத்தப்பட்டு ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மிகத் தெளிவாகவே விபரிக்கின்றனர்.
இவ்வாறான முரண்பாடுகளைக் கண்டறிந்து பயன்படுத்தும் போக்கானது பல சந்தர்ப்பங்களில் நேர் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகத் தென்படினும், ஏகாதிபத்தியப் பணமுதலீட்டில் உருவாகும் இந்த NGO கள் சீர்குலைவுகளை மட்டுமே ஏற்படுத்தி வருகின்றன.
உள்ளூர் சீர்திருத்தவாதிகள், பின்நவீனத்துவ வாதிகள், இடதுசாரி புத்தி ஜீவிகள் போன்ற தேசிய வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதரவு சக்திகளாக அமையக்கூடிய இவ்வாறான மக்கள் சமூகக் கருத்தமைப்பினூடாக உள்வாங்கப் படுகின்றனர். இவர்களே NGO களின் கர்த்தாக்களாக ஏகாதிபத்தியப் பணத்தால் உள்வாங்கப்படுகின்றனர்.
இலங்கையில் அறியப்பட்ட பின்நவீனத்துவ வாதியான ராதிகா குமாரசுவாமி இன்றைக்கு அன்னிய நிதியில் உருவான NGOகளின் முக்கிய புள்ளி. ஜெயதேவ உயாங்கொட, சுனிலா அபயசேகர போன்ற இடதுசாரிப் புத்தி ஜீவிகள் மேலும் குறித்துக் காட்டத்தக்கவர்கள்.
சார்ல்ஸ் ரெயிலரும் சட்டர்ஜீயும் தமது நூலில் கோடிடுவதுபோல சிவில் சமூகங்களான NGOகளின் அடிப்ப்டையான நோக்க்கங்களில் ஒன்று அரசு அதிகாரத்தை NGO ஊடாகப் பறித்தெடுத்து அதனை ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதாகும். ஆனால் சிவில் சமூகத்தை உருவாக்கும் நிகழ்ச்சிப் போக்கில் மூன்று பிரதான மாற்றங்களுக்கு முழுச் சமூக அமைவும் உட்படுத்தப்படுகின்றது.
1. மக்கள் மத்தியிலான பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி அவற்றை அமைப்பாக்கல்.
2. அரச அதிகாரத்தின் பலமின்மையாக்கல்.
3. அரச அதிகாரத்தை முற்றாக NGO கைகளிற்கு மாற்றுதல
இந்த வகையில் அரசியலற்ற குடிமைச் சமூகங்களை உருவாக்குதலுக்கும் அல்லது ஏற்கனவே உருவான குடிமைச் சமூகங்களைப் பயன்படுத்தலுக்கும் பாரிய நிதியுதவி வழங்கப்படுகின்றது.
தலித்திய அமைப்புக்கள், பெண்களமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள், சமாதான ஒன்றியங்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் இந்த வகையான செயற்பாடுகளுக்குப் பயன்பட்டுப்போகும் சில அமைப்புக்களாகும்.
‘ தமது அரசியலற்ற தன்மையின் மூலம் தன்னார்வ நிறுவனங்களின் அமைப்பும் இயல்பும் ஏழை மக்களை முடக்கி அவர்களிடமிருந்து அரசியலை அகற்றும் வேலையைச் செய்கின்றன.
அதிகரிக்கும் ஆதிக்கம்:
கடந்த பத்தாண்டுகளாக புற்று நோய் போல வறிய மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட இந்த NGO களின் ஆதிக்கம் பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்திற்குச் சற்றுப் பின்ன்னதான பகுதியிலேயே உருவாகிவிட்டதெனலாம். ‘ NGO களின் அதிகரிப்பு பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. புதிய நிகழ்ச்சி நிரல் கொள்கை ( New Policy Agenda) என்ற திட்டத்திற்கு வறிய நாடுகளுக்கான உதவிகள் மட்டுமல்ல ( Organization for Economic Cooperation and Development) நாடுகளும் உட்படுத்தப்பட்டன. ‘ (Robinson : 1997 :பக்3) (Privatising the voluntary sector : NGO as public service contractors ). நாடுகளும் உட்படுத்தப்பட்டன. ‘ (Robinson : 1997 :பக்3) ( Privatising the voluntary sector : NGO as public service contractors).
