கருத்துச் சுதந்திரம் என்பதனைச் சகமனிதனுக்கான எமது பொறுப்புணர்வுடன் இணைந்த ஒரு அறிவாயுதம் என நாம் புரிந்து கொள்கின்றோம். கடந்த இருபது ஆண்டுகளாக நாம் தகவல் தொழில்நுட்ப புரட்சிகர யுகத்தில் வாழ்கின்றோம். தகவல் அறியும் உரிமை என்பதனை தனிநபரின் அடிப்படை உரிமையாக தாராளவாத மேற்கத்திய சமூகங்கள் அங்கீகரித்திருக்கின்றன. அதே சமூகங்கள் தகவல்களின் அடிப்படையில் நமது அன்றாட வாழ்வைக் கண்காணிக்கும் ஆதிக்க சமூகங்களாகவும் ஆகியிருக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. சாதகங்களை எமது உரிமைகளை வென்றெடுக்கப் பாவிப்பதும், பாதகங்களைக் குறித்த விழிப்புணர்வு கொள்வதும் எமக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு கூறான இணையவெளி குறித்த இத்தகைய புரிதலுடன் இந்த வெளியில் நாம் பிரவேசித்தோம். பிறமொழிகளில் போலவே தமிழ்மொழியிலும் பரவலாக உலகெங்கிலும் இணையதளங்கள் குவிந்துகிடக்கின்றன. பொதுவான உலக அளவிலான இணையதளங்களில் பெரும்பான்மைத் தளங்கள் மலிவான பாலுறவுக் கிளர்ச்சியூட்டும் தளங்களாகவும், மனிதனின் எதிர்மறைப் பண்புகளை வளர்க்கும் தளங்களாகவுமே இருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாக இருக்கின்றது.
எமது சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும், எல்லாப் பரதேசங்களில் இருந்தும், சூரியனுக்குக் கீழான அனைத்தும் குறித்த படைப்புக்களை எழுத்தாளர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம். கருத்துச் சுதந்திரம் என்பதனைச் சகமனிதனுக்கான எமது பொறுப்புணர்வுடன் இணைந்த ஒரு அறிவாயுதம் எனவே நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.
விவாதங்களில் ஆரோக்கியமான வெளிப்படைத்தன்மை என்பது இன்று எமது சமூக வெளியில் தோன்றத் துவங்கியிருக்கின்றது. இது மிகப் பெரிய மாறுதலை நோக்கிய கால கட்டம். கடந்த முப்பதாண்டு கால தமிழ் ஊடக வரலாற்றைப் பின்திரும்பிப் பார்க்கின்றபோது, எமது மக்களது கருத்துலக வாழ்விலும் ஒரு மாபெரும் பாய்ச்சல் என இதனை நாம் கருதுகின்றோம்.
கடந்த காலங்களில் இணையவெளி பின்னூட்டம் தொடர்பாக நடந்த விவாதங்களை நாம் மீள்நோக்கிப் பார்க்கும்போது, மனித உறவுகள் எனும் அளவில் நண்பர்களுக்கிடையில் பகைமை தோன்றுவதற்குப் பின்னூட்டங்கள் தோற்றுவாயாக இருந்திருக்கின்றது. பின்னூட்டங்கள் தனிப்பட்ட மனிதர்களின் விரோத குரோதங்களைத் தீர்த்துக் கொள்ளவும், பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளவும் இடம் தந்திருக்கின்றது. மனித மனத்தின் இரண்ட பக்கத்தின் வேட்கைகளுக்கான வடிகாலாகவும் பின்னூட்ட வெளி திகழ்ந்திருக்கின்றது.
பின்னூட்டங்கள் தமக்கு ஏற்படுத்திய மனோ வேதனைகளிலிருந்து தப்புவதற்காகவே நிறைய வாசகர்களும் எழுத்தாளர்களும் இணையத்திலிருந்து விலகிப் போயிருக்கின்றார்கள். அனுபவத்திலிருந்து பார்க்கிறபோது பின்னூட்டம் தமக்கு எதிராக வந்தபோது ஆட்சேபனை தெரிவித்தவர்கள்தான், பற்பல பெயர்களில் இத்தகைய பின்னூட்டக் காலச்சாரத்தைப் புனைபெயரில் ஆரம்பித்து வைத்து, தமது எதிரிகளாகக் கருதிக் கொண்டவர்களை தாக்குவதற்குப் பயன்படுத்தியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.
