இன்று ஜனாதிபதி ஆணைக்குழு என்ற மகிந்த அரச பாசிசத்தின் போலி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் கூறுகின்ற சாட்சியங்களால் யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனால் சாட்சி கூறுபவர்களின் மன உறுதியும் துணிவும் வியக்கவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும் இழந்தாயிற்று. இனிமேல் இழப்பதற்கு உயிரைத்தவிர எதுவும் இல்லை என்ற அளவிற்குத் துணிந்திருக்கிறார்கள்.
ராஜபக்ச,ஏகாதிபத்திய நாடுகள்,தமிழ்த் தேசிய பாராளுமன்றக் கட்சிகள், தமிழ் நாட்டின் தமிழ் உணர்வாளர்கள், புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் என்ற தமக்குள் முரண்பட்ட, உடன்பட்ட அரசியல் சக்திகளிடையேயான போலி நாடகம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் பலி கடாக்கள் தான் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனம்.
பலர் இந்த நாடகத்தின் உட்கூறுகளைப் அறியாதவர்கள். சிலர் அலட்சியமாகப் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் தெரிந்துகொண்டும் தமது வர்க்கம் சார்ந்த அரசியல் சதியை நடத்துகிறார்கள்.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற பின்னர் இப்போது மூன்றவது தடவையாக ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அமெரிக்க-பிரித்தானிய அரசுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அன்றி இலங்கையில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகின்ற வேறு எவருமோ, தீர்மானம் குறித்த வரலாற்றுப் பின்னணி பற்றியோ அன்றி அதன் சாதக பாதக அம்சங்கள் பற்றியோ இதுவரை மக்களுக்குப் தெரிவிக்கவில்லை. முழுமையான ஆய்வு ஒன்றை எப்போதும் முன்வைத்துப் பழக்கப்படாத இவர்கள் குறைந்த பட்சம் வழமையான ஊடக அறிக்கை மாதிரியைப் பின்பற்றிக் கூட எதுவும் வெளியிடவில்லை.
அதி உச்சபட்சமாக இலங்கை அரசை விசாரணை செய்வதற்காக ஒரு ஆணைக்குழுவை ஜெனீவாவில் நியமிக்கக் கோரும் தீர்மானத்தை மட்டுமே அமெரிக்க , பிரித்தானிய நிறைவேற்ற இயலும். இலங்கை அரசு தன்னுடைய போர்க்குற்றங்களைத் தானே விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்ற குறித்த கால அவகாசத்தோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இவ்வாறான பிற்போடும் காலப்பகுதியில் இலங்கை அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பௌத்த சிங்கள மயமாக்குவதுடன் முழு இலங்கையையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்து முடித்திருக்கும்.
பல சந்தர்ப்பங்களில் நான் தெரிவித்த இக்கருத்துகளையே சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் கலம் மக்ரே பிரான்சில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கடந்தவாரம் தெரிவித்திருக்கிறார்.
ஜெனிவா திருவிழாவில் காவடி எடுக்க முற்படும் அரசியல் சக்திகளை இலகுவாக வகைப்படுத்தலாம்.
1. இலங்கை அரசாங்கம்.
இந்த தசாப்தத்தின் அதிபயங்கர கிரிமினல்களின் கூட்டு இந்த அரசு. அமெரிக்கா,பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற ஏகாதிபத்தியங்களால் நேரடியாகக் கையாளப்படுபவர்கள். டேவிட் கமரனின் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமான, மாக்ரட் தட்சருக்கு ஊடக ஆலோசனைகளை வழங்கிய பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனதின் ஆலோசனையோடு செயற்படும் ராஜபக்ச அரசு மிகவும் நுண்ணியமாகச் செயற்படுகிறது. போர் முடிந்த பின்னர் ராஜபக்ச ஜ.நாவில் ஆற்றிய உரை பிரித்தானியாவிற்கும் அமெரிக்க அரசிற்கும் எதிரானதாக அமைந்திருந்தது. அந்த உரையைத் தயாரித்தவர்கள் பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனமே. அதனை அவர்களே தெரிவித்திருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு ராஜபக்ச நிகழ்த்திய இந்த உரை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்கு எதிரான லத்தீன் அமெரிக்க நாடுகளை ராஜபக்ச சார்புடையதாக மாற்றியது.
இதன் மறுபக்கத்தில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தலைமைகளுக்கு எதிரானதாக மாற்றியது. ஆக, ராஜபக்சவைப் போன்றே அவர்களும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக மாற்றப்பட்டார்கள்.
2. புலம் பெயர் அமைப்புக்கள்
ராஜபக்ச இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து அதிகாரம் படைத்த ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது நேரடியாக ஏகாதிபத்தியங்களால் கையாளப்படும் மிகக் கோரமானவர். தமக்கு எதிரன பேச்சுக்களைக் கூட ஏகாதிபத்தியங்கள் தாமே தயாரித்துக்கொடுத்தன. வெளி உலகத்தைப் பொறுத்தவரை ராஜபக்ச ஏகாதிபத்திய எதிர்பாளர். புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். இதனால் போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும் இடையே இரும்புத் திரை ஒன்று போடப்பட்டது.இதுவே அதிகாரவர்க்கதிற்குக் கிடைத்த போருக்குப் பின்னான வெற்றி.
இந்த இரும்புத் திரை புலம் பெயர் தமிழ்த் தலைமைகளின் வர்க்க இருப்பிற்கும், இனவாத அரசியலுக்கும் வசதியாக அமைந்தது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமது இருப்பிற்காகவும், வர்த்தக நலன்களுக்காகவும், தமது வாழ்கையை ஏகாதிபத்திய நலன்களோடு பின்னிக் கொண்டவர்கள். தாம் வாழும் நாடுகளின் மந்திரிகளோடும், உளவு நிறுவனங்களோம் விருந்துண்ணும் இவர்கள், ராஜபக்ச ஏகாதிபத்தியத்தின் அடியாள் என்று தெரிந்துகொண்டாலும் தாம் ஏகாதிபத்திய சார்பான அரசியல் நடத்துவதற்குப் புதிய நியாயங்களைத் தேடிக்கொள்வார்கள்.
3. தமிழ் நாட்டில் ஈழ அரசியல் ஆர்வலர்கள்.
இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பின்னரும் கட்டிக்காக்கப்பட்டு வந்த இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்ற அழிக்கப்படும் போது அவற்றை ஆதாரமாகக் கொண்ட தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற அடிப்படைக் காரணமாகவிருந்த உயர்கல்வியை ஐ,எம்,எப் உம், பிரித்தானிய அரசும் அழிக்க முற்படும் போது உணர்ச்சியற்று மரத்துப் போன தமிழ் உணர்வாளர்கள், டேவிட் கமரன் இலங்கை சென்ற போது குதூகலித்தார்கள். வெறுமனே உணர்ச்சி அரசியலையே தமது இருப்பிற்கு ஆதரமாகக் கொண்டுள்ள தமிழக அரசியல்வாதிகளை இந்திய அரசும் ஏகாதிபத்தியங்களும் நேரடியாகக் கையாள வேண்டிய அவசியமில்லை. இவர்களது உணர்ச்சி அரசியலைக் கையாள புலம் பெயர் ஏகாதிபத்திய சார்பு அமைப்புக்களே போதுமானவை. இன்னொரு புறத்தில் இவர்கள் புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அளவிற்குப் பிற்போக்கனவர்கள் அல்ல. சீமானோ, திருமுருகன் காந்தியோ வெளிப்படையாகப் பாரதீய ஜனதா போன்ற மதவாதிகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு திராவிடப் பாரம்பரியம் தமிழ் நாட்டில் இன்னும் அழிந்துவிடவில்லை. இந்த அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் இவர்களின் அரசியலில் இழையோடுகிறது. ஈழத்தின் புறச் சூழல் குறித்தோ, அங்குள்ள சமூக அரசியல் நிலைமைகள் குறித்தோ வாசிப்பு அறிவு கூட இல்லாத இவர்களின் ஏகாதிபத்திய எதிர்பு வலுவற்றது
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்
விக்னேஸ்வரன் என்ற இந்து மதவாதியின் ‘அகிம்சை’ அவரின் முன்னரேயே ஆர்.சம்பந்தனின் அதிகார வர்க்கம் சார்ந்த அரசியலோடு ஒத்துப்போனது. இதன் பின்னர், புலிகளின் அரசியல் தவறுகளையும், வழிமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இலங்கை அரசின் இருதயத்தில் கால்களால் உதைப்பது போன்ற கருத்துக்களை முன்வைத்தாலும் இவர்களின் ஆதார சக்திகள் ஏகாதிபத்தியம் சார்ந்த புலம் பெயர் தமிழ் அமைப்புக்களே.
