Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பரந்து பட்ட மக்கள் இயக்கங்களா​க அமைந்த “பக்தி இயக்கங்கள்​” : விஜய்

தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்களால் பரந்து பட்ட மக்கள் இயங்கங்களாக விபரிக்கப்படுகிற “பல்லவர் கால பக்தி இயக்கங்கள்” குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படவில்லை. இக்கட்டுரை அதற்கான ஒரு முயற்சியாக அமைகிறது. பரந்து பட்ட மக்கள் இயங்கங்களாக அமைந்த “பல்லவர் கால பக்தி இயக்கங்கள்” எவ்வாறு பரந்து பட்ட மக்கள் இயக்கங்களாக உருவான பொறிமுறை குறித்தே இக்கட்டுரை முக்கிய கவனம் செலுத்துகிறது.

முதலில் இந்த பரந்து பட்ட மக்கள் இயக்கங்கள் தோன்றிய சமூகச்சூழல் பற்றிய சுருக்கமான விபரத்தினை முன்வைக்க வேண்டியிருக்கிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவில் பெருந்தொகையினரான சமண முனிவர்களும் பௌத்த சந்நியாசிகளும் தமிழ் நாட்டிற்கு வந்து தம் சமயக் கொள்கைகளை பரப்பத் தொடங்குகிறார்கள். கி.பி. 470 இல் சமண முனிவரான வச்சிரநந்தி திராவிட சங்கத்தினை மதுரையில் அமைத்துச் செயற்படுமளவிற்கு நிலைமைகள் வளர்ச்சியுற்றிருந்ததாக அறிய முடிகிறது. இந்த திராவிட சங்கத்திற்கு எதிரான ஒரு கருத்தியலாகவே சங்க கால “முத்தமிழ்ச்சங்கம்” என்ற கதை உருவாக்கப்பட்டது எனக்கூறுவர்.

அக்காலம் முதல் தமிழ் நாட்டில் பௌத்த-சமண சமயங்கள் பெரு வளர்ச்சியடையத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சமண சமயம் பெரு வளர்ச்சியுற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டை ஆண்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனும் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனும் சமணத்திற்கு மாறியமை சமண சமயத்தின் பெருவளர்ச்சியை எடுத்துக்காட்டும். அக்காலத்தில் “வைதிக மார்க்கங்களை கைவிட்டு மக்கள் திரள் திரளாக சமணத்தை தழுவத் தொடங்கினர்” என்பதன் மூலம் சமணத்தின் வளர்ச்சி நிலையை அறியலாம்.

சமண சமயத்தின் பெரு வளர்ச்சியினால் அதுவரை நன்னிலையிலிருந்த சைவம்-வைணவம் அழியும் நிலையை அடைந்தன. இந்த நிலைமையானது இறுதியில் (கி.பி ஆறாம் நூற்றாண்டளவில்) தமிழ் நாட்டில் சமயப்பகைமையை – சமய முரண்பாட்டினைத் தோற்றுவித்து விடுகிறது. பெருவளர்ச்சியுற்று வருகிற சமண சமயத்தின் எழுச்சியினை எதிர்த்து பரந்து பட்ட மக்கள் இயங்கங்களை “உருப்பெறச்” செய்து சைவ-வைணவ மதத்தவர்கள் போரடத்தொடங்கி இறுதியில் சைவ-சமண அதாவது வைதிக சமய எழுச்சினையினை ஏற்படுத்திவிடுகிறார்கள். அக்காலத்தில் தோன்றிய சமயப்பகைமை அல்லது சமய முரண்பாடு சமூக முரண்பாடுகளின் விளைவு என மாக்சிய இலக்கிய விமர்சகர்களால் விளக்கப்படுத்தப்படுகிறது.

அதுவரை நிலவிய நிலமானிய சமுதாயத்தின் – விவசாய சமூகத்தின் சமயமாக சைவ-வைணவ சமயங்கள் விளங்கின எனவும் அக்காலத்தில் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றுவந்த வணிக வர்க்கத்தினரின் சமயமாக சமண – பௌத்த சமயங்கள் விளங்கின எனவும் விளக்குகிற மாக்சிய இலக்கிய விமர்சகர்கள் வணிக – விவசாய சமூகத்தின் முரண்பாடே இவ்வாறு சமயப் பகைமையாக- சமய முரண்பாடாக தோன்றின என விளக்குவர்.

