Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாரளுமன்றத் தேர்தலும் ‘புத்திஜீவிகள்’ எனப்படுவோரின் அயோக்கியத்தனங்களும்:இந்திரன்

 

 தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் அதேயளவு சாபக்கேடு தமிழ் ‘புத்திஜீவிகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் அழைக்கப்படுபவர்களுமே. இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இந்தப் ‘புத்திஜீவிகள்’ எனப்பட்டோரால் விளைந்த சேதம் கொஞ்ச நஞ்சமல்ல.

 இம் முறை பாரளுமன்றத் தேர்தலிலும் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிய வண்ணமே இருக்கிறார்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதான தமிழ் நாளிதழ்களில் இவர்கள் தங்கள் தத்துவ முத்துக்களை உதிர்த்திருக்கிறார்கள். தமிழ்ப் பிரதித்துவத்தின் அவசியம் பற்றியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ.) வாக்களிக்க வேண்டியதன் தேவை பற்றியும் நிரம்பவே பேசப்படுகிறது. காலத்துக் காலம் தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிப் பேச இந்த புத்திஜீவிகளால் முடிகிறது. புத்திஜீவிகளாய் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி இதுவாகக் கூட இருக்க முடியும்.

 ஒரு தமிழ் நாளிதழின் பிரதான செய்தியாக வெளிவந்துள்ள செய்தியின் சாரம்சம் வருமாறு.

 தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ள சர்வதேச சமூகம் அதிகாரப் பகிர்வு உட்பட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகார மையத்தை வலியுறுத்தி வருகின்றது.  யதார்த்த நிலைமைக்கேற்ப தங்களையும் தாம் சார்ந்த மக்களையும் நெறிப்படுத்தக்கூடிய சிரேஷ்ட அரசியல்வாதிகளை அடையாளங்கண்டு அவர்களைப் பலமான அரசியல் அணியாக உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் சிந்திப்பது அவசியமென்றும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்களால் தமிழ் மக்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படும் பலம் வாய்ந்த அரசியல் அணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது சிறுபிள்ளை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய விடயமென்று சுட்டிக்காட்டும் அரசியல் அவதானியொருவர் பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைகளாகவும் வட, கிழக்குத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்போர் உண்மையிலேயே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்களாகும் என்றும் தெரிவித்தார்.

 யார் இந்த அரசியல் அவதானி என்பது பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் வேண்டுவதோ த.தே.கூ.விற்கான வாக்கையே. இந்த அவதானி சொல்கிறபடியான சிரேஷ்ட அரசியல்வாதிகள் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்? தமிழ் மக்கள் அகதி முகாம்களில் வாடுகையில் சுவிற்சர்லாந்து, இலண்டன், வியன்னா எனச் சுற்றுப் பயணம் போனார்கள். அதிலும் முக்கியமாக டெல்லியில் தவம் கிடந்தார்கள். இதைவிட இவர்கள் மக்களுக்கு என்ன பண்ணிக் கிழித்தார்கள். இப்போது மீண்டும் “துரோகி” பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் கவிதையொன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

 துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
எதிர்தவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.

 இங்கே துரோகி பட்டம் சூட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் த.தே. கூட்டமைப்பும் இருக்கிறது. மாற்று அரசியல் ஒன்றைக் கட்டியெழுப்ப விடாமல் தங்களது அதிகாரம் மேலும் தொடர வேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள். இனப் படுகொலை ஆட்சியாளர்களிடம் சலுகைகளை வேண்டி நிற்கிற அதே வேளை தமிழ்த் தேசியம் பற்றி கோஷமெழுப்பவும் முடிகிறது. “தனித் தமிழீழம் தான் தீர்வு, புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிகள்” எனச் சொல்லிய அதே வாயால் “நாங்கள் தனித் தமிழீழம் கோரவேயில்லை, விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது கட்சியில் இடமில்லை” என்று நாக் கூசாமல் பொய்யுரைக்க சம்பந்தனுக்கு முடிகிறது. அதே வேளை தமிழ்ப் பிரதிநிதித்துவம் பறிபோகக் கூடாது என்று வாய்கிழியக் கத்துகிற சம்பந்தனும் கொம்பனியும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகாமல் தமிழ்க் கட்சிகள் பொது வேட்பாளர் பட்டியலை முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் சார்பாக முன் வைக்கப்பட்டபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களது அக்கறையெல்லாம் இந்த அரசியல் அவதானி சொல்லுகிற சிரேஷ்ட அரசியல்வாதியின் கதிரையைக் காப்பாற்றுவதற்கான முன்னெடுப்பேயன்றி எதுவுமல்ல.

 சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளதாகக் கதை அளக்கிற அரசியல் அவதானி, அதைச் செயற்படுத்தக் கூட்டணிக்கு வாக்குப்போடுமாறு பரிந்துரைக்கிறார்.  சர்வதேச சமூகத்தின் தமிழ் மக்களின் மீதான அக்கறை குறித்து நடந்து முடிந்த இறுதிக் கட்டப் போரில் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் பார்த்தால் விளங்கும். தமிழ் மக்களின் விடுதலை மக்கள் தம் கைகளிலேயே தங்கியுள்ளது, சர்வதேச சமூகத்தின் கைகளில் அல்ல என்பதை வரலாறு தெளிவாகவே காட்டியுள்ளது. எனவே புத்திஜீவிகள் என்பதன் பேரால் நிகழ்த்தப்படும் அபத்தங்கள் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். புலி வேஷம் கட்டி ஆடிய யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இன்று புனிதர்கள் போல தேர்தல்களில் நிற்கிறார்கள். யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் புகலிடம் என அரசும் பாதுகாப்புப் படைகளும் உறுதியாக நம்பும் விதமாகச் செயலாற்றி அதன் நடுநிலைத்தன்மையைச் சிதைத்தவர்கள் தாம் இவர்கள். இதனால் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளானவர்கள் மாணவர்கள். உருவாக்கப்பட்ட பிம்பம் அழிக்கப் படாமல் இன்னமும் அரசிடம் இருக்கிறது. அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இன்று தேர்தலில் நின்று புனிதராக தம்மை காட்டுகின்ற அயோக்கியத்தனம் கண்டிக்கப்படவேண்டியதே.

 தமிழ் மக்களால் தனித்து நின்று போராட இயலாது. எனவே, அந்நிய அரசுகளின் ஆதரவு தேவை என்று வாதிப்போர் பழைய பிழைகளையே திரும்பும் செயுமாறு தூண்டுகிற காரியத்தையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் சுயநலன் சார்ந்தது மட்டுமன்றி மக்கள் விரோதமானதும் கூட. அந்நிய ஆதரவு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் அந்நிய அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதல்ல. அரசுகளிடையே நடக்கிற காய் நகர்த்தல்களை ஒரு விடுதலை இயக்கமோ ஒடுக்கப்பட்ட சமூகமோ தீர்மானிக்க முடியாது. எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் அதற்கான பலன்களை அனுபவிக்கப் போவது மக்களே அன்றி வித்தைகாட்;டுகின்ற தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் அல்ல.

 தினக்குரலில் அரசியல் பத்தியை எழுதுகிற கலாநிதி கீதபொன்கலன் தொடர்ச்சியாக த.தே.கூ.வுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையையும் அதன் அரசியல் முக்கியத்துவம் பற்றியும் எழுதி வருகின்றார். இம் முறை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் யாவும் ‘பம்பலுக்காக போட்டியிடுகின்றன’ என்று சொல்லுகிறார். மேலும் பிரநிதித்துவம் பிரிவது ஆபத்தானதென்றும் அவ்வாறு பிரிக்கப்பட்டால் அவர்களை இலகுவாக ‘விலைக்கு வாங்கலாம்’ அல்லது ‘பிரித்தாளலாம்’ எனவே கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார். விடுதலை புலிகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பால் தனது 22 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து வைத்திருக்க முடியவில்லை. இந் நிலையில் இம் முறை கூட்டமைப்பில் இருந்து தெரிவாவர்கள் விலை போகவோ பிரியவோ மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைவிடக் கூட்டமைப்பு அளவுக்கு விலைபோன ஒரு கட்சியைக் காண்பது அரிது. ‘அரசியல் விபசாரம்” என்பதன் முழு வடிவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த இடத்தில் புதிய கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்கள் மீதும் கொட்டப்படுகின்ற விஷம் பயத்தின் அடிப்படையிலானது தான். மாற்று அரசியல் அணி ஒன்று தமிழ் மக்களிடையே உருவாகாமல் தடுக்கும் முயற்சியில் தான் இந்த புத்திஜீவிகள் இறங்கியிருக்கிறார்கள்.

தனது பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார் கீதபொன்கலன்:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் இன்றுள்ள பிரதானமான தமிழ்க் கட்சி என்று கூறக்கூடியது மட்டுமல்ல. பின்-யுத்தகால தமிழ்த் தேசியவாதத்திற்கு தலைமை வழங்க வேண்டிய நிலையிலும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களின் போதே தமிழ்த் தேசியவாதம்  கூட்டமைப்புக்கு கைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியிருந்தேன்.”

