Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடுகடந்த தமிழீழ அரசின் அறிக்கையும் விடை பகரப்படாத வினாக்களும்

போராட்டத்தைத் தொடர்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது!
 
புதிய ஆண்டு மலரும் இத் தருணத்தில் தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.
 
கடந்த ஆண்டில் நாம் பெரும் துயர் நிறைந்தவர்களாக புதிய தசாப்தத்தில் காலடி வைத்திருந்தோம். மலரும் இப் புதிய சகாப்தம் ஈழத் தமிழரின் தசாப்தமாக அமைய வேண்டிய அவசியத்தினையும், அதற்காக நாம் உறுதியுடன் செயற்படுவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளமையினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த செயற்குழுவின் சார்பில் கடந்த ஆண்டு விடுத்த புத்தாண்டுச் செய்தியில் வெளிப்படுத்தியிருந்தோம்.
 
கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கி;னோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரு தடவைகள் கூடி அரசாங்கத்துக்கான அரசியலமைப்பினை உருவாக்கிக் கொண்டதுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடத்திச் செல்வதற்கான அமைச்சரவையையும் உருவாக்கியது.
 
கருத்து ரீதியிலான எண்ணக்கருவாக ஆரம்பித்த எமது முயற்சி தற்போது பத்து அமைச்சுக்களைக் கொண்டதொரு அரசாங்கத்தின் வடிவத்தினை எடுத்து நின்று தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தினையும் தரக்கூடிய ஒரு வளர்ச்சிநிலையைச் சுட்டி நிற்கிறது.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப் புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சுக்களும் வௌ;வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
 
மேலும் தமிழீழ அரசாங்கத்துக்கான எதிர்காலத் தேர்தல்களைப் பொறுப்பெடுத்து நடாத்துவதற்காக சுயாதீனமான தேர்தல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதய அரசவைக்கு மக்களால் இன்னும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள பிரதிநிதிகளுக்கான தேர்தல்களையும் இத் தேர்தல் ஆணையமே பொறுப்பெடுத்து நடாத்துமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நடைமுறை; சாத்தியப்படாத அல்லது சாத்தியப்பாடு குறைந்த இடங்களில் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி மதியுரைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யுப்பட்டவாறு பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு செனட்சபையினை அமைக்கும் நடவடிக்கையும் இவ் வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும்.
 
ஈழத்தமிழர் தேச மக்களது அடையாளத்தையும், அம்மக்கள் தமக்கெனத் தமது தாயகப்பகுதியில் தமிழீழத் தனியரசு அமைக்கும் சுதந்திர வேட்கையினையும், இதற்காகச் செயலாற்றும் உறுதியினையும் குறியீட்டுவடிவில் வெளிப்படுத்தும் வகையிலான தமிழீழத் தேசிய அட்டைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தைத்திருநாள் முதற்கொண்டு அறிமுகம் செய்கிறது.
 
இவையெல்லாம் நடந்தேறிய ஆண்டில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளாகும்.
இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான இணைவு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து எமது சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.
 
எம்மைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே தனித்தனி நாடுகளின் எல்லைகளுக்கப்பால் நாடு கடந்த நிலையில் வாழும் ஒரு தேசமாகக் கணிக்கப்படுபவர்கள்;. ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் இன்று பல்வேறு நாடுகளில் வாழும் அதேவேளை தொப்புள் கொடியுறவால் பிணைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வருகிறோம். எமது அரசியல், சமூக, பொருளாதாரவாழ்வு இலங்கைத்தீவின் எல்லைகளைக் கடந்து விரிந்ததாகவும் இணைந்ததாகவும் உள்ளது. இதனால் நமக்கிடையே தாயகம், புலம் என்ற வேறுபாடுகள் கோட்பாட்டுரீதியில் அர்த்தம் அற்றவையாகின்றன.
இருந்தபோதும் நடைமுறையில் தாயகச் சூழலுக்கும் புலத்துச் சூழலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இவற்றை நாம் நன்கு புரிந்துள்ளோம்.
 