பனிப் போர்க் காலத்திற்குப் பின்னர் நெருக்கடிக்குள்ளான உலக முதலாளித்துவத்தை மறுபடி தூக்கி நிறுத்த ‘உலக மயமாதல்’ என்ற புதிய முதலாளித்துவ மறு சீரமைப்பு தீவிரப் படுத்தப்பட்டது. இதன் பின்னர் வறிய நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் மட்டுமல்ல, அதற்கான அரசியலையும் அமரிக்க அணியின் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தின் முக்கிய பகுதியாகவே இந்த NGOகள் செயற்படுகின்றன.
இது வரையில், மூன்றாமுலக நாடுகளின் அரச பொதுச் சேவையையும், அவற்றில் மக்களின் பங்கும் இந்நாடுகளில் ஏற்படுத்த வல்ல பொருளாதார மூலதன வளர்ச்ச்சியைக் கட்டுப்படுத்தி அழிவுக்கு உள்ளாக்குவதையே இந்த அமைப்புக்களின் பின்னணியிலுள்ள நோக்கமாக இருந்தது. உலக மயமாதலைத் தீவிரப்படுத்தி நாடுகளைச் சுரண்டும் அமைப்பு முறை உருவாக்கப்பட்ட பின்னர், இலாபமற்ற ஆனால் இலாபத்தை ஏகபோக முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்படுத்தவல்ல புறச் சூழலை உருவாக்குவதே NGO களின் சந்தையை மையப்படுத்திய நோக்கமாகவிருந்தது.
‘புதிய நிகழ்ச்சி நிரல் கொள்கையின் (New Policy Agenda) தத்துவார்த்த அடித்தளமாக அமைந்தது நவ-தாராளவாதப் பொருளாதரக் கொள்கையும், தாராளவாத ஜனநாயகக் கொள்கையுமே ( Moore: 1993 : 3) என்கிறார் ‘Good Governance? : Introduction’ என்ற தனது நூலில் திரு.மூர்.
உதவிகள் நிராகரிக்கப்பட்டு எகாதிபத்தியங்களால் மூன்றாமுலக நாடுகள் மிரட்டப்பட்டன. தவிரவும், ஏகாதிபத்தியங்கள் சொல்லும் அரசியல் முறை மட்டும் தான் இந்த நாடுகளில் நடைமுறைப் படுத்தப்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. ‘அவர்கள் சொல்லும் ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்றாமுலக நாடுகள் மீது நிபந்தனை விதிக்கப்பட்டது.’(Blair 1997:பக்23) ( Democratization and Civil Society: Relating theory to practice).
தன்னார்வ நிறுவனங்களின் பொற்காலம்
சமூகக் கொந்தளிப்பும், மக்கள் மத்தியில் அரச அதிகாரத்தின் மீதான வெறுப்புணர்வும் அதிகரிக்கும் காலகட்டத்திலேயே தன்னார்வ நிறுவனங்களின் தமது செயற்பாடுகளை அதிகரிக்கின்றன. மழைக்காலக் காளான்களைப் போல பெருகி வளர்கின்றன. இலங்கையில் 80 களின் இறுதியில் ஜே.வீ.பீ இன் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட பின்னர், அரசின் மீது மக்கள் சிங்கள மக்கள் வெறுப்படைந்திருந்த 90 களின் ஆரபத்திலேயே பன்னாட்டு நிதியில் உயிர்வாழும் பல முன்னணித் தன்னார்வ நிறுவனங்கள் தீடீரென முளைவிட ஆரம்ப்பித்தன. இக் காலப்பகுதியிலேயே, ஜேவீபீ உடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த புத்திஜீவிகளான ஜெயதேவெ உயாங்கொட, சுனந்த தேசப்பிரிய போன்றோர் சர்வதேசத் தன்னார்வ நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டனர்.