கைலாசபதி அவர்கள் “…சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே “பக்தி இயக்கம்” எனப்படும் வர்க்கப்போரட்டம்” எனக்குறிப்பிடுகிறார்.தமிழர்களின் – விவசாய சமூகத்தினரின் மதமாக விளங்கிய சைவ-வைணவ மதங்கள் நன்னிலையிலிருந்து வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலையில் அதனை மீண்டும் எழுச்சியுறச் செய்வதற்காக மேற்கொண்ட போரட்டமே “பல்லவர் கால பக்தி இயக்கங்கள்” எனப்படுகின்றன. இந்தப் பக்தி இயக்கங்களான பரந்து பட்ட மக்கள் இயக்கங்களை உருப்றெச் செய்தவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களுமாவர் !

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தினை தொடக்கியவர்களாக காரைக்காலம்மையாரும் திருமூலரும் முதலாழ்வார்களும் விளங்குகின்றனர். சைவ பக்திய இயக்கத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தமிழ்ப் பெண்கள் முக்கிய பங்கு கொண்டனர் என்பதுவும் கவனிப்பிற்குரிய விடயமாகும். தமிழர்களின் சமயத்தை மீளஎழுச்சியுறச் செய்வதற்கான போராட்டத்தினை தொடங்கி வைத்தவர் காரைக்கால் அம்மையார் எனச்சிறப்பித்தழைக்கப்படுகிற புனிதவதியாவார். சங்கமருவிய காலத்தின் இறுதிப்பகுதியில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் பின்னால் பெருவளர்ச்சியடையவிருக்கிற ஒரு இயக்கத்தின் சாராம்சத்தினை தனது எழுத்துக்களால் தொடக்கிவைத்தார்.

அருடைய வாழ்வு குறித்து பெரும் துயரத்திற்குரிய பதிவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அழகு பொருந்திய தசையுடலை அழித்துப் பேயுருத் தாங்கி தலையால் நடந்து “இறையின்பம்” பெற்றவர் அவர். காரைக்கலாம்மையார் பற்றி நாம் அதிகம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. “… மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தளர்ந்த கொண்டிருந்த சமயம் காரைக்காலம்மையார் பாடல் புதிய வலிமையையும் புதிய நம்பிக்கைகளையும் தருவதாக அமைந்துள்ளது” எனவும் “பயந்த சுபாவமுள்ளவர் என்று சாதாரணமாக கணிக்கப்படும் தமிழ் நாட்டுப் பெண்மணிகளுள் ஒருத்தி தமிழ் மக்களை நீண்ட காலமாகப் பயமுறத்தி வந்த ஈமப் புறங்காட்டை இறைவனுடைய நடன அரங்காகக் காணத் தொடங்கி விட்டார்” எனவும் “குடும்ப வாழ்க்கை முறிந்து போன காரைக்காலம்மையாரும் சிவனுக்குத் தம்மை அர்ப்பணித்தன் மூலம் மகிழ்ச்சியுடன் உலவி வந்ததை மக்கள் பார்த்திருப்பர்” எனவும் டாக்டர் ஆ.வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

இது அவருடைய சிந்தனைப் போக்கினை எடுத்துக்காட்டுகிறது.கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சைவ பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்கு தலைமையேற்கிறார்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரசர் தமிழ் நாட்டின் வடபகுதியில் சமண சமயத்திற்கு எதிரான கூர்மையான எதிர்ப்பியக்கத்தினை வழிநடத்திச் செல்கிறார். சமய எழுச்சிக்கான போராட்ட எதிர்ப்பு இயக்கத்தினை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக ஆக்கியவர் அவரே.

வலிமை மிக்க எதிரிகள் திருநாவுக்கரசரை மிக மோசமாக துன்புறத்திய போதும் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” எனும் எதிர்ப்புக் குரலுடன் பக்தி இயக்கத்தினை மக்கள் இயக்கமாக வழிநடத்தியவர் அவர். அக்காலத்தில் சமண சமயம் தழுவிய மன்னர்கள் மீண்டும் சைவம் தழுவிக் கொள்கின்றனர். சைவத்தின் வளர்ச்சி தொடங்கிற்று. சமண சமயராக இருந்து சைவராக மாறிய திருநாவுக்கரசரசர் பல்வேறு பிரிவுகளைடையதாக இருந்த மதங்களை இணைத்து சைவ மதத்தினை மாற்றியதிலும் பக்தி எனும் வழிபாட்டு முறையினை பிரதானப்படுத்தியதிலும் முக்கியமானவராக விளங்குகிறார். சாதிப் பிரிவினையாலும் சமயப் பிரிவினையாலும் பிளவுண்டு கிடந்த தமிழர்களை ஓரணிப்படுத்தியவர் அவரே. மு.வராதராசன் “அப்பூதி என்னும் பிரமாணர் சாதி உயர்வும் தாழ்வும் பற்றிய எண்ணத்திற்கு இடம் தராமல் திருநாவுக்கரசரைத் தெய்மாகப் போற்றி வழிபட்டார்.”;என்கிறார்.