நமது தேசத்தின் பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. இத் தாயகபூமி சிங்கள பௌத்த இனவாதப்பூதத்தால் தற்போது ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் இனவாத அரசானது ஈழத்தமிழ் மக்கள் கொண்டுள்ள தேசத்துக்குரிய தகைமைகளை அழித்து விடுவதற்குக் கங்கணம் கட்டி நிற்கிறது. சிங்கள பௌத்த நாட்டில், தமது மேலாதிக்கத்தினை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டு வாழுகின்ற உபரிகளாக தாயக மக்களைச் சிதைத்து விடுவதுதான் சிங்களத்தின் நோக்கம்.
 
பெரும் ஒடுக்குமுறைச் சூழலில், நாம் முன்னர் தெரிவித்தவாறு, தமிழீழத் தனியரசு தொடர்பாகப் பேசுவதற்கோ செயற்படுவதற்கோ நமது தாயகப்பூமியில் அரசியல்வெளி எதுவும் தற்போது இல்லை. இதனால் இப் பொறுப்பினைச் சிங்கள பௌத்த இனவாதப்பூதத்தின்; பிடியில் சிக்கிக் கொள்ளாத, இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். தமிழீழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்;களால், அரசியல் தலைமைகளால் பங்குபற்றுவதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.
 
இதேவேளை, தாயகத்தில் வாழும் மக்களும் அங்குள்ள அரசியல் தலைவர்களும் ஈழத்; தமிழர் தேசத்தின் இருப்பை, தாயகப்பிரதேசத்தின் உரித்தை, மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக நாளாந்தம் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். இப் போராட்டம் இலங்கைத்தீவில் எமது இனத்தின் இருப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது. இத்ததைய போராட்ட வாழ்வு மக்களுக்குக் கிடைக்கும் எல்லாவகையான வெளிகளுக்குள்ளாலும் வெளிப்பட்டே ஆகவேண்டிய தேவையுள்ளது. இத்தகைய வாழ்விற்கான போராட்டத்தை எதிர்ப்பரசியல் எனவும் இது பலன் தராது எனவும் சிலர் கூறி வருகின்றனர். சிறுகச் சிறுக கொல்ல முனையும் ஒருவனை – அவன் பலசாலி, அவனை எதிர்ப்பதால் பலன் எதுவும் இல்லையென்பதால் அவனை எதிர்க்காது சிறுகச் சிறுகச் செத்துப் போ – என்று சொல்வது போல்தான் எதிர்ப்பரசியல் பயன் தராது என்று கூறுவோரது வாதம் இருக்கிறது.
நமது தேசத்தின் வாழ்வுக்கான போராட்டத்தை எதிர்ப்பு அரசியல் என்றுகூறி நாம் நிராகரிக்க முடியாது. ஓத்துழைப்பு அரசியல் என்று கூறி எம்மை விழுங்கத் துடிக்கும் இனவாதப்பூதத்திடம் நமது தலையை நாமே நீட்டவும் முடியாது. இது ஈழத் தமிழர் தேசம் கௌரவமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒரு போராட்டம். இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்குள்ளாலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
தாயக அரசியல்; தலைமைகள் வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட தாம் மக்கள் முன் வைத்த அரசியல் நிலைப்பாட்டுக்காகவும், ஈழத் தமிழர் தேசத்தினைப் பாதுகாப்பதற்காகவும் தம்மால் முடிந்தளவு, தமக்குக் கிடைக்கும் அனைத்து வெளிகளின் ஊடாகவும் போராட வேண்டியது
 
இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதற்காகத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையான அரசியல் போராட்டங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது தார்மீக ஆதரவினை வழங்கும். தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆவன செய்யும்.
தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. இதனையும் நாம் சிங்கள பௌத்த இனவாதப்பூதத்திடம் மண்டியிடாமல்தான் செய்ய வேண்டியுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டியெnழுப்பப்படுவதற்கு இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புக்கள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது. மற்றையது, அனைத்துலகரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது.
புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழீழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.
 
