இந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.
வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில் மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி” அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule ] மீளவுருவாகுமென்பது சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும் [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more… : http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html ] மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.
UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் முன் எழுந்துள்ளது.
இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள் இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373 ]
இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.
இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.
இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.
இதற்குத் தோதாகச் சொல்லப்படும் >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு . << என்பதெல்லாம் மீளவும் அதே அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.
இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் “ஏமாற்றி அழிக்கப்பட்ட” தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக்
இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு “எதிர்ப்பு -மாற்று” அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!
இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!
இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய மற்றும் இலங்கை வியூகம்] ,இன்னொரு பக்கம் சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக “நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை “அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது, புலத்துப் பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.
இந்த நிலைமையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரைவரைந்த குழுவின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.
கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து // அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.
இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் – தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.
மோசடி ஆட்சி மாற்றம் மற்றும் அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச் சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!
ப.வி.ஶ்ரீரங்கன்
யேர்மனி,
04.01.2015