மக்கள் இன்னும் இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள் அரச ஆதரவுத் தமிழர்கள். பயத்தின் எல்லைக்குள்,மரணத்தின் விழிம்பில் வாழுகின்ற மக்கள் கூட்டத்தின் வாழ்வியலை இயல்பானது என்கிறார்கள்.
இவ்வேளையில் “புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது?” என்று நிகழ்வுகளின் கோரத்தை மீட்கிறார் யாழ்.தேர்தல் மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சி.சிறிதரன். இலங்கை அரசு மக்களை மறந்து விடக்கோரும் போரின் நினைவுகளை மறுபடி அவர்களின் நினைவிற்குக் அழைத்து வருகிறது சிறிதரனின் உரை.
இதனைத் தான் சமூகத்தின் புதிய நினைவுத்திறன் என்று நவீன சமூக விஞ்ஞானிகள் வரைமுறை செய்கின்றார்கள். சமூகத்தின் நினைவாற்றலைக் கையாள்வது என்பதிலிருந்தே ஏகபோக வல்லரசுகள் பல மக்கள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றன. வியட்னாமிலிருந்து ஈராக் வரை என்ற தனது நூலில் அன்றூ கொக்கின்ஸ் (Andrew Hoskins) ஈராக் மீது அமரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்பு யுத்தம் ஏற்படுத்திய சமூக நினைவாற்றல் பற்றி ஆய்வு செய்கிறார். மக்கள் சதாம் ஹுசைனின் சர்வாதிகாரம் விதைத்த கோரங்களை மறந்துவிட்டனர். உலகம் முழுவது இஸ்லாமிய மக்கள் அமரிக்க ஏகபோகத்தின் மீது நீண்ட வெறுப்புக் கொண்டுள்ளனர் என்கிறார். ஈராக் மக்களின் சமூக நினைவாற்றல் இவ்வாறு ஒரு நீண்ட வாழ்வுக்காலத்தைக் (Lifetime) கொண்டுள்ளது.
சமூகத்தின் இந்த நினைவாற்றலை மாற்றம் செய்வதற்குரிய புறக்காரணிகளைக் கண்டறியும் ஆய்வு முறைகளை பல தன்னார்வ நிறுவனங்கள்(NGO) ஏகாதிபத்திய தேவை கருதி மேற்கொள்கின்றன. இனப்படுகொலை போன்ற குரூர நிகழ்வுகள் ஏற்படுத்தும் நினைவாற்றலை இன்னொரு சமூக நிகழ்வினூடாக நிரப்ப (Substitute) முனைவது இதன் இன்னொரு வழிமுறைகளில் ஒன்று. இலங்கையைப் பொறுத்தவரை நிகழ்ந்த இனப்படுகொலையின் கோரத்தை,அது குறித்த மக்களின் நினைவாற்ரலை அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வாக மாற்றமடையாமல் தடுப்பதற்கு கையாளப்பட்ட இன்னொரு வழிமுறைதான், ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்படும் தேர்தல்கள்.
பிரஞ்சுத் தத்துவவியலாளரான அல்போவிச் (Maurice Halbwachs) என்பவரால் முன்வைக்கப்பட்ட சமூக நினைவாற்றல் குறித்த கருத்தானது மிக அண்மைக்கால மானுடவியலிலிலும், சமூகவியலிலும் ஆய்வுப் பொறிமுறையாகப் பிரயோகிகப்படுகின்றது.
இவ்வாறு மக்களின் நினைவாற்றலை உருமாற்றும் இலங்கை அரசினதும் அதன் பின்புலத்தில் தொழிற்படும் ஏகபோக வல்லரசுகளினதும் நிகழ்ச்சி நிரல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் சமூக நினைவாற்றல் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான உணர்வாக மாற்றப்பட வேண்டும் . அந்த வகையில் சிறீதரனின் கூற்று தேவையானதே. ஆனால், தமிழ்ரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிற்போக்குத் தேசியவாதிகளின் கரங்களில் இதற்கான பொறுப்பை ஒப்ப்டைத்தல் என்பது அபாயகரமானது. அது இன்னொரு புது மத்தாளனை உருவாக்கவே வழிவகுக்கும். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இடதுசாரிகள் புரிந்துகொண்டால் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வழிநடத்த வாய்ப்பிருக்கும். மக்களின் சமூக நினைவாற்றலை மழுங்கடிக்க எண்ணும் இலங்கை அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுத் தேர்தலைப் பயன்படுத்துவதும், சமூக நினைவாற்றலை அரசிற்கெதிரான போராட்டமாக மாற்றுதலும் இடதுசாரிகளின் வரலாற்றுக் கடமை.