Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீ தற்கொலை செய்துகொளாவிட்டால் கொலை செய்வோம் -உலகை உலுக்கிய உண்மை:செங்கோடன்

fbi-letter-martin-luther-king-jr
அமெரிக்க உளவு நிறுவனம் எப்.பி.ஐ கிங் இற்கு எழுதிய மிரட்டல் கடிதத்தின் பிரதி

அமெரிக்க உளவுத்துறையான FBI 1964 இல் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அனுப்பிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் உரிமைகள் தலைவர் கிங்கினை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகளின் இந்த கடிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அன்று FBIஇன் இயக்குனராக இருந்த எட்கர் ஹூவரின் தலைமையில் அமெரிக்க அரசை எதிர்த்த அனைவரையும் பிழையான தகவல்கள், மிரட்டல்கள் மற்றும் இடையூறுகளால் மிரட்டி அடிபணிய வைக்கும் இந்நடவடிக்கை இவ்வளவு காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாள ஐம்பது வருடங்களிற்கு முன் மார்டின் லூதர் கிங் இந்த கடிதத்தை பெற்று வாசித்தபின் ‘தானே தன்னை கொல்ல வேண்டும்’ என சிலர் எதிர்பார்ப்பதாகவும் அந்த சிலர் யார் என்று தமக்கு தெரியும் என்றும் தன் நண்பர்களிடம் சூசகமாக தெரிவித்தார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டருந்த அரைகுறை தகவல்கள், பிழையான வழிநடத்தல்களிற்கான முயற்சிகள், தனி மனித தாக்குதல்கள் என்பனவற்றை வாசித்த கிங்கிற்கு அந்த கடிதம் FBIயிடம் இருந்தே வந்தது என்பது நன்கு தெரிந்திருந்தது.

அன்றைய FBI இன் இயக்குனர் ஹூவரும் கிங்கினை மக்களிடம் பிழையாக சித்தரிக்கும் தன் ஆர்வத்தை வெளிப்படையாகவே காட்டியிருந்தார். இது பத்து வருடங்களின் பின் புலனாய்வு துறையின்அதிகாரங்களை ஆய்வு செய்த செனட் சேர்ச் கொமிட்டியினால் வெளிக்கொணரப்பட்டிருந்தது.

முதன்முதலாக இந்த வாரம் வெளியான அந்த கடிதத்தின் இறுதி பந்தியில் ‘நீ இறுதியாக செய்ய ஒரேயொரு விசயம் மட்டும்தான் உள்ளது; அது என்னவென்று உனக்கும் தெரியும்’ என கிங் கடிதத்தை எழுதியவரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். கிங்கினை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் எழுதப்பட்ட அந்த இறுதிப் பந்தியில் ‘நீ ஒரு பேய்’ என ஆறு தடவைக்கு மேலும், ‘நீ ஒரு அசாதாரண வாழ்க்கையை நோக்கி செல்லும் முட்டாள்’ எனவும் கடிதத்தை எழுதியவரால் கீழ்தரமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் ‘நீ படித்துப்பெற்ற பட்டங்கள், நோபல் பரிசு மற்றைய பரிசுகள் உன்னை காக்காது கிங்; நான் மீண்டும் சொல்கிறேன் நீ முடிந்தாய்’ என விமர்சிக்கும் அந்த கடிதம் ‘உண்மைக்கு/யதார்த்தத்துக்கு மேல் யாரும் வர முடியாது, ஏமாற்றுகாரனான உன்னால் கூட முடியாது; மீண்டும் சொல்கிறேன் யாராலும் யதார்த்தத்தினை எதிர்த்து வாதிட்டு வெல்ல முடியாது. சாத்தானினால் கூட முடியாது. என்ன மாதிரியான பேய்த்தனமானவன் நீ கிங்; நீ முடிந்தாய்’ என தொடர்ந்து செல்கிறது.
ஹூவர் பற்றிய புத்தகத்தை எழுதும் யாலே பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆசிரியரால் வெளிக்கொணரப்பட்ட இந்த கடிதத்தில் பல எழுத்து பிழைகள் காணப்பட்டதுடன் கிங்கின் தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை பற்றியும், அவர் சார்ந்த இனம் பற்றியும் கீழ்தரமாக விமர்சிக்கப்பட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் மேலும், அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் கண்காணிப்பினை அதிகரிக்கும் சட்டங்களை அரசாங்கங்கள் பரவலாக அமுல்படுத்தும் நிலையில் கிடைக்கப்பெற்ற இந்த கடிதம் அரசாங்களிற்கு உள்ள அதிகாரங்கள் அவர்களை எதிர்ப்பவர்களை எப்படி அடக்கி ஒடுக்க உதவுகிறது என்ற அபாயத்தை வாசகர்களிற்கு விளக்கி நிற்கிறது. அரசிற்கு அதிகாரங்கள் அளவுக்கு மீறி வழங்கப்படும்போது அரசுகள், அவற்றின் கைப்பொம்மைகளான புலனாய்வு துறை என்பன அவற்றை பயன்படுத்தி தம்முடைய தவறுகளை எவரும் வெளிக்கொணர முயன்றால் அவர்களை குறிவைத்து இவ்வாறான சட்டங்களை பயன்படுத்துவதன் அபாயத்தையும் இக்கடிதம் விளக்கி நிற்கிறது.

கிங்கின் மேலும் மற்றும் யுத்த எதிர்ப்பாளர்கள் மேலும் FBI ‘COINTELPRO’ எனும் இவ்வாறான கண்காணிப்பு செயல்களில் ஈடுபட்டிருந்ததை வியட்நாம் யுத்தகாலத்தில் சில செயற்பாட்டாளர்கள் FBIயின் பென்சில்வேனிய அலுவலகத்தை உடைத்து 1971 இல் வெளிக்கொணர்ந்திருந்தனர். அமெரிக்க ஆபிரிக்க இனத்தவர்களின் உரிமைக்காக போராடிய கிங் இறுதியில் 1968 இல் அலபாமாவில் வைத்து சுட்டுகொல்லப்பட்டார்.

குறிப்புமார்டின் லூதர் கிங் இன் கொலை அமெரிக்க சீ.ஐ.ஏ இனால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அவரது : குடும்பத்தினர் வழக்குத் தொடுத்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு அமெரிக்க அரச முகவர்களே கிங் இன் கொலைக்குக் காரணம் என நீதிமன்றத்தில் ஜூரிகள் தீர்ப்பளித்திருந்தனர்.

Exit mobile version