ஒரு புறத்தில் முற்போக்கான அரசியல் கோசங்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இன அடக்குமுறைக்கு எதிராகவும் முன்வைக்கும் இவர்கள் மறுபுறத்தில் அம்முழக்கங்களின் போர்க்க்குணத்தையும் புரட்சிகர முன்னகர்வையும் மட்டுப்படுத்தும் பணியையும் மறுதலையாக மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில் கூட மாவோயிஸ்டுகளின் அரசியல் எதிர்பியக்கங்களின் முன்னணிப்பகுதியாக மாறிய நிலையிலேயே, உண்மை கண்டறியும் குழு, மனித உரிமைகள் குழு போன்ற அமைப்புக்கள் பிரசன்னமாகி, மக்களை புரட்சிகர இயக்கங்களை நோக்கி அணிதிரள்வதைத் தடைசெய்து மட்டுப்படுத்தப்பட்ட அரச எதிர்ப்புக் சுலோகங்களை முன்வைக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயகம் சர்வாதிகமாக மாறும் காலகட்டங்களில் வேண்டுமானால் இவர்கள் ஏதோ சமூகப்பணி மேற்கொள்பவர்கள் போன்று தென்படலாம் ஆனால் நீண்டகால நோக்கில் மிகுந்த அபாயகரமானவர்கள்.
குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, போன்ற பெண்ணிய வாதிகளும் கூட , இந்திய வாக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூறுகளும் கூட தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலுக்குப் புரட்சியையும் மக்கள் போராட்டங்களையும் விற்பனை செய்கிறார்கள்.
பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களும், ஆய்வாளர்களும் கூடத் தன்னார்வ நிறுவனங்களின் கூறுகளாகச் செயற்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இவர்களின் ஆய்வுகளை உள்வாங்கி, அவற்றை ஏகாதிபத்திய அதிகாரத்திற்கு எதிரான விமரிசன அடிப்படையில் எதிர்கொள்வதே எமது கடமை. தவிர, செயற்பாட்டுத் தளத்தில் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பை முற்றாக நிராகரித்து வர்க்க அடிப்படையிலான மக்கள் அமைப்புக்களை ஊக்கப்படுத்தலே இவ்வமைப்புக்களை முற்றாக நிர்மூலமாக்குவதற்கான ஒரே வழிமுறை.
“புரட்சிகர சமூக இயக்கங்களின் அரசியல் வளர்ச்சியும் போராட்டங்களும் ஒரு பணம்கொழிக்கும் பண்டத்தை வழங்குகின்றன. அப்பண்டத்தையே ஐரோப்பிய அமரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ள தனியார் பொது நிறுவனங்களுக்கு முன்னாள் புரட்சிகர, போலி, ஜனரஞ்சக அறிவுஜீவிகள் விற்கிறார்கள்; அவை பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் நிதியளிக்கப்படுகின்றன; அவை இந்த அறிவு ஜீவிகளின் நலன்களைப் பேணுகின்றன; எனவே அவர்கள் மீது அக்கறை காட்டுகின்றன. ” என்கிறார் ஜேம்ஸ் பிராட்ஸ்.
ஒரு கணணிக்குப் முன்னாலிருந்து திட்ட முன்மொழிவுகளை எழுதுவதிலிருந்து இந்த முன்னாள் புரட்சிகர அறிவுஜீவிகளின் தன்னார்வ நிறுவனங்கள் ஆரம்பமாகின்றன. தாம் மக்களின் போராட்ட உணர்வை தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம், பெண்ணியம், தலித்தியம் போன்ற முற்போக்கான, புத்திஜீவிகள் ஏற்கனவே பரீட்சயமான சொல்லாடல்களை நிதி நிறுவனங்களிற்கு விற்பனை செய்து, பெரும் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளும் பணத்திலிருந்து, வேறுபட்ட நிதிக் கொடுப்பனவு நிறுவனங்களை நோக்கி இவர்கள் பயணம் செய்கின்றனர். அமசர்டாம், புரூசெல், வெனிஸ் போன்ற உலக நகரங்களுக்கெல்லாம் தமது முன் மொழிவுகளோடு பயணம் செய்து மேலும் நிதி திரட்டிக் கொள்கின்றனர்.
