உரைத்துப் பார்த்தலுக்கான சில கருத்துக்கள்.
இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.
இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.
நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?
அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?
அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?
இவை கேள்விகள்.
பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று…
„…இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது
கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன…“ -செழியன்.
முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!
80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.
முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.
இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.
புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.
இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.
யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் „எந்தச் சுயாண்மையும்“ நிலவ முடியாது.
இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.
இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்“யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்“ என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.
இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.
இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.
இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு“உலகின் பாரிய ஜனநாயக நாடு“என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.
இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.
அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.
உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு“விடிவு“குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.
இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.
இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.
இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.
இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?
எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?
இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2012