Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

balachandranஇன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவும் அதன் பரிவரங்களும் போர்க்குற்றத்திற்காகவும் இனப்படுகொலைக்காகவும் தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என்றால் உலகத்தில் இன்னொரு பாசிஸ்ட் எந்த மூலையிலாவது ராஜபக்சவை முன் உதாரணமாகப் பயன்படுத்தில் இனக்கொலை செய்துவிடக் கூடாது என்பதற்காக;! இலங்கையில் இன்னொரு இனக்கொலையாளி கொலை செய்வதற்கு அஞ்ச வேண்டும் என்பதற்காக; ! ! இதுவே ஈழம் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று யாராவது எண்ணினால் அது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
ஒரு பேரினவாதிக்கு எதிராக இன்னொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்ப்பது அவலத்துள் வாழும் மக்களின் தலைகளில் சம்மட்டியால் அடிப்பதற்கு தயாராவதைப் போன்றது.

உலகத்தில் வெற்றிபெற்ற அழிக்கப்படாத போரட்டங்களில் எல்லாம் பாலச்சந்திரனின் கொலை போன்ற உணர்ச்சிமயமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட அந்தப் போராட்டங்களில் எல்லாம் அவ்வாறான சம்பவங்கள் மக்களை அணிதிரட்டும் ஆயுதங்களாகவும் அரசியல் மயப்படுத்தும் ஆயுதங்களாகவும் பயன்பட்டிருக்கின்றன.

பிரித்தானியா இலங்கைக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவது அறிந்திருந்தும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் சதிகளையே நம்புகின்ற அளவிற்கு அரசியல் இருள் சூழ்ந்த சமூகத்தில் உலா வருகின்றோம்.

அரசியல் வறுமைகொண்ட சமூகத்தில் சனல் 4 பிரச்சார ஊடகமாகி, புரட்சிகரமான போராட்ட சூழலையே கையகப்படுத்தி வைத்திருக்கிறது. சனல் 4 இன் கைவசம் உள்ள அனைத்து ஆவணங்களும் அமரிக்க அரசின் தேவைகளுக்கு ஏற்ப சிறிது சிறிதாக வெளிப்படுத்தப்படும். அது பிரச்சாராச் சாதனமாக, மற்றய பக்கத்தில் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீசன் உணர்ச்சி அரசியலை ஆரம்பிப்பார்கள். புலம் பெயர் ‘ஊடகங்கள்’ ஊத ஆரம்பித்துவிடுவார்கள். தேசியக்கூட்டமைப்பு தேர்தலுக்கான அத்திவாரத்தைப் போட்டுக்கொள்ளும். நோர்வேயோ சுவிஸர்லாந்தோ இலங்கைக்கு அமரிக்க சார்பில் உதவிக்கரம் நீட்டும். அமரிக்கா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற நோர்வேயிடமோ சுவிஸர்லாந்திடமோ இலங்கை அரசு தஞ்சமடைய அமரிக்கா தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும்.

மீண்டும் அடுத்த சீசன் வரும் வரை இது சுழற்சி முறையில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றது போன்றே நடைபெறும்.

உணர்ச்சிவயப்படுத்திய அரசியல்வாதிகள் சற்றுக்கொழுத்து எனர்ஜி ஏற்றிக்கொண்டு அடுத்த சீசன் வரை காத்திருப்பார்கள்.
இந்த சுழற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள், இலவசக் கல்வி அழிக்கப்படும், தெற்காசியாவின் சுற்றுலா மையமாக இலங்கை மாற்றப்படும், பாலியல் தொழில் உட்பட அனைத்து சீரழிவுகளும் நிறுவனமயப்படும்முன்னைனாள் போராளிகள் நவீன அடிமைகள் ஆவார்கள், போதைவஸ்துக்களுக்கு அடிமையான சமுதாயம் உருவாகும், எதிர்ப்பதற்கு முனைவோர் சாட்சியின்றிக் கொலப்படுவார்கள்..

இன்னும் சில சீசன் அரசியல் நடைபெறுகின்ற கால எல்லைக்குள் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் ஒன்று முன்னர் இருந்ததாக வரலாறு எழுதப்படும்.

அப்போதும் சிலர் பிரபாகரனின் புகழ் பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொள்வார்கள், தெய்வம் என்பார்கள், கோவில்கட்டி சிலைவைப்பார்கள். புலி எதிர்பாளர்கள் எல்லாம் பிரபாகரனால் மட்டும் தான் நடந்தது என்பார்கள்.
இலங்கையில் புதிய பேரினவாத அரசு ஒன்று பிரபாகரனின் சிலை வைத்து அர்ச்சனைக்குக் கூட ஏற்பாடு செய்துவிட்டு நல்லிணக்கம் என்பார்கள்.

அடையாளங்களால் கொழுக்கும் அரசியல் வியாபாரிகளிடமிருந்து அரசியலை மீட்பதும், அமரிக்காவிலும் சனல் நான்கிலும் தங்க்யிருக்கும் அரசியலிலிருந்து உயிர்ப்பதும் மக்களின் அவலங்களைக் குறித்துச் சிந்திப்பதும், உலகம் முழுவதும் அழிவுகளிலிருந்து மீள உறுதியுடன் போராடும் மக்களோடு இணைந்து கொள்வதும் அவசியம்.

Exit mobile version