எம்முடன் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி: 

pmo@tgte.org
நன்றி.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

=========================================================

நாடுகடந்த  தமிழீழத்தின் “பிரதமர்” ருத்திரகுமாரனை  நோக்கி எழுப்பப்பட்ட வினாக்களை கடந்தத வருடம் மே மாதம் இனியொரு பதிவிட்டிருந்தது.  இதற்கான பதில்களை முன்வைக்க இவ்வமைப்ப்ச சார்ந்த யாரும் முன்வந்ததில்லை. இந்நிலையில் அதே வினாக்களை மீள்பதிகிறோம்.

நாடு கடந்த தமிழீழம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்பதே என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

எதாவது செய்கிறார்கள் என்று புலிகள் இயக்கத்திற்கு மாதச் சம்பளத்தையே வாரிவழங்கிய வள்ளல்களில் நானும் ஒருவன். இப்போது பணம் எதற்காக வாங்கினார்கள் எங்கே போனது என்பதெல்லாம் எனக்குப் மட்டுமல்ல அனைவரினதும் மூளையில் குந்தியிருந்து குடையும் நாளாந்தக் கேள்வியாகிவிட்டது.

புலிப்படம் போட்ட கொடியோடு தெருத்தெருவாக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லாம் எதற்காக?

யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே! போர் நடந்துகொண்டிருக்கும் போது யாருமற்ற அனாதைகளாக எமது மக்கள் கொல்லப்பட்டுகொண்டே இருந்தார்கள். அதுவும் கத்தை கத்தையாக. கொசுக்கள் போல! புலிகள் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த போது புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே கொடியில் தான் அணிதிரண்டிருந்தார்கள்.

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள். அன்றிருந்த ஒற்றுமை ஒரு கனவு போல. புலிகளுக்கு எதிராகப் பேசியவர்கள் எங்கேனும் ஒரு மூலையில் சத்தம் சந்தடியில்லாமல் பத்துப் பதினைந்து தமிழர்களை வைத்துக் கூட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எல்லாமே புலிகளின் காலடியில் தான் இருந்தது. மக்கள் அனைவரும் புலிகளின் குடைக்குள் ஒற்றுமைபட்டிருந்தனர்.

இந்த ஒற்றுமையெல்லாம் இலட்சக் கணக்காக மக்கள் கொல்லப்படும் போது எந்தப் பாதுகாப்பையும் தந்துவிடவில்லை. எமது மக்கள் சாகடிக்கப்பட்டுவிட்டார்கள். மறுபடி நீங்கள் ஒற்றுமையைக் கோருகிறீர்கள். எதை நோக்கிய ஒற்றுமை? புலிகளின் அதே தோற்றுப்போன ஒற்றுமையைத் தானா நீங்களும் புலிப்படம் பொறித்த கொடியோடு கோருகிறீர்கள்?

-இது எனது முதல் கேள்வி.

புலிகளின் தோல்விக்குக் காரணம் அவர்களின் அரசியல் வழிமுறையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதை மீளாய்விற்கு உட்படுத்தி விமர்சனம் செய்து கொண்டீர்களா?

அப்படியானால் என்ன தவறு நடந்திருக்கிறது?

தவிறுகளிலிருந்த படிப்பினையூடாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

உங்களது புதிய திட்டம் என்ன?

-இவை எனது மேலதிக வினாக்கள்..

புலிகளின் கொள்கைத் தவறு என்பதில் இன்னுமொரு விடயத்தையும் எனது மூளையின் முன் நரம்பில் ஒவ்வொரு இரத்த அணுக்கள் சந்திக்கும் போதும் பேசிக்கொள்கின்றன. நம்பக் கூடாதவர்களோடு, மாபியாக்களோடு, கொலைகார அரசுகளோடு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளோடு அவர்கள் கூட்டுவைத்துக் கொண்டது தான் என்று குழந்தைகுக் கூட தெரிவதாக  அமைகிறது. அப்படியானல் அது போகட்டும்.

இப்போது உங்களோடு இணைந்து கொண்டவர்கள யார்?

யார் யாரோடெல்லாம் கூட்டுவைத்திருக்கிறீர்கள்?

எந்த அரசுகள் உங்களது நண்பர்கள்?

எந்தெந்த அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?

