Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ந.இரவீந்திரனின் இறக்குமமதியான “இரட்டைத் தேசியம்” : சபா நாவலன்

உலகம் முழுவதும் இனிவரும் காலங்களில் உருவாகும் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் உரைகல். மறுக்க முடியாத உதாரணம். ஈழத்தில் தோற்றுப் போன ஆயுதப் போராட்டத்தின் பின்னர் அதன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அதன் தத்துவார்த்த அரசியல் பின்புலத்தையும் உரசிப்பார்க்கின்ற சமூக அக்கறை மிக்க சக்திகளை நாம் எமக்கு மத்தியில் காண்கிறோம். அதன் மறுபக்கத்தில் அடிமைகளாவதற்கு ஏகபோக அரசுகளை நோக்கி விண்ணப்பம் எழுதும் கூட்டத்தையும் கண்டு அதிர்ச்சியடைகிறோம். தத்துவார்த்த அரசியலின் அடிப்படையாக 80 களில் ஆங்காங்கே உருவானது போன்றே மார்க்சியம் குறித்த உரையாடல்களும் அதன் பிரயோகம் குறித்த வேறுபட்ட கருத்துக்களையும் காண்கின்றோம்.

மிக நீண்ட ஆண்டுகளாக அடிமை நிலைப் பழமைவாத சிறு நிலப்பிரபுத்துவ மனோபாவத்தினுள் சிறைவைக்கப்பட்டிருந்த ஒரு சமூகம் குறித்து மீண்டும் பேசிக்கொள்கிறோம். இந்த நிலையில் இரட்டைத் தேசியம், தலித்தியம் குறித்த கருத்துக்கள் புதிதாக மாற்றுச் சிந்தனை மார்க்சியப் பிரயோகம் என்ற வரைவுக்குள் முளைவிடுகின்றன.

குறிப்பாக ஈழத்தில் ந.இரவீந்திரன் போன்றவர்கள், தமிழ் நாட்டின் தலை நகரப்பகுதிகளில் அவ்வப்போது உலாவரும் இக்கருத்துக்களை ஈழத்தின் இன்றைய அரசியற் சகதிக்குள் அறிமுகப்படுத்துகின்றனர்.

தேசம், தேசியம் என்பன குறித்த புரிதலில் இருந்து இவைகுறித்த விஞ்ஞான பூர்வமான மேலதிக உரையாடலைத் தோற்றுவிக்க முடியும்.
தேசியம் என்றால் என்ன என்பதை லெனின், ஸ்டாலின் போன்றவர்களே முதலில் தெளிவான அரசியல் வரையறைக்குள் உட்படுத்த முனைந்தவர்கள். எது எவ்வாறாயினும் தேசியம் என்றால் என்ன என்பதையும் மூன்றாம் உலக நாடுகளின் குறிப்பான சூழலில் அதன் தன்மை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும் ஆராய்வதிலிருந்தே சில முடிபுகளுக்கு முன்வர முடியும்.

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மனிதவியல் பேராசிரியர் வல் டானியல் “சாதிகளால் பிளவுண்டிருக்கும் சமூகத்தின் இணைவே தேசியம்” என்ற கருத்தை ஒரு தீவிர எல்லையில் முன்வைக்கிறார். அதன் மறு எல்லையில் ந.இராவீந்திரன் போன்றோர், தாழ்த்தப்பட்ட சாதியினர் தமக்கிடையேயான தலித்த்துக்கள் என்ற ஒருங்கிணைவால் இன்னொரு தேசியத்தை உருவாக்குகின்றனர் என்கிறார். இந்த இரண்டு தீவிர எல்லைகளும் மார்க்சியப் பிரயோகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து.

பெரு நிலங்களை உடமையாக வைத்திருந்திருந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுத்துவக் காலத்தில் மன்னர்களும் சாம்ராஜ்யங்களுமே மக்களை இணைக்கும் சங்கிலி போன்று திகழ்ந்தது. அந்த இணைப்பிற்கான தத்துவார்த்தப் பின்புலமாக செயற்பட்ட தீர்மானகரமான காரணியாக மதங்கள் காணப்பட்டன. நிலங்களை உடமையாக வைத்திருந்தவர்களின் காலம் மாற்றமடைந்து மூலதனத்தை உடமையாக வைத்திருப்பவர்களின் காலப்பகுதி உருவான போதே முதலாளித்துவம் என்பதும் உருவாகிறது. முதலாளித்துவக் காலப்பகுதியில் மக்களை இணைப்பதற்கான தத்துவார்த்தக் கருத்தியலாக தேசியம் உருவாகிறது.

