Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட : E-Mail ஐக் கண்டுபிடித்த தமிழன்

Shiva-Ayyaduraiமனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில்.

டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்” என்று வர்ணிக்கிறது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகத்தில் Systems Visualization மற்றும் Comparative Media Studies ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் உண்டு).

ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து…

சொல்லுங்கள், நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?

“இங்குதான் இருந்தேன். எப்போதும் போல என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்! என் அப்பா அய்யாதுரைக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமம். அம்மா மீனாட்சிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. அப்பா, அம்மா இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாக படித்தவர்கள். அம்மா, அப்போதே எம்.எஸ்.சி. கணிதம் படித்து மாநில அளவில் பதக்கம் வென்றவர். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டது. அங்கு செம்பூர் என்ற இடத்தில் குடியிருந்தோம். அப்பா, யூனிலீவர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். அம்மா, டான்பாஸ்கோ பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றினார். 5, 6 வயதிலேயே எனக்கு படிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. என்னை மேற்கொண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தது. சரியாக நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் இதே டிசம்பர் 2-ம் தேதி, எனது ஏழாவது பிறந்தநாள் அன்று நாங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்தோம்.

நியூஜெர்ஸியில் வீடு. நூவர்க் (Newark) என்ற சிறிய பகுதியில் இருந்த லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்தேன். 1978-ம் ஆண்டு, எனக்கு 14 வயது இருக்கும்போது நியூயார்க் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளை கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல… அது ஒரு சம்மர் கிளாஸ். அதில் ­FORTRAN IV என்ற புரோகிராமிங் மொழியை கற்றுக்கொண்டேன். அந்த பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான்தான். ஆனாலும் எனக்கு பள்ளிப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.

நான் பள்ளியை விட்டு நிற்கப் போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, ‘யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்-ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் தன்னுடன் பணிபுரிந்த, லெஸ் மைக்கேல்சன் (Les Michelson) என்ற பேராசிரியரிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் என்னை தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். நான் பள்ளிக்கூடம் சென்றதுபோக மீதமிருந்த நேரத்தை எல்லாம் மைக்கேல்சனின் ஆராய்ச்சிக் கூடத்திலேயே செலவழித்தேன். இரவு, பகலாக அங்கேயே கிடந்தேன். சவால் நிறைந்த அந்த பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.

அப்போது அந்த மருத்துவமனையில் மூன்று கட்டடத் தொகுதிகள் இருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ‘மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளி பற்றிய விவரம், மருத்துவர் பற்றிய விவரம், to, from, subject எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோரண்டத்தை அங்கிருக்கும் தபால்பெட்டி மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே எலெக்ட்ரானிக் மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், மற்றொரு கம்ப்யூட்டருக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இ-மெயில் சிஸ்டம். ­

FORTRAN IV மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த புரோகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு email என்று பெயரிட்டேன். electro mail என்பதன் சுருக்கம் அது. FORTRAN மொழியில் ஒரு புரோகிராமில் அதிகப்பட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன்படுத்த முடியும் என்பதாலும், email என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்த பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு email என்ற வார்த்தையே கிடையாது.

1981-ம் ஆண்டு எனது கண்டுபிடிப்புக்காக, ‘வெஸ்டிங்ஹவுஸ் சயின்ஸ் டேலன்ட்’ (Westinghouse Science Talent) விருதுக்காக விண்ணப்பித்தபோது, ‘தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த சமயத்தில் அது உலகத்தை ஆளப்போகிறது என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பும் அப்படி ஆகலாம்’ என்று குறிப்பு எழுதினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது!”

அதன்பிறகு நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் என்று ஏன் உரிமை கோரவில்லை?

“அப்படி யார் சொன்னது? இ-மெயிலுக்கான ‘காப்பி ரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. நான் 1981, செப்டம்பர் மாதம் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்தேன். 1982 ஆகஸ்ட் 30-ம் தேதி இ-மெயிலுக்கான முதல் காப்புரிமையை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றேன். அப்போது இண்டர்நெட் என்பது வரவில்லை. ஆகவே இ-மெயில் என்பது நிறுவனங்கள் நிர்வாக ரீதியாக பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. 1989-ல்தான் இண்டர்நெட் வழியே இ-மெயில் அனுப்பும் சோதனை முயற்சிகள் தொடங்கின. 96-ம் ஆண்டு ஹாட்மெயில் மிகப் பிரபலமாக காரணம், அப்போது உலகம் முழுவதும் இண்டர்நெட் அதிவேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 97-ல் யாஹூ வந்தது. 99-ல் செல்போன் வழியே இ-மெயில் அனுப்பும் வசதியை பிளாக்பெர்ரி துவங்கியது. நான்கு வருட ‘பீட்டா’ பரிசோதனைக்குப் பிறகு 2007-ல் ஜி-மெயில் வந்தது!”

ஆனால், டேவிட் கிராக்கர் (David Crocker), ராய் டாமில்சன் (Ray Tomlinson) ஆகியோரின் பெயர்களும் இ-மெயில் கண்டுபிடித்தவர்கள் பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றன…

“அது பழையகாலம். நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரோகிராமிங் கோடு, இப்போது ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறார். அவர் எனது கண்டுபிடிப்பை பற்றி பல இடங்களில், பேசியும் எழுதியும் வருகிறார். புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை, தனது தொழில்நுட்பப் பிரிவின் பதிப்பில் எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து என்னுடைய நீண்ட பேட்டி ஒன்றையும் வெளியிட்டது.

டேவிட் கிராக்கர் கண்டுபிடித்தது ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ (text message) அனுப்பும் தொழில்நுட்பத்தைதான். புரியும்படி சொல்வதானால், இப்போது ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா… அதைபோல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதை கண்டறிந்தார். அதை இ-மெயில் என்று சொல்ல முடியாது. அப்படியானால் நாம் தந்தி அனுப்புவதைதான் இ-மெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். கார் ஓடுவதற்கான நான்கு சக்கரங்களை கண்டுபிடித்துவிட்டு ‘நான் கார் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வதை போலதான் இதுவும். மாறாக, இ-மெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் Inbox, Outbox, Drafts, To, From, Date, Subject:, Body, Cc, Bcc, Attachments, Folders, Compose, Forward, Reply, Address Book, Groups, Return Receipt, Sorting உள்ளிட்ட 86 வகையான இ-மெயில் புரோகிராமிங்கை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இ-மெயில் சிஸ்டம். ராய் டாமில்சனை பொருத்தவரை அவர் இ-மெயிலில் இன்று பயன்படுத்தும் @ குறியீட்டை கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை!”

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?

“1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்.டி. ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு இருந்தாலும், அது நாளுக்கு நாள் சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகை வாரியாக பகுத்து பிரிக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களுமாக 147 பேர் அதில் கலந்துகொண்டனர். இறுதியில் நான் கண்டறிந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. அதற்கு நான் ‘எக்கோமெயில்’ (EchoMail) என்று பெயரிட்டேன். இப்போதும் வெள்ளை மாளிகையில் இந்த தொழில்நுட்பம்தான் நடைமுறையில் இருக்கிறது.

பிறகு இந்த ‘எக்கோமெயிலை’ ஒரு நிறுவனமாக தொடங்கினேன். இன்று உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலர். இதுபோக, வேறு மூன்று நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்க தபால் துறையை எனது புதிய இ-மெயிலிங் சிஸ்டம் மூலம் லாபகரமாக மாற்றியபோது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைப்பற்றி பெரிதாக எழுதினார்கள். ஆனால் எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். ஆனால் அங்கு எனக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது.”

என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது…

“ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான CSIR-Council of Scientific and Industrial Research துறையில் என்னை கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன்சிங். மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழல் கொஞ்சமும் இல்லை. இதைப்பற்றி ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் வேண்டும்’ (Innovation demands freedom) என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது விவாதம் ஆனது.

உடனே இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி திடீரென ஒருநாள் என் வீடு முடக்கப்பட்டது. என்னை வெளியேற்றினார்கள். நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். ‘சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப்பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கிருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது”

இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

“ஏனெனில் நான் கறுப்பு நிறத் தோல் உடையவன். புலம்பெயர்ந்து வந்த இந்தியன். சிறுபான்மை தமிழன். ‘நூவர்க்’ என்னும் சிறிய ஊரில் வசித்தவன். முக்கியமாக 14 வயது சிறுவன். இவற்றை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்? 50 ஆயிரம் வரிகளை கொண்ட ஒரிஜினல் புரோகிராமிங் கோட், ஒரு வெள்ளைத்தோல் உடையவரிடம் இருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்தான் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எம்.ஐ.டி-யில் இருந்தபோது கண்டுபித்த ‘எக்கோமெயிலை’ கொண்டாடும் இவர்கள், நியூஜெர்ஸி மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது கண்டுபிடித்த இ-மெயிலை புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு இருப்பதை போல, அமெரிக்காவில் தோலின் நிறத்திலும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவிலும் பாகுபாடு இருக்கிறது. தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கறுப்பு நிறத் தோல் உடைய 14 வயது தமிழ் சிறுவன் இ-மெயிலை கண்டுபிடித்தான்.

இன்னொரு முக்கியமான கோணத்திலும் இதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி பயன்படுத்தும் ‘மோட்டோ’ வாக்கியம், ‘கண்டுபிடிப்பு என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ (Innovation Any Time, Any Place by Anybody). அறிவும், அறிவியலும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறுமனே பணம் ஈட்டும் சந்தையாக பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்னை தனிமைப்படுத்த விரும்புகின்றன. ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன், என்னிடம் பேட்டி எடுக்கும் நீங்களும், இதை படிக்கப்போகும் தமிழ் வாசகர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். வரப்போகும் காலம் மிக அபாயகரமானது. வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும். மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது அறிவியலால் மட்டும்தான் சாத்தியமாகும்!”

உங்கள் பேச்சை வைத்து கேட்கிறேன்… நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?

“நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட. எம்.ஐ.டி.யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த‌ நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன். பல்கலைக்கழகத்தின் உணவு உபசரிப்புப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து போராடி வெற்றி பெற்றோம். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா அமெரிக்கா வந்தார். அவரை வெளியேறச் சொல்லி போராடினோம். ‘த ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். கல்லூரி வளாகத்தில் நானும், என் சகாக்களும் வலிமை வாய்ந்த சிறுபான்மை சக்திகளாக இருந்தோம். பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன். அதனால் நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்.

இன்று தொழில்நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும், செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராக கை கோத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடைசெய்து ஒடுக்கியதே இதற்கு உதாரணம்”

இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

“நான் இ-மெயிலுக்கு ‘காப்பி ரைட்ஸ்’தான் வாங்கினேன். ‘பேடன்ட் ரைட்ஸ்’ அல்ல. காப்பிரைட்ஸ் படி, ராயல்டி தொகை வராது. 1995-ம் ஆண்டுதான் சாஃப்ட்வேருக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கும் சட்டம் வந்தது. அதன்பிறகு நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. என் நிறுவனங்கள் வழியே ஏராளமான பணம் எனக்குக் கிடைக்கிறது”

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

“எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும், அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும், இந்தியாவிலுமாக மாறி, மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவ துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு.

இன்றைய கார்பொரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலையும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோருக்கும் கைவராத கலை என்பதை போல சித்தரிக்கிறது. ஆனால் உலகத்தில் ஒரே ஒரு சிவா மட்டுமில்லை.. ஒரே ஒரு சாம்ஸ்கி மட்டுமில்லை… உலகம் முழுக்க ஆயிரமாயிரம் சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும்!’’

நன்றி: ஆனந்த விகடன்

http://bharathithambi.com/?p=55

Exit mobile version