தேசியக் கூட்டமைப்பு பாரம்பரியமாக ஏகாதிபத்தியம் சார்ந்த அமைப்பு. மக்கள் மீதும் போராட்டங்கள் மீதும் எப்போதுமே நம்பிக்கைகொண்டவர்கள் அல்ல. தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி இலங்கையின் எல்லைக்குள் உணர்ச்சிவயப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது. மக்களை அணிதிரட்டுவது, மக்கள் யுத்ததை ஒழுங்கமைப்பது, போராட்ட சக்திகளை இனம்கண்டுகொள்வது போன்ற அடிப்படையான ஜனநாயக வேலைகளைக் கூட இவர்கள் முன்னெடுப்பதில்லை, அதற்கான அரசியல்திட்டம் கூட அவர்களிடமில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலம்பெயர் சார்ந்த பதிப்பான இவர்கள் ஜெனிவா தீர்மானம் குறித்த குறைந்தபட்ட அரசியலைகூட மக்கள் முன் வைத்ததில்லை.. ஜெனிவா தீர்மானம் போன்ற உடனடியான அரசியல் நாடகங்கள் குறித்துக்கூட மக்களிடம் இவர்கள் கூறுவது கிடையாது.
இவை அனைத்துக்கும் அப்பால், இலங்கை அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவது போன்று தோற்றமளிக்கும் நிலாந்தன், கருணாகரன் போன்றோரின் அரசியல் கருத்துக்கள் மக்களை மையப்படுத்துவதில்லை. நிலாந்தன் கலம் மக்ரே அளவிற்குக் கூட தான் வாழும் மண்ணின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதில்லை.
அவ்வப்போது நிலந்தன் போன்றோர் நடத்தும் கவனியீர்ப்பு எழுத்து நடவடிக்கைகள் மேற்குறித்த எந்த அரசியல் சக்திகளிலிருந்தும் வேறுபட்டதல்ல. இப்போது ஜெனிவாவில் எல்லாத் தமிழர்களும் ஒற்றுமையாகை வேண்டியதைப் பெற வேண்டும் என்கிறார். யார் என்ன தருகிறார்கள் பெற்றுக்கொள்வதற்கு? ஜெனிவா தீர்மானம் குறித்துக் கட்டமைக்கப்படும் மாயை தமிழ் மக்களை எவ்வாறு பாதிக்கும்? போன்ற அடிப்படையான மக்கள் மத்தியிலிருந்து எழும் விசாரணைகளைக் கூட இவர்களின் எழுத்துக்கள் முன்வைப்பதில்லை.
நிலாந்தன் புலிகளிலிருந்து வெளியேறியிருந்த 80 களின் நடுப்பகுதியில் அவரை அவரது ஈச்சமோட்டை வீட்டில் சந்தித்தேன். தீவுப்பகுதிக்கான புலிகளின் பொறுப்பாளராகவிருந்து முரண்பாடு காரணமாக வெளியேறியிருந்தார். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, ஏற்கனவே ஆரம்பித்திருந்த தலைமறைவுக் கட்சி ஒன்றைக் குறித்துப் பேசுவதற்கான பாசறை நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தேன். என்னுடன் வந்திருந்தவர்களே அதிகமாகப் பேசினார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அதற்கான ஒடுக்கப்பட்ட மக்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதையும் அவர்களின் விடுதலை தேசிய விடுதலைப் போராட்டத்தோடு சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீண்ட நேரம் பேசினோம். அவர் விரக்தியடைந்திருந்தார். உலகம் முழுவதும் அதன் குறிப்பான சூழலுக்கு அமையப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கான உதாரணங்கள் காணப்படுகின்றன என்று என்னுடன் வந்திருந்தவர் ஆறுதல் கூறினார்.
என்னுடைய மத்தியதர வர்க்க உணர்வு போராட்டத்தில்ருந்து அன்னிய தேசத்தின் பொருளாதாரச் சிறக்குள் என்னைத் துரத்த நிலாந்த மீண்டும் புலிகளுடன் இணைந்திருந்தார்.
இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து உரையாடலை ஆரம்பிப்பதற்கான அனைத்துத் தேவைகளும் உள்ளன. இன்றைய இளைய சமூகத்திடம் எமது வர்க்க சுபாவம் குறித்து சுய விமர்சனம் செய்துகொள்வதும் எதிர்காலத்தைப் பற்றி ஆராய்வதும் இன்று அவசரமான அவசியம்.