மனிதன் அவனது எதிர்கால சந்ததியினருக்காக விட்டு செல்லக்கூடிய சொத்து சுகம் அனைத்தும் அடுத்து தன்னைப் பின்பற்றபவர்களின் சுயநலம் மிக்க வாழ்க்கை பயணத்திற்குத் தான் வழிவகுக்கின்றது. இப்படியான செயற்பாடுகளின் மூலம் மனிதக்குலம் என்றுமே விடுதலைக்கான அசைவியக்கத்தினை ஏற்படுத்த முடியாது. பகிர்ந்து வாழ்தல் என்னும் சமவுடமை யுகத்தினை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் காணமுடியாமல் போய்விடும் என்றும் கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதிலும் இன்றைய நவ காலனித்துவ அடையாளப்படுத்தல்கள் பழமைவாதத்தினை விமர்சிக்கும் போக்கைக் காட்’டி பழமையைய் இன்னும் ஆணித்தரமாக பாதுகாக்கும் கடமையைய் நாசுக்காக செய்து வருகின்றது இவ்வாறானதொரு காலக்கட்டத்திலே மலையக மண்ணை நேசித்த இரண்டு வர்க்கப் போராளிகளின் மரண நிகழ்வு மக்களின் எண்ணத்தினை தூண்டும் வகையில் தங்களின் வாழ்க்கையை பல இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக்கியது அவர்களின் மிக உயர்ந்த மனித நேயத்தின் அடையாளமாக காணப்படுகின்றது பழமை வாதத்தினைத் தகர்ப்பதென்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் அடுத்தக்கட்ட மாற்றுப்பாய்ச்சலுக்கான சிறந்த அத்திவாரம் என்றால் மிகையாகாது.
தோழர் நாராயணன் தோழர் குனேந்தி என்னும் குனேந்திர ராஜா இரண்டு அற்புதமான சமவுடமை போராளிகள் இவர்கள் இருவரும் அநேகமான விடயங்களில் சமாந்தரமாக பயணித்தவர்கள் இதிலும் தங்களின் போராட்ட விதைப்புகளை தங்களின் வாரிசுகளின் இதயங்களில் மிகவும் மென்மையாகவும் ஆழமாகவும் விதைத்து சென்றவர்கள் சமத்துவத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம் மிகவும் சுகமானது மக்களுக்காய் வாழ்தல் என்பது திருப்திகரமானது என்னும் சிந்தனையினை தங்களின் பிள்ளைகளின் வாழ்வியலுடன் சங்கமிக்கச் செய்து அவர்களுக்கும் சரியான பாதையினை காட்டிச் சென்றுள்ளதானது வர்க்கப் போராட்டத்தின் வெற்றியின் விடியற்கால நட்சத்திரத்தின் பிரகாசத்திற்கு ஒப்பானது பல காத்திரமான உறுதியான தலைமை போராட்டத் தோழர்களின் வாரிசுகள் உலகமயமாக்கல் சாக்கடைக்குள் புதைந்து போய் தன்னைப் பெற்றவர்களின் கனவுகளை களங்கப்படுத்தியதுவும் அவர்கள் தங்களுக்காய் சொத்து சேர்த்து வைக்க வில்லை என்று வீணான விமர்சனத்தினை செய்துக் கொண்டும் புலம்பித்திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது இந்த தோழர்கள் ஏதோ ஒரு லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துள்ளனர் இவர்களுடன் ஒப்பிடும் போது எந்த வித லட்சியமும் இல்லாமல் ஊதாரித்தனமாக அனைத்தையும் இழந்து தம் பிள்ளைகளுக்கு கல்வியைக் கூட வழங்காமல் மாண்டு போன பெற்றோர்களின் எணணிக்கையே நம்மில் அதிகமாகும்
தோழர் நாராயணன்
பேசிப்பகிர நிறைய இருந்தாலும்
பார்த்ததும் பேச முடியாதளவிற்கு
உணர்ச்சிவசமான கனமது
கம்பிகளுடாய்க்கண்டதும்
கண்களை முட்டி வெளி வரத்துடிக்கும்
கண்ணீர் உருண்டைகளை
கஸ்டப்பட்டு கட்டுப்படுத்துகிறேன்
தூரத்தில் இருந்து வந்திருக்கும் உன்னை
அதைரியப்படுத்த தைரியம் இல்லாததால்
உன் நம்பிக்கைப் பிழம்புகளால்
ஒளுப்பெற்ற
அந்த அறையின்
சந்தடிகளை நீக்கிவிட்டு
இருவரது வார்த்தைகளையும்
புடம் போட்டு உள்வாங்கிக்
கொள்கின்றன செவிகள்
எதைக்கதைப்பதென்ற
தடுமாற்றம் கடைசிவரைக்கும்
இருவருக்கும்
இறுதியில் போகட்டுமா?
