
ஐரோப்பிய சமூகத்தில் வர்க்க பிளவு காணப்பட்டது போன்று இனக் குழு சமூகத்தில் இல்லை. அங்கே ஒடுக்கு முறைக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவர் மத்திய தர வர்க்கமாகவோ அல்லது முதலாளியாகவோ மாறி விட்டால் அவரது புதிய வர்க்கத்திற்கான அடையாள மாற்றத்தை பெற்ற விட முடியும். ஆனால் சாதி சமூகத்தில் அத்தகைய வர்க்க மாற்றத்தை பெற்றால் கூட அவரது சாதி ஒடுக்கு முறை கலைவதில்லை. எனவே சாதிய கட்டமைப்பு என்பது மேல் சாதி கீழ் சாதியினரை ஒடுக்குவதற்காகவும் சுரண்டுவதற்காகவும் உருவாக்கபட்ட அமைப்பாகவே இருந்து இன்று வரை தொடர்வதாக அமைந்தள்ளது.
ஏகாதிபத்தியம் என்பது தேசங்களை ஒடுக்கி உபரியை ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றது. எனவே அதற்கு எதிரான பரந்தப்பட்ட ஜனநாயக சக்திகளையும் திரட்டி அதற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாகும். ஆனால் இந்திய வாழ்முறையில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக விழிப்புற்றிருந்த பார்பனர்கள் சில வேலைகளில் பார்பன வேளாளர் கூட்டு தாம் ஒடுக்கிய தலித் மக்களின் உணர்வுகளை காணத் தவறி விட்டனர். மேலும் அவர்களை கீழ்நிலைப்படுத்தி சுரண்ட தலைப்பட்டனர். எனவே மேல்சாதியினர் தலித்துகள் பற்றிக் கொடுத்த வாக்குறுதியெல்லாம் அவர்கள் சந்தேக கண்ணொட்டத்துடனேயே பார்க்க தலைப்பட்டனர். இதன்காரணமாக தலித் சார்ந்து எழுந்த இயக்கங்களும் தலைவர்களும் இவர்களின் கூற்றுக்களை நிராகரித்து ஏகாதிபத்திய அணியை நாட வேண்டியவர்களானார்கள். இந்த முரன்பாட்டை உணராது சாதியெதிர்ப்புக்காக செயற்பட்ட போராடிய முன்னோடிகளான அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார் முதலானோரையும் அவர் தம் போராட்டங்களையும் குறுங்குழுவாத போராட்டம் எனவும் அவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் எனவும் பாடி பரப்பி வந்தனர்- வருகின்றனர்..
இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில், இந்திய வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுடைய சமூகவமைப்பு (மாற்று வடிவம்) சாதி என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரைத் தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற தன்மையிலேயே வளர்த்தெடுக்கப் படுகின்றது. இங்கு சாதியத்திற்கு எதிராக போராடக் கூடிய சகல விதமான ஜனநாயக சக்திகளையும் ஒன்றினைத்தல் அவசியமாகும். இலங்கையில் வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தை முன் வைத்தனர். ‘சாதி ஒழியட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என அவர்கள் சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்து போராடிய அதேசமயம் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்க பார்வை என்ற சமூக விஞ்ஞான தளத்துடன் இணைத்திருந்தது அதன் முற்போக்கான அம்சமாகும். அல்லாவிடின் தலித் மக்களின் போராட்டம் கூனி குறுகி இறுதியில் படுத் தோல்வி அடையும் என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இந்த சீரிய பணியினை இன்று தலித்தியவாதிகள் செய்கின்றார்கள். இங்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் இதன் முக்கிய அங்கமாக திகழக்கூடிய சாதி எதிர்ப்பு போராட்டமும் பிளவுபட்ட தேசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தற்காலத்தில் இலங்கையில் இன்று அறிந்தோ அறியாமலோ சிலர் சாதியம் ஒழிந்து விட்டதாகவும் அதனை தமிழ் தேசிய விடுதலை போராளிகளே அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் எனவும் கூறுகின்றனர். அன்பர் ஒருவர் ”துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றது. மரித்து விடவில்லை” என்ற கருத்தினை முன்வைத்துள்ளார். பல்லவர் காலத்தில் நிலவுடமை வர்க்கம், வணிக வர்க்கத்திற்கு எதிராக அடிநிலை மக்களை தம்பக்கம் ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நிலவுடமை வர்க்கம் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை அமைத்தப் பின்னர் மீண்டும் சாதியம் மிகப்பலம் வாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்து. இந்த வரலாற்று நிகழ்வு எதனை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. எனவே சாதிய விடுதலை போராட்டத்தினை உழைக்கும் மக்கள் நலம் சார்ந்த போராட்டத்துடன் இணைந்து முன்னேடுப்பதற்கு இது பற்றிய நேர்மையான ஆய்வுகள் அவசியமானவையாகும்.
இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இடதுசாரிகள் அதன் அடுத்த கட்டமான தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து முன்னேடுத்திருப்பார்களாயின்- ஜனநாயக சக்திகளை வென்றெடுத்திருக்க முடியும். சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.
பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மார்க்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
அதேசமயம் இலங்கை தமிழர் சமூகவமைப்பில் புறையோடி போயிருந்த சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தமது வெள்ளாளர் சாதிய வர்க்க நலனின் அடிப்படையில் நிராகரித்த தமிழரசுக் கட்சி சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான பார்வை கொண்டிருந்தது. 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தது அவ்வணியினரின் முற்போக்கான அம்சம் என்பதையும் இன்று நாம் கவனத்திலெடுத்தல் வேண்டும். இதன் பின்னணியில் தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அந்த அணியினை நாடவேண்டியவர்களாக இருந்தனர். தமிழரசுக் கட்சியினர் அப்போராட்டத்தை இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர் என்பது இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்வகையில் நோக்குகின்ற போது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும் எவ்வாறு பிளவுப் பட்டிருந்ததோ அவ்வாறே இலங்கையிலும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டமும் பிளவுப் பட்டிருந்தது என்பதை ஆய்வு அடிப்படையில் வெளிப்படுத்கியவர் ந.இரவீந்திரன்.
இவ்வாறான சூழலில் மார்க்சிய நோக்கில் உழைக்கும் மக்களின் நலனிலிருந்த அந்நியமுறாமல் இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன்னெடுக்கின்ற போது அது தொடர்பில் சமூகமாற்றச் செயற்பாட்டாளர்கள் இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவரது இரட்டைத் தேசியம் பற்றிய எழுத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தச் சூழலில் நாம், மக்களின் விடுதலை மார்க்கமான மார்க்சியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சியம் என்பது எல்லாக் கால கட்டத்திற்கும் எல்லா சூழலுக்கும் பொருத்தமான திட்ட வட்டமான தத்துவத்தையோ வேலைத்திட் டத்தையோ முன்மொழியவில்லை. அது ஒவ்வொரு வரலாற்றுக் காலங்களிலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான திசை வழியைக் காட்டி நின்றது என்பதை நாம் புரிந்து செயற்பட வேண்டியுள்ளது.
