Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாசிச எதிர்ப்புக்குத் தேர்தலும் ஒரு களமே ! தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம் ! : மருதையன், நாதன்

இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்கப் போகிறேன்.  “வலது விலகல்”, “அன்றே சொன்னோம்”, என்று ஒரு பிரிவினரும், “தி.மு.க கைக்கூலி” என்று வேறு சிலரும் என்மீது புகழ்மாரி பொழியலாம். இவற்றுக்கெல்லாம்  அஞ்சும் நிலையில்  நாங்கள் இல்லை. நாடும் இல்லை.

டில்லியில் போராடும் விவசாயிகளிடம் நேரில் உரையாடினோம்.  பல்வேறு காரணங்களால் முரண்பட்டிருந்த இடது சாரி சங்கங்கள் இன்று அங்கே ஒன்று பட்டு நிற்பதைக் கண்டோம்.  அரசியல்  நடவடிக்கைகளில் அவர்களுடன் பலவிதமான முரண்பாடுகளைக் கொண்ட பணக்கார விவசாயிகள் இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கிறார்கள். மக்கள் தொகையில் 32% மேல் இருந்தும் 3% நிலம் கூட இல்லாத, சாதி-வர்க்க ஒடுக்குமுறையை அன்றாடம் எதிர்கொள்கின்ற பஞ்சாபின்  தலித் விவசாயத் தொழிலாளர்கள், ஆதிக்க சாதியினரான ஜாட் விவசாயிகளுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.

சாதி ஆதிக்கத்துக்குப் பெயர்போன அரியானாவின் காப்  பஞ்சாயத்துக்காரர்களிடம் இந்தப் போராட்டம் “அடக்கத்தை” கொண்டு வந்திருக்கிறது. தலித் மக்களுடனும் சமூகத்தின் பிற பிரிவினருடனும் தாங்கள் அனுசரித்துச் செல்வதை நம்மிடம் வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

இதுநாள் வரை பாஜக வை ஆதரித்த தவறுக்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் கிசான் மகாபஞ்சாயத்தில் முஸ்லிம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறார் ராகேஷ் திகாயத்.  மேற்கு உ.பியில் பாஜக வின் சமூக அடித்தளமாகவே மாறியிருந்த ஜாட் விவசாயிகள், சொந்தக்காரனாகவே இருந்தாலும்  பாஜக காரனை திருமணம் , கருமாதி உள்ளிட்ட அனைத்துக்கும் சமூகப் புறக்கணிப்பு  (ஹூக்கா பானி பந்த்) செய்கிறார்கள். முசாபர் நகர் கலவரத்தில் தங்களை கிராமத்திலிருந்தே அடித்து விரட்டிய ஜாட் விவசாயிகளிடம் இன்று தென்படும் மனமாற்றம் குறித்து  முழு நம்பிக்கை ஏற்படாத நிலையிலும்,  கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் அவர்களுடைய போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறார்கள்.

மக்களைக் காட்டிலும் பின்தங்கிவிட்ட “முன்னணிப்படை” !

க்களிடம் உருவாகியிருக்கும் மேற்கண்ட வேதியல் மாற்றங்களுக்கு என்ன காரணம்?  அவர்கள் பாசிசத்தின் கோர முகத்தை நேருக்குநேர் எதிர் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பன பாசிசத்தின் வர்க்க உள்ளடக்கத்தை வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள், தலித் மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சுய தொழில் செய்வோர்.. என்று அனைவரும் மோடி அரசின் பாசிசக் கொடுங்கோன்மையை அனுபவித்திருக்கிறார்கள்.  இருப்பினும் தன்னால் பாதிக்கப்பட்ட வர்க்கங்களோ, சாதிகளோ, கட்சிகளோ  தனக்கெதிராக  ஓரணியில் திரண்டுவிடாமல் பிளவுபடுத்துவதில்  பாசிஸ்டுகள் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார்கள்.

பாசிஸ்டுகள் வெற்றி பெறுவதற்கு முதன்மையான காரணம் அடக்குமுறை என்று நாம் கருதுவோமாகில் அது பாரிய தவறு.  பாசிசத்தை  இயல்புநிலையாகப் பார்ப்பதற்கு நம்மை அவர்கள் பழக்கியிருப்பதுதான் அவர்களது வெற்றியின் இரகசியம்.  ஊபாவில்  சிறைப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், நூறு நாட்களைத் தாண்டிவிட்ட விவசாயிகள் போராட்டம்,  அடுத்தடுத்த மாநிலங்களில் அரங்கேற்றப்படும் ஆட்சிக்கவிழ்ப்புகள், குதிரை பேரங்கள், ஜி.எஸ்.டி, நீட், பெட்ரோல் விலையேற்றம், முஸ்லிம்கள்-தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள், அம்பானி-அதானி ராச்சியம், அர்னாப் கோஸ்வாமிகளின் அண்டப்புளுகுகள், ஊடகங்களின் அடிமைத்தனம்.. … இன்னும் இங்கே சொல்லாமல் விடுபட்ட அனைத்தையும்  “வழமையானவற்றின்” பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு சங்கிகள் நம்மைப் பழக்கிவிட்டார்கள்.

“வழக்கம் போல”  தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் முன்னாள் செயலர் தரப்பினர். ஏனென்றால் அவர்கள் பார்வையில், “நாளை மற்றொரு நாளே” என்பது போல,  இதுவும் வழமையான இன்னொரு தேர்தலே.

(நானும் தோழர் நாதனும்  பிப் 2020 இல் அமைப்பிலிருந்து விலகி விட்டோம். சில மாதங்களுக்குப் பின்னர், ம.க.இ.க சார்ந்த அரசியலமைப்பு  பிளவு பட்டுவிட்டது.  பிளவுக்கு காரணமான சிறுபான்மையினரான  முன்னாள் செயலர் தரப்பினரும்,  மக்கள் அதிகாரம்  என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். வினவு தளமும் இவர்கள் வசமே உள்ளது.  இந்தக் கட்டுரையில் “முன்னாள் செயலர் தரப்பினர்” என்று இவர்களையே குறிப்பிடுகிறோம்)

“காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கான  போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்பது அவர்கள் முன்வைத்திருக்கும் முழக்கம். போர்த்தந்திர ரீதியில் சொல்வதெனில், “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று சொல்ல வேண்டும்.  அதே நேரத்தில்,  காவி-கார்ப்பரேட் பாசிசம் என்ற செயல் தந்திரச் சூழலையும் சொல்லாமல் விட முடியாது. இந்த “டெக்னிக்கல் சிக்கலுக்கு” அவர்கள் கண்டிருக்கும் தீர்வு – போர்த்தந்திரத்துக்கு முன்னால் செயல் தந்திரத்தை ஒட்டவைத்து விடுவது!

இது வறட்டுச் சூத்திரவாதம் தோற்றுவிக்கும் ஒரு அவல நிலை!  தம் வாழ்க்கை அனுபவங்களின் மூலமாக, விவசாயிகளாலும், தலித்மக்களாலும், முஸ்லிம்களாலும் உணர்ந்து கொள்ள முடிந்த ஒரு உண்மையை, “அறிவாற்றல் மிக்க முன்னணிப்படையால்” புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் அவல நிலை!

மேற்கண்ட சிந்தனை முறைக்கு நானும் ஆட்பட்டிருந்தவன்தான் என்ற போதிலும், “தேர்தல் புறக்கணிப்பு  என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியுமா?” என்ற கேள்வி, சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே எழத் தொடங்கிவிட்டது.

“புறக்கணிப்பு” சரியா என்ற ஐயம் முன்னரே எழுந்துவிட்டது !

செப்-8, 2018 அன்று சென்னையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய ஆனந்த் தெல்தும்டெ, “ 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வை நாம் தோற்கடிக்கத் தவறினால், மொத்த இந்திய சமூகமும் பல தலைமுறைகள் பின்னுக்கு இழுக்கப்பட்டு விடும்” என்று எச்சரித்தார்.

“இது தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை கைவிடுவதாக இல்லையா?” என்று பார்வையாளராக இருந்த ஒரு தோழர் கவலையுடன் கேள்வி எழுப்பினார்.  அதற்கு ஆனந்த் விளக்கமளித்தார்.  “தேர்தலில் மோடியைத் தோற்கடிக்கவேண்டும் என்று கூறுவதனால், இந்த அரசமைப்பின் மீது நமக்கு பிரமை இருக்கிறது என்று பொருளல்ல” என்பதை விளக்கிவிட்டு,  இருப்பினும், இன்றைய சூழலில், மோடி மீண்டும் வெற்றி பெறாமல் தடுப்பது  ஏன் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

பின்னர் ஆகஸ்டு 2019 இல் பெங்களூருவில் வழக்கறிஞர் தோழர் பாலன் ஏற்பாடு செய்த பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் சந்தித்தோம். அது நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றிருந்த சூழல். பீமா கோரேகான் பொய் வழக்கில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இருந்த போதிலும், அந்தக் கூட்டத்தில் ஆனந்த் பேசினார்.  வரலாற்றில் நாஜிகள் வெற்றி பெற்ற சூழலையும், தற்போது பார்ப்பன பாசிசம் வெற்றி பெற்றிருக்கும் சூழலையும் விளக்கினார். “ஒரு நீண்ட இருண்ட காலத்தில் நுழைகிறோம்” என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து நான் பேசினேன்.  பாஜக வைப் படுதோல்வியடைய வைத்த  தமிழக மக்களை கர்நாடகத்தின் முற்போக்கு இயக்கத்தினரும் இசுலாமிய மக்களும் வெகுவாகப் பாராட்டியது மட்டுமின்றி, தமிழகத்தில் இது எப்படி சாத்தியமானது என்பதைப் பேசுமாறு கோரியிருந்தனர்.  அந்தக் கோணத்தில் பேசினேன்.  “ பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்” என்ற நம்பிக்கையூட்டும் சொற்களுடன் பேச்சை முடித்துவிட்டு அமர்ந்தேன்.

“So, you are still optimistic !”  என்று சொல்லி ஆனந்த் மெல்லச் சிரித்தார்.  “But do we afford to be pessimistic?  என்று திருப்பிக் கேட்டேன்.  எனது பதில் ஒரு moralistic response.  அவ்வளவுதான்.

ஏப்ரல் 2020 இல்  அவர் கைதாகிவிட்டார்.  “உங்கள் முறை வருவதற்கு முன் பேசிவிடுங்கள்” என்று தனது கடைசிக் கடிதத்தில்  நமக்குச் சொல்லிவிட்டு சிறை சென்று விட்டார்.  பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட எல்லோருடைய பிணை மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. தன் தாய்மொழியே மறந்து போன நிலைக்கு ஆளாகிவிட்டார் தோழர் வரவரராவ்.

“முறியடிப்போம்” என்று நான் பேசிய இறுதி வார்த்தைகளின் பொருள் என்ன? அதனை சம்பிரதாயமான  rhetoric  என்று ஆனந்த் கருதியது உண்மைதானே!

அருந்ததி ராய் இதே விசயத்தை என்னிடம் வேறு விதமாகச் சொன்னார்.  “பாஜக அரசு பகலில் செய்வதை, காங்கிரஸ் அரசு இரவில் செய்கிறது. இருவருக்கும் என்ன பெரிய வேறுபாடு என்று நானே பேசியிருக்கிறேன். பகலில் பட்டவர்த்தனமாக குற்றமிழைப்பவனுக்கும், இரவில் ஒளிந்து மறைந்து செய்பவனுக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்கிறது? அதை எப்படி நாம் அலட்சியப்படுத்த முடியும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது” என்று தனிப்பட்ட உரையாடலில் ஒருமுறை குறிப்பிட்டார்.  பிறகு, பிப்-23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநாட்டில்  பேசும்போது,  “தேர்தல் அரசியல் பிரமைகள் நமக்கு இல்லையென்ற போதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம்” என்று தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.

இருப்பினும் தேர்தல் பற்றி அப்படியொரு நிலைப்பாடு  அன்று நான் சார்ந்திருந்த ம.க.இ.க சார்ந்த அமைப்புகளால்  எடுக்கப்படவில்லை.

“தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் பாசிசத்தை முறியடிக்க இயலும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும்,  இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், தேர்தல் அரசியல் கட்சியினர் பலரும் எங்களுக்கு களத்தில் துணை நின்றிருக்கின்றனர். அந்த வகையில்  போராட்டக் களத்தில் அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்றவாறு மாநாட்டில் நான் பேசினேன்.  தேர்தல் புறக்கணிப்பு என்று பேசவில்லை. நான் பேசியது என் தனிப்பட்ட கருத்தல்ல.  அதுதான் அமைப்பின் முடிவு.  மாநாட்டுத் தீர்மானமும் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் நிறைவேற்றப் பட்டிருந்தது.

எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.  இதைச் சுட்டிக்காட்டி, “ மக்கள் அதிகாரம்,  திமுக – காங் அணிக்கு மறைமுகமாக வேலை செய்கிறது” என்று சமூக ஊடகங்களில் சிலரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.  2016 சட்டமன்றத் தேர்தலின் போதும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மேற்கொள்ளப்படவில்லை.  இருந்த போதிலும்,  2019 இல் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் நடத்தவில்லை என்பதை  எனது தனிப்பட்ட சூழ்ச்சியாக சித்தரித்து  அன்று அமைப்பிலிருந்து வெளியேறிய சிலர் அவதூறு செய்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது தொடக்கம் முதலே அமைப்பு பின்பற்றி வரும் நிலை. எனவே அதனை மாற்றக்கூடாத அமைப்பின் “அடிப்படைக் கொள்கை” என்றே பலரும் புரிந்து வைத்திருந்தனர். இதன் காரணமாக “அடிப்படைக் கொள்கையையே” அமைப்பு கைவிட்டு விட்டதோ என்று சில தோழர்கள் குழம்பினர். சாதாரணத் தோழர்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் பரவாயில்லை.  அரசியல் தலைமையில் இருந்த முன்னாள் செயலர் தரப்பினரே “2019 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு செய்யாதது தவறு” என்று  இன்ஃபார்மல் ஆக பேசத்தொடங்கினர்.  மோடியின் தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் இவ்வாறு சிந்தித்தனர் என்பதே சிறப்பு !

