இந்திய மக்கள்நலனுக்கு எதிரான மதவெறிக் கும்பல்களால் பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. மதவெறியைத் தூண்டி அரசியல் இலாபம் ஈட்டும்நோக்கோடு இந்து வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை இந்திய ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. இப்போது இந்து வெறியர்களுக்கு எதிராக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புலனாய்வை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் (197/92) குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் சிலரை தனியாக பிரித்து வேறொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சாத்தியப்படாதது. பிரச்சினைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் தனிப்படை எவரையும் குற்றத்தில் உட்படுத்த முடியாது. இதில் ஈடுபட்டதால் சிலரை பிரிப்பது சாத்தியமில்லை. எனவே இந்த பிரிவில் (197/92) உள்ளவர்கள் எவரையும் 198/92 பிரிவில் சேர்க்க இயலாது. எனவே, இரண்டு வழக்குகளையும் தனித்தனியேதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்டவர்கள், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.
அவர்களின் பேச்சும், கோஷங்களும்தான் கரசேவகர்களிடம் வெறியை தூண்டி, சர்ச்சைக்குரிய கட்டிடத்தை (பாபர் மசூதி) இடிக்க காரணமாக அமைந்தது. எனவே அத்வானி உள்ளிட்ட 8 பேர் மீதும் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து ஒருவரும் விடுவிக்கப்பட முடியாது. அத்வானி உள்ளிட்ட அனைவரும் கட்டிடம் இடித்த சதித்திட்ட குற்றச்சாட்டை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது