Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாராளுமன்ற வழிமுறை குறித்து .. : மாஓ சே துங் நேர்காணல்

மக்கள் போராட்டம் வெற்றிகொண்ட அனைத்து நாடுகளிலும் பாராளுமன்ற வழிமுறையை இறுதி வெற்றியை நோக்கிய பயணத்தில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்பது அந்தந்த நாடுகளின் புறநிலை யதார்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது.. ஏகபோக அரசாக மாற்றமடைந்து சீர்குலைந்து கொண்டிருக்கும் சீனாவின் கடந்தகாலப் போராட்ட அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. ஜப்பானுக்கு  எதிரான  தேசிய  விடுதலை  யுத்தத்தின்போதுஇ .சியாங் கே செக்கால்  தலைமை தாங்கப்பட்ட பாராளுமன்ற  அரசாங்கத்தில்  கொமிண்டாங்குடன் இணைந்து  சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமையும்  பங்கு  கொண்டது. மாஓ தானே நேரடியாகவும் இதில் பங்குகொண்டார்.  ரஷ்யாவில் மக்கள் புரட்சியைத் தலைமைதாங்கிய லெனின் கூறுவது போல புரட்சி மேலெழுந்து ஆயுத கிளர்ச்சியாக பரிணமித்துள்ள நிலைமையில் மாத்திரமே செயலூக்கமான பகிஷ்கரிப்பு என்பது சரியான தந்திரோபாயமாக அமைய முடியும் என்பதும் அவதானிக்கத் தக்கது.  ஆக, பாராளுமன்ற தேர்தலையும் அதன் பின்னணியிலுள்ள அரசியலையும் இறுதியான தீர்வாக அல்லாது, இறுதி வெற்றியை நோக்கிய பயணத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வது என்ற தந்திரோபாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வேளையில், 1938 ஆம் ஆண்டில் மாவோ சே துன் வழங்கிய இந்த நேர்காணல் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது குறித்த முழுமையான கருத்தையும் அதன் இதர பரிமாணங்களையும் வெளிப்படுத்தவில்லை எனினும் அதன் சில அடிப்படைகளை முன்வைக்கிறது.

கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான தொடர்பு தொடர்ந்தும் நீடிக்கும் என்று கருதுகிறிர்களா?

பதில்: ஆம்,நான் தொடரும் என்றே நம்புகின்றேன். எம் இருவருக்கும் இடையே 1927இல் தோன்றிய மோதல் கம்யுனிஸ்ட் கட்சியின் விருப்பத்துக்கு எதிரானது. கொமிங்டாங்குடனான(முழு) ஒரு பிளவை கம்யுனிஸ்ட் கட்சி என்றுமே விரும்பாது. அவர்களுக்கிடையேயான பிளவு நாட்டை எங்கு நோக்கிக் கொண்டுபோகும் என்பதை தமது பத்து வருடகால அனுபவங்களின் மூலம் இரு கட்சிகளும் மட்டுமல்ல, முளுத் தேசமும்கூட நன்றே புரிந்து வைத்துள்ளனர். நாம் மேலும் ஒன்றுபடுவதற்கு இந்த அனுபவங்கள் எமக்கு உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி தொடர்பாக இன்றும் வரப்போகும் எதிர் காலத்துக்குமான எமது நோக்கம்இ ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமும், நாட்டை அபிவிருத்தி செய்வதிலான கூட்டு வேலையுமேயாகும். இந்த நிலமைகளை அவதானிப்போமானால் , எந்தக் கட்சியுடன் நட்புறவு கொண்டுள்ளோமோ அந்தக்கட்சி நம்மைப்போல் நேர்மையாக நடந்துகொள்ளுமேயானால் சீன மக்கள் அனைவராலும் கட்டுப்படுத்த்ப்படும் இந்த்க் கூட்டணி நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பது இயல்பானது.

கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கூட்டு ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றிணைந்த யுத்ததை நடத்துவதற்கானது மட்டுமல்ல, ஆக்கிரமிப்பாளரைத் தோற்கடித்ததன் பின்னால் அது நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமானது என கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிவிக்கையில் கூறியுள்ளது. இது முரண்பாடாகத் தெரியவில்லையா? புதிய அரசை அபிவிருத்தி செயவதில் இரு வெவ்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகள் எவ்விதம் ஒன்றிணைந்து செயல்படமுடியும்?

பதில்: ஒரு அரைக்கானியல் நாடான சீனாவை ஜப்பான் தனது காலனியாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஒரு தேசம் என்ற முறையில் சீனாவின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தினாலும் தற்போது நிலவும் நிலமையின் கீழ் அவை அனைத்தினதும் நிலை கிட்டத்தட்ட ஒரே விதமானதே. இதன் காரணத்தால் ஜப்பானுக்கு எதிரான யுத்ததில் மாத்திரமல்ல தேசத்தை விருத்திசெய்வதிலுங்கூட அவற்றினால் ஒன்றிணைந்து செயற்படமுடியும். எவ்விதமிருந்தாலும் இக்கூட்டு ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலானதாக அமையவேண்டும். கட்டாயப் படுத்தப்பட்டதொன்றாகவோ வெறும் சம்பிரதாய வகைப்பட்டதொன்றாகவோ அமையக்கூடாது.

ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது. இவ்விதமானதோர் அடிப்படையில் அமையும் நட்புதான் இதயபூர்வமானதாகவும் நீடித்து நிற்கும் தன்மைபெற்றதாகவும் அமையும்.

கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசு பற்றிய உங்கள் வரைபடம் என்ன?

பதில்: கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசின் பாரளுமன்றமானது காலனியல் அடிமைகளாக இருக்க மறுக்கும் எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். எந்தக்கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோட்பாட்டின்படியே தேர்தல்கள் நடைபெறும். பரந்த அர்த்ததில் சொல்வதானால் இது நீண்டகாலத்திற்கு முன்பாகவே டாக்டர் சன்-யாட்-சென்னால் வலியுறுத்தப்பட்ட அரச கட்டுமானமாக இருக்கும். இந்த வழிமுறைகளில்தான் சீன அரசு வளர்க்கப்படவேண்டும்.

கேள்வி: தற்போதைய தேசிய அரசாங்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி திருப்திப்படுகின்றதா? தேசிய சட்டசபை ஒன்று அவசியமென அது கருதுகிறதா?

பதில்: ஜப்பானுக்கு எதிரான ஆயுத எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவதாலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டத்தில் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டைப் பின்பற்றி வருவதாலும் நாம் தற்போதைய மத்தியரசை ஆதரிக்கிறோம். ஆனால் தற்காப்பு யுத்ததின் வளர்ச்சிக்கு உகந்தமுறையில் இக் கோட்பாடுகளை மேலும் செயல்த் திறன் மிக்கதாக மற்றுவதற்காக இந்த அரசாங்கம் தன்னை விரிவுபடுத்தியும் பெருப்பித்தும் கொள்ளவேண்டும். இதற்காக அரசாங்கம் தனது உள்நாட்டுக் கொள்கையில் அவசியமான சில சீர்திருத்தங்களை செய்யுமென எதிர்பார்க்கிறோம். தேசிய ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் , எமது தேசிய தற்காப்பு அணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் தேசிய சட்டவாக்கசபையை நிறுவும்படி நாம் மத்தியரசைக் கோரியுள்ளோம். இது டாக்டர் சன்-யாட்-சென்னால் அவரது காலத்திலேயே முன்வைக்கப்பட்டதொன்றாகும். தற்காப்பு யுத்தத்தின் நலனுக்கு பலன்தரக்கூடியது எதுவானாலும் அவற்றைச் செய்ய நாம் தயாராய் உள்ளோம்.

கேள்வி: வட மாகணங்கள் மூன்றிலும் (மஞ்சூரியா) ஜப்பானுக்கு எதிரான போர்க்களத்தில் நிற்கும் தன்னாரவ இராணுவத்தை வழிநடத்துவது கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பது உண்மையா?

பதில்: இந்த இராணுவத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கிவருகிறது என்பது உண்மைதான். இத் தன்னார்வ இராணுவத்தின் தளபதிகளாக இருப்பது பிரபல்யமிக்க கம்யூனிஸ்டுகள்தான் என்பது இந்தப் பிணைப்புக்கோர் எடுத்துக்காட்டாகும். ஜப்பானுக்கெதிரான யுத்தத்தில் அவர்கள் காட்டிவரும் திட்டவட்டமான ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பல வெற்றிகளைத் தந்துவருவதை அனைவரும் அறிவர். கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புறம்பான பல இராணுவக்குளுக்களும் வெகுஜன அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இருந்தும் ஒரு தேசிய முன்னணியின் அவசியத்தை இந்த மாகாணங்கள்கூட உணரத்தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் பொதுவான செயல்பாட்டுகளுக்காக ஏற்கனவே ஒன்றிணைந்தும் உள்ளன.

கேள்வி: சீன-ஜப்பான் யுத்தத்தையிட்டு அமரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: அமரிக்கா வாழ் ஜனநாயக அணியினர் அனைத்துலக சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வருவதுவும் அந்நாட்டு ஜனாதிபதி ருஸ்வெல்ட் பாசிசத்தைக் கண்டித்துவருவதுவும், ஜப்பானுக்கெதிரான சீனாவின் எதிர்ப்பின் மீது அமெரிக்கப் பத்திரிகைகள் காட்டிவரும் பரிவும், இவை எல்லாவற்றிர்கும் மேலாக அமெரிக்க மக்கள் ஜப்பானுக்கு எதிரான சீன மக்களின் போராட்டத்துக்குக் காட்டிவரும் ஆதரவும் எமது வரவேற்புக்குரியவையாகும். நாம் இவற்றிற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்துச்செல்ல பிற அரசுகளோடு சேர்ந்து  யுத்த நடைமுறை வேலைத்திட்டத்துடன் அமரிக்கா இணைந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நேர்காணல்  மொழியாக்கம் :  லோகன்

Exit mobile version