சமூகத்தின் மேல்படித்தான மக்கள் எல்லாம் தங்களின் சமூக அக்கறையைக் காட்ட ‘சூழலியல்’, ‘நாட்டுப்புறவியல்’, ‘பழங்குடிக் கலை’ என்று ஏதோதோ அடையாள அட்டைகளுடன் உலகச் சந்தையில் விற்பனைக்கான முகாந்திரங்களை இட்டிருக்கும் போது அதற்கு ஆதாரமான பழங்குடிகளின் வாழ்வியல் என்பது முற்றிலும் தூர்ந்து போயிருக்கிறது. ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், சத்திஸ்கர் மாநிலங்களில் இருக்கும் பழங்குடிகளுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கும் இதே நிலை தான்.
இருளர்கள் பற்றிய எனது தொடர் ஆராய்ச்சியில் நிறைய சமூகநல ஆர்வலர்களின் போலியான முகங்கள் தெளிவாயின. பழங்குடிகளின் எண்ணிக்கையையும் புகைப்படங்களையும் காட்டி தனியார் தொண்டு நிறுவனங்கள் பிராந்திய அளவில் சர்வாதிகாரம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறன என்பதும். தமிழகத்தில் உள்ள இருபத்தியாறு வகையான பழங்குடி மக்களின் நிலைமையும் அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய அறிவிப்போடு வரும் சமூகப் பணியாளர்களின் கைகளில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் பழங்குடிகள் ஏதோ சடப் பொருள்களாக அணுகும் முறையும் மற்ற சமூகத்தினரின் ஆதாயத்திற்கேற்ப அவர்களை இடம்மாற்றவும் ஒதுக்கவும் கழிக்கவும் செய்யலாம் என்ற எண்ணமும் அரசிலிருந்து கடைக்குடிமகன் மனநிலை வரைப் பீடித்துள்ளது.
இருளர்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ள தொடர் சம்பவங்களைப் பார்க்கும்போது இன்றைய அவர்களின் இழிவான வாழ்நிலைக்கான காரணிகளை அறியலாம். இருளர்கள் பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள். ஊர்வன பற்றி ஆராய்ச்சி செய்யும்
இருளர்கள், பாம்பு பிடிக்கும் தமது அறிவையும் கலையையும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்குடன் சமூகப்பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்திவந்திருக்கின்றனர். விவசாய சமூகம் பல்கிப் பெருகி ஓங்கியிருந்த கால கட்டத்தில் வயல்களில் நெல்மணிகளைப் பெருமளவில் சூறையாடி வந்த எலிகளைப் பிடிப்பதற்கு பாம்புகளை காடுகளிலும் மற்ற பகுதிகளிலிருந்தும் பிடித்து வந்து, வயல்வெளிகளில் நடமாட விட்டு எலிகளை அழித்து விவசாயிகளுக்கு உதவினர். அதற்கு ஊதியமாக சொற்ப அளவில் அரிசியைப் பெற்று வந்தனர். ஆனால் விவசாயிகள் எலிப் பொறிகளைப் பயன்படுத்தத் தொடங்கியபோது அவர்களுக்கு இருளர்களின் தேவை முடிந்து போயிற்று. பின் இருளர்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதற்காக வேறு தொழிலை நாடியிருக்கும் போது இங்கு வந்த ஜெர்மானியர்களுக்கு இருளர்களின் பாம்பு பிடிக்கும் அறிவும் கலையும் தேவைப்பட்டது. பாம்புகளைப் பிடித்து அவற்றின் தோலை உரித்துப் பதப்படுத்திக் கொடுத்தால் அதை அவர்கள் கைப்பை, இடுப்பு வார் போன்றவை செய்யப் பயன்படுத்த முடியும் என்றனர். இருளர்களை பாம்புகளின் தோலைக் கொண்டுவர ஏவினர். அப்பொழுது வயிற்றுக்கு காட்டையும் காட்டு உணவையும் மட்டுமே நம்பிக்கொண்டிருந்த இருளர்கள் இலட்சக்கணக்கான பாம்புகளை ஜெர்மனியர்களுக்காகக் கொல்ல நேர்ந்தது. தோலை ஜெர்மானியரிடம் கொடுத்து சொற்ப தொகைகளைப் பெற்றுக் கொண்டனர்.
