Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பகவத்கீதைஇந்துக்களின் ஒரு புனிதநூலா? அல்லது பார்ப்பனிய புனைவா? பகுதி-2 : வி.இ.குகநாதன்

பகவத்கீதையானது வருணஅமைப்பு முறையினை எவ்வாறு பேணிவருகிறது என்பதனையும் , அது வன்முறையினை தனது நலன்களிற்காக எவ்வாறு தூண்டிவருகிறது என்று முதற்பகுதியில் பார்த்தோம். இப்பேர்ப்பட்ட தாற்பரியங்களைக் கொண்ட கீதையானது மகாபாரதத்துடன் என்றுமே இணைந்து வந்துள்ளதா? அல்லது பிற்பட்ட காலத்தில் உள்நுளைக்கப்பட்டதா? என ஆராய்வதே இப்பகுதியின் நோக்கமாகும்.

இவ்விரு பகுதிகளையும் கவனமாக ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஒரு உண்மை தெளிவாகப்புலனாகும். அது என்னவென்றால் கீதையில் பராமாத்மாவாகவும், முழுமுதற்கடவுளாகவும் சித்தரிக்கப்படும் கிருஸ்ணர் ஏனைய பகுதிகளில் சூழ்ச்சித்தந்தரமிக்க ஓரு சாதாரண அரசனாகவே காட்டப்படுகிறது.

அதாவது ஒரு கட்டத்தில் மற்றொரு அரசனிற்கு பயந்து மதுராவிலிரந்து துவாராகாவிற்கு இடம்பெயர்ந்து செல்பவனாகவும் , எட்டுப் பெண்களை மனைவியாகவும்,மற்றும் பல பெண்களையும் வைத்திருக்கும் ஒருவனாகவும், பாரதப்போரிற்கு முன் தனது படைவீரர்களை கௌரவர் பக்கம் கொடுத்துவிட்டு போரின்போது பாண்டவருடன் இணைந்து வியூகமைத்து தனது படைவீரர்களையும் சேர்த்து கொல்லத்துணைபோவனாகவும்(கிருஸ்ணரின் ஆணையினை ஏற்ற படையினர், அவரினராலேயே பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்), போரின்போது சூழ்ச்சிமூலம் பீஸ்மர், துரோணர், கர்ணன் போன்றோரை கொல்லக்காரணமாகும் சூழ்சிக்காரணாகவும் , யாதவகுல அழிவினையோ அல்லது துவாரகையின் அழிவினையோ தடுக்கமுடியாத கையாலாகதவனாகவும், இறுதியில் வேடுவனின் அம்புபட்டு அனாதரவாக இறப்பவனாவும் சாதாரணமானவனாகக் காட்டப்படும் கிருஸ்ணன், கீதைப்பகுதியில் மாறாக சகல வல்லமைபொருந்தியவராகக் காட்டப்படுகிறது.

மேலும் கீதையில் கிருஸ்ணரிற்கே முக்கியத்துவளிக்கப்பட்டு முழுமுதற்கடவுளாகச்சித்தரிக்கப்படும்போது

பாரதத்தின் ஏனைய பகுதிகளில் அம்முக்கியத்துவம் சிவனிற்கே (மகாதேவர்)அளிக்கப்படுகிறது. இதனை சைவ- வைஸ்ணவ முரண்பாடாகவும் பார்க்கலாம்.மேற்குறித்தவை கீதையின் பாரதத்துடன் ஒத்திசையாத்தன்மையினை தெளிவாகக்காட்டுகிறது.
மகாபாரதமானது ஆரம்பகாலத்தில் வாய்வழி மூலமாகவே கடத்தப்பட்டுவந்து பிற்காலத்தில் எழுத்துருப்பெற்றது. இவ்வாய் மொழிமூலமான கடத்தல்களில் முக்கியமானவையான நாட்டுப்புற பாடல்கள், கூத்து வடிவம் என்பவற்றில் கீதைக்கு எந்த முக்கியத்துவமில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிகம் எழத்துவடிவில் அறியப்படாத அரவானிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே கீதைக்கு மரபுவழி கூத்துக்களில்கொடுக்கப்படவில்லை(பாண்டவர்களாலும், கிருஸ்ணராலும் பலிக்கடாவாக்கப்பட்டவனே அரவான்)

இப்படியான கூத்துவடிவமும் கீதையின் இடைச்செருகலினை எடுத்துக்காட்டுகிறது.

அண்ணல் அம்பேத்காரின் கருத்துப்படி ஒருகாலத்தில் பௌத்தமதத்தின் செல்வாக்கினால் சாதியமைப்பு ஆட்டங்காணத்தொடங்கியது. இவ்வாறான நிலையில் சாதியமைப்பினை மீண்டும் தூக்கிநிறுத்துவதற்காக பார்ப்பானியத்தால் மகாபாரத்தில் மேற்கொள்ளப்பட்ட உட்செருகலே பகவத்கீதை.

முடிவாகக்கூறுமிடத்து வருணஅமைப்பினைப் பேணுவதற்கான பார்ப்பானியத்தால் கடவுளின் பெயரில் புனையப்பட்டதே பகவத்கீதை. இவ்வாறான பொய்யில் பிறந்து பொய்யிலே வாழ்ந்துவரும் பகவத்கீதையே இன்றும் இந்திய நீதிமன்றங்களில் “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்று உறுதிமொழியெடுக்கப் பயன்படுத்தப்படுவது இந்த நீதிவழங்கல்முறையிலுள்ள விமர்சனங்களை மேலும் கூர்மைப்படுத்துகிறது.

பகவத்கீதைஇந்துக்களின் ஒரு புனிதநூலா? அல்லது பார்ப்பனிய புனைவா? : வி.இ.குகநாதன்

Exit mobile version