ஏன்றாய்
சரி என்றேன்
ஏன் தான் பிரியாமல்
நின்று கொண்டிருந்தோம்?
மௌனமாய்
கழித்த கடைசி நிமிடங்களில்
கண்கள் பகிர்ந்துக் கொண்ட
கனவுகள் ஏராளம்
விடைப்பெறவேண்டிய கணத்தில்
என்னைப்பார்த்தப்படி
சிரித்து நிற்கின்றாய்
பாடசாலைக்கு சென்ற முதல் நாளில்
நீ இருக்கின்றாயா என
நிச்சயப்படுத்திக் கொள்ள
திரும்பி திரும்பி
உன்னைப்பார்த்தவாறு
சென்றதைப் போல
சிறைக்கூட்டை நோக்கி நடக்கின்றேன்
ராஜன்
18.09.2008
கொழும்பு விளக்க மறியலிலிருந்து போது
மேலே காணப்படும் கவிதை தோழர் நாராயணனின் மூத்த மகன் கிருஸ்ண பிரியன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்க மறியலில் இருந்த போது எழுதியது மலைகளை வென்ற மானுடம் என்னும் தோழர் நாராயணனின் நினைவு மலரில் இருந்து எடுக்கப்பட்டது இந்த கவிதையினை பார்த்த உடன் தோழர் நாராயணன் யார் அவரின் சிந்தனையும் செயலும் எவ்வாறானதாக இருந்திருக்கும் என்பதைக் காணலாம்
சீர்த்திருத்த திருமணம் கண்ட மலையகம் புரட்சிகர மரணநிகழ்வுகளை மிகவும் குறைவாகவே கண்டுள்ளது அந்த வகையில செட்டித் தெருவின் முன்னால் நகை வியாபாரியும் நாவலப்பிட்டிய பார் கேபல் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணன் தான் தனது நாற்குறிப்பிலே தனது மரண நிகழ்வுகள் எந்த விதமான சம்பிரதாய செயற்பாடுகளும் இல்லாமல் எந்த சாதிய அடையாளங்களும் இல்லாமல் நடைப்பெற வேண்டும் என்பதனை எழுதி வைத்திருந்தமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அவரின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது குடும்பத்தினர் அவரது இறுதி நிகழ்வுகளை நடத்தியது பலரது சிந்தனையை தூண்டியதனைக் காணக்கூடிய இருந்தது.தான் தொடர்பான சுய விமர்சனக் கோவை ஒன்றையும் பதிவில் விட்டுச்சென்ற இவர் யார் இவரது வித்தியாசமான செயல்கள் எதைக்கூறி நிற்கின்றன என்று அவதானத்துடன் நோக்கும் போது புதிய ஜனநாயக மாக்ஸிய லெனினிச கட்சுpயின் சிரேஸ்டத்தலைவர்களில் ஒருவரும் பாட்டாளிவர்க்க புதிய ஜனநாயக சங்கத்தின் உப தலைவருமான தோழர் நாராயணனின் கடந்த காலம் மக்களுக்கான தியாகங்களினால்
கட்டிக்காக்கப்பட்டது என்பது இதயத்தினை வலிக்கச்செய்தது.
தோழரின் இறுதி நிகழ்வுகளின் போது புதிய ஜனநாயக மாக்ஸிய லெனினிய கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்தில் வேல் சர்வதேச அமைப்பாளர் சட்டத்தரண இ.தம்பையா சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோருடன் பல தோட்டத்தொழிலாளர்களும் தங்களின் புரட்சிகரமான அஞ்சலி உரைகளை நடத்தி கட்சின் கொடி போர்த்தி பாட்டாளிவர்க்க கீதமிசைத்து அடக்கம் செய்யப்பட்டது.
