Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பண்பாட்டுச் சீரழிவின் மிருகத் தோற்றம்!: கிட்டு

woman stop sex இலங்கைச் சமூகங்களில் அதிகரித்து வரும் குற்றங்கள் எம்மை அதிர வைக்கின்றன. மலையகச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது சிறுவர்கள் மீதான பாலியற் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. கல்வி நிறுவனங்களும் இதற்கு விலக்கல்ல. பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலும் இடம்பெறும் துஸ் பிரயோகங்களை உத்தியோக பூர்வமானதும் உத்தியோக பூர்வமற்றதுமான தகவல்கள் எமக்கு அறிவிக்கின்றன.

அண்மையில் அக்கரப்பத்தனைக்கு அண்மித்த பகுதியான தோர்ன்ஃபீல்ட் ( (Thornfield)) தோட்டத்துப் பாடசாலையில் 7 வயது நிரம்பிய 2ம் வகுப்பு மாணவி மீது புரியப்பட்ட பாலியல் குற்றம் அதிர்ச்சியடையக் கூடியதாக விருந்தது. சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் மேற்படி சிறுமி து பிரயோத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

அறியக் கிடைத்த தகவலின்படி குற்றம் புரிந்து கொண்டிருந்த போதே கையும் மெய்யுமாக பிடிபட்டார் என்றே கூறப்படுகிறது. அத்துடன் இவ்வாசிரியர் இன்னும் பல சிறுமிகள் மீதும் இவ்வாறு குற்றம் புரிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேற்படி நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பாடசாலையில் இருந்தோ கல்வித் திணைக்களத்தில் இருந்தோ இதற்கெதிராக உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக அறிய முடியவில்லை.

சமூகத்தில் மதிக்கப்படுகிற உயர் அந்தஸ்த்தில் வைத்து நோக்கப்படுகிற ஒரு நபர் கல்வி தொடர்பாகவும் ஒழுக்கம் தொடர்பாகவும் வழிகாட்டுபவராகவும் இருக்க வேண்டிய ஒரு நபரே மேற்படி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். சில விடயங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியன. சமூகத்தில் சில விடயங்கள் பொதுப் புத்தியில் பதித்துள்ளன. அவையாவன:

குற்றமொன்று புரிபவர் சமூகத்தின் நோக்கில் சமூக மட்டத்தில் தாழ்ந்தவராக வறுமையில் பீடிக்கப்பட்டு பண்பாடு நாகரீகம் இல்லாதவராக இருப்பார்.

கல்வி வளர்ச்சி சமூகத்தை முன்னேற்றும்.

இந்த மாதிரியான குற்றமொன்று இடம்பெறும் போது குற்றத்தை அம்பலப்படுத்துவதிலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதும் குற்றம் யார் மீது புரியப்பட்டதோ அவரை கேவலப் படுத்துவதாக அமையும்.

எப்போதும் குற்றம் புரிபவர் பற்றி நாம் நோக்கும் போது சமூகத்தில் இரண்டாந் தரப் பிரஜையாகவோ வறுமையில் பீடிக்கப்பட்டு பண்பாடு நாகரீகம் அற்றவராகவும் இருப்பார் எனும் கருத்து இவ்விடத்தில் எப்படியும் பொருந்தாது. இவர் ஒரு ஆசிரியர். சமூகத்தில் மதிப்பு மிக்கவர். ஏன் இவருக்கு இப்படி ஒரு மனவிகாரம் அல்லது வக்கிரம்? குழந்தையிடம் கூட தனது உடல் நமைச்சலை தீர்த்துக் கொள்ள இந்த மிருகத்தால் எப்படி முடியுமாகியது? பண்பாட்டு சீரழிவின் முகங்கள் எப்படி யெல்லாம் தோற்றம் காட்டுகின்றன.

நவகொலனித்துவ நுகத்தடியில் பயணிக்கும் நாட்டில் சீரழிந்த பண்பாட்டு அம்சங்களை திணிப்பது அவ்வளவு கடினமானதல்ல. எம் மூளைகளெல்லாம் தினமும் குரூரமான நினைவுகளுடனே அந்த சிந்தனைகளுடனேயே தொடர்பைக் கொண்டுள்ளன. ஊடகங்கள் திரைப்படங்கள் தினம் தினம எதைப் பிரச்சாரப் படுத்துகின்றன என்பதைப் பார்த்தால் இது புரியும். எல்லோரையும் மன விகாரங்களாக்கி நுகர்வுக் கலாச்சாரப் பேயின் வாய்க்குள் எம்மை நாமே நுழைத்துக் கொள்கிறோம்.

கல்விகற்றுச் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொண்டால் அந்த சமூகம் முன்னேறும் என்பது எவ்வளவு அபத்தம். ஒரு ஆசிரியரே இப்படியென்றால் அவர் என்னத்தைப் படிப்பித்து கிழிக்கப் போகின்றார். ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் நாம் சாடவில்லை. மலையகத்தின் கல்வி வளர்ச்சியில் அவர்களின் பங்கு அளப்பரியது. ஆயினும் இம்மாதிரியான புல்லுருவிகளைப் பிடுங்கியெறியவும் அவற்றை இல்லாமலாக்கவும் அவர்கள் போராடவில்லை. இந்த விடயத்தில் அந்த பாடசாலையின் சக ஆசிரியர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததாக அறிய முடியவில்லை. அந்தத் தோட்ட மக்களும் எதுவும் செய்யவில்லை.

இவ்வாறான குற்றம் இடம்பெற்ற போது குற்றம் யார் மீது புரியப்பட்டதோ அவருக்கு ஆதரவாக இருந்து குற்றத்தை அம்பலப் படுத்துவது சமூகப் பற்று மிக்க மனித நேயமிக்க மனிதர்களின் கடமையாகும். குற்றத்தை அம்பலப்படுத்துவது பாதிக்கப்பட்டவரைப் பாதிக்கும் அல்லது அவமானப் படுத்தும் எனும் கருத்தியலை பண்பாட்டு ரீதியாக அடித்து நொருக்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டப் போலீசை நம்ப வேண்டியதில்லை. அவர்கள் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் சமூக நீதியை நிலைநாட்ட எம்மிடமே சக்தி உள்ளது. அதை நடைமுறைப்படுத்த போராட வேண்டும்.

நம் ஊடகங்கள் இது தொடர்பாக எந்தவிதமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காத்திரமான எந்த விடயத்துக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விடயம். வக்கிரத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகளையாவது நிறுத்திக் கொண்டால் நன்று.

இந்த மாதிரி ஒன்றிரண்டாய் மேலெழும் குற்றங்கள் சமூகத்தின் அடிப்படையான பண்பாட்டு பிறழ்வின் காரணமாக ஏற்படுவது பண்பாட்டு ரீதியாக எம்மை சீர்படுத்திக் கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அத்துடன் இவ் ஆசிரியர் மாதிரி மிருகங்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட வேண்டும்.

மூலம்:புதியபூமி.

Exit mobile version