இன்று “கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்ற விசித்திரமான முழக்கத்தை முன்னாள் செயலர் தரப்பினர் உருவாக்கியிருப்பதன் பின்புலம் இதுதான்.

“புறக்கணிப்பு” நிரந்தரக் கொள்கையாக முடியுமா?

ம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என்பது செயல்தந்திரம் தொடர்பான ஒரு பிரச்சனைதான். இதைக் கோட்பாட்டு ரீதியில் யாரும் மறுப்பதில்லை. இருப்பினும் மா.லெ இயக்கத்தின் தோற்றத்திற்கும் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற நிலைப்பாட்டுக்கும் ஒரு தொப்பூள்கொடி உறவு இருப்பதை நிராகரிக்கவியலாது. ஏனென்றால், இந்தியப் பொதுவுடமை இயக்கம் நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கி, நிறுவனமயமாகி விட்டதை எதிர்த்த கலகத்தில் தோன்றியதே மா.லெ கட்சி.  எனவே, “தேர்தல் புறக்கணிப்பு” என்பது போர்த்தந்திர அரசியல் பாதை சார்ந்த அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்றாகிவிட்டது.

இருப்பினும், மாவோயிஸ்டுகள் மற்றும் மா.அ.க உள்ளிட்ட சில குழுக்கள் தவிர, பெரும்பான்மையான மா.லெ குழுக்கள் காலப்போக்கில் தேர்தலில் பங்கேற்கத் தொடங்கி விட்டனர்.  அப்படி பங்கேற்றவர்கள் பலரும் வைப்புத்தொகையை இழந்தனரேயன்றி யாரும் வெற்றி பெற முடியவில்லை. பிகாரில் லிபரேசன் குழுவினர் சில தொகுதிகளில் வெற்றி பெறுகின்றனர். அது ஒரு விதிவிலக்கு.

நாடாளுமன்றப் பாதையில் மூழ்கிய வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலை பற்றி விளக்கத் தேவையில்லை.  முதலாளித்துவ நாடாளுமன்றத்தை உள்ளிருந்து அம்பலப்படுத்தப் போவதாக சொன்னவர்கள், முதலாளித்துவ ஜனநாயகத்தை நியாயப்படுத்துபவர்களாகவும், புரட்சிகர வழிமுறைகளை நிரந்தரமாகக் கைவிட்டவர்களாகவும், புதிய தாராளவாதக் கொள்கையின் முகவர்களாகவும் மாறினர்.  தற்போதைய அவர்களின் நிலையை நாடறியும்.

ஆயுதப்போராட்டப் பாதையை நடைமுறைப்படுத்திய மாவோயிஸ்டுகள்,  தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லையே தவிர, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பை தமது செல்வாக்குப் பகுதிகளில் எப்படி அமல்படுத்தினர் என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனை. அது ஒருபுறமிருக்க,  அவர்கள் ஆயுதப்போராட்டப் பாதையில் தோல்வியடைந்திருப்பதுடன், மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டிருக்கின்றனர் என்பதே அனுபவம் காட்டும் உண்மை.

“எந்தப் பாதையில்?” என்பது குறித்து ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து விட்டன.  இதுதான் சரி என்று இரண்டு பாதைகளைப் பின்பற்றியவர்களும் நடைமுறையில் தோல்வி கண்டிருப்பதே நம்முன் உள்ள அனுபவம். இரண்டையும் நிராகரித்த  மக்கள் திரள் பாதை என்ற மூன்றாவது வழி குறித்து  கோட்பாட்டளவில் பேசியிருக்கிறோம். ஆனால் இடதுசாரிகள் நடைமுறையில் பின்பற்றத்தக்க முன்னுதாரணம் என்று கூறுமளவிற்கு புதிய வெளிச்சம் எதையும் காட்டமுடியவில்லை.

நாடாளுமன்றவாதத்தை நடைமுறையில் கேள்விக்குள்ளாக்கும் விவசாயிகள் போராட்டம்!

ன்னொரு புறம்,  தேர்தலில் பங்கேற்பவர்களான லிபரேசன், நியூ டெமாக்ரசி போன்ற  குழுக்களும்,  வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் சில மாநிலங்களில் வலிமையான மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டியிருப்பதையும் காண்கிறோம்.  தற்போது நடைபெற்று வரும் வரலாறு காணாத விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி வைத்த பெருமை பஞ்சாபில் இயங்கும் மா.லெ குழுக்களையே சாரும்.

