சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் வரலாறு முழுவதும் பேரினவாத ஒடுக்கு முறைக்கு நேரடியாகத் துணைசெல்லும் தமிழர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இலங்கை அரசுகளோடும் , இராணுவத்தோடும் ஒட்டுண்ணிகளாக தமது பிழைப்புவாத அரசியல் நகர்த்தும் நூற்றுக்கணக்கானவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறு கடந்து வந்துள்ளது.
90 களின் பின்னர் பேரினவாதத்திற்குச் சார்பான புலம்பெயர் அரசியல் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட அரசியல் தத்துவார்த்தத் வெளியில் நகர்த்தப்படுகின்றது. ஒரு புறத்தில் புலம்பெயர் புலிகளின் அடிப்படைவாத அரசியலை நியாயப்படுத்தும் வகையிலும், மறுபுறத்தில் பேரினவாத அழிப்பிற்குத் துணைசெல்லும் வகையிலும் ‘மாற்றுக்கருத்து’ என்ற தலையங்கத்தில் மற்றொரு அரசியல் நடத்தப்படுகிறது.
சாதிவாதம், பிரதேசவாதம், மற்றும் ஏகதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கூட்டு ; இலங்கை அரச பாசிசத்தின் அருவருப்பான தொங்கு தசையாக மாறிய அரசியல் எஸ்.எல்.டி.எப் மற்றும் தலித் முன்னணி ஆகிவற்றின் தோற்றத்தோடு ஆரம்பிக்கிறது.
புலம்பெயர் நாடுகளிலிருந்து திட்டமிடப்பட்ட இந்த அழிவு அரசியல் எஸ்.எல்.டி.எப் ஐ மையமாகக்கொண்டே வழி நடத்தப்படுகின்றது. புலிகளிலிருந்து தத்துவார்த்த அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெளியேறிய ராகவன், நிர்மலா போன்றவர்களால் தலமைதாங்கப்படும் இந்த அரசியல் இப்போது இலங்கையில் புற்றுநோய் போன்று ஜனாயக முற்போக்கு சக்திகளை அரித்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறது.
ஜனநாயக முற்போக்கு அரசியல் தளத்தை நேர்த்தியாகத் திட்டமிட்டுக் கையகப்படுத்திய இக் கும்பல்களின் கூட்டு, மாற்று அரசியல் என்பதை இலங்கை அரச பாசிசம் சார்ந்த ஒன்று என்ற விம்பத்தைத் தோற்றுவிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.
இக்குழு தமது எஜமானர்களுக்காக இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது. முதலில், சாதிய மற்றும் பிரதேச முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கத்திற்குத் துணை செல்கிறது. இரண்டாவதாக புலிகளின் அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு எதிரான முற்போக்கு ஜனநாய கோட்பாடுகள் நோக்கிய அணிதிரள்தல் நிகழாமல் இரும்புத் திரை ஒன்றை ஏற்படுத்துகிறது.
வன்னி இனப்படுகொலையின் பின்னான ஐந்தாண்டு காலப்பகுதியில் இக் கூட்டங்களின் செயற்பாடுகள் குறைந்தபட்ச எதிர்ப்புகள் கூட இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுகின்றது. புலம்பெயர் நாடுகளில் கிழக்குப் பிரிவினை வாதத்தைக் கருணாவுடனும், பிள்ளையானுடனும் இணைந்து தலைமைதாங்கிய ஞானம் என்ற எம்.ஆர்.ஸ்டாலின், சிறீ ரெலோ என்ற ஆயுதக் குழுவின் புலம்பெயர் பிரதிநிதி கீரன், பிரான்சை மையமாகக் கொண்ட சாதிவாதிகள், இவர்களை ஒருங்கிணைக்கும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா போன்றவர்கள் இணைந்த அதிகார்வர்க்கத்தின் அடியாள் படைகள் இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
அண்மைக் காலங்களில் முற்போக்கு அரசியல் மாற்றுக் கருத்துக்கள் என்ற தலைப்பில் மலையகப் பகுதிகளில் இக் குழுக்களின் நடமாட்டங்களை அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஈனக் குரல்களின் எதிரொலிகளை ஆங்காங்கு கேட்கும் அவலம் நிறைந்த சூழலில் இக் குழுக்களின் நேரடித் தலையீடு அவற்றை அழிப்பதற்கான ஆரம்பமா என்ற கேள்விகள் எழுகின்றன.
வன்னி அழிவுகளின் பின்னர், அடையாள அரசியல் என்ற ஏகாதிபத்திய, பின்நவீனத்துவக் கருத்துகள் இழையோடும் அரசியல் தளம் ஒன்று லெனின் மதிவாணம் மற்றும் ந.ரவீந்திரன் ஆகியோரால் தோற்றுவிக்கபடுகிறது. பிழைப்பு வாதிகளும், வியாபாரிகளும் குந்திக்கொள்வதற்கு ஏதுவாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட இத் தளத்தை முதலில் பயன்படுத்திக்கொண்டது பிரான்ஸ் சாதிவாதிகளான தலித் முன்னணி.
இலங்கையை மையமாக கொண்ட முற்போக்கு ஜனநாயக அரசியல் சக்திகளின் சாபக் கேடு நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ரவீந்திரனால் திட்டமிடப்படுவது அதிர்ச்சியானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
ரவீந்திரனால் உருவாக்கப்பட்ட புதிய பண்பாட்டுத் தளம் என்ற அமைப்பு அனைவரையும் இணைப்பதாகக் கூறுகிறது.
சிங்கள பௌத்த வெறிகொண்ட இராணுவத்தோடு இணைந்து செயற்படுவது தமது அரசியல் என்று வெளிபடையாகக் கூறும் சிறீ ரெலோ கீரனயும், வேதாந்தாவையும், வெள்ளை வானையும் இணைக்கும் சோபாசக்தியையும், தலித் முன்னணியையும் இவர்கள் அனைவரதும் தத்துவார்த்த இணைப்பாளர்களான ராகவன், நிர்மலாவையும் அங்கீகரிக்க முடியும் என்றால் பேரினவாத அரசுடனேயே தொற்றிக்கொள்ளலாமே, புதிய பண்பாட்டுத்தளம் எதற்கு?
தொடர்புடைய பதிவுகள்:
சுகனார் படிகம் : ப.வி.ஶ்ரீரங்கன்
செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07