முதலாளித்துவம் உருவான காலத்தில் நிலம் கூட மூலதனத்தின் ஒரு பகுதியாக மாற்றமடைந்து அதன் உடமையாளர்களின் தனி ஆதிக்கம் மறைந்து போனது. மறுபுறத்தில் முதலாளித்துவம் தனது நலனுக்காக மக்கள் இடையேயான இடைவெளியைக் குறுகலாக்கியது. பல நாட்கள் கடந்து செல்லும் இடைவெளியை சில மணி நேரங்களிலேயே கடந்து செல்லும் நிலை உருவானது. தொலைத் தொடர்பு இந்த இடைவெளியை இன்னும் குறைத்தது. அடிமைகளாக வாழ்ந்தவர்கள் தமது சமூக எல்லைகளைக் கடந்து தொழிற்சாலைகளில் வேலைசெய்ய வேண்டும் என்பதால் சம உரிமை குறித்துப் பேசப்பட்டது. அதற்கான சட்டங்கள் உருவாகின. தொழிலாளர்கள் அதிகமாகத் தேவைப்பட்ட போது பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக பெண்களின் அடிமைத் தனத்திற்கு எதிரான கருத்துக்களை அரசுகள் சட்டமூலமாக்கின.

தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை உயர்த்திகொள்வதற்காக அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. மக்களிடையேயான வியாபாரத் தொடர்பாடலுக்குரிய ஒரு மொழி பொது மொழியானது. பிரான்சில் 50 வீதமானவர்களே பேசிய கோலுவா மொழி நாட்டின் பொது மொழியானது. வழங்கப்பட்ட உரிமைகளுக்கும் புதிய சமூகத்திற்கும் உரிமை நிர்வாக மையமாக அரசுகள் செயலாற்றின. அந்த அரசின் கீழ் உள்ளவர்கள் முதலாளித்துவத்திற்குத் தேவையற்ற பண்பாட்டு அம்சங்களை மறந்து போகலாகினர். கத்தோலிக்க நாடுகளில் விதவைப் பெண்கள் கறுப்பு உடை அணிய வேண்டும் என்பன போன்ற பண்பாடுகள் அழிந்து போயின. மறுமணம், பொது வழமையானது. முதலாளித்துவத்திற்குத் தேவையான பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கிக் கொண்டனர். புதிய பண்பாடுகள் உருவாகின. பெண்கள் காலுறை அணிவதற்கான போராட்டத்தை நடத்திய போது புதிய அரசுகள் அவற்றை ஆதரித்தன. பின்னர் அது வழமையாகிப் போனது.

இவ்வாறு நீண்ட வரலாற்று வழியான மாற்றங்கள் ஊடாக தொடர்புற்ற மக்களிடையே பொதுவான கலாச்சார வழக்கு ஒன்று உருவானது. ஒரு அரசின் எல்லைக்கு உட்பட்ட மக்கள் பொதுவான ஒரே மொழியைப் பேசிய அதே வேளை பொதுவான கலாச்சாரப் பண்புகளையும் கொண்டிருந்வர்களாக உருவாகினர். இவை அனைத்தும் அதே அரசின் எல்லைக்கு உட்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்டது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவான ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்டவர்களின் ஒன்றுபட்ட உணர்வே தேசியம் என்று அழைக்கப்பட்டது.

ந.இரவீந்திரன் கூறுவது போல இந்தவகையான ஆய்வுகளில் எல்லாம் ஐரோப்பிய நாடுகளே உதரணம் காட்டப்படுகிறது என்பதால் இன்றைய ஆசிய நாடுகளுக்கு இவை எல்லாம் பொருந்தாது என்பது நியாயமானதாகவே தென்படும்.

எது எவ்வாறாயினும் தேசம், தேசியம் என்பன வரலாற்றின் ஒரு குறித்த காலகட்டத்திற்கு உரித்தான மக்கள் கூட்டம் என்பது விஞ்ஞான பூர்வமான முடிபு. இந்தக் காலப்பகுதி முதலாளித்துவம் உருவாகி வளர்ச்சியடைந்த காலப்பகுதி என்பதும் தெளிவானது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் இயல்பாக உருவாகவில்லை. மன்னராட்சிக்குள் நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பினுளிருந்த இலங்கைக்கு முதலாளித்துவம் காலனி ஆட்சியாளர்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அவ்வாறு ஏற்றுமதியான முதலாளித்துவத்தின் கிழ் அதற்கான உற்பத்தி நடைபெறவில்லை. தொழிற்சாலைகளும், போக்குவரத்தும் மேற்கு நாடுகளைப் போன்று உருவாகவில்லை, தொலைத்தொடர்பு வசதிகள் கூட மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காலனீயத் தேவைகளுக்கு உட்பட்டதாகவுமே அமைந்தது.

சனத்தொகையின் அளவிலும் அதிகமாக தொழிலாளர்கள் தேவைப்பட்டது போன்ற ஐரோப்பிய சூழல் அங்கு இருக்கவில்லை. அதனால் முதலாளித்துவ அரசுகள் முன்வைத்த ஜனநாயக உரிமைகள் மக்களை நிலப்பிரபுத்துவ அமைப்பிலிரிந்து விடுவிப்பதற்கானதாக அமைந்திருக்கவில்லை. மக்களிடையே பிணைபு ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஏற்படவில்லை. அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் போன்று அங்கு தேசிய உணர்வு உருவாகவில்லை.
ஆயினும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளாதாரத்தோடு முலதனத்தோடும் ஒட்டிய சிறு தொழில்களும் சேவைத்துறை தொழில்கள் போன்றனவும் உருவாகின. ஒவ்வொரு பிரதேசங்களிலும் அவர்கள் பேசும் மொழியோடு இணைந்த சந்தையும் பொருளாதாரமும் உருவாகியது.கொழும்பை நோக்கி சந்தை மத்தியத்துவப் படுத்தப்பட்டதகத் தோன்றினாலும், வடக்கில் உருவான வேறுபட்ட சந்தை கொழும்புச் சந்தையுடன் ஒரு வகையான இணைப்பை மட்டுமே ஏற்படுத்திக் கொண்டது. கிழக்கின் சந்தை வடக்கோடு இணைவை ஏற்படுத்திக்கொண்டது.

