இன்னும் போராட்டங்கள் தொடர்கின்றன. அரசுக்கு வேறு வழியில்லை. மாணவர்களையும் மக்களையும் ஒடுக்குவதற்காகப் புதிய சட்டங்களை எழுதியது. மாணவர் போராட்டங்களால் கியூபெக்கில் நடைபெறவிருந்த போர்மூலா 1 ஆரம்ப வைபவங்களை இறுதி நேரத்தில் -நேற்றய தினம் 04.06.20112-நிறுத்தி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் போராட்ட உணர்வோடு வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் எவருமே இந்த சம்பவங்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. புலி அல்லது புலி எதிர்ப்பு என்ற குறுகிய தேசிய எல்லைக்குள் இயங்கும் தமிழ்க் கனவான்கள் இந்தப் போராட்டங்களின் பெறுமானங்களைப் புரிந்து கொள்ளாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.
தாம் வாழ்கின்ற சூழலில் நிகழும் போராட்டங்கள் குறித்த சிறிய ஒன்று கூடலில் கூடப் பங்கெடுக்காத இந்த நிழல் உலகக் கனவான்களின் அனுமானங்களே அவர்களின் அரசியல் முடிவுகளாகின்றன.
மேற்கின் மாணவர் உலகம் அதிகார வர்க்கத்திற்கு எதிராகக் கொந்தளித்துகொண்டிருந்த அதேவேளை புலம் பெயர் கனவான்கள் அக்கறை கொண்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவர் அரச படைகளால் தாக்கப்பட்டார். தர்சானந்தன் தாக்கப்பட்டது இது முதல் தடவையல்ல.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட போராட்ட வரலாறு உண்டு. மிரட்டல்களுக்கும், அடிமைத் தனத்திற்கும் எதிரான குரலின் முதல் எதிரொலி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கேட்ட வரலாறுகள் எம் முன்னே நீண்டு கிடக்கின்றன.
ஈ.பி.டி.பி யின் வன்முறை வட்டத்திற்குள், இனப்படுகொலை இராணுவத்தின் திறந்த வெளிச் சிறையில் வாழும் மக்கள் கூட்டத்தின் இருதயப் பகுதியிலிருந்து பல்கலைக் கழக மாணவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் ஒலிக்கிறது.
மரணத்தின் விழிம்பிலிருந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் கனேடிய மாணவர்களின் போராட்டங்களை விட ஆயிரம் மடங்கு வலிமை மிக்க போர்க்குணம் கொண்டது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள்.
அவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கான உரிமையை கோருகிறார்கள். அவ்வளவு தான். அவை அனைத்துமே அரச வன்முறையால் எதிர்கொள்ளப்படுகின்றது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு கனேடிய மாணவர்களுக்குக் கிடைத்த ஆதரவுத் தளம் கிடைக்கவில்லை. ஒரு மூலைக்குள் முடங்கிப் போயிருந்தது. ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மட்டும் ஊடகங்களுக்கு ஒரு கண்டன அறிக்கையை அனுப்பி வைத்திருந்தது.தமிழ் என்ற குறுகிய எல்லையை அவையெல்லாம் கடந்து செல்வதுகிடையாது.
மாணவர்கள் என்ற அடிப்படையில், உலகின் ஏதாவது மூலையில் அனாதரவாகக் கேட்பாரற்றுக் கிடக்கும் ஏதாவது பல்கலைக் கழகத்தில் இருந்தாவது கண்டன அறிக்கை வெளிவந்ததா? ஏன தமிழ் நாட்டில் ஈழப் போர் ஆரம்பிக்கப்போவதாக அடித்துக்கூறும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அங்குள்ள பல்கலைக் கழகங்களை குறைந்தபட்சம் அணுகியிருக்கிறார்களா? அவர்களால் எப்படி இயலும்? முத்துக்குமாரின் போராட்டத்தையே இருட்டடிப்புச் செய்து இனப்படுகொலைக்குத் துணை போனவர்களும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் கட்சியில் சேர்வதற்கான முன் நிபந்தனையாக முன்வைக்கும் சந்தர்ப்பவாதிகளும் தமிழ் நாட்டில் எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்களாக என்ன!
