Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதம் – லண்டன் ஒலிம்பிக்ஸ் சொல்லும் செய்தி : வியாசன்

மரணம் துப்பாக்கிகளோடு தெருக்களில் அலைவதும் மக்களைப் பாதுகாப்பதாக மிரட்டுவதும் மூன்றாம் உலக நாட்டு தெருக்களைக் கடந்துவந்த மனிதர்களுக்கு புதியதல்ல. கஷ்மீர், அசாம், மத்திய இந்தியா, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் என்று ஒவ்வொரு மூலைக்குள்ளும் பச்சை மனிதர்களும் காக்கி மனிதர்களும் மனிதக் கொல்லிகளோடு உலா வருவதை வெறுப்போடு பார்த்த “பெறுமானம் அற்றுப்போன” மனிதக் கூட்டங்களைத் தான் பார்த்திருக்கிறோம்.

பிரித்தானியாவின் பொருளாதாரம் இப்போது செத்துக்கொண்டிருக்கிறது என அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. ஆரம்பபிப்பதற்கு முன்னமே அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும் சுற்றாடல் முழுவதும் இராணுவ வலயம் போன்று காட்சிதர ஆரம்பித்திருந்தது.

இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அதிக அளவில் இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்ற முதலாவது நிகழ்வாக லண்டன் ஒலிம்பிக் வர்ணிக்கப்பட்டது.

13500 இராணுவத்தினரும் அவர்களோடு பொலீஸ் படையும் பாதுகாப்பில் ஈடுபட ஆரம்பித்தன. இந்தத் தொகை ஆப்கானிஸ்தானில் பிரசன்னமாயிருக்கும் பிரித்தானிய இராணுவத்தின் தொகையை விட சற்று அதிகமானதாகும்.

வீட்டுக் கூரைகளில் விமான எதிர்ப்ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. 11 மைகள் தொலை வரை மின்சார வேலிகள் அமைக்கப்பட்டன.

மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் குண்டு வெடிப்பு அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவுமே இவ்வளவு பாதுகாப்பு என்று பிரித்தானிய அரசு அறிவித்தது. சிரியாவிலும், லிபியாவிலும், மத்திய கிழக்குக் கடற்பரப்பிலும், இன்னும் உலகின் ஒவ்வோர் மூலையிலும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் இந்த நாடுகளைவிட வேறு பயங்கரவாதிகளும் இருப்பார்கள் என இவர்கள் அறிவித்தபின்னர் தான் பலர் அதிசயித்தனர்.

பிரித்தானியாவின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் மத்தியிலிருந்து முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்பலைகள் உருவாகின.

அவர்கள் எதிர்த்தது வெறுமனே இராணுவ ஆக்கிரமிப்பை மட்டுமல்ல. உலக்த்தின் அனைத்து சிக்கல்களையும் உருவாக்கி மக்களைச் சிறுகச் சிறுகக் கொன்றொழிக்கும் பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிற்கும் எதிராகத் தான்.

முதலில் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் லண்டன் ஒலிம்பிக்ஸ் இன் பிரதான நன்கொடையாளர். யூனியன் காபைட் நிறுவனம் இந்தியாவில் நிழக்த்திய காப்ரட் பயங்கரவாதத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதப் படுகொலைகள் நிமிடங்களுக்குள் பல்லாயிரம் உயிர்ளைப் பலிகொண்டது. ஊனமுற்ற ஒரு சமூகத்தை உருவாக்கியது. அந்த நிறுவனத்தின் தலைவர் அண்டர்சன் அமரிக்காவிற்குத் தப்பியோடிவிட்டார்.

இன்றும் அதன் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவில்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் காலத்தைக் கடத்திய யூனியன் காபைட் நிறுவனத்தை டவ் கெமிக்க்கல்ஸ் சுவீகரித்துக் கொண்டது. மக்களுக்கு நட்ட ஈடு கொடுப்பது தங்கள் வேலையல்ல அது யூனியன் காபைட்டோடு முடிந்துபோனது என நிராகரித்த டவ் கெமிக்கல்ஸ் £64 மில்லியன் பவுண்ஸ் தொகையான பணத்தை ஒலிம்பிக்கிற்கு நன்கொடையாக வழங்கியது. அதிலும் ஒலிம்பிக்கின் அழகான தொடக்கவிழாவிற்கு 7 மில்லியன் பவுண்சை வழங்கியது.