கடுமையான அளவில் பாம்புகள் அழிக்கப்படுவதைக் கண்ட அரசு ஜெர்மானியர்களையோ அவர்களைத் தொடர்ந்து வந்த வியாபாரிகளையோ விட்டு விட்டு காட்டுயிர்களைக் கொல்லுவதைத் தடை செய்யும் வன உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அது வரை இருளர்களின் இன உரிமையாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் இருந்த பாம்பு பிடிக்கும் அறிவிலிருந்தும் கலையிலிருந்தும் அவர்கள் முற்ரிலுமாகப் பிரிக்கப்பட்டனர்.
மிகவும் அபாயகரமானதும் மிகவும் நுட்பம் தேவைப்படுவதுமான அறிவும் கலைத் திறனும் கொண்ட மக்கள் இன்று தமிழகத்தின் புறம்போக்கு நிலங்களில் கூலித்தொழிலாளிகளாகவும் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும் வாழும் இனமாக ஒடுங்கிவிட்டனர். நம்மிடையே இப்படியான ஓர் அறிவியல் பூர்வமான அறிவு உடைய சமூகம் வாழும் இழிநிலையை அரசு எந்த வகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வியப்பில்லை. ஏனெனில் பொதுவாகவே பழங்குடிமக்களுக்கான இட ஒதுக்கீடுகளையும் சலுகைகளையும் அரசு விதித்திருந்த போதும் அதை அனுபவிக்கவோ கேட்டுப் பெறவோ தேவையான அடிப்படைக் கல்வியும் பொது உலகத் தொடர்போ கூட அவர்கள் பெற முடியாத தொலைவில் அவர்களின் அன்றாடம் கழிந்து கொண்டிருக்கிறது.
பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கான நிறைய சமூக இயந்திரங்கள் ஏற்கெனவே பெரிய அளவில் நிறுவப்பட்டிருக்கின்றன. அதாவது ஆதிக்க சமூகத்தினர் முன்னேற்றத்தின் வளர்ச்சிப் படியில் ஏறுவதற்கான தமது தகுதியில் ஒன்றாக ஒடுக்கப்பட்டோரை கைகொடுத்துத் தூக்கி விடுவதற்குப் பதிலாக அவர்களைத் தம் காலால் எட்டி உதைக்கும் வேலையைச் செய்கின்றனர். அவர்களின் இச்சிந்தனை வேறு வேறு அரசின் இயந்திரங்களாலும் செயல் படுத்தப்படுகின்றது. அவற்றில் ஒன்று காவல் துறை. காவல் துறையின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தடிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் அவர்கள் அணிந்திருக்கும் காலணிகளுக்கும் அரசின் அம்புகளாகச் செயல்படுவதே பணி என்பதால் முதிய பெண்ணின் முலைகளோ குழந்தையின் பிஞ்சு விரல்களோ கர்ப்பிணியின் யோனியோ எல்லாமே ஒன்று தான். இந்நிலையில் பழங்குடி மக்களுக்காக பரிவு கொள்ளும் அரசு என்பது கண்ணுக்கெட்டிய காலம் வரை சாத்தியமே இல்லை.