இவ்வாறு பல துருவங்களில் சந்தைப்பொருளாதாரம் உருவானது.

இதே வேளை பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழில் உருவானதைத் தொடர்ந்து தெற்கின் சந்தை ஓரளவு நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து விடுதலையடைய ஆரம்பித்தது, இந்தக் காலத்தில் நில உடமையாளர்களுக்கு எதிராக எழுச்சிபெற்ற சாதியாகவே கராவ சாதி கருதப்படுகின்றது. இன்று வரை கொய்கம சாதியினரின் ஆதிக்கத்திற்கு நிகரானவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
இந்த தேசிய முதலாளித்துவத்தின் எழுச்சி ஏகாதிபத்திய – காலனி எதிர்ப்பாக எழ்ச்சிபெற்ற வேளையில் தான் தேசிய இன முரண்பாடு அன்னிய ஆதிக்க சக்திகளால் தூண்டிவிடப்படுகிறது. சேன நாயக்க குடும்பமும், ஆறுமுக நாலவலரும், ராமனாதன் போன்றோரும் அன்னியர்களால் ஆதிக்கத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனர்.

சாதி அமைப்பு முறை இறுக்கமாகக் காணப்படாத வட கிழக்கில் ஆறுமுக நாலவர் அதனை தத்துவார்த்தத் தளத்திலும் செயற்பாட்டுத் தளத்திலும் மீளமைக்கிறார். சாதி அமைப்பு முறை சமூகத் தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு நகர்த்தப்படுகிறது. தேசிய மூலதனதின் உருவாக்கம் பிரித்தானியர்களால் அடியோடு நிர்மூலமாக்கப்படுகின்றது.

தமது வேலையை முடித்துக்கொண்டு தமது முகவர்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிரித்தானியர்கள் தமது பரிவரங்களோடு நாடு திரும்புகின்றனர்.
அன்று சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தடுக்கபடுகின்றது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரித்தானிய முகவர்கள் அந்த வளர்ச்சியைத் தொடர்ச்சியாகத் தடைசெய்து வந்தனர். அதற்கு தேசிய இன முரண்பாட்டை கூர்மைப்படுத்தி வந்தனர். வன்னிப் படுகொலைகளின் பின்புலம் கூட இதுதான்.
ஆக வட கிழக்குத் தமிழர்கள் முழுமையாகத் தேசிய இனமாக வளர்ச்சி பெறாத, தேசிய இனமாக வளர்ச்சியடையும் சூழலிலேயே காணப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பிய போல்கன் நாடுகளில் கூட சற்று வேறுபட்ட சூழலில் இவ்வாறான தேசிய இனங்கள் காணப்பட்டன.

இலங்கையில் காணப்படும் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் என்ற நான்கு தேசிய இனங்களும் இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் ஆனால் வளர்ச்சியடையக் கூடிய சமூகப் பொருளாதாரப் புறச் சூழலைக் கொண்ட குறை நிலைத் தேசிய இனங்களாகவே காணப்படுகின்றன.
இவர்கள் தேசிய இனங்களாக வளர்ச்சியடையத் தடையான அடிப்படைக் காரணி அன்னிய மூலதன ஆதிக்கமே. அதனை உள்ளூரில் செயற்படுத்துவது பெருந்தேசிய ஒடுக்கு முறையே.

குறை நிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் பிரதேச முரண்பாடு, சாதிய ஒடுக்கு முறை போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இனி, எம் முன்னல் உள்ள கேள்வி இவை தேசிய இனங்களாக வளர்ச்சி பெறுவதற்காகப் போராடுவது நியாயமானதா, சாத்தியமானதா, முற்போக்கானதா என்பவை.

இலங்கையில் பிரதான முரண்பாடாகத் தேசிய முரண்பாடே காணப்படுகின்றது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக இரவீந்திரன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் போராடுவார்கள். மறுபக்கத்தில் அப்போராட்டம் தேசிய இனமாக முழுமை பெறுவதற்கான போராட்டமே. அவ்வாறான போராட்டம் தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான அன்னிய மூலதனத்திற்கு எதிரான அதனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமே. ஆக, அதன் முற்போக்குப் பாத்திரம் நிராகரிக்க முடியாத, சமரசங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை.

இனிமேல் தேசிய முதலாளித்துவம் சாத்தியமானதா, புலம் பெயர் நாடுகளில் பேசப்படும் தேசியம் என்பன குறித்த கருத்துக்கள் அடுத்த கட்டுரையில்….

Exit mobile version