ஒடுக்கப்பட்ட எமது மக்களின் போராட்டத்தில் புதிய நிலைமைகளை இன்று நாம் எதிர்கொள்கின்றோம். விவாதங்களில் ஆரோக்கியமான வெளிப்படைத்தன்மை என்பது நமது சமூக வெளியில் தோன்றத் துவங்கியிருக்கின்றது. இது மிகப் பெரிய மாறுதலை நோக்கிய இடைக்கால கட்டம். இதனைக் கருத்தில் கொண்டு,எமது சமூகத்தினுள் வெளிப்படையான ஆரோக்கியமான உரையாடல் வெளியை உருவாக்குவதை நோக்கம் கொண்டு, பின்னூட்டங்கள் தொடர்பான எமது பார்வையை நாம் முன் வைக்கின்றோம்.
01.கட்டுரைகளின் பேசுபொருளை பின்னூட்டங்கள் செழுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கட்டுரையானது தனது பேசுபொருள் சார்ந்து சில விடயங்களில் மௌனம் காக்கிறது என வாசகர்கள் கருதினால், கட்டுரைக்கு அப்பாலும் சென்று வாசகர்கள் சுட்டிக்காட்டுவதன் மூலம் கட்டுரையின் பேசு பொருளை பின்னூட்டங்கள் அகலிக்க வேண்டும்.
02.கட்டுரையின் பேசுபொருளுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாமல் வரும் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படும். பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுதலின் போது அவர்களின் மீது பிரதானமாக முன்வைக்கப்படும் தாக்குதல் பாலியல் நிந்தனைச் சொற்கள்தான். அம்மாதிரியான சொற்கள் கட்டுரைகள் பின்னூட்டங்கள் என இரண்டிலும் முற்றிலுமாக மட்டுறுத்தப்படும்.
03.கட்டுரைகளின் பேசுபொருள் அல்லாது கட்டுரை எழுத்தாளரின் சொந்த வாழ்வு பற்றிய பின்னூட்டங்களும், திட்டமிட்டவகையிலான ஆத்தரமூட்டல் என்று கருதப்படும் பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்படும். தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட நடவடிக்கை முழுச் சமூகத்தையும் பாதிக்கிறது என ஒரு எழுத்தாளரோ அல்லது வாசகரோ கருதினால், அத்தகைய பேசுபொருள் குறித்த கட்டுரைகளை ஆதாரங்களுடன் அவர் முன்வைக்க வேண்டும்.
04.வாசகர்கள் புனைப்பெயரை பின்னூட்டங்களில் பாவிக்கலாம். கருத்து சார்ந்த பின்னூட்டங்களில் மட்டுமே இது அனுமதிக்கப்படும். தனிநபர்கள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் வைக்கும் பின்னூட்டங்கள், அல்லது பொதுவெளியில் சவாலுக்கு அழைக்கும் பின்னூட்டங்கள் சொந்தப் பெயரில் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
05.எழுத்தாளர்களும் பிறர்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்து எழுதுகிறபோது, சொந்தப் பெயரில் அதற்கான ஆதாரங்களுடன் எழுத வேண்டும். அத்தகைய ஆதாரங்களையும் இனியொரு வசம் கையளிக்க வேண்டும்.
06.எழுத்தாளர்களும் புனைபெயரில் எழுதலாம். கருத்துரீதியிலான, தனிப்பட்ட எவர் மீதும் தாக்குதல் தொடுக்காத அரசியல் கட்டுரைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இணையவெளியின் சோதனை முயற்சியான பின்னூட்டக் கலாச்சாரம் தோற்றுவித்த கடந்தகாலப் கசப்புணர்வுகள் அனைத்திற்காகவும், எமது வருத்தத்தையும் நாம் திறந்த மனத்துடன் இத்தருணத்தில் பதிவு செய்கின்றோம். எமது மூடுண்ட சமூகத்தின் ஒரு பகுதியாகவே அத்தகைய பின்னூட்டக் கலாச்சாரம் எமது வரலாற்றில் எழுந்தது என்பதையும் நாம் சமவேளையில் இங்கு பதிவு செய்கின்றோம்.
முழுமையான வெளிப்படைத்தன்மையை நோக்கிய இடைக்கால கட்டத்தில் நாம் கால் வைத்திருக்கின்றோம். இடைக்கால கட்ட நிலைமையிலேயே, புனைபெயர்கள் சொந்தப் பெயர்கள் என இரு வகை அடையாளங்களையும், இரு தவிர்க்கவியலாத மெய்ம்மைகளாக நாம் தற்காலிகமாக ஏற்றிருக்கின்றோம்.
வாசகர்களையும் படைப்பாளிகளையும் தோழமையுடன் செயல்பட அன்போடு அழைக்கின்றோம்.
இனியொரு…