தேர்தலில் பங்கேற்கின்றவர்கள் என்ற போதிலும், அத்தகைய மா.லெ குழுக்கள் சார்ந்த விவசாயிகள் சங்கங்கள்தான் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தை பஞ்சாபில் தொடங்கி வைத்தவர்கள்.  முதலில் இடதுசாரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கையாகத் தொடங்கிய அந்தப் போராட்டம்தான், பின்னர் பிற விவசாய சங்கங்களை மட்டுமின்றி, அரியானா மற்றும் உ.பியின் ஜாட் விவசாயிகளையும் ஈர்த்து,  இன்று மோடி அரசை எதிர்த்து நிற்கிறது.

போராடுகின்ற விவசாயிகளும் தேர்தல் அரசியலை அங்கீகரிப்பவர்கள்தான்.  இருப்பினும் அவர்களது போராட்டம், நாடாளுமன்றப் பெரும்பான்மை தருகின்ற அதிகாரத்தின் வழியாக மோடி அரசு திணிக்கின்ற பாசிச சட்டங்களை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கிடமற்ற அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி வருவதையும் அம்பானி அதானிகளை அச்சுறுத்தி வருவதையும்  காண்கிறோம்.

இது இந்திய நாடாளுமன்ற அரசியலில் அரியதொரு நிகழ்வு. “தேர்தல் பங்கேற்பு  X புறக்கணிப்பு” என்ற எளிமைப்படுத்தப்பட்ட இருமை எதிர்வுச் சட்டகத்தின் வழியாகவே அனைத்தையும் பார்க்கின்ற ஆணவப் பார்வையினால் இந்தப் போராட்டத்தின் உண்மையான முக்கியத்துவத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளவியலாது.

நாடாளுமன்றம் – புரட்சியாளர்களும் பாசிஸ்டுகளும்!

ம்யூனிஸ்டு புரட்சியாளர்களுக்குத்தான் நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று நாம் எண்ணினால் அது மிகப்பெரும் தவறு.  வேறொரு கோணத்திலிருந்து, அதாவது ஜனநாயகம் என்ற கருத்தாக்கமே ஹிந்து தர்மத்துக்கு எதிரானது என்ற கோணத்திலிருந்து,  பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும்  நாடாளுமன்றத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை கிடையாது.

இருப்பினும் லிபரல் ஜனநாயகத்தின் மீதான தமது வெறுப்பை சங்கிகள் அரசியல் ரீதியாக பிரகடனப் படுத்துவதில்லை. மாறாக, அரசியல் சட்டத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும்  கட்டுப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தையே தொடர்ந்து காட்டுகின்றனர்.  நாடாளுமன்றப் படிக்கட்டுகளை விழுந்து கும்பிட்ட பின்னர்தான், நாடாளுமன்றத்துக்குக் குழி பறிக்கும் வேலையை மோடி தொடங்கினார்.  அரசமைப்பின் எல்லா நிறுவனங்களையும் இப்படித்தான் அவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

“நாடாளுமன்ற வழிமுறையா, நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட வழிமுறையா என்பது குறித்து இடதுசாரிகளைப் போல வெகு நீண்ட  சித்தாந்த விவாதங்களை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் நடத்தியதில்லை. இருப்பினும், நடைமுறையில் இவ்விரண்டையும் மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டு வருபவர்கள் அவர்கள்தான்” என்று அய்ஜாஸ் அகமது குறிப்பிடுவார். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆயுத வன்முறை உள்ளிட்ட சட்டவிரோத வழிமுறைகளை (unlawful activities) வேறெந்த பயங்கரவாத அமைப்பைக் காட்டிலும் தீவிரமாகப் பயன்படுத்தி வருபவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்தான். இருப்பினும் மாவோயிஸ்டுகள்தான் சட்டவிரோதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சங்கிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக சட்டபூர்வமாக்கப் பட்டுவிட்டன.

பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி காஷ்மீர் வரை,  எல்லா விதமான சட்டவிரோத, கிரிமினல் நடவடிக்கைகளும் படிப்படியாக சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுவிட்டன.  அவர்களது ஒவ்வொரு அரசியல் மரபு மீறலும் புதிய மரபாக அங்கீகாரம் பெற்று விட்டது. முஸ்லிம்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரான வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளில் புதிய எதார்த்தமாக நிலைபெற்று விட்டன. பசுக் குண்டர்கள் நடத்திய கொலைகள்,  பஜ்ரங் தள் குண்டர்கள் நடத்திய லவ் ஜிகாத் மற்றும் மதமாற்றக் கொலைகள் போன்றவையனைத்தும் பாஜக அரசுகள் இயற்றிவரும் சட்டங்களால் புனிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  சனாதன் சன்ஸ்தாவின் பணியை என்.ஐ.ஏ நிறைவேற்றுகிறது.