தாம் இந்தப் பணத்தை வழங்கியதற்காகப் பெருமைப்படும் டவ் கெமிக்கல்ஸ் புதிய உலகத்தை உருவாக்கப் போவதாக தமது இணையத்தில் காட்சிப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதை பிரித்தனியப் பிரதமரிடம் ஊடகங்கள் வினவிய போது டவ் நற்பண்புள்ள நிறுவனம் என நட்சான்று பத்திரம் வழங்கினார். அதிலும் ஒருபடி மேலே போன அமிதப் பச்சன் டவ் அமைத்த மேடையை நோக்கி ஒலிம்பிக் விளக்கை கொண்டு ஓடிய போது போபால் தீ ஒலிம்பிக் தீபத்தில் எரிந்தது.

இதை எல்லாம் கண்டு கொள்ளாத ஈழத் தமிழ் குறுந்தேசிய கோமாளிகள் அங்கு ஒரு மூலையில் புலிக் கொடியைக் செருகி வைத்துவிட்டு தமது விசிலடிச்சன் ஊடகங்களில் ஒலிம்பிக்கில் தமிழ் ஈழ தேசியக் கொடி பறப்பதாக எழுதி மகிழ்ந்தனர். இவர்களின் அருவருப்பான கோமாளித்தனதிற்கு எல்லை முடிவிலியில்தான்.

ஒலிம்பிக்ஸ் ஆரம்பவிழாவைப் பார்த்துப் புல்லரித்துப் போன ஆங்கிலம் பேசும் இந்திய மேட்டுக்குடிகள் “வாட் ஏ பியூட்டி யார்” என புளொக்கிகளில் எழுதினர். பேஸ் புக் மூட்டைப் பூச்சிகளும் கடித்துக்கொண்டன. பிரித்தானியாவில் இவர்கள் ஆங்கிலம் பேசினாலே ஏளனமாகப் பேசும் பெரும்பானமையான மக்கள் மத்தியில் தமது தாய் மொழி ஆங்கிலம் என அடிமைகளாகக் தலைகுனிந்து வாழும் இந்தக் கூட்டம் ஆயிரம் டவ் களுக்கு அடியாட்களைத் தயாரிக்கும்.

டவ் தனது பயங்கரவாத முகத்திற்கு ஒலிம்பிக்ஸ் முகமூடி அணிந்துகொண்டது போக கொக்கா கோலா நிறுவனம் நடத்திய “ஒன் த ஸ்பொட்” கொள்ளை அளப்பரியது. 30 நாடுகளின் நேரடி ஒலிபரப்பை சுவீகரித்துக்கொண்ட கொகா கோலா, ஒலிம்பிக் திடலுக்குள் ஏனைய பானங்களின் விற்பனைக்குத் தடைவிதித்தது. தண்ணீர்ப் போத்தல்களுடன் யாரும் உள் நுளைய முடியாது. மூன்று மடங்கு விலையில் விற்பனையாகும் கோலா பானங்களை மட்டுமே மக்கள் அருந்த முடியும்.

லிபியாவில் கடாபி ஆட்சியில் வழங்கப்பட்ட நீர்ப்பாசனைத்தை அழித்துவிட்டு அங்கே முதலில் சென்றடைந்தது கோலா என்ற நச்சுப்பானம் தான் என்றால் ஆரோக்கியமான உணவு குறித்து நாளாந்தம் பேசுகின்ற பிரித்தானியாவின் மெய்வல்ல்லுனர் உலகப்போட்டியில் கொக்க கோலாவின் ஆக்கிரமிப்பு மக்களை விரக்திக்கு உள்ளாகியது.

தவிர ஹேனிக்கன் பியர் நிறுவனம், அமரிக்கன் சாப்பாடுக்கடை மக்டொனால் போன்ற மனித சுகாதாரத்தை அழித்து உடல் ஆரோக்கியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அத்தனை திருடர்களும் நன்கொடை வழங்கி நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் உலகிற்கு இன்னொரு செய்தியைச் சொல்கிறது. சிலம் டோக்ஸ் மில்லியனர் புகழ் டானி பொயில்ஸ் வடிவமைத்த ஆரம்ப விழா சொல்லும் செய்திய விட உரத்த குரலில் அந்தச் செய்தி மக்களின் கதவுகளைத் தட்டுகிறது.

அரச இராணுவங்களின் துணையோடு நடத்தப்படும் கோப்ரட் பயங்கரவாதத்திலிருந்து மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளப் போராடவேண்டும் என்பதே.

தொடர்புடைய பதிவுகள்:

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

Exit mobile version