தமிழ் நாட்டின் தென்பகுதியில் – பாண்டி நாட்டில் திருஞானசம்பந்தர்; பக்தி இயக்கத்திற்கு வழிகாட்டி நின்றார். சம்பந்தர் திருநாவுக்கரசர் காட்டிய வழியில் சமய எழுச்சி இயக்கத்தினை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக வழிநடத்திச் செல்கிறார். அவருடைய தேவாரங்களில் முதல் இரண்டு வரிகள் இயற்கை வருணனையாக அமையும். இயற்கை வருணனையாக அமையும் இரண்டு வரிகள் தலத்தின் சூழலைப் பாடுவதாக அமைந்திருக்கும். இது குறித்து விளக்குகிற டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் “சம்பந்தர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர்… பிரதேச உணர்ச்சியைப் பயன்படுத்தி சைவ சமய மறுமலர்ச்சியில் மக்களை முன் நின்று உழைக்கச் செய்ய சம்பந்தர் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார் போலத் தெரிகிறது” எனக்குறிப்பிடுகிறார். சம்பந்தர் அக்காலத்தில் நிலவிய பல் மத வழிபாட்டு முறையிலிருந்து தனயொரு கடவுள் என்ற கருத்தாக்கத்தினை எற்படுத்தவும் முயல்கிறார்.

அவர் “ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பத்தாம் பாட்டில் திருமாலும் பிரமனும் சிவனின் அடிமுடியைத் தேடியும் காண இயலாதவராயினர் என வரும் புராணக்கதையைப் பற்றிய குறிப்புத் தருவார்” என்கிறார் டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை. இதன் வழியாக அவர் தனியொரு கடவுளாக சிவனை காட்ட முயல்கிறார். இக்காலத்தில் சிவனையும் திருமாலையும் ஒரே உருவாமாக வைத்து வழிபடும் “ஹரிஹர மூர்த்தி” வழிபாடும் தோன்றுகிறது. இதன் வழியாக அதுவரை பிரிந்து முரண்பட்டு நின்ற சைவமும்-வைணவமும் ஒன்றுபடுத்தப்படுகிறதைக் காணலாம். இது குறித்து விளக்குகிற பேராசிரியர் வி.செல்வநாயகம் “அவ்வாறு இரு சமயங்களும் ஒன்றுபட்டு நின்றிராவிடின் பரவிக் கொண்டிருந்த சமண சயமத்தை எதிர்க்கக் கூடிய ஆற்றல் வைதிக சமயங்களுக்கு வாய்த்திருக்க மாட்டாது” எனக் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் தொடர்பாக “சாதி வேறுபாடு தீண்டாமை முதலிய மூட நம்பிக்கைகளுக்கு அவர் வாழ்விலும் இடம் இல்லை: பாடல்களிலும் இடம் இல்லை. அவர் பிராமண குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தும் தம் பாடல்களுக்கு யாழ் இசைப்பதற்காகத் தீண்டாக் குடும்பத்தைச் சார்ந்த திருநீலகண்டர் என்பவரைத் தம்முடன் தலங்களுக்கு அழைத்துச் சென்றார்.

பிராமணர்களின் தெருக்களுக்கும் வீடுகளுக்கும் அழைத்துச் சென்றார். அந்தத் தீண்டாதவர் உள்ளே வருவதனால் பிராமணர் வளர்க்கும் வேள்வித்தீ அவிந்து குற்றம் ஏற்படுமோ என்று பலர் அஞ்சியபோது அஞ்சாமல் அந்த வேள்வித் தீயின் அருகே அவரை அழைத்துச் சென்று தீ முன்னிலும் நன்றாகச் சுடர்விட்டு ஒளிர்வதை மற்றவர்கள் காணச் செய்தாராம்.” என மு.வராதராசன் விபரிக்கிறார். சம்பந்தர் தன் காலத்தில் சைவத்தின் எழுச்சியினை தமிழின் எழுச்சியாக ஆக்கவும் முற்படுகிறார்.