அழிக்கப்படுகிறது பலகட்சி ஜனநாயகம் – நாம் கவலைப்படுவதா, குதூகலிப்பதா?

ல கட்சி ஆட்சிமுறை என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு, அதை நடைமுறையில் ஒழித்துக் கட்டும் பணியை மோடி அரசு திறம்படச் செய்துவருகிறது. கார்ப்பரேட் நன்கொடை  முழுவதையும் தானே சுருட்டிக்கொள்ள ஏதுவாக, அவை குறித்த கணக்குகளை ரகசியமாக்கி, ஊழலை மையப்படுத்தி, ஏகபோகமாக்கி விட்டது.  இதன் காரணமாக, எதிர்க்கட்சிகளின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிட்டது.   பாஜக வின் பணபலத்தை மீறி எதிர்க்கட்சிகள் வென்றாலும் அவர்களது எம்.எல்.ஏக்கள் கொத்துக் கொத்தாக விலை பேசப்பட்டு,  எதிர்க்கட்சி அரசுகள் பாஜக அரசுகளாக மாற்றப் படுகின்றன. விலைபோக மறுப்பவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எல்லா ஆயுதங்களும் ஏவப்படுகின்றன.

பாஜக என்ற கட்சிக்கும் அரசு மற்றும் அரசாங்கத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு மிகவேகமாக அழிந்து வருகிறது.  ஊடகவியலாளர்கள் மீது மாரிதாஸ் போன்றோர் தொடுத்த தாக்குதலை தமிழகத்தில் கண்டோம். மாரிதாஸின் வேலையை அதிகாரபூர்வமாகவே செய்வதற்கு அமைச்சர்களும் (GoM) வலதுசாரி அறிவுத்துறையினரும் கூடிப் பேசியது தொடர்பான ஆவணத்தை  சமீபத்தில் காரவன் ஏடு அம்பலமாக்கியிருக்கிறது.

முதலில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு அடையாளக்குறி இட்டனர். அடுத்து ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுக்காதவர்கள் வீடுகளை அடையாளம் காண்கின்றனர். இப்போது, ஊடகவியலாளர்கள் மீது பச்சை, கருப்பு, வெள்ளை என்று அடையாளக்குறி இடுகின்றனர். மொத்தத்தில் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்த நிலைமைகள் குறித்து நாம் கவலைப்படுவதா அல்லது குதூகலிப்பதா?

அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை மோடி அரசு படிப்படியாகப் பறிப்பதையும், அரசியல் சட்ட நிறுவனங்கள் அனைத்தையும் குடைந்து உள்ளீடற்ற கூடுகளாக மாற்றுவதையும், அரசு அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். அதிகாரமாகவே மாற்றுவதையும், “போலி ஜனநாயகம்” என்கிற தங்களுடைய நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும்  கூடுதல் சான்றுகள் என்று சிந்திப்பவர்களை நீங்கள் எந்தக்  கணக்கில் சேர்ப்பீர்கள்?

முன்னாள் செயலர் தரப்பினர் முன்வைத்திருக்கும் முழக்கங்களைப் பாருங்கள்.

“நாடாளுமன்றம் முதல் ஊராட்சி மன்றம் வரை
எல்லாமே கார்ப்பரேட்டுகள் கையில்!
எதை மாற்றப் போகிறாய் நீ வைக்கும் மையில்?

மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு,
நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல்?”

மாநில உரிமைகளையும் ஊராட்சி மன்ற உரிமைகளையும் பாசிஸ்டுகள் பறித்து வருவது நம் எல்லோருடைய அக்கறைக்கும் கவலைக்கும் உரிய மக்கள் பிரச்சினைகளா அல்லது  இவையெல்லாம் மோடிக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான சச்சரவுகளா? பெயரளவிலான ஜனநாயக உரிமைகளாகவே இருக்கட்டும். அவை பறிக்கப்படும் போது அவற்றை மீட்பதற்கான போராட்டத்தில் தேர்தல் அரசியல் கட்சிகளுடன் நாம் இணைந்து நிற்பதா? அல்லது அது அவர்கள் பிரச்சினை என்று கூறி தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு உத்திரவிடுவதா?

மேற்கண்ட தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்களின் விளைவாக எத்தனை பேர் ஓட்டுப்போடாமல் இருக்கப் போகிறார்கள், எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை வாக்குகள் நட்டம் என்பது இவ்விசயத்தின் மையப்பிரச்சினையல்ல. இந்தப் புறக்கணிப்பு முன்னெப்போதைக் காட்டிலும் இன்று மிகவும் ஆபத்தானது. அரசியல் போராட்டக் களத்திலிருந்து மக்களை விலக்கி வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்கு மறைமுகமாக உதவக்கூடியது.

“இவையெல்லாம் நீண்டகால நோக்கிலான போர்த்தந்திர முழக்கங்கள்” என்று சப்பை கட்டலாம். “இதைத்தானே இத்தனை காலமாக நீங்களும் அங்கீகரித்து வந்தீர்கள்” என்று எதிர்க்கேள்வியும் எழுப்பலாம்.  பாசிசம் வாயிற்கதவைத் தட்டுகின்ற இந்தச் சூழலிலாவது விழித்துக் கொள்ள வேண்டாமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.

நான்கு தூண்களில் எஞ்சியிருப்பது இது மட்டும்தான்!

னநாயகத்தின் தூண்கள் என்று வருணிக்கப்படும் அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள், நாடாளுமன்றம் – சட்டமன்றம் ஆகிய நான்கில் முதல் மூன்று நிறுவனங்களும் இன்று பாசிசத்தின் கைப்பாவைகளாகவே மாறிவிட்டன. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி லிபரல் ஜனநாயக அறிவுத்துறையினர் அனைவருமே அன்றாடம் சொல்லி வருகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றிற்கும் சான்று கூறி நிறுவவேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் போலீசிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் போகிறோம். பாசிசத்திற்கு படிப்படியாக ச ட்ட அங்கீகாரம் வழங்கிவரும் நீதிமன்றத்தையும் அணுகிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகப்பெரும்பான்மையாக ஊடகங்கள் மோடி அரசின் ஊதுகுழல்களாகிவிட்டன என்ற போதிலும் அவற்றையும் நாம் ஒதுக்கிவிடுவதில்லை.  இவர்கள் எந்த விதத்திலும் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல (un accountable) என்பதுதான் இம்மூன்று நிறுவனங்களுக்கும் பொதுவாக இருக்கும் பண்பு.

மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்ட நிலை என்பது எஞ்சியிருக்கும் ஒரு துறை legislature என்கிற நாடாளுமன்றமும் சட்டமன்றமும்தான். அதாவது தேர்தல் என்ற முறை இன்னமும் தொடர்கின்ற காரணத்தினாலும், மோதிக்கொள்ளும் கருத்துக்களையும் நலன்களையும் கொண்ட பல அரசியல் கட்சிகள் இந்த அரங்கில் இன்னமும் இருக்கின்ற காரணத்தினாலும்தான், ஏதோ ஒருவகையில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற Accountability என்பது இங்கே எஞ்சியிருக்கின்றது.

இந்தக் காரணத்தினால்தான் பார்ப்பன பாசிசத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக கட்சிகளிடமிருந்து குரல் எழும்புகிறது.  ஊடகங்கள் ஊதுகுழல்களாக மாறிவிட்டாலும், ஜனநாயக உணர்வு கொண்ட அறிவுத்துறையினர் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரலை எழுப்புகின்றனர்.  எஞ்சியிருக்கும் இவ்விரண்டையும் நசுக்குவதற்கான நடவடிக்கைகளைத்தான் நாம் அன்றாடம் காண்கிறோம்.

பார்ப்பனிய பாசிசத்தை தேர்தல் மூலமாகவே வீழ்த்திவிட முடியாது என்பது உண்மை. இந்த உண்மையை தேர்தல் கட்சிகளே  ஏற்றுக் கொள்கின்றனர்.  இவ்வாறு சவடாலாக பிரகடனம் செய்வதால் மட்டும் ஆகப்போவது என்ன? தேர்தல் அரசியலுக்கு வெளியே போராடுவதற்குத் தேவைப்படுகின்ற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கே, தேர்தலில் பாசிஸ்டுகளின் அணியைத் தோற்கடித்தாக வேண்டும். இந்த வாய்ப்பினைப் புறக்கணிக்குமாறு கூறுவது, நடைமுறையில் பாசிச எதிர்ப்பு சக்திகளை முடக்குவதற்கு மட்டுமே உதவும்.

