இனச்சுத்திகரிப்பு
இன அழிப்பிற்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படையிலிருந்து அதன் மறுபக்கமான இனச் சுத்திகரிப்பை தமிழ்ப் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ளது இலங்கை அரசு. கேட்பதற்கு யாரும் இல்லை. உலகின் அதிகாரவர்கத்தின் கூறுகள் ஆங்காங்கு சில அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு உறங்கிப் போகின்றன.
நம்பிக்கை இழந்த மக்கள்
இந்த நிலையில் சர்வதேச அரசியல் சூழலை சரிவரக் கையாளாமல் தான் போராட்டம் அழிந்து போனது என்றும், போராட்டத்தில் தவறான ஒரு சிலர் புகுந்து கொண்டதால் தான் அழிந்து போனது என்றும் மிகவும் குறுகலன அரசியல் ‘ஆய்வுகளை’ குறுகிய தேசிய வாதிகள் முன் வைக்கிறார்கள்.
தோற்கடிக்கப்பட்ட முடியாத போராட்டங்களும் தோல்வியும்
இதே ‘சர்வதேச’ அரசியல் சூழலில் தான் குர்தீஷ் மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது; கிரேக்கத்தில் பெரும்பான்மையான மக்கள் இடதுசாரிகளின் கீழ் அணித்திரண்டு போராடுகிறார்கள்; காஷ்மீரில் வீட்டுக்கு ஒரு இராணுவம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போது கற்களைக்கூட ஆயுதமாகப் பயன்படுத்தி மக்கள் போராடுகிறர்கள்; நாகாலாந்தில் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் நெதர்லாந்தில் அவர்களின் தலைவர்களைத் தேடிச்சென்று பேரம் பேச முயற்சிக்கிறது இந்திய அரசு . பிலிப்பைன்சில் நோர்வே தனது பேச்சுவார்த்தை தரகு வேலையால் அழிக்க முற்பட்ட போராட்ட அமைப்பு புதிய உத்வேகத்துடன் தலைகாட்டுகிறது;
நேபாளத்தில் புதிய கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கிறது; இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களில் தலையீட்டுக்கு எதிராகவும் தமது இராணுவக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறது; இந்திய நிலப்பரப்பின் அரவாசிக்கு மேற்பட்ட பகுதி போராளிகளின் பலத்திலேயே தங்கியுள்ளது. ஈராக்கில் உலகின் வல்லரசை எதிர்த்து இன்னும் மக்களும் ஆயுதக் குழுக்களும் போராடுகின்றன; பாலஸ்தீனத்தை அமரிக்க, ஐரோப்ப்பிட, இஸ்ரேல் கூட்டு வெற்றிகொள்ள முடியாமல் திணறுகிறது; தென்னாபிரிக்கா, அங்கோலா, கொங்கோ, லத்தீன் அமரிக்க நாடுகள் என்று உலகின் ஒவ்வோர் கொல்லைப்புறத்திலும் போராட்டங்கள் முன்னைய தசாப்தத்தை விட முன்னோக்கியே சென்றிருக்கின்றது. வாழ்வதற்காகப் போராடும் மக்கள் கூட்டத்திலுருந்து போராடுவதற்காக வாழும் அர்த்தமுள்ள மனிதர்ககள் நாளைய உலக மாற்றுவதற்கான பலம்பெற்றவர்களாகியிருக்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் என்று நேரடியாகவே அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் திட்டமிட்ட அரசியல் போராட்டங்கள். ஈழப் போராட்டத்தில் நடைபெற்றது போல ஒட்டிக்கொள்வதற்கு வல்லரசுகளையும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளையும் அவர்கள் தேடியலையவில்லை. அந்த நிலையில் கூட அவர்களை ஒடுக்கவோ முற்றாக அழிக்கவோ முடியவில்லை.
ஆக, ஏகாதிபத்தியங்களும் அல்லது சர்வதேசம் என்று அரசியல் ‘மேதவிகள்’ அடிக்கடி உச்சாடனம் செய்யும் நாடுகளும் தமக்கு நேரடியான எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியவர்களை அழிக்காமல் ஈழப் போராட்டத்தை மட்டும் அழித்தது ஏன்?