“வேதராணியத்திலே வேதங்களால் பூட்டப்பட்டதாய் வேதங்களாலேயே திறக்கப்பட வேண்டியதாயிருந்த கோவிற் கதவை திருநாவுக்கரசர் திருப்பதிகத்தால் இவர் திறக்கச் செய்தமையின் உட்பொருள் வேதப் பொருள் தெரியாமலிருந்த சாதாரணத் தமிழ் மக்களுக்கு வேதப் பொருளைத் தமிழாக்கிக் கொடுக்கும்படி பிராமணர் பிரமணரல்லாதாரை ஏவியதாகும் எனப்படுகிறது” எனக்குறிப்பிடுகிற டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை “வைதிக நெறியும் தமிழ் நாட்டிற்கே உரிய பழைய சமயமும் கலந்தே சம்பந்தர் காலச் சைவம் தோன்றியதால் சம்பந்தர் சமணருக்கெதிரான சைவரின் இயக்கத்தை தமிழின் எழுச்சியாக ஆக்கிச் சுலபமாக வெற்றியீட்ட முயன்றிருக்கிறாரென்று கருதுவதற்கு இடமுன்டு” எனவும் குறிப்பிடுகிறார்.

தமிழ் ஞானசம்பந்தரைப் பற்றி ” தேசிய இலக்கியம் ” என்னும் நூலின் ஆசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ” தமிழ் முரசு கொட்டித் தமிழ்க் கொடி ஏந்தித் தமிழ்க் கவிதையால் தமிழ்க் கடவுளைப்பாடி தூங்கும் தமிழினத்தைத் தட்டி எழுப்பின வீரத் தமிழர் ஒருவர் உண்டு என்றால் அவர் ஞானசம்பந்தர் அல்லாமல் வேறு யார் ” வரலாற்றில் மக்கள் பின்னடைவுகளைச் சந்திக்கும்போது மொழி தேசம் என்ற பிரக்ஞைகள் வலுப்பெறுகின்றன. இக்காலத்தில் சமண பௌத்த மதங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஞானசம்பந்தர் தமிழ்ஞானசம்பந்தராகவும் மருண்நீக்கியார் தமிழ்மறவாத நாவுக்கரசராகவும் தமிழகம் எங்கும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழ் இசை மூலம் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். எனக் கூறுகின்றார். (எல்லாளன்)அப்பரும் சம்பந்தரும்; தம் பதிகங்களில் சமண பௌத்தர்களின் போலி வேடம் ஒழுக்கக் கேடுகள் இழித்துக் கூறுகிறார்கள். இது அவர்களை பொது மக்களிடம் அம்பலப்படுத்தி பொது மக்களை இச்சமயங்களிடமிருந்து விடுவிக்க உதவியிருக்கும். இவ்வாறு சமணரை இழித்துக் கூறுதல் சைவரில் ஒரு பகுதியினருக்கு ஒரு விதமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துச் சமய மறுமலர்ச்சியில் அவர்கைள ஊக்;குவதாகவும் இருந்திருக்கும் என விளக்குகிறார் டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள். அது மட்டுமன்றி சமணருக்கெதிரான வாதங்களை நடாத்தி தம் சமயக் கொள்கைகளை முதன்மைபடுத்தினர்.

காரைக்காலம்மையார் தொடங்கி வைத்த பணியை திலகவதியாரும் மங்கையற்கரசியாரும் தொடர்ந்து செய்தனர் எனக் குறிப்பிடுகிறார் டாக்டர் ஆ.வேலுப்பிள்ளை. சாதி வேறுபாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நின்ற திருஞானசம்பந்தர் பெண்கள் பெற்றிருந்த தாழ்வினைப் போக்குவதற்கும் முயன்றார் எனக் குறிப்பிடுகிறார் மு.வரதராசன்.
மக்கள் மத்தியல் சமயக் கருத்தினைப் பரப்பும் அவசியத்தையும் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் உணர்ந்த நாயன்மார்கள்; மக்கள் இசையுடன் பாடக்கூடிய பாக்களான தேவராங்களை இயற்றினர். தேவாரங்களை மக்கள் இசையுடன் பாடச்செய்து ஊர்உராகச் சென்று சமயம் தழைத்தோங்க உழைத்தார்கள்;. மக்கள் மத்தியில் கொள்கைகைள பரப்புவதற்கேற்ற ஊடகமாக இசையுடன் பாடக்கூடிய தேவாரங்களை நாயன்மார்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். “ஊனையும் உயிரையும் உருக்கி உள்ஒழி பரப்பும்” தேவாரங்கள் மக்களை அணிதிரட்டச் செய்வதற்கு சிறப்பான கருவியாகப் பயனபடுத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெரும் மக்கள் இயக்கத்தினை அமைத்து வழிநடத்திச் செல்வதற்கு உதவியிருக்கிறது.