எமது பண்பாட்டுச் சூழலில், காலமாற்றத்திற்கும் புதிய பொருளாதாரச் சூழலுக்கும் ஏற்றவகையில் பல புதிய புதிய கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பல பாரம்பரியங்களும் பழைய சிந்தனைப் போக்குகளும் காலத்திற்கு ஏற்றவகையில் மீட்டெடுக்கப்படுகின்றன. அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் முதலானோர் இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் முக்கிய தத்துவவாதிகளாவர். சாதிய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தமையால் தமது பண்பாட்டு விருத்திக்கு இருந்த தடைகள் குறித்த புரிதல் அவர்களிடம் இல்லாமலில்லை. ஆளும் சாதியினரது மீட்டுருவாக்கம் வேத வேதாந்த சார்பாக அமைந்தது போல அயோத்திதாசரது மீட்டுவாக்கம் இல்லை. இடைக்காலத்தில் வேத வேதாந்த வழி திரிக்கப் பட்டுவிட்டது என அவர்கள் வருந்த, தாம் அடக்கப்பட்டதால் முந்திய மேலான நிலையிழந்தோம் என்ற உணர்வு சார்ந்து சிந்தித்து செயற்பட்ட அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கம் இரு நிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்று மார்க்சியத்தை நிராகரிக்கும் வகையிலும், அதனை தகர்க்கும் வகையிலும் ஆதிக்க சக்திகளால் மேற்கொள்கின்ற தத்துவார்த்த போராட்டம். சாதிய ஒடுக்கு முறையை காரணம் காட்டி சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை ஏனைய பேராட்டங்களிலிருந்து -குறிப்பாக உழைக்கும் மக்களின் போராட்டத்திலிருந்த அந்தியப்படுத்தி பார்க்கும் போக்கு. இப்போக்கில் முனைப்பாக முன் வைக்கப்படும் கோட்பாடு பின் நவீனத்துவமாகும். உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த போரட்டத்திற்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லது காட்டிக்கொடுக்கும் வகையிலே இன்றைய பின்நவீனத்துவ ஆய்வுகள் அமைந்துக் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில் சமூக போராட்டத்தை சிதைக்கும் வகையிலே இந்தியாவில் பெரியாரியமும் தலித்தியமும் பின் நவீனத்துவவாதிகள் தூக்கி பிடிக்கப்படுகின்றது. பின்நீனத்துவம் குறித்த விமர்சனத்தை தமிழிலே சிறப்பாக முன்வைத்தவர் ந. இரவீந்திரன். இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் யாதெனில், ஒருவர் மார்க்ஸிய சுலோகங்களை உச்சரிப்பதால் மட்டும் மார்சியவாதியாக கொள்ள முடியாது. அவ்வாறே பின் நவீனத்துவத்தை பற்றி ஒவருவர் பேசிவிட்டார் என்பதற்காக அவரை பின்நவீனத்துவாதியாக கொள்ளமுடியாது. இன்று சிலர் பருவகால பறவைகள் போல, அல்லது ஏதாவதொன்றை தமிழிழல புதிதாக பேச வேண்டும் என்பதற்காக பின்நவீனத்துவம் பற்றி பேசுகின்றவர்களை நாம் அறிவோம். இவை ஒருபுறமிருக்க, தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தவர் அ. மார்க்ஸ். பின்நவீனத்துவம் பற்றியும், அ. மார்க்ஸின் ஆய்வுகளில் அப்பார்வை எவ்வகையில் முனைப்பு பெற்றிருந்தது என்பது பற்றியும் மார்க்சிய பார்வையில் நின்று நோக்கிய இரவீந்திரன் அதன் ஒளியிலே வலது சாரி பண்புகளை விமர்சனத்திற்குட்படுத்துடன், அவற்றையும் கடந்து அ. மார்க்ஸின் பின்நவீனத்துவ கோட்பாடுகளில் முனைப்புற்றிருந்த சமூகம் சார்ந்த இடதுசாரி பண்புகள் பற்றியும் அவர் வெளிக் கொணரத் தவறவில்லை. அவ்வாறே பிரான்சிய தத்துவவாதியான ஃபூக்கோ பற்றிய அவரது மதிப்பீடும் மிகவும் நிதானமானதாகும். இவை இரவீந்திரனின் ஆய்வுத் திறனையும் நேர்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.
இதன் இன்னொரு போக்கு, மார்க்ஸியத்தையும் அதன் உயிர்நாடியான சமூகமாற்றப் போராட்டத்தையும் ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுப்பதற்கான செயல் முறையாக அமைந்துள்ளது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸின் தலைமையிலும் அதன் போக்குகளிலும் பிராமணியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டமையினால் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் ஆங்கில காலனித்துவவாதிகளை ஆதரித்து நின்றதுடன் தாம் சார்ந்த மக்களுக்கான விடுதலை மார்க்கமாகவும் அதனைக் கருதினர்.