இதற்கான வினாவிற்கு விடை காண்பதற்கு முன்னர் இதிலிருந்து தெளிவாகும் ஒன்றைக் காணலாம். ஈழப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு சர்வதேச அரசியல் நிலைமை மட்டும் காரணமல்ல.சர்வதேச அரசியல் நிலைமைகளால் அழிந்துபோகக் கூடிய அரசியல் வழிமுறையையே போராட்டம் கொண்டிருந்தது.
‘காய் நகர்த்திகளும்’ இனச்சுத்திகரிப்பும் இணையும் புள்ளி
சர்வதேச அரசியல் மட்டும் தான் அனைத்துக்கும் காரணம், நாங்கள் ‘காய்நகர்த்தி’ பழுக்க வைக்கிறோம் பேர்வளிகள் என்று புறப்பட்ட பிழைப்புவாதிகள், மேற்கு நாட்டு உளவு நிறுவனங்களோடும் அழிவு சக்திகளோடும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், அதிநவீன கட்டடங்களிலும் கூட்டம்போட்டு கும்மாளமடித்துக்கொண்டிருக்கும் போதே ஒவ்வோரு அங்குல நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டது. மக்கள் சூறையாடப்பட்டார்கள். போதைப்பொருள் இளைஞர்களின் நாளாந்த தேவையானது.
இன்னும் அவர்கள் அதே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினுள் இராணுவம் நுளைந்து மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறது. பலவந்தமாகப் பெண்களை இராணுவத்தில் இணைத்திருக்கிறது.
அழிவிற்கான முன்னுதாரணங்கள்
முதலாவதாக, அமரிக்க தூதரகம், மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வெளியிட்ட அறிக்கையும் அதற்கு புலம் பெயர் இனவாதிகளால் வழங்கப்பட்ட முக்கியத்துவமும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் இலங்கை அரசு நிகழ்த்தும் திட்டமிட்ட இன அழிப்பின் பின்னணியில் செயற்படும் அமரிக்கா, பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதோ, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதோ மௌனம் சாதித்தது! ஒருலட்சம் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டபோது செய்மதி ஊடாகப் பார்த்து ரசித்துக்கொண்டு சாதித்த அதே மௌனம்!!
எங்காவது போராட்டங்கள் என்று பேச்சுவந்தாலோ அதுவும் அது சிறிய சக்தியாகக் கூட உருவாகும் என்றால் அமரிக்காவிற்கு அக்கறை வந்துவிடுகிறது. அவர்களின் நோக்கம் தெளிவானது; போராட்டங்கள் எழுச்சிகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமானால், அமரிக்கா காப்பாற்றும் என்ற போலி நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும். இதனூடக போராட்டங்களை நிறுத்த வேண்டும். உலகம் முழுவதும் மனித உயிர்களைக் குடிக்கும் அமரிக்காவின் அக்கறை முன்வைத்து காய்களை நகர்த்த இனவாதிகள் தயாராகியிருப்பார்கள்.
இரண்டாவதாக தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தெருவில் இறங்கிப் போராடிய சிங்கள மாணவர்களின் போராட்டம். ஈழப் போராட்டத்தின் அழிவிற்கு கணிசமான பாத்திரம்வகித்த வை.கோபாலசாமி இந்தியா சென்ற இந்திய வம்சாவழித் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திவிட்டு போராட்டம் நடத்தினோம் என மார்தட்டிக்கொண்டாரே, அதைவிட சிங்கள மாணவர்களின் போராட்டம் ஆயிரம் மடங்கு வலிமைவாய்ந்தது.
யார் காட்டிக்கொடுப்பாளர்கள்?
அது எவ்வாறு நடைபெறுகிறது?