-இவையெல்லாம் எனது வினாக்கள் மட்டுமல்ல இதுவரைக்கும் போராட்டம் வெற்றிகொள்ளப்பட வேண்டுமென்று கனவு கண்ட, பங்களித்த ஆயிரமாயிரம் தமிழர்களின் கேள்விகள்.

காஷ்மீரிலும், நாகாலாந்திலும், நேபாளத்திலும், லத்தின் அமரிக்காவிலும் ஏன் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் கூட மக்கள் எங்களைப் போல ஒடுக்கப்படுகிறார்களாமே; அவர்களும் எங்களைப் போலப் போராடுகிறார்களாமே!

இவர்களோடெல்லாம் நீங்கள் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? தொடர்பு கொண்டிருக்கிறீர்களா?

அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சந்தர்ப்பவாதிகளால் ஏமாற்றப்பட்ட எமக்கு அவர்கள் உறு துணையாக வருவார்களா?

-இவைகள் எதிர்காலம் குறித்த எனது கேள்விகள்.

காசாவில் இஸ்ரேலிய அரசு குண்டுபோட்டு மக்களைக் கொலைசெய்யப்படும் போதெல்லாம் ஐரோப்பாவில் மனிதாபிமானிகளும், ஜனநாயக விரும்பிகளும், இடதுசாரிகளும் போராட்டம் நடத்துகிறார்களே, இலங்கையில் ஒரு குக்கிராமத்தில் ஐம்பதாயிரம் மனிதர்கள் சதைகளும் எலும்புகளுமாக சிதைக்கப்பட்ட போது இவர்கள் ஐரோப்பிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ஏன்?

பிரித்தானியாவில் ரொனி பிளேரும் அமரிக்காவில் ஜோர்ஜ் புஷ் உம் மக்களால் நிராகரிக்கப் பட்டமைக்கு இவர்கள் நடத்திய போராட்டங்களே காரணம் என்கிறார்கள்.

இந்தப் பிரிவினருடன் நீங்களும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா?

அவர்களை எங்கள் போராட்டங்களுடன் இணைத்துக் கொள்ள என்ன செய்தீர்கள்? உங்கள் திட்டம் என்ன?

-நேரமிருக்கும் போது இவை பற்றியும் சிந்தித்துப் பதில் தருவீர்கள் என நம்பிக்கையோடு காத்திருப்பேன்.

இறுதியாக புலிகள் பில்லியன் கணக்கில் சொத்துக்களும் பணமும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறதே அவையெல்லாம் எங்கே?

நீங்கள் விசாரித்துப் பார்த்தீர்களா?

யார்யார் பணம் வைத்திருக்கிறார்கள், சூறையாடினார்கள் என்பதை எல்லாம் மக்கள் மத்தியில் எப்போது அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?

உங்களிடமும் மக்களின் பணம் உள்ளதா?

அப்படியானால் அதன் மதிப்பு என்ன?

பணம் இருந்தால் இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் அம்பலப்படுத்த அதனைச் செலவிட முடியாதா?

ஐக்கிய நாடுகளும், மன்னிப்புச் சபையும் தான் எம்மைக் கைவிட்டுவிட்டதே, முறையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஐரோப்பிய அமரிக்க மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஐ.நாவிற்கு ஏன் அழுத்தத்தை நீங்கள் வழங்கக் கூடாது?

பிற்குறிப்பாக, கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை?

ஒரு குட்டி அறிக்கைகூட வெளியிடவில்லை?

உங்களுக்கும் இலங்கை அரசிற்கும் ஏதாவது………..?

நான் இதுவரை 7500 யூரோக்களைப் பணமாக புலிகளின் போராட்டத்திற்கு வழங்கியுள்ளேன். எனது பணத்தைப் பெற்றுக்கொள்ள உங்களிடம் நான் முறையிடலாமா?

இவை எல்லாமே எனக்கும் என்போன்ற விடுதலை உணர்வுள்ள ஆயிரக்கணக்கனோருக்கும் முன்னால் உள்ள கேள்வி. உங்களுக்கு வசதியான தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்..

(விடுதலை உணர்வோடு..)

N.சத்தியன்

Exit mobile version