அத்துடன் மக்கள் மத்தியில் வழக்கிலிருந்த பா வடிவங்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் மக்களை தம் வசப்டுத்த முடிந்திருக்கிறது.சைவம் மறுமலர்ச்சியடைந்தது. அதே வேளை ஆழ்வார்களும் இவ்வழியில் பக்தி இயக்கத்தினை வழிநடத்திச் சென்றனர். பின்னால் சுந்தரர் மாணிக்கவாசகர் போன்றோர் பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டி நின்றனர்.“சுந்தரர் பிரமணர். பெற்றோர்கள் ஏற்பாடு செய்த குலமுறைப்படியான திருமணம் தடைப்படத்தப்;பட்டது. அதன் பின் வேறு குலப் பெண்கள் இருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தவர். ஒருவர் பரத்தையார். மற்றொருவர் வேளாள குடும்பத்தைச் சேர்ந்த சங்கிலியார்” என குறிப்பிடுகிறவை நிலைமைகளை விளக்கி நிற்கின்றன. கைலாசபதி அவர்கள் நாயன்மாரும் ஆழ்வாரும் சாதிமுறைமையை எதிர்ப்பவராயினர். இறைவன் முன் யாவரும் சமம் என்ற குரல் எழுப்பினர். வேடர் முதல் பறையர் வரை பக்தர்களாயின் ஒன்றே என்ற கருத்து உருவாகியது” எனக் குறிப்பிடுகிறார்.

பக்தி இயக்கத்தின் பிரதானமான பண்பாக அமைவது அது ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக விளங்கியமையாகும். சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் தெளிவாக வேறுபட்டு நின்ற தமிழ் மக்கள் இப்போராட்டத்தின் போது ஓரணி திரட்டப்பட்டனர். கைலாசபதி அவர்கள் தமது முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்த பெருநிலக்கிழாரும் பிரபுக்களும் சைவம் என்ற பெயரில் “ஆவுரித்துத் தின்னும் புலைய” ரையும் உடன் காட்டி-அணிதிரட்டி எதிர் வர்க்கத்தினரின் “தலையை அறுக்கும்” அறத்தொழிலைச் செய்ய முற்பட்டனர்” எனக் குறிப்பிடுகிறார். டாக்டர் ஆ.வேலுப்பிள்ளை “பக்தி இயக்கம் இரண்டும் பரந்து பட்ட மக்கள் இயக்கங்களாக வளர்வனவாயின” எனவும் “…இவ்வாறு மக்கள் இயக்கமாக இவை உருப்பெற்றதனாலேயே சமண பௌத்த மதங்களைச் சார்ந்த மன்னரையும் மக்களையும் மதமாற்றம் செய்யவல்ல ஆற்றல் இவற்றுக்குக் கிடைத்தது” எனவும் குறிப்பிடுகிறார்.

மிக முக்கியமாக அக்காலத் தலைவர்கள் சாதியாலும் மதத்தாலும் பிளவுண்டு நின்ற தமிழ் மக்களை ஓரணி திரட்டியமை கவனிப்பிற்குரியது. சாதிய வேறுபாடுகள் வலிமையாகப் பேணப்பட்ட அக்காலத்தில் அதனை பலவழிகளாலும் எதிர்த்து நின்று செயற்பட்டனர். பக்தி இயக்கம் வன்முறை சார்ந்த ஒன்றாக விளங்கியது என்பதுவும் பக்தி இயக்கம் என்ற பரந்து பட்ட மக்கள் இயக்கத்தினால் ஓரணிப்படுப்பட்டு நின்று போரடிய மக்கள் பின்னாளில் சாதிய-சமய-ஆணாதிக்க முரண்களால் “ஆளப்பட்டு” நலிவடைந்து போனதையும் வரலாறு உணர்த்துகிறது.

உசாத்துணைகள்:

வி. செல்வாநயாகம் தமிழ் இலக்கிய வரலாறு. 1996.

மு. வராதராசன் தமிழ் இலக்கிய வரலாறு. 2007

டாக்டர் ஆ.வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும். 2004

பேராசிரியர் க.கைலாசபதி இலக்கியச் சிந்தனைகள். 1983

Exit mobile version