Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பறிபோகும் தமிழ்ப் பிரதேசமும் அதற்கெதிரான போராட்டமும்:நரசிம்மா

 

தேசிய அடையாளத்தின் முக்கியமான ஒரு அம்சம் தொடர்ச்சியான பிரதேசம் என்று அறிவோம். அதை மறுப்பதன் மூலம் ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு அரசையோ சுயாட்சிப் பிரதேசத்தையோ நிறுவுவதை மறுக்க இயலுமாகிறது. இலங்கையின் மூன்று தமிழ்ப் பேசும் தேசிய இனங்களும் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதற்கு முன்னரே பேரினவாதிகள் அவற்றின் அடையாளங்களைப் பலவீனப்படுத்துவதிற் கவனங் காட்டினர். மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில், அவர்களது பிரதேசத்தின் மீது கைவைக்கத் தேவையிருக்கவில்லை. அதை விட மலையக மக்கள் செறிவாக  வாழ்ந்த பகுதிகள் பெரும்பான்மைத் தேசிய இனத்தோர் செறிவாக வாழும் பிரதேசங்களாற் சூழப்பட்டிருந்து.முஸ்லிம்களைக் குறிப்பாக இலக்கு வைக்கும் தேவையும் அண்மை வரை எழவில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களை இலக்கு வைத்தே சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் விருத்தி பெற்றன. முஸ்லிம்களும் அதனாற் பாதிக்கப்பட்டனர். டி.எஸ். சேனநாயக்க குடியேற்றத் திட்டங்களை மேற் கொண்ட விதமும் இன்று சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறும் விதங்களும் வேறுபட்டவை. எனினும் அவை ஒரு பொது  நோக்கத்தை அடிப்படையாக் கொண்டவை. அந்த வகையில் இன்றையவற்றை முன்னையவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும்.

தமிழரசுக்கட்சி இந்த அபாயத்தை நன்கறிந்திருந்தது. 1951ம் ஆண்டு அது வெளியிட்ட மாநாட்டு அறிக்கையிலும் பண்டாரநாயக்க – செல்வநாயகம் பேச்சு வார்த்தைகளிலும் அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. எனினும் தமிழ் மக்கள்  மத்தியிலான பிரச்சாரத்தில் மொழிப்பிரச்சனை 1956ம் ஆண்டு முதல் 1965 வரை பெற்றிருந்த முக்கியத்துவத்திற் சிறு பங்கையேனும் மலையகத் தமிழரின் குடியுரிமை பெறவில்லை. அதினுங் குறைந்த முக்கியத்துவத்தையோ தமிழ் – முஸ்லிம் மக்களின் தேசிய இருப்பை மிரட்டிய திட்டமிட்ட குடியேற்றங்கள்  பெற்றன எனலாம். திட்டமிட்ட குடியேற்றங்களை விட  வேறு விதமான ஆக்கிரமிப்புக்களாகச் சட்டவிரோதமான குடியேற்றங்களும் அரசமரங்களை மையமாக வைத்துப் புத்தர் சிலைகளையும் வழிபாட்டிடங்களையும் நிறுவும் காரியங்களும் நடைபெற்றன. இவற்றுக்குப் பின்னால் அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவும் சிங்களப் பேரினவாதச் சக்திகளது பொருளுதவியும் இருந்தன. இந்தப் பின்னணியிலேயே  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடையே தங்கள் பிரதேசம் பறி போகிறது என்ற எண்ணம் வலுப்பட்ட போதிலும் இவ் விழிப்புணர்வு தமிழ் மக்கள் அனைவரையும் பற்றிக் கொண்டதாகக் கூற இயலாது. அதற்கான அரசியல் வேலை எதுவும் 1970 கள் வரை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூற இயலாது. தமிழ் தேசிய உணர்வு என்பது பொதுவாகக் கூறின் தமது மொழி அடையாளம் பறிக்கப்படுகிறது என்ற அளவிற்கப்பால் விருத்தி பெறவில்லை.1962  அளவில் திருகோணமலையில் அரசாங்க காணிகள் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட போது  தமிழரைக் குடியேற்றுவதற்கான முயற்சி திருகோணமலையிலுள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சிலராற் தொடக்கப்பட்டது. எனினும் அதை ஒரு செயல் திட்டமாக முன்னெடுக்கத் தமிழரசுக் கட்சித் தலைமையால் இயலவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் பல இருந்தன. குடாநாட்டில் இருந்து வந்த நிலப்பிரபுத்துவ வழி வந்த உற்பத்திமுறையும் சாதியமைப்பும் சமூக உறவுகளும் விவசாயக் காணிகளால் நன்மையடையக் கூடிய மக்கள் குடாநாட்டுக்கு வெளியே சென்று குடியேறுவதற்கு  சாதகமாக அமையவில்லை. அதை விட முக்கியமாக தமிழரசுக் கட்சியின் வர்க்க நிலைப்பாடும் சமூகப்பார்வையும் அத்தகைய ஒரு வெகுசன இயக்கத்தை முன்னெடுக்க உகந்தவையாக இருக்கவில்லை.