காங்கிரஸ் தலைமை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களை இணைக்க தவறியதுடன், அவர்கள் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க தவறியது என்பதை முன்னர் பார்த்தோம். இதன் விளைவாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டமானது நண்பன் யார்? எதிரி யார் ? என்பதனை சரியாக இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்ட சூழலில், பாரதி இவ்விரு முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டார். தன் காலவோட்டத்தின் உயிர்நாடிகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டமையே பாரதியின் முக்கிய ஆளுமையாக அமைந்தது.
இவ்விடத்தில், ஒப்புவமை வசதி கருதி கியூபாவின் பண்பாட்டு புரட்சியை ஒப்பு நோக்குவது பயன்மிக்கதாகும். கியூப தேசிய விடுதலைப் போராட்டமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் அனைவரையும் தன்னுள் இணைத்திருந்தது போல, கறுப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. இத்தகைய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததில் ஹொஸே மார்த்திக்கு முக்கிய இடமுண்டு. பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பது மற்றும் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெறுவது எனும் இரட்டை தேசியம் குறித்த மார்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பினை அன்றைய கியூபா புரட்சியின் முன்னணித் தலைவர்கள் சிறப்பாகவே கவனத்திலெடுத்தனர்(உண்மையில் இரட்டைத் தேசிய பிளவு என்ற நடைமுறைச் செயற்பாடு சாதியச் சமூகத்திற்குரிய யதார்த்தம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்). “கியூபப் புரட்சிக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கிய சிந்தனையாளர் ஹொஸே மார்த்தி” என பிடல் காஸ்ட்ரோவும், “இந்த நாட்டில் தேச எல்லைகளைக் கடந்து எதையேனும் பேசவோ செய்யவோ வேண்டுமென்றால், நாம் மார்த்தியின் வார்த்தைகளையும் அவரது முன்னுதாரணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்” என சேகுவேராவும் சரியான திசையில் இனங்கண்டிருந்தனர்.
இந்திய சூழலில் இத்தகைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த பாரதியின் இரட்டை தேசியம் குறித்த தெளிவை, இந்திய தேசிய விடுதலையின் முன்னணி தலைவர்கள் கவனத்திலெடுக்க தவறியமையே கியூபா விடுதலைப் புரட்சி அடைந்த வெற்றியை இந்திய தேசிய போராட்டம் எட்ட முடியாமல் போனது. இதுவரையும் இந்திய சூழலில் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாதிருப்பது துரதிஷ்டவசமான தொன்றாகும்.
அந்தவகையில் இன்று மார்க்சியம் என்பது இந்த சூழலில் தன்னைப் புனரமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றது. அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் முதலானோரிடமிருந்து போர்க்குணத்தை கவனத்திலெடுக்கின்ற அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய போராட்டத்தின் முற்போக்கான பாத்திரத்தையும் (அதன் வரையறைக்குட்பட்ட அளவில்) நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.
மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு பொது மக்கள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும். இத்தகைய பார்வையை ந. இரவீந்திரன் தனது ஆய்வுகளின் மூலம் வெளிக்கொணர்கின்றார். அவர் காலத்திற்கு காலம் முனைப்புற்று செல்லாக்கு பெற்றிருக்கும் ஏதாவதொன்றில் தனது பார்வையை செலுத்தி அந்த சலசலப்பில் சிலருடைய அங்கிகாரத்தை பெற்று தமது வயிற்று பிழைப்பிற்கும் கம்பீரத்திற்கும் வழித் தேடிக் கொண்டவரல்லர். சமூகமாற்ற போராட்டத்தின் அவசியத்தை நமது வரலாற்றின் ஊடாக கற்று, ஏகாதிபத்திய சுரண்டலையும், சாதிய அடக்குமுறைகளையும் தகர்த்துவதற்காக போராடுவதே இன்றைய அரசியல் தேவையாகும் என்பதை உணர்ந்த அவர், மக்கள் பொருட்டு எத்தகைய விமர்சனங்களையும் அவதூறுகளையும் பொறுத்துக் கொண்டு எமக்கான தத்துவதளம் ஒன்றினை ஆக்கித் தர முயற்சிக்கின்றார். அந்தவகையில் இரட்டைத்தேசியம் பற்றிய புரிதலும் விவாதமுமே இன்று எமக்கு தேவையான முதல் அரசியல் பணியாகும்.