10.04.2011 ஞாயிறு நடைபெற்ற புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மேற்கு லண்டனில் நடைபெற்றது. பல் வேறு அரசியல் முரண்பாடுகளைக் கொண்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்தனர். மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பித்த உரையாடல் முன்னிரவு ஒன்பது முப்பது மணிக்கு நிறைவடைந்தது.
ஒன்று கூடல் அதனைத் தலைமை தாங்கிய புவியின் புதிய திசைகள் குறித்த சிறிய குறிப்போடு ஆரம்பமானது. புதிய திசைகள் விவாதக் குழு என்பதற்கு அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அமைப்பு உருவாவதற்கான காத்திரமான உந்துசக்தியாக அமைய முடியும் என்றார்.
நிகழ்வின் முதலில் உரை நிகழ்த்திய நாடுகடந்த தமிழீழத்தைச் சேர்ந்த தயாபரன் தமது அமைப்பு தோற்றம் பெற்ற
சிங்கள மக்களைத் தாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை என்றும் இலங்கை அரசிற்கு எதிராக அவர்களுடனும் இணைந்து செயலாற்ற அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தவிர, தென் சூடானில் தமக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் ஏனைய பல்வேறு நாடுகளுடனும் பேச்சுக்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். ஏனய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடன் கூடப் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டர்.
தயாபரனைத் தொடர்ந்து உரையாற்றிய இதயச்சந்திரன், உலகத் தமிழர் பேரவையின் அரசியல் திட்டம் குறித்துப் பேச தான் அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பிடம் அப்படிக் குறிப்பான வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர்களின் சில நடவடிக்கைகளின் அரசியல் பின்புலம் குறித்துப் பேசுவதாகத் தனது உரையை ஆரம்பித்தார். இன்று இலங்கை அரசிற்குத் தமது நலன்கள் சார்ந்து மேற்கு நாடுகள் ஒரு புறத்தில் அழுத்தங்களை வழங்குகின்றன. மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கையை முழுதுமாகக் கைவிட்டால் அங்கு புரட்சிக்கான சூழலும் புரட்சியும் உருவாக வாய்ப்பிருக்கும் என்ற நிலையில் ஐ.எம்.எப் போன்ற நிறுவவனங்களூடாக இலங்கை அரசிற்குப் பொருளாதார உதவிகளையும் வழங்குகின்றன என்றார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன காணாமல் போவோர் குறித்த பிரச்சனைகளை அதிகமாகக் கண்டித்து வருவதாகவும், இதே வேளை அமரிக்க அரசின் அரசியல் அழுத்தங்களும் கூட அதனை மையப்படுத்தியே அமைந்திருப்பதாகவும், ஐ.எம்.எப், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமரிக்க ஐரோப்பிய அரசுகள் போன்றவற்றின் நடவடிக்கைகளிடையே ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்பு ஒன்றைக் காண முடியும் என்றும் குறிப்பிட்டர்.
இலங்கைப் பிரச்சனையில் அமரிக்காவிற்கு குறிப்பான அவர்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் இந்திய அரசியல் நலன்களைப் பாதிக்கின்ற அளவிற்கு அமரிக்கா இலங்கைப் பிரச்சனை நடந்துகொள்ளாது என்றார். இதன் அடிப்படையிலேயே உலகத் தமிழர் பேரவை முன்னதாக சோனியாவுடன் பேச்சு நடத்தியதாகவும் பின்னர் ரொபேர்ட் ஒ பிளக்குடன் பேசியதாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சிவராஜன் கருத்தாற்றிய போது பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் ஒன்று கூடல்களை நடத்தி அதன் உப பிரிவிகளை உருவாக்கி வருவதாகவும், அதனூடாக ஈழத் தமிழர்கள் இறைமையுடைய தேசிய இனம் என்பதை பிரச்சாரப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வேலைத் திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்படும் பேரவையின் உறுப்பினர்கள் பிரித்தானியாவின் மூன்று பெரும் கட்சிகளிலும் இணைந்து செயற்பட்டு வருவாதாகத் தெரிவித்தார்.கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், தொழிற் கட்சிக்கான தமிழர்கள், லிபரல் கட்சிக்கான தமிழர்கள் என்ற இந்தப் பிரிவுகளூடாக இக் கட்சிகளை தமக்குச் சார்பானதாக மாற்றும் வேலை முறைகளில் ஈடுபட்டிருப்பதாக மேலும் கூறினார்.