காணி பற்றிய சமூக அடிப்படையிலான அக்கறையும்  குடாநாட்டுக்கு வெளியே சென்று  குடியேறும் நோக்கமும் சிரிமா பண்டாரநாயக்கவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில்  உருவாயின. இறக்குமதித் தடைகளின் விளைவாகப் பயிர்ச்செய்கை இலாபகரமான ஒன்றாக மாறிய சூழ்நிலையில் அவ்வாறு ஏற்பட்டதே ஒழியத், தமிழ் பிரதேசத்தைத் தமிழர் வசம் வைத்திருக்கும் தேசிய உணர்வின் உந்துதலால் அல்ல.

அதே காலகட்டத்தில் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட போது பல தோட்டங்களிலிருந்து தொழிலாளர் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 அவர்களை மலிவான கூலியாகப் பயன்படுத்துகிற ஒரு போக்கு வன்னியில் பெருமளவில்  விவசாயத்தை மேற் கொண்டோரிடம் காணப்பட்டது. அதற்கு மாறாக, மலையக தமிழரை வடக்குக் கிழக்கில் – மனிதாபிமான நோக்கிலும் தமிழ் தேசியவாதக் கண்ணோட்டத்திலும்- குடியேற்ற முயன்ற காந்தியம் அமைப்பினர் போன்ற நல்ல மனிதர்களும் இருந்தனர். பின்னவர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கெடுபிடியைச் சந்திக்க காலம் சிறிதே தேவைப்பட்டது. 1977க்குப் பின்பு அரசாங்க கெடுபிடிகள் வலுத்துப், பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில், தமிழர்  குடியேற்றங்கள் பல தடைகளை எதிர் நோக்கின.

1977 அளவிலேயே நிலை பெற்றுவிட்ட  சட்டவிரோதமான சிங்களக் குடியேற்றங்கள், அதன் பின்னர் அரச படைகளது ஆதரவுடனும் பேரினவாத ஆட்சியாளர்களது ஆசிகளுடனும் துரிதமாக முன்னேறின. அதன் பின்பு, மகாவலித்திட்டம் என்ற பேரில் கிழக்கில் மேலும் சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெற்றன. தமிழ்ப் பிரதேசங்களின் புவியியற் தொடர்ச்சியைத் துண்டாடும் நோக்கில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் ராணுவ ஆதரவுடன் மேற் கொள்ளப்பட்டன. வவுனியா மாவட்டமும் சிங்கள குடியேற்றத்துக்குட்பட்டது. ஆயுதப்போராட்டங்களின் போது, சிங்கள குடியேற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள் பெருமளவும் ராணுவக் கண்ணோட்டத்துடனேயே தமிழ்ப் போராளிகளால் – குறிப்பாக  விடுதலைப்புலிகளால் – மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் சுத்த இராணு அணுகுமுறையால் விடுதலையை உறுதிப்படுத்த இயலாமை ஒரு புறமிருக்கப், பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில்  யாழ்ப்பாணக் குடாநாட்டிற் படையினரால் பிடிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்பதற்கான ஒரு வழியைக் காட்டவும் இயலாது போயிற்று.