தமிழ் நாட்டில் தான் இந்த நிலைமை என்றால், புலம் பெயர் நாடுகளில் அந்த நாடுகளின் உளவுப்படைகளையும் அரசுகளையும் நம்பியிருக்கும், ஐந்தாம் படைபோலத் தொழிற்படும் தமிழர் அமைப்புக்கள் என்ன செய்வார்கள். சில தினங்களின் முன்னர் பிரித்தானிய வெகுசன அமைப்புகக்ள் முன்னணி ஒன்றின் ஒன்று கூடலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பிரித்தனிய பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியத்தைச் சந்திக்க நேர்ந்தது. தர்சானந் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்ற போது, அதுபற்றி தங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல எமது மாணவர்கள் அவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்றார்கள். ஏனைய அமைப்புக்கள் தமிழர்களை அதிகார வர்க்கத்தின் ஆதரவாளர்களாகவே கருதுகிறார்கள். இனப்படுகொலைக்குத் துணைபோன இந்திய, அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் எடுபிடிகளாகத் தொழிற்படும் எமது தலைமைகளை எமக்காகக்ப் போராடும் வலிமை கொண்டவர்கள் நம்ப மறுக்கிறார்கள்..
ஆக, தர்சானந் மட்டுமல்ல இன்னும் பலர் தாக்கப்பட்டாலும் ‘தமிழர்கள்’ என்ற குறுகிய சிறுபான்மை எல்லைக்குள்ளே அனைத்தையும் முடக்கிவிடுவார்கள். எந்த வெகுசன எழுச்சியும், போராட்டங்களும் அடுத்த எல்லையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் தமிழ் இனவாத அரசியல் நடத்தும் குழுக்கள் எதிர்ப்புப் போராட்டங்களும் எழுச்சிகளும் மேலோங்கும் போராட்ட உலகத்திலிருந்து ஈழ அரசியலை அன்னியப்படுத்தி தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் முடக்கி வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் யாழ்ப்பணப் பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் உலகப் பல்கலைக் கழகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது. உலகில் நடக்கும் மாணவர் எழுச்சிகளுக்கு போராட்டங்களை முன்னெடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கண்டன அறிக்கை என்ற இடத்திலிருந்தாவது ஆரம்பிக்கலாம்.
நேற்றைய தினம் -04.06.2012-முன்னணி சோசலிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான வருண ராஜபக்சவுடன் பேசிய போது தான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களைச் சந்தித்தாகக் குறிப்பிட்டார். அவர்களில் பெரும்பாலானோர் சம்பந்தனை ‘யாழ்ப்பாணத்து மகிந்த என்று’ வர்ணித்ததாகக் குறிப்பிட்டார். இதனால் மாற்றுத் தலைமை ஒன்று உருவாதல் அவசியம் என்றார். இன்று வரை சிறுபான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மூச்சுக்கூட விடத் தயாரற்ற சோசலிச முன்னணி மாற்று அரசியல் தலைமைய வழங்கமுடியாகு என்பது ஒரு புறத்தில் வெளிப்படையானது. மறுபுறத்தில் அமரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே சம்பந்தன் செயற்படுகிறார் என்பதும் வெளிப்படையானது.
அதே வேளை தர்சானந் தாக்கப்பட்ட போது சிங்கள மாணவர்கள் மத்தியில் ஏன் எழுச்சியை ஏற்படுத்த இயலவில்லை என வருணவை கேட்பதற்குத் தோன்றவிலை. பேரினவாத் தீ அதே கோரத்தோடு சிங்களப் பகுதியில் எரிந்துகொண்டிருப்பதும் அதற்கு தமிழ் இனவாதிகள் எண்ணை ஊற்றி வளர்பதும் வெளிப்படையான ஒன்று.