இதன் பின்னதாக உரையாற்றிய சபா நாவலன், இலங்கையில் வடகிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள் போன்ற தேசிய இனங்கள் பிரிந்து போவதுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்க முடியாத அரசியல் சூழல் காணப்படுவதை வலியுற்த்தினார். தவிர, பிரித்தானியத் தமிழர் பேரவை தேசிய இனங்களையும், தமது சொந்த நாட்டு மக்களையும் ஒடுக்கும் அரசுகளோடும் கட்சிகளோடும் உறவுகளை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி அவற்றில் இணைந்து கொள்வதென்பது தமிழ்ப் பேசும் மக்களை அவர்களின் உண்மையான நண்பர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரிடமிருந்து அன்னியப்படுத்துகின்றது என்றும் எம்மை ஜனநாயக விரோத, ஆணவம் மிக்க, சுயநலமிகளாக உலகில் பரந்திருக்கும் சமுகப்பற்றுள்ள ஜனநாயக வாதிகளும் முற்போக்கு சக்திகளும் கண்கிறார்கள் என்றார். இவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு மக்கள் விரோத விம்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள் பல நீண்ட வருடங்களுக்கு போராட்டத்தைப் பின் தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றார்.
தவிர, இன்று பலமடைந்து வருகின்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், போராடும் அமைப்புக்களுடனுமான இணைவும் பரஸ்பரப் பரிமாற்றங்களும் போராட்டத்தையும் மக்கள் விடுதலையையும் விரைவுபடுத்தும் என்றார். இதற்கான வேலைத்திட்டம் வரையப்ப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பட்டார்.
அடுத்ததாகக் உரையாற்றிய மாசில் பாலன் இது வரை நடைபெற்ற போராட்டம் என்பது தேசிய விடுதலைப் போராட்டமா என்பதில் தனக்குச் சந்தேகமிருப்பதாகவும் தேசியப் போராட்டத்திற்கான எந்த அடையாளமும் இருப்பதாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பதே அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது ஆனால் நாம் ஏகாதிபத்தியங்களின் தயவில் போராட்டங்களை நடத்த முயல்கிறோம் இது தான் இங்குள்ள முரண் நகை என்றார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்பதும் அதனை அடுத்த நிலையை நோக்கி வளர்த்துச் செல்வதும் அவசியமானது என்றார்.
இதனிடையே ஈ.என்.டி.எல்.எப் அமைப்பச் சேர்ந்த ராம்ராஜ் தனது உரையில் இலங்கை இந்திய ஒப்பந்ததை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றுவது இன்றைய சூழலுக்கு உகந்த செயற்பாடு எனத் தெரிவித்தார்.
ராம்ராஜின் உரைக்குப் பதிலளித்த இதயச்சந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலனை உள்ளடக்கிய ஒப்பந்தம் என்றும், வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபை என்பது கூடத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். இவ்விணைவு என்பது கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கிய பிரதேசங்களை இணைத்து நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கருத்தாற்றிய பாண்டியன், புலிகளின் தவறுகள் ஒரு தேசிய இனத்தின் நியாயமான போராட்டங்களை அழித்திருக்கிறது என்றும், ஏகப் பிரதிநிதித்துவத்தை நிராகரித்து பரந்துபட்ட மக்கள் ஐக்கிய முன்னணி என்பது இன்று அவசியமானது என்றார்.
பின்னதாகக் கருத்துத் தெரிவித்த சிறி, ஐக்கியம் என்பதற்கு வேலைத்திட்டங்கள் கொள்கை வகுப்பு என்பதற்கு அப்பாலான உளவியல் அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றார். எம் எல்லோர் மத்தியிலும் குழுவாதப் போக்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட சிறீ, போராட்டங்களின் தோல்வியில்ருந்து மட்டுமல்ல வெற்றியிலுருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்றார். குழுவாதப் போக்கை எதிர்கொள்ள வேண்டுமாயின் புலிகளின் அமைப்புக்களாகக் கருதப்படும் அமைப்புக்கள் பரந்துபட்ட விடுதலையில் அக்கறையுள்ளவர்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டர். இந்த நிலையில் ஏனைய இயக்கங்களைச் சார்ந்த போராளிகளையும் விடுதலைக்காக உழைத்தவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறான அங்கீகாரத்தின் குறியீடாக பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, சிறீ சபாரத்தினம், பாலகுமார், ஒபரோய் தேவன், அமர்தலிங்கம், விஸ்வானந்த தேவர் போன்ற இன்னும் பல தலைவர்களை போராட்டத்தில் பங்களித்தவர்களாக, வழி நடத்த முனைந்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த தயாபரன் இந்த முன்மொழிவை கருத்தளவில் தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது அமைப்புடன் பேசிய பின்னர் இது குறித்து இறுதி முடிவெடுப்பதாகவும் கூறினார்.
பிரித்தானிய தமிழர் பேரவையும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
ஈசன், பிரதீபன், நடா மோகன் போன்ற பலர் இந்த ஒன்று கூட ஆரோக்கியமான முன் முயற்சி எனப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தொகுப்பு – இனியொரு