தொகுத்து நோக்கின், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள், சட்டரீதியாக அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமும் பாதுகாப்பு என்ற பேரில் இராணுவ முகாங்கட்குத் தேவையானதிலும் அதிகமான பிரதேசத்தைக் கைப்பற்றுவதன் மூலமும் பறிக்கப் பெற்றுள்ளன. இப்பொழுது வடக்கே நாகவிகாரைப் பகுதியைப் புனித பிரதேசமாக அறிவிக்கும் எண்ணம் நேரடியான நிலப்பறிப்பாகிவிடாத போதும், வடக்கே சிங்கள பௌத்த இருப்பை பிரகடனம் செய்யும் ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நாடு முழுவதும் சிங்கள பௌத்தத்தின் இருப்பின் அடையாளத்தை வலுப்படுத்த இயலுமாகிறது. எனினும் அதிலும் பெருமளவிலான நிலப்பறிப்பு இன்று சட்டவிரோதமான முறைகளில் புத்த வழிபாட்டுத்தலங்களை நிறுவுதல் அத்துமீறிய குடியேற்றம் மிரட்டல் மூலம் தமிழரையும் முஸ்லீம்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து விரட்டல் போன்ற வழிகளில் மேற் கொள்ளப்படுகிறது. புதிய பெருந்தோட்டங்கள் நிறுவப்படும் போதும் தமிழ் பிரதேசங்கள் பறிபோகும் அபாயம்  உள்ளது. இது விதேசியக் கம்பனிகளிடம் தமிழர் தம் பிரதேசத்தைப் பறிகொடுக்கும் நிலையாகும்.

சுனாமிக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளின் மூலமும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் காணிகள் இழக்கப்படுவதும் சிங்களக் குடியேற்றங்களும் நடைபெறுகின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கட்காக அயல்நாட்டு நிதி கொண்டு அமைக்கப்பட்ட குடியிருப்புக்களை அவர்கள் பெறுவதற்கெதிராகப் பேரினவாதிகள் நீதிமன்றத்தைத் துணைக்கழைத்துள்ளனர். மலையகத்தில் ஏற்பட்ட மண் சரிவுகளின் பின்பு பாதிக்கப்பட்ட சிங்களவர்களைத் தோட்டக்காணிகளிற் குடியேற்றும் திட்டங்கள் ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிடல் தகும். அது புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வலப்பனை பிரதேச சபை உறுப்பினரின் முன்முயற்சியால் தடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பிரதேசம் திட்டமிட்ட முறையில் சட்டபூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் சிங்கள மயமாக்கப்படுகிறது என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்க இயலாது. தமிழரில் மூன்றிலொரு பங்கினர் அளவில் இடப்பெயர்வுக்குட்பட்டிருப்பதும் அவர்களின் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்துள்ளது மேற்கூறியவிதமான பேரினவாத நிலப்பறிப்பிற்கு வசதியாக அமைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் தோல்வி இந்த நிலப் பறிப்பை வட மாகாணத்தின் பல பாகங்கட்கும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரையும் இந்த நிலப்பறிப்பிற்கு எதிராகத் தமிழ் மக்களின் சார்பாக எவ்விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் பங்களிப்பு என்னவென்றும் பார்ப்போமானால், சில உண்மைகள் தெளிவாகும். மக்கள் போராட்டங்கள் தரகு அரசியலுக்கு ஏற்றவையல்ல. அவை அரசியல் தரகர்களதும் மேலாதிக்க அரசியல் நடத்துவோருக்கும் கேடானவை. எனவேதான் வடக்கின் அன்னையர் முன்னணி போன்ற மக்கள் எழுச்சி அமைப்புக்கள் குறுகிய தமிழ் தேசியவாதத் தலைமைகள் பலவற்றினதும் கடுப்பைச் சம்பாதித்தன. விடுதலைப்புலிகளின் ஏகபோகத்தின் கீழ், மக்கள் இயக்கங்கள் என்பன, விடுதலைப்புலிகளின் நெறியாள்கையின் கீழ் நடத்தப்பட்ட அரசியல் நிழலாட்ட நிகழ்வுகளே ஒழிய மக்கள் இயக்கங்களல்ல. அரசியலைப் புறந்தள்ளிய என்.ஜி.ஓக் கூத்துக்களையும் மக்கள் இயக்கங்களாகக் கொள்ள இயலாது.

வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழ் மக்களின் பிரதேச உரிமைக்கான ஒரு இயக்கத்தைப் புதிய ஜனநாயகக் கட்சியும்  அப்போது அதனுடன் புதிய இடதுசாரி முன்னணியில் இணைந்திருந்த நவசமசமாஜக்கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி என்பன உட்பட்ட கட்சிகளும்  பிறரும் 1999 அளவில் முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கில் தமிழர்களின் நிலம் மீளத் தரப்பட வேண்டும் என்ற இப்போராட்டத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்கியது.மாவை சேனாதிராஜா ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் தன் தலையைக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால்  கொழும்பு வாழ் தமிழரை, வலிகாமத்து மக்களைக் கூட, அணிதிரட்ட எவ்வித ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறே, விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டோரை விடுவிக்கக் கோரி வெலிக்கடைச் சிறைச்சாலை முன்பு அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சித் தலைமைத் தோழர்கள் நின்றார்களே ஒழியத் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களல்ல. முன்பு போல ஒரு சிலர் வந்து ஆசி  வழங்கிச் சென்றனர். ஆனால் சிங்கள நட்புச் சக்திகள் பங்கு பற்றினர்.

இதிலிருந்து நாம் காணக்கூடிய தென்ன? தமிழ் மக்களைத் தங்களது உரிமைகட்காக  போராடும் படி அணிதிரட்டி அரசியல் மயப்படுத்தி வழிநடத்த இன்றைய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எதுவுமே ஆயத்தமாக இல்லை. இந்த தலைமைக்கட்கு மாற்றாக ஒரு புதிய தலைமைத்துவம் உருவாக்கப்படாமல், மாற்று அரசியல் – அதாவது  பாராளுமன்றச் சந்தர்ப்பவாதத்தை மறுத்து  மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு அரசியல் – பாதை ஒன்று உருவாக்கப்படாமல் தமிழ் மக்களால் தமது உரிமைகட்காகப் போராட இயலாது.

ஐந்து ஆண்டுகட்கு முன்பு மேல் கொத்மலைத்திட்டத்துக்கு எதிராகப் புதிய ஜனநாயகக் கட்சியும் புகையிரதத் தொழிலாளர் சங்கமும் நவசமசமாஜக் கட்சி உட்பட்ட பிறரும் முன்னெடுத்த போராட்டம், மலையக மக்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தி என்ற பேரில் பறிக்கும் முயற்சிக்கு எதிரான ஒரு வலுவான சவாலாக இருந்தது. அந்தப் போராட்டம் மலையக மக்கள் முன்னணித் தலைமையாலும் இ.தொ.காவாலும் காட்டிக் கொடுக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததை நாம் கவனிக்க வேண்டும் அதன் விளைவாக மலையகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும் இ.தொ.கா., ம.ம.மு. ஆகியனவற்றின் செல்வாக்கின் சரிவுக்கு பங்களித்துள்ளன. ஆனால் மாற்று அரசியலை விருத்தி செய்வதென்பது தொடர்ச்சியான பல போராட்டங்களின் மூலமே இயலும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் இடம் பெயர்ந்து தெற்கில் வாழ்வோரும் இதுவரை காலமும் மக்கள் போராட்டப்பாதை என்பதிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். குறுகிய தேசியவாதத்தின் பாரளுமன்றப்பாதையும் தூய இராணுவக்கண்ணோட்டமும் தமிழ் மக்களுக்கு மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்பவற்றை மறுத்துள்ளன. தமிழ் மக்களுக்கு ஒரு மாற்று வழியை, ஒரு வெகுஜனப் போராட்டப்பாதையைக் காட்டக் கூடிய ஒரே கட்சியாகப்  புதியஜனநாயகக் கட்சி மட்டுமே உள்ளது. முற்போக்கான  தமிழ்த் தேசியச் சக்திகள் உருவானால் அவையும் அதனுடன் சேர்ந்து தமிழ் மக்களின் பிரதேச  உரிமைக்காக நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க இயலும். இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் பேரால் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தோரை மக்கள் போராட்டப்பாதை திருத்தும்  அல்லது ஒதுக்கி நிராகரித்துக் கொண்டு விடுதலை நோக்கி முன்னேறும்.

Exit mobile version