தம்மைத் தாமே மக்களின் பிரதிநிதிகளாகப் பிரகடனப் படுத்திக்கொள்ளும் இவர்கள் மக்கள் அதிகாரம், குடிமக்கள் பங்கேற்பு, பெண்ணுரிமை (பெண்விடுதலை அல்ல, நுண்ணரசியல், நுண் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் ஊடாக தன்னார்வ நிறுவனங்களின் தலைவர்களாகிக் கொள்கின்றனர்.
2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து நிதி வழங்கல் என்பது தன்னார்வ நிறுவனங்களிற்கு மட்டுமல்லாது, அவற்றின் அமைப்பை வகை மாதிரியாகக் கொண்ட அமைப்புக்களை உருவாக்கும் தனி நபர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் கூட பெருந்தொகைப் பணம் வழங்கப்படுகிறது என்பது புதிய அணுகுமுறையாகும்.
எது எவ்வாறாயினும், தன்னார்வ நிறுவனங்கள் ஒரு புது வகையான சார்புத் தன்மையுள்ள கலாச்சாரத்தை, வளர்த்தெடுக்கின்றன. அமைப்பு மயப்படுத்தப்பட்ட இயக்கங்களிற்கு மாறாக, செயற்திட்டம் சார்ந்த தற்காலிக அமைப்புக்களை வலியுறுத்துகின்றன.
மார்க்சிய வாதிகளையும், இடது சாரிகளையும், கற்பனா வாதிகளாக, செயற்திட்டமற்ற கற்பனைப் புரட்சி நடத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.
ஈழப் போராட்டமும் தன்னார்வ நிறுவனங்களும்
இலங்கையில் 1980 களின் ஆரம்பத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் உருவாகின. தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கூர்மையடைந்த போது இவை அவற்றின் மீது பலவழிகளில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. இக் காலப்பகுதியிலே குமாரிஜெயவர்தன சாந்தி சச்சிதானந்தம் போன்ற இடதுசாரி புத்திஜீவிகள் அன்னிய நாடுகளின் பெரும் பண உதவிகளின் பின்னணியில் தமது சொந்தத் தன்னார்வ நிறுவனங்களை ஆராம்பித்தனர். இவர்களோடே பல இரண்டா நிலை போராட்ட சக்திகள் உள்வாங்கப்பட்டனர்.
பின்னதாக 90 களில் ஜே.வீ.பீ இன் ஆயுதப்போராட்ட காலகட்டத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் தென்னிலங்கை சிங்களக் கிராமங்களை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டன.
1983 இற்கும் 1986 இற்கும் இடைப்பட்ட பகுதியில் சிலி நாட்டில் எழுந்த மக்கள் எழுச்சிகளின் போது, இவ்வெழுச்சிகளைத் தணிக்கும் வகையில் “நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிசை மக்களின் வன்முறை நாட்டத்திற்கு எதிரான நடவடிக்கை” என்ற தலையங்கத்தில் தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
“புலிகளின் பின்னர்”
புலிகளின் அழிவின் பின்னதான புதிய விரக்தியும் கொந்தளிப்பும் நிறைந்த சூழலில் போராட்டங்களையும் புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் நோக்கில் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அதன் தனிநபர்களுக்கும் பாரிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் எதிர்ப்புணர்வைத் தணிக்கும் வகையிலான அரசியலை தன்னார்வ நிறுவனங்களும் அதன் நிற்வனர்களுமே கையாட்சி செய்கின்ற நிலை உருவாகியுள்ளது.