“தேர்தல் மூலம் பாசிசத்தை முறியடிக்க இயலாது” என்பதை ஒரு சூத்திரம் போல ஜெபிப்பதால் என்ன பயன்? “வியாக்கியானம் செய்வதல்ல மாற்றியமைப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் பணி” என்று கூறுவதன் பொருள்தான் என்ன? தேர்தல் என்ற “மயக்கத்திலிருந்து“ மக்களை விடுவித்து இப்போது அவர்களை வேறெந்தப் போராட்ட முனையில் நிறுத்தப் போகிறார்கள்? அதற்குத் தயார் நிலையில் மக்கள் இருக்கிறார்களா? அவ்வாறு அமைப்புரீதியாக திரண்டிருக்கிறார்களா?

அவ்வாறு இல்லாத ஒரு சூழலில், மோடி அரசை எதிர்க்கின்ற மக்கள் தங்களது எதிர்ப்பை / கருத்தை வெளிப்படுத்தும் வடிவமாக தேர்தலைக் கருதுகின்ற சூழலில், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறுவதன் பொருள்,  பாசிச எதிர்ப்பைக் கைவிடுமாறு கூறுவதேயாகும்.

“நமது முயற்சியின் வாயிலாக ஏற்படாத மாற்றத்துக்குப் பொருத்தமாக
செயல்தந்திரத்தை மாற்றிக்கொள்க” – லெனின்

தோழர் லெனினுடைய “இடதுசாரிக் கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு” எனும் நூல் குறித்து இங்கே குறிப்பிடுவது அவசியம். 1920 இல் லெனின் இதை எழுதுகிறார்.  ரசியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளில் இருந்த இடதுசாரிகள் “பண்ணினா ரசியா மாதிரி புரட்சி பண்ணனும், அத வுட்டுட்டு தேர்தல்-கூட்டணின்னு பேசுவதெல்லாம் முதலாளித்துவ அரசியல்” என்கிற ரீதியில் பேசத்தொடங்கியிருந்தனர். இந்தப் போக்கின் அபாயத்தை உணர்த்தும் பொருட்டே இந்நூலை லெனின் எழுதுகிறார்.

இந்நூல், “நாடாளுமன்ற, சட்டமன்றப் பங்கேற்பு X புறக்கணிப்பு” என்ற கருத்து மோதலுக்கானது என்று பலராலும் புரிந்து கொள்ளப்படுகிறது.  அது எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்.

குறிப்பிட்ட அரசியல் சூழலுக்கு ஏற்ற செயல்தந்திரம் வகுக்கும்போது “தமது அரசியல் சித்தாந்தப் போக்கை,  எதார்த்த உண்மை என்று தவறாக எண்ணிக் கொள்வது” “வர்க்க சக்திகளின் பலத்தை முற்றிலும் புற நோக்கு நிலையிலிருந்து மதிப்பீடு செய்வதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள மறுப்பது” என்ற தவறுகளை நோக்கியே  இந்த நூலில் லெனின் நமது கவனத்தைக் குவிக்கிறார்.

“நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதன் வாயிலாகவும், நாடாளுமன்றப் பங்கேற்பை நிராகரிப்பதன் வாயிலாகவும் ஒருவர் தனது “புரட்சிகர” மனோபாவத்தைக் காட்டிக்கொள்வது மிகமிக எளிது.  இந்த எளிதான வழிமுறையே, கடினமான – மிக மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாக மாறிவிடுவதில்லை.”  (its very ease, however, cannot turn this into a solution of a difficult, a very difficult, problem)

“வலதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் பழைய வடிவங்களை மட்டுமே அங்கீகரிப்பேன் என்று விடாப்பிடியாக நின்று முற்றிலும் கையாலாகாததாகி விட்டது. புதிய உள்ளடக்கத்தை அது காணத்தவறியதே இதற்குக் காரணம். இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் கண்ணை மூடிக்கொண்டு சில பழைய வடிவங்களை பிடிவாதமாய் நிராகரிக்கிறது… நம்முடைய வர்க்கத்திடமிருந்தோ,  நம்முடைய முயற்சிகளின் வாயிலாகவோ ஏற்படாத எந்த மாறுதலுக்கும் பொருத்தமாய் நம்முடைய செயல் தந்திரத்தை மாற்றியமைத்துக் கொள்வதும் நமது கடமையாகும் என்பதை  (to adapt our tactics to any such change that does not come from our class or from our efforts.) அது பார்க்கத் தவறிவிடுகிறது.”

இதுதான் பிரச்சனை.

இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்திலிருந்து விடுபட்டவர்களும் கூட, இந்த “மனநிலை”யிலிருந்து முற்றிலுமாக விடுபட இயலாத காரணத்தினால், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் பற்றி குழப்பமாகவும் முரண்பாடாகவும் சிந்திக்கின்றனர். இது குறித்தும்,  திமுகவை நம்ப முடியுமா என்பன போன்ற கேள்விகள் குறித்தும் அடுத்த பகுதியில் பேசுவோம்.

தொடரும்…

Exit mobile version