Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு ! : ஆதவன்

09-ayothi-abiramdass.jg_
அபிராம் தாசு : திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான் ‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘ (Ayodhya : The Dark Night & The Secret history of RAMA’s appearance in babri Masjid).

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர். அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை; இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன. மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது. கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

கிருஷ்ண ஜா-ன் புத்தகம்
அயோத்தியின் இருண்ட இரவுகள் பற்றிய கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜாவின் புத்தகம்

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார். இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து திட்டமிடத் தொடங்கினர். அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர். நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர். இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை ஒன்றுமில்லாதவர்களாக்குவது; இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது. இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர். பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர். மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது. இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள். இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர். அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது. இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர். இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன. அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள் அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார். மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே, பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன், கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார். அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர். நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது. ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர். மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

அக்ஷ்ய் பிரம்மச்சாரி
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார். ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார். அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர். தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன. மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர். தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை. முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது. எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும்.

-ஆதவன்

__________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________

Exit mobile version