காடுகளிலும் மலைகளிலும் தங்கள் உபயோகத்திற்கு மீறி ஒரு சுள்ளி கூடப் பொறுக்காத தர்ம நியாயங்களை உடைய பழங்குடிகளிடமிருந்து அவர்களின் காட்டைப் பிரித்த அரசு அந்நிலத்தின் கனிம வளங்களைச் சுரண்டும் பணமுதலாளிகளுக்கு அந்தக் காட்டையும் மலையையும் தூக்கிக் தாரை வார்க்கிறது. இதற்காகப் போராட உடல் வலுவில்லாத பழங்குடி மக்கள் ஆயுதங்களைக் கையிலெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. தங்கள் எதிர்காலத்தைத் தான் அவர்கள் ஆயுதங்களாக வடிவம் கொடுத்துள்ளனர்.
இன்றும் எந்தப் பழங்குடி மக்களின் வாழ்விடத்திலும் நல்ல குடிநீர் கிடைக்காது. அவர்களின் அவசர சிகிச்சைக்கோ ஏன், நாட்பட்ட சிகிச்சைக்கோ கூட ஒரு மருத்துவமனை கிடையாது. கடும் வெயில், மழைக்கு ஒதுங்கக் கூட ஒரு கல்விக் கூடம் கிடையாது. பாம்பு, தேள் நுழையாத கூரை கொண்ட குடில் கிடையாது. இதையெல்லாம் பழங்குடியினர் பார்க்கவும் அனுபவிக்கவும் வேண்டுமென்றால் ஆயிதமில்லாமல் நடவாது. தங்களைப் பிறர் ஒத்த ஒரு மனிதனாகக்கூட உணர அனுமதியாத சமூகத்தினருக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் தாம் பழங்குடியினருக்கு அவர்களின் யானை பலத்தை உணர்த்தியுள்ளனர். ‘ஆமாம், அதற்காக. வன்முறையில் இறங்குவதா? இப்படிப் போராடி எதேச்சதிகாரத்தை எதிர்த்துவிடமுடியுமா, என்ன?’ என்று கேள்வி கேட்பவர்கள், பெரு முதலாளிகளிடமோ அவர்களின் வாரிசுகளிடமோ, ‘பழங்குடி மக்களின் வயிற்றில் அடித்துத்தான் பணம் பெருக்க வேண்டுமா?’ என்ற கேள்வியை ஏன் கேட்கக்கூடாது. இந்தப் போராட்டத்தின் அடித்தளம் நேரடியான இரு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறது. ஒன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேயான மோதல். இரண்டாவது, மண் மீது தார்மீக உரிமை கொண்ட மக்களிடமிருந்து வேற்று மண் மீது கொண்ட மோகத்தைத் தீர்க்க அதிகாரத்தைப் பெருக்க மண்ணின் மக்களிடமிருந்தே மண்ணைப் பறிக்கும் முயற்சி.
பழங்குடி மக்களுக்கென மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல நாம் எல்லோருமே ஆதரவு செலுத்த வேண்டியிருக்கிறது. நாம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம். ஆனால் பழங்குடிமக்களில் ஒவ்வொரு இனத்தோரும் பெற்றிருக்கும் ‘அறிவுத் தொகைமை’, நாம் வரையறுத்துள்ள துறைவாரியான அறிவுத்தளங்களுக்குள் எல்லாம் பொதிய முடியாதது. நமது நவீன நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் இயற்கை குறித்த விழிப்புணர்வும் சூழல் பற்றிய அக்கறையும் அவர்கள் முன் நேர் நிற்க முடியாதது. அவர்கள் வாழும் ஆவணம் போல் பராமரிக்கப்படவேண்டியவர்கள். இயற்கையின் ஒரு கூறாகவே அறியவும் பேணவும்பட வேண்டியவர்கள். ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’, உறுதியாய் ஓர் அழகியல் சிதைவை ஏற்படுத்தும் வேட்டை. கோடானு கோடி மரங்கள், செடிகள், நதிகள், மலைகள், காட்டு மிருகங்களின் மூச்சறிந்தவர்களைக் கொன்று குவிக்கும் திட்டம். பச்சையத்தை சுரண்டி அழித்து சுடுகாடாக்கும் முயற்சி.