தோழர் குனேந்தி என்னும் குனேந்திர ராஜா
2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தனது 64 ஆவது வயதில் கொழும்பு அரச மருத்துவ மனையில் முன்னால் அட்டன் கல்விக்காரியாலயத்தின் உத்தியோகத்தர் குனேந்திர ராஜா காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டுபலரும் கவலையடைந்து பல செயற்பாடுகளில் இறங்கினர். சிலர் அவரது உடல் அவர் பிறந்த யாழ்ப்பாணத’திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இன்னும் சிலர் அவர் பணி செய்து வாழ்ந்த மலையகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினர் இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மாற்றாக அன்னாரின் மனைவியும் அட்டன் வெலிங்டன் பாடசாலை அதிபருமான திருமதி குனேந்திர ராஜா பின்வருமாறு கூறினார் அவர் அவரது உடலை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவம் கற்கும் மாணவர்கள் தங்களின் கற்கைகளுக்கு பயன்படுத்துவதற்கக எழுதி வைத்துள்ளார் எனவே அவரது உடல் உடனடியாக பேராதனை மருத்துவவப்பீடத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றார் இந்த உண்ணத செயற்பாட்டைக் கேள்வியுற்ற சில பழமைவாதிகள் பின்வாங்கியது மாத்திரம் அல்லாது தங்களின் செயற்பாடுகளில் இருந்தும் விலகிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அன்னாரின் புதல்வி குறிஞ்சி மலர் குறிஞ்சிக் குமரன் ஆகியோரின் உதவியுடன் ஆசிரியர் செல்வராஜ் வாசு தேவன் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புக்கொண்டு மரணமடைந்து மறுதினம் பகல் 11 மணிக்கு முன்பதாக உடலை கையளிக்குமாறு அறிவித்துள்ளதாக கூறியதையடுத்து அவரது உடல் அவர்வாழ்ந்த அவர் நேசித்த மலையகத்தின் கொட்டகலை அரிங்டன் கிராமத்தின் அவரது இல்லமான குறிஞ்சிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது இல்லத்தில் சில பழமை வாதிகள் அவருக்கு வெள்ளை நிர ஆடை அணிவிக்க வேண்டும் என்றும் தேங்காய் உடைத்து சாஸ்த்திர சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்று கூறி ஆயத்தங்கள் செய்த வேலை அவரது மனைவி இவர் இறப்பதற்கு முன்னதாகவே தான் இறந்தால் தனது உடலுக்கு சிகப்பு வர்ண சட்டை அணிவிக்கப்பட வேண்டும் என்றும் எந்த வித சாஸ்த்திர சம்பிரதாயங்களும் செய்யக்கூடாதென்று கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து அவருக்கு புரட்சியின் வர்ணமான சிகப்பு நிற சட்டை அணிவிக்கப்பட்டது ஆனாலும் ஒரு சில ஆசிரிய பெருந்தகைகள் சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்று கூறி அந்த இடத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்த எத்தனித்த போது தோழர் குனேந்திர ராஜாவின் புதல்வியும் கா பொ த உயர் தரத்தில் விஞ்ஞானப் பிpவில் கல்வி கற்று பெறு பேறுகளுக்காக காத்திருப்பவருமான குறிஞ்சிமலர் அப்பா சாஸ்திர சம்பிரதாயம் என்னும் பெயரில் சாதியை அடையாலப்படுத்தும் சம்பிரதாயங்களுக்கு எதிரானவர் என்பதை அழுத்தமாகக்கூறி மருத்துவ பீடத்திற்கு வழங்க இருக்கும் உடலை மிகப் பாதுகாப்பாக வழங்க வேண்டும் எனவும் சாம்பிரானி கற்பூரம் இறந்தவரின் உடம்பைநச்சுப்படுத்தக் கூடியன என்றும் கூறினார்;.இதனைத் தொடாந்து மறு தினம் விடியற்காலை 7.00 மணிக்கு ஆசிரியர் செல்வராஜ் வாசு தேவனின் தலைமையில் இரங்கள் கூட்டம் நடைப்பெற்றதுடன் விரிவுரையாலர் சிவ ராஜேந்திரன் ஊடகவியலாளர் சை;கிங்ஸ்லி கோமஸ்; ஆசிரியர் எஸ் பீட்டர் ரோய் ஆசிரியர் விஜேகுமார் மற்றும் பலரின் புரட்சிகரமான இரங்கல் உரைகளுடனும் செம்மலர் அஞ்லியுடனும் தொழிலாளர் வர்க்கப் பாட்டாளி கீதம் இசைக்கப்பட்டு வீர வணக்கத்துடன் அன்னாரது உடல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவர் தோழர் சண்முக தாசனுடன் இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் தேசிய கலை இலக்கிய பேரவையின் செயற்பாட்டாளரும் புதிய ஜனநாயக மாக்சிய லெனினிச கட்சியின் தீவிர ஆதரவாளரும் ஆவார் அன்னார் வெலிங்டன் பிரதேசத்த்திற்காகவும் மலையகத்திற்காகவும் பல சேவைகள் செய்துள்ளார் அன்னாரின் ஞாபகமாக அட்டன் அந்தோனி மலை தோட்ட பொது மக்களும் பிரதேச பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து தோழர் குனெந்திர ராஜா ஞாபகார்த்த வாசிக சாலைக்கான கட்டிடத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.
வர்க்கப் போராளிகளான இரண்டு தோழர்களின் மரணமும் மனித விடுதலைக்கானதும் வர்க்க விடுதலைக்கானதுமான ஆரம்பங்களே என்பதை எமக்குணர்த்தியதாக காணப்படுகின்றது
வாழ்தலும் சாதலும் அனைவருக்கும் பொதுவான போதும் மக்களுக்காய் வாழ்தல் வரலாற்றில் தடம் பதிக்கும் செயலாகும் தோழர் நாராயணன் தோழர் குனேந்தி என்னும் குனேந்திர ராஜா ஆகிய வர்க்கப் போராளிகளின் துணிவும் தியாகமும் எதிர்க்கால சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.