வன்னி குறு நிலப்பரப்பில் இரண்டு நாட்களுள் மொத்த மனித
ஜனநாயகம் குறித்தும் மனிதாபிமானம் குறித்தும் வாய்கிழியக் கூக்குரலிடும் மேற்கு நாடுகளும், அய்கிய நாடுகள் சபையும், மனிதாபிமான அமைப்புக்களும், சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும், அங்கும் இங்குமாக ஒரிரு கண்டனங்களோடு தம்மை எல்லைப்படுத்திக் கொண்டன. புலிகளும் அவர்களூடாகத் தமிழ் பேசும் மக்களும் நம்பியிருந்த தமிழக அரசியல் வாதிகளும், அமரிக்க ஐரோப்பிய அரசியல் வாதிகளும் ஒருசில அறிக்கைகளோடும், உணர்ச்சிப் பேச்சுக்களோடும் தம்மை நிறுத்திக்கொள்ள இலங்கை அரசு தான் திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது.
இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர் நிலவும் அரசியல் அமைப்பில் நம்பிக்கை இழந்து போயுள்ளனர். உலக அதிகார அமைப்புக்களை எல்லாம் நிராகரித்து மக்கள் உணர்வுள்ள போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அம்மக்கள் பிரிவின் முன்னோடிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். புலம் பெயர் தமிழர்களும், தமிழ் நாட்டின் அரசியல் முற்போக்கு சக்திகளும் இதே வகையான சிந்தனைப் போக்கினை உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவ்வகையில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியலை இனம் கண்டுகொண்ட மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து புதிய மாற்று அரசியலின் தேவை உணரப்பட்ட நிலையில், இவ்வாறான அரசியல் தமது நலனுக்கு எதிரானது என இனம் கண்டுகொண்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் தன்னார்வ நிறுவனங்களிற்கு தமது நிதி வழங்கலை முடுக்கி விட்டுள்ளனர்.
மூன்றாம் துறை (3rd sector) அல்லது மாற்று துறை என உலக வங்கியால் குறிப்பிடப்படும் தன்னார்வ நிறுவனங்களின் ஆதரவில் சுவிற்சிலாந்தில் இலங்கை அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து இலங்கை அரசியலின் வரலாற்றில் மிகப்பெரிய பொருட் செலவில் மாநாடு ஒன்று நடைபெற்றிருக்கிறது.
இங்கிலாந்து கிங்ஸ்டன் என்ற இடத்தைத் தலமையகமாகக் கொண்டியங்கும் திரு.வரதகுமாரின் முகாமையின் கீழ் இயங்கும் தன்னார்வ நிறுவனமான-NGO- தமிழர் தகவல் மையத்தின் ஏற்பாட்டின் பேரிலேயே இம்மாநாடு நடைபெற்றது.
Christian Aid என்ற அமரிக்க அரசு சார் நிறுவனத்தின் நிதி வழங்கல் அனுசரணையோடு இயங்கும் தமிழர் தகவல் மையமானது, ஈழத் தமிழ்ப் பேசும் அரசியலில் மிக முக்கிய பங்காற்றும் ஒரு அமைப்பு எனக்கருதப்படுகிறது. இவ்வமைப்பின் அரசியல் பிரசன்னம் “பின் – புலி” அரசியற்தளத்தில் மிகத் தீவிரமாக அமையும் என்பது வெளிப்படை.
தவிர, புலிகளின் அழிவின் மறு தினத்தில் ஆரம்பித்து புலம் பெயர் நாடுகளை மையமாகக் கொண்டு இலங்கைப் பாசிச அரசுட இணைந்து சமூக உதவித் திட்டங்களை மேற்கொள்ள என ஏராளமான, புலம் பெயர் அமைப்புக்கள் உருவாகிவிட்டன.