கீதபொன்கலன் சொல்லுகிற உள்ளுராட்சித் தேர்தல்களில் மக்களில் பெரும்பகுதியினர் வாக்களிக்கவில்லை. அது தமிழ்ப் பாரளுமன்ற அரசியல் மீதான வெறுப்பின் விளைவானது. தமிழ் மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயம். வடக்கில் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பே தமிழ் மக்களை அவமதிக்கின்ற செயற்பாடு. இத் தேர்தலின் விளைவால் பயனேதும் விளையாது என்று எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை அவமதிக்கும் விதமாக தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் வாக்களிக்காது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தமிழ்த் தேசியவாதம்  கூட்டமைப்புக்கு கைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று விளக்கமளிக்கும் தமிழ்ப் புத்திஜீவிகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் என்றால் எதிர்காலம் நிச்சயம் பயங்பரமானதாகவே இருக்கும். தனது இருப்பையன்றி வேறு எதைப் பற்றியும் அக்கறை செலுத்தாது, மக்கள் மீது நம்பிக்கை வைக்காதுள்ள குறுகிய தமிழ்த் தேசியவாதத்தால் வேறெதையுஞ் செய்ய இயலாது. இதை கடந்த நான்கு தசாப்தகால தமிழ்த் தேசியவாத அரசியலை எமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளது. இன்றுள்ள தமிழ் தேசியவாதத் தலைமைகளில் முக்கியமான சில நேரடியாகவே பேரினவாத ஆட்சியாலும் இந்திய மேலாதிக்கவாதிகளாலும் இயக்கப்படுகின்றன. வேட்பாளர் பட்டியல்களைக் கூட ஒரு அயல் நாடு தீர்மானிக்க இயலும் என்றால் தமிழ் மக்களின் இறைமை எங்கே போய் நிற்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

 நடந்து முடிந்த அவலத்திற்குப் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளும் தமிழ்த் தேசியவாதிகளுமே. ஆனால் இன்றும் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலைத் தொடர்வது பற்றியே இவர்கள் அக்கறையாய் இருக்கிறார்கள். இவர்களும் சரி, இவர்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் புத்திஜீவிகளும் சரி, முகாம்களில் இருக்கும்; மக்கள் பற்றியோ நடந்து முடிந்த பேரழிவு பற்றியோ எதுவித அக்கறையுமற்று புதிய மாயைகளை, கனவுகளை, வெற்று நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஊட்டும் சீரழிவுச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது. இன்றைய தேவை மாற்று அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு அரசியல் தலைமையே. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலோ ஏனைய பிரதான தமிழ்க் கட்சிகளாலோ வழங்க முடியாது.

 அறிவுத்துறை அயோக்கியத்தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் மிகப் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை வரலாறு எங்குமே காணலாம், உதாரணத்துக்கு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டாமென்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி வாக்களியுங்கள் என்று (முன்னாள் நீதியரசர் ஒருவர் உட்படத்) தமிழ்ப் புத்திஜீவிகள் தொடர்ச்சியாகக் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் ஏன், எதற்கு என்று எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. இரண்டு போர்க் குற்றவாளிக்கிடையில், சுடச் சொன்னவருக்கும் சுட்டவருக்கும் இடையில் இரண்டு மனித குல விரோதிகளுக்கிடையில் தேர்வதற்குத் தமிழ் மக்களுக்கு என்ன இருந்தது? இன்று பொன்சேகா எங்கே நிற்கிறார்? சமஷ்டியை அமுல்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடிக்கவுள்ளதாக பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணுவதற்கு தனது சக்தியை சகல வழிகளிலும் பயன்படுத்தப் போவதாக அக் கட்சி கூறியுள்ளது.  பொன்சேகா இது சிங்களவரின் நாடு என்று சொன்னது தற்செயலாக வாய் தவறி வந்த சொற்கள் அல்ல. அது தான் அவரது சிந்தனை என்பது இப்போது மேலும் தெளிவாகிறது. சரத் பொன்சேகாவை நம்பும்படி சொன்னவர்கட்கு என்ன விதமான அரசியல் ஞானம் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். சாதாரண அறிவுக்கு எட்டுகிற விடயங்களை விளங்கிக் கொள்ள இயலாதவர்களா தமிழ் மக்களுக்கு  வழிகாட்டப் போகிறார்கள்?

 அரசியல் அயோக்கியத்தனம் என்பது பற்றிப் பலரும் அறிவார்கள். அறிவுத்துறை அயோக்கியத்தனம் பற்றி நாம் கூடக் கவனமாக இருக்க வேண்டும். ஒருவகையில் இது மூளைச்சலவை செய்கிறது. தமிழ்ச் சமூகத்திடம் நிறைந்திருக்கின்ற காலனித்துவ எச்சங்களில் ஒன்றுதான் “படித்தவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்ற எண்ணப் போக்கு. இதை ‘புத்திஜீவிகள்’ தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள். எட்வட் ஸயிட் சொல்வது போல கொலை இரண்டு விதமாக இடம்பெற முடியும். முதலாவது உயிர்க்  கொலை, மற்றையது சிந்தனைக் கொலை. இரண்டாவது கொலை அபாயமானது, பயங்கரமானது. இதன் பாதிப்பு பரம்பரை பரம்பரையாகத் தொடரக் கூடியது. இவ்வாறான ஒன்றைத் தான் எமது தமிழ்ப் புத்திஜீவிகள் பல தளங்களிலும் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

Exit mobile version