சிங்கள மாணவர்கள் போராடிய செய்தியை இனவாத, பிழைப்புவாத இணையங்கள் இருட்டடடிப்புச் செய்தன. அதே நாளில் அவசர அவசரமாக, பல்கலைக்கழக் மாணவர் சமூகம் வெளியிட்டதாக ஒரு போலி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ‘தேசியத் தலைவர் வழிகாட்டலில் தனிநாடு பிடிப்பதற்காக புலம் பெயர் தமிழர்களை ஒன்றிணையுமாறு கோரப்பட்டிருந்தது’.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் புலிக் கொடியோடு உள்நுளைந்து அந்த ஆர்ப்பாட்டத்தைப் புலிகளின் ஆர்ப்பாட்டமாகக் சிங்கள மக்களுக்குக் காட்ட முனைந்த இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு. இலங்கை அரசு மேற்கொண்ட அதே நடவடிக்கைகளை இனவாத பிழைப்புவாத புலம்பெயர் பிரமுகர்கள் மேற்கொள்கிறார்கள்.
அடிப்படையில் இந்தப் பிழைப்பு வாதிகள் மாணவர்களின் நியாயமான போரட்டத்தைத் திசைதிருப்பி தங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்த முனைகிறார்கள்.இவர்களுக்கு மக்கள் நலனிலோ மாணவர்கள் நலனிலோ அக்கறை கிடையாது. தமது சொந்த பிழைப்புவாத நலன்களே இவர்களுக்குப் பிரதானமானது.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசையில் சிங்கள மக்களின் ஒடுக்கப்படும் பகுதியினரின் ஆதரவோடும் பங்களிப்போடும் நடைபெறுமானால் இலங்கை அரசு ஆட்டம்காண ஆரம்பிக்கும். அது எப்படி அரசுக்கு எதிரானதோ அதே போன்று அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் இனவாதிகளுக்கும் எதிரானது. இங்குதான் தமிழ் குறுகிய தேசிய வாத இனவாதிகளும் இலங்கை அரச அதிகாரவர்க்கமும் ஒன்றிணைகின்றனர்.
இவர்கள் ஒருங்கும் புள்ளியிலிருந்தே அழிவு முளைவிடுகிறது. இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கிறது.இலங்கையில் வாழும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
ஈழத்தமிழர்கள் மீது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இலங்கை அரசு திணிக்கிறது. இலங்கை அரசே அவர்கள் போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாது என்று நடைமுறையில் கூறுகிறது. அவர்களுக்குப் போராடுவது மட்டுமே வழி. அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்த்திகளோடு இணைந்து ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து இணைவுகளும், பங்களிப்புக்களும், திட்டமிடலும் கணநேர தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கையை உரைப்பது எப்படி?
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் இதன் ஆதார சக்தியாக அமைய வேண்டும். ஆனால், நம்பிக்கை இழந்து துயத்தை மட்டுமே தேக்கி வைத்திருக்கும் இவர்களுக்கு நம்பிக்கையை எப்படி உரைப்பது?
ஒரு வழிதான் நம்முன்னே காணப்படுகின்றது.
அவர்களிடம் நடந்த தவறுகளை வெளிப்படையாகச் சொல்லவெண்டும். தோல்விக்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். தோல்விகளையும் தவறுகளையும் நியாயப்படுத்தினால் இன்னொரு தோல்விக்கான தயாரிப்புக்கள் நடைபெறுவதாகவே அவர்கள் நம்புவார்கள்.
போராட்டத்தின் ஆரம்பம், அதன் படிநிலை வளர்ச்சி அதனோடு கூடவே வளர்ச்சியடைந்த தவறுகள், என்று அனைத்துமே மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட வேண்டும்.
பாரிய தவறுகளும், பிறழ்வுகளும் உலகில் போராடுகின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரிகளுக்கும் தெளிவாக, தேவையானால் புள்ளிவிபரங்களோடு தெரியும். அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இருட்டடிப்புச் செய்யப்பட்டது தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டும்தான். பிழைப்புவாதிகளால் திட்டமிட்டு இது நிகழ்த்தப்படுகிறது. நாங்கள் தவறுகளைச் சுயவிமர்சனம் செய்யாதவரை யாரும் எம்மோடு இணைந்துகொள்ளப்போவதில்லை.
மறுபுறத்தில் தவறுகளை எதிரிகள் குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களே சாத்தியமில்லை என்று மக்களை அவநம்பிக்கைக்கு உட்படுத்துவார்கள்.