இலங்கை அரசை விமர்சிக்கும், அதற்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கும் இடதுசாரிகளை,ஜேம்ஸ் பிரட்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிடுவது போல, “கற்பனாவாதிகளாகவுக் செயற்திறன் அற்றவர்களாகவும்” விமர்சிக்கும் இப்புதிய தன்னார்வ அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், சில சில்லறை உதவி வழங்கல்களுக்காக இலங்கை அரசுடன் இணைந்து கொள்வதை தமது நியாயமாக முன்வைக்கின்றனர்.
அண்மையில் சுவிற்சிலாந்து நாட்டில் இடம்பெற்ற புலம் பெயர் தமிழர்களின் ஒன்று கூடலில் தன்னார்வ நிறுவனங்களின் அறியப்பட்ட முகாமையாளர்களான சுனந்த தேசப்பிரிய மற்றும் சிவகுருநாதன் ஆகியோர் பிரதம உரையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையிலிருந்து இயங்கும், ஊடகவிலாளர் அமைபபுக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்று அனைத்துமே தன்னார்வ நிறுவன நிதிகளிலிலேயே இயங்குகின்றன. இலங்கை பாசிச அரசின் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு உள்ளாகிவரும் பாக்கியசோதி சரவணமுத்து நெறியாளராகத் தொழிற்படும் Center for policy alternative மற்றுமொரு பெரும் நன்கொடை நிதியில் இயங்கும் அமைப்பாகும். 80 களின் பின்னர் புரட்சிகர இடதுசாரி அமைப்புக்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் பாக்கியசோதி சரவணமுத்துப் போன்ற ஏகாதிபத்திய சார் மனித உரிமை வாதிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
ஆக, புலிகளின் பின்னான காலப்பகுதி என்பது தன்னார்வ நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய பணியை இடதுசாரிகள் மத்தியில் முன்வைக்கிறது.
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையும், தொடரும் இனச்சுத்திகரிப்பும் வெறுமனே மனித உரிமைப் பிரச்சனையோ அல்லது சர்வதேசச் சட்ட வரம்புகளிற்கு உட்பட்ட போர்க் குற்றங்களோ அல்ல. இது ஒரு மக்கள் கூட்டத்தின் தன்னுரிமை குறித்த அரசியல் பிரச்சனை. புற்று நோய் போலப் பரவிக்கொண்டிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனையை வெறும் மனித உரிமைப்பிரச்சனையாகவே அணுக முற்படுவதனூடாக இதன் அரசியல் பின்புலம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.
மறுபுறத்தில் இதற்கான மாற்று இன்னும் வெற்றிடமாக அமைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச எதிர்ப்பரசியலை தன்னார்வ நிறுவனங்களூடாக பல முற்போக்காளர்கள் கூட முன்னெடுக்க முனைகின்றனர். இவ்வாறான முனைப்புகளின் அபாயம் புரிந்துகொள்ளப்படுவதுடன் மட்டுமன்றி, தன்னார்வ நிறுவன அரசியலிற்கெதிரான தீவிர அரசியல் முன்வைக்கப்படவேண்டும்.
இலங்கையின் சமூக அரசியல் பகைப்புலம் என்பது தன்னார்வ நிறுவனங்களிற்கு அப்பாலான அரசியலின் தேவையை இன்று உணர்த்தி நிற்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் வாக்கு அரசியலிற்கு அப்பால் சமூக உணர்வோடு தமது செயற்பாட்டுத் தளத்தை உருவாக்க முனையும் இடது சாரி சக்திகளை தன்னார்வ நிறுவனங்களின் அரசியலுக்கு எதிராக முன்னிறுத்துவதும், இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதும் மக்கள்சார்ந்த சிந்தனை கொண்ட அனைவரினதும் இன்றைய சமூகக்கடமையாகும்.
=இக்கட்டுரைமுழுமை பெற ஆலோசனையும் ஆதரவும் நல்கிய இனியொரு தொகுப்பாசிரியர்களில் ஒருவரான அசோக் யோகனுக்கு எனது நன்றி. தவிர, கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்கள் இனியொருவின் ஒருமுகப்பட்ட கருத்தாகவே வெளிப்படுத்தப்படுகிறது.=