உதாரணமாக இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று புலி அடிப்படைவாதிகள் கூறுகிறார்கள். மக்கள் இவர்களைப் பார்த்து குழப்பமடைகிறார்கள். ஆயுதப் போராட்டம் என்றால் புலிகள் நடத்திய இராணுவ யுத்தம் என்ற எண்ணத்திலிருந்தே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உலகில் ஹிட்லரின் பாசிசத்தை வெற்றியடைந்த போராட்டம் கூட ஆயுதப் போராட்டம் தான் ஆனால் வெற்று இராணுவ யுத்தமாக இருக்கவில்லை.
இதற்கெல்லாம் உதாரணங்கள் இலங்கையில் அரிதாகவே காணப்படுகின்றன. உலகத்தின் வெற்றிபெற்ற போராட்டங்கள் அனைத்துமே மக்கள் யுத்தத்தோடு இணைந்த ஆயுதப் போராட்டங்களே. பாரிய போர்விமானங்களோடும், யுதக்கப்பல்களோடும், ஆயிரமாயிரம் இராணுவத்தோடும், மக்களை சாரிசாரியாக அழித்தும் வியட்னாமில் அமரிக்கா தோல்வியைத் தழுவிக்கொண்டது, ஆயுதமேந்திய மக்கள் யுத்தம் வெற்றிபெற்றது. தோல்வியைத் தழுவிய அமரிக்க இராணுவத் தளபதி ‘காட்டுமிராண்டிகளோடு யுத்தம் நடத்தமுடியாது’ என்று வெளிப்படையாகவே கூறிப் பின்வாங்கிக் கொள்கிறார். காட்டுமிராண்டிகளின் யுத்தம் என அவர் குறிப்பிட்டது தான் ஆயுதமேந்திய மக்கள் யுத்தம். இன்றும் அது தனது வெற்றியை குர்திஷ்தானில் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
இனிமேல் ‘காய் நகர்த்துவோம்,’ ஆயுதப் போராட்டம் சரிவராது என்று கூறுகிறவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவர்கள். தவறுகளை தங்கள் பிழைப்பிற்காக உள்வாங்கிக்கொள்பவர்கள்.
ஆக, ஆயுதப் போராட்டம் சாத்தியமானதே என மக்களுக்குக் கூறவேண்டுமானால் அவர்களுக்கு நம்பிக்கையை உரைக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் என்பது என்ன என்பதையும் எப்படி நாம் தவறிழைத்தோம் என்பதையும் கூறவேண்டும். இதனைக் கூற மறுக்கின்றவர்கள் மக்களின் அவநம்பிக்கையில் பிழைப்பு நடத்தும் பிழைப்பு வாதிகள்.
பல்கலைக்கழக மாணவர் போராட்டம் : புதிய அரசியலின் தேவை
நாம் தவறுகளை உணராதவர்கள் என போராடும் மக்கள், எதிர்ப்பியகங்களின் சர்வதேசியம் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. உலகை அழிக்கும் ஒபாமாவின் கைக்கூலிகளாக இருந்துகொண்டு, சர்வதேச உளவு நிறுவனங்களின் ஐந்தாம் படையாக இருந்துகொண்டு, இராணுவ வாதிகளாகக் காட்டிகொண்ட நாம் எம்மோடு கைகோர்க்கோர்குமாறு யாரைக் கோருவது?
அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் சுயவிமர்சனத்தோடு உலகின் ஜனநாயக் முற்போக்கு இயக்கங்களை அணுகுவோம். போராடும் மக்களோடு இணைந்து புதிய போராட்டங்களையும் எழுச்சிகளையும் முன்னெடுப்போம். இலங்கை பாசிச அரசிற்கு எதிரான பெரும்பான்மை மக்களின் போராட்டமாக நமது போராட்ட்ங்களை மாற்றுவோம். அழிவுகள் நிறுத்தப்படும். மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். உலகமக்களின் அங்கமாக இணைத்துக்கொள்ளப்படுவோம்.
பிழைப்பிற்காக மக்களின் அவலத்தைப் பயன்படுத்தும் திருடர்களோடு ஓரணியில் திரள்வது சாத்தியமற்றது. பிழைப்புவாதிகள் உட்பட்ட, இலங்கை இந்திய ஏகாதிபத்திய அரசுகள் ஈறான, அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒன்றினைதலே மக்கள் நலனுக்